புதன், 6 ஜூலை, 2011

முதல்வர் பெயரில் அரசு இடம் ஆக்கிரமிப்பு பின்னணியில் தி.மு.க.,வினர்

செஞ்சி:செஞ்சி அருகே முதல்வர் ஜெயலலிதா பெயரில் அரசு புறம்போக்கு இடத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் தி.மு.க.,வினர் என்பது வருவாய்த் துறையினரின் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த மேல்களவாய், சங்கராபரணி ஆற்று புறம்போக்கில், 50 சென்ட் இடத்தில் குடிசைகள் போட்டு ஆக்கிரமித்து, முதல்வர் ஜெ., பெயரில் திடீர் நகர் உருவாக்கப்பட்டிருந்தது.கலெக்டர் உத்தரவின்படி, செஞ்சி தாசில்தார் பரந்தாமன் தலைமையிலான வருவாய்த் துறையினர் நேற்று முன்தினம் குடிசைகளை அகற்றினர். இது குறித்து வருவாய்த் துறையினர் விரிவான விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

விசாரணை குறித்து பெயர் வெளியிட விரும்பாத, வருவாய்த் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:செஞ்சி அருகே காலியாக இருந்த அரசு புறம்போக்கு இடத்தை ஒரு மாதத்திற்கு முன், தி.மு.க.,வை சேர்ந்த மேல்களவாய் ஊராட்சி தலைவர் ராமச்சந்திரன் மேற்பார்வையில் பொக்லைன் மூலம் சிலர் சமப்படுத்தினர்.இந்த இடத்தை விற்பனை செய்து, இதன் மூலம் வரும் பணத்தை கொண்டு, கிராமத்தில் கட்டி முடிக்கப்படாமல் பாதியில் நிற்கும் கோவில் பணிகளை செய்ய இவர்கள் திட்டமிட்டனர். இதையறிந்த இதே ஊரை சேர்ந்த மற்றொரு தி.மு.க., பிரமுகரான செஞ்சி ராமச்சந்திரனின் ஆதரவாளர் முனுசாமி, காலனி மக்களுடன் சேர்ந்து இரவோடு இரவாக கீற்று கொட்டகை போட்டார்.

அதிகாரிகளால் பிரச்னை வரக்கூடாது என்பதற்காக "புரட்சித் தலைவி அம்மா ஜெ.ஜெயலலிதா நகர்' என பெயர் பலகை வைத்தனர். அரசு இடத்தை சமப்படுத்திய ஊராட்சி தலைவர், உள்ளாட்சி தேர்தலில் காலனி தரப்பின் ஆதரவு தேவை என்பதற்காக, மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விட்டு விட்டார். குடிசை போட்ட 26 நபர்களில், 23 பேர் தி.மு.க., ஆதரவாளர்கள். விசாரணை குறித்த அறிக்கையை கலெக்டர் மற்றும் டி.ஆர்.ஓ.,விற்கு அனுப்பியுள்ளோம்.இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.


http://www.dinamalar.com/News_Detail.asp?Id=270013

கருத்துகள் இல்லை: