வெள்ளி, 15 ஜூலை, 2011

ஸ்பெக்ட்ரம் ஊழல் வளையத்தில் தமிழக முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஜாபர் சேட்

மதுரை: நாட்டையே உலுக்கிய 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தமிழக முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஜாபர் சேட்டுக்கு தொடர்பு உள்ளதாக பரபரப்பு தகவல்கள் கிளம்பியுள்ளது.

சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு வரை முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஜாபர் சேட் பெயரைக் கேட்டாலே தி.மு.க.வினர் முதல் உயர் காவல்துறை அதிகாரிகள் வரை அத்தனை பேரும் நடுங்குவார்கள்.

கருணாநிதியோடு பல வருட நட்பு கொண்ட முன்னாள் அமைச்சர்களே ஜாபரைக் கண்டால் மிரட்சியாகத்தான் பார்ப்பார்கள்

முதல்வர் கருணாநிதியே கூட, எந்தப் பிரச்சனையாக இருந்தாலும், “ஜாபர் கிட்ட சொல்லுய்யா’’ என்று சொல்லும் அளவுக்கு முழுக்க முழுக்க கருணாநிதியின் நம்பிக்கையைப் பெற்று அவரின் கண்களாகவும், காதுகளாகவும் திகழ்ந்தவர்.

தேர்தல் அறிவிப்பு வெளி வந்ததும், ஜாபர் சேட் மீதான புகார்கள் தேர்தல் ஆணையத்தின் முன் குவியத் தொடங்கின. ஜாபர் சேட்டை நேரில் வரவழைத்த ஆணையம், நேரடியாக விசாரணை நடத்தி, மேற்கு வங்கத்திற்கு பார்வையாளராகச் செல்லும்படி உத்தரவிட்டது.

அதனை ஏற்க மறுத்த ஜாபர் சேட், விடுப்பில் சென்றார். எப்படியும் தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்து விடும் என்று நம்யிருந்தார் ஜாபர் சேட். ஆனால் தேர்தல் முடிந்து அ.தி.மு.க. ஆட்சியைக் கைப்பற்றியதும், மண்டபம் அகதிகள் முகாமின் சிறப்பு அதிகாரியாக மாற்றப்பட்டார்..

முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சரானதும், லஞ்சமாக ஏராளமான பணம், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஆதாயம் பெற்ற நிறுவனங்களால் கொடுக்கப்பட்டது. இந்தப் பணத்தை தமிழகத்திற்குக் கொண்டு வந்தபோது அந்தப் பணத்தை பல்வேறு வழிகளில் முதலீடு செய்வதற்கு ஜாபர் உதவி புரிந்துள்ளதாக குற்றம் சாட்டப்படுகின்றது.

இதையடுத்து 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஜாபர் சேட்டுக்கு தொடர்பு குறித்து சி.பி.ஐ. அதிகாரிகளும், மத்திய உளவுத்துறையினரும் , மாநில உளவுத்துறை அதிகாரிகளும் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளதாகத் கூறப்படுகின்றது. ஆனால், இந்த தகவலை ஜாபர் சேட் வட்டாரம் மறுக்கின்றது.

ஸ்பெக்ட்ரம் ஊழலில் அடுத்து சிக்கப் போவது சேட்டா என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
http://thatstamil.oneindia.in/news/2011/07/15/2g-scam-jaffer-sait-under-scanner-aid0176.html

கருத்துகள் இல்லை: