புதன், 6 ஜூலை, 2011

ஏ.டி.எம்.,மெஷினையே ஆட்டையை போட்ட திருடர்கள் :கேமராவில் முகம் பதியாமல் இருக்க நூதன கொள்ளை

புனே : மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏ.டி.எம்., ஒன்றுக்குள் புகுந்த திருடர்கள், அங்கு பொருத்தப்பட்டுள்ள கேமரா, தங்களை காட்டிக் கொடுத்து விடக் கூடாது என்பதற்காக, ஏ.டி.எம்., இயந்திரத்தையே, அலேக்காக தூக்கிச் சென்ற சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த இயந்திரத்தில், 7.6 லட்ச ரூபாய் இருந்ததாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே, சிகாலி என்ற பகுதி உள்ளது. இங்கு மாநில அரசின் போக்குவரத்து கழக அலுவலகம் அமைந்துள்ள இடத்துக்கு அருகே, பிரபல வங்கி ஒன்றின், ஏ.டி.எம்., செயல்பட்டு வந்தது. அந்த ஏ.டி.எம்.,மில், கொள்ளையடிக்க சில திருடர்கள் திட்டமிட்டனர். அதிகாலை 2 மணிக்கு, மக்கள் நடமாட்டம் இல்லாத நேரத்தில், அந்த ஏ.டி.எம்.,முக்குள் புகுந்தனர். அங்கு, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளதை, அவர்கள் ஏற்கனவே அறிந்திருந்தனர். அங்கிருந்த விளம்பர பலகை ஒன்றின் மூலம், ஏ.டி.எம்.,மின் நுழை வாயிலில் பொருத்தப்பட்டுள்ள கேமராவை மறைத்தனர். இருந்தாலும், விளம்பர பலகையை வைத்து, கேமராவை மறைத்தது, அதில் பதிவாகி இருக்கலாம் என, சந்தேகப்பட்டனர்.

உஷாரடைந்த திருடர்கள், அங்கிருந்த ஏ.டி.எம்., இயந்திரத்தையே, அலேக்காக பெயர்த்தெடுத்து சென்று விட்டனர். கேமராவில் படம் பிடிக்கப்படும் காட்சிகள், ஏ.டி.எம்., இயந்திரத்தில் உள்ள "டிஸ்க்'கில் தான், பதிவாகும் என, தெரிந்ததால், இயந்திரத்தையே அங்கிருந்து எடுத்துச் சென்று விட்டனர். அடுத்த நாள் காலையில், அருகில் உள்ள கடைக்காரர், அங்கு ஏ.டி.எம்., இயந்திரம் இல்லாததை அறிந்து, போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், விசாரணையை துவக்கினர்.

இதுகுறித்து, சிகாலி பகுதி போலீஸ் இன்ஸ்பெக்டர் சோம்நாத் ஜாதவ் கூறியதாவது: திருடர்களால் தூக்கி செல்லப்பட்ட ஏ.டி.எம்., இயந்திரத்தில், 7.6 லட்ச ரூபாய் இருந்ததாக, வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாதுகாவலர் நியமிக்கப்படாதது, திருட்டு கும்பலுக்கு வசதியாக போய் விட்டது. மேலும், அந்த ஏ.டி.எம்., இயந்திரம், தரைப் பகுதியுடன், உறுதியாக பொருத்தப்படவில்லை. இதனால், இயந்திரத்தை எளிதாக பெயர்த்தெடுத்து விட்டனர். இந்த திருட்டு கும்பல், தாங்கள் அடையாளம் காணப்பட்டு விடக் கூடாது என்பதில், மிகவும் சாமர்த்தியமாக செயல்பட்டுள்ளது. அந்த கும்பலை தீவிரமாக தேடி வருகிறோம். இவ்வாறு சோம்நாத் ஜாதவ் கூறினார்.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=270097

கருத்துகள் இல்லை: