சனி, 2 ஜூலை, 2011

புத்தர் வந்தார்; வெள்ளரசும் வந்தது – காணாமற் போகப்போகும் கனகராயன்குளம்

கனகராயன்குளத்தை பௌத்த மயப்படுத்தும் நடவடிக்கைளில் சிறிலங்கா இராணுவம் ஈடுபட்டுள்ளது.

பாரம்பரிய தமிழ்க் கிராமமான கனகராயன்குளத்தில் சிறி சம்புத்த ரஜமகா விகாரை என்ற பெயரில் பாரிய பௌத்த விகாரை ஒன்று கட்டப்படவுள்ளது.

இங்கு சிறியளவிலான புத்தர்சிலை ஒன்று வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வரும் நிலையில்- அடுத்த கட்டமாக விகாரை அமைக்கப்படவுள்ள இடத்தில் அரச மரக்கன்று ஒன்றை நாட்டும் பௌத்த சமய நிகழ்வுகள் கடந்த திங்கட்கிழமை நடத்தப்பட்டுள்ளன.

கனகராயன்குளத்தில் அமையவுள்ள சிறி சம்புத்த ரஜமகா விகாரையின் விகாராதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள வண.எட்டம்பகஸ்கட கல்யாணதிஸ்ஸ நாயக்க தேரர் அனுராதபுர புனித வெள்ளரச மரத்தின் கிளையொன்றை கொண்டு இங்கு வந்துள்ளார்.

வன்னிப் படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் சுமேத பெரேரா, அந்த அரசமரக் கன்றை விகாராதிபதியிடம் இருந்து பெற்று அதனை விகாரைப் பகுதியில் நாட்டியுள்ளார்.

சிங்கள பௌத்த பாரம்பரிய வாத்தியங்கள் முழங்க சுபநேரத்தில் இந்த அரச மரக்கன்று நாட்டும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் சிறிலங்கா இராணுவத்தின் 56வது டிவிசன் கட்டளை அதிகாரி பிரிகேடியர் பிரியந்த நாபாகொட, 56-1 பிரிகேட் தளபதி பிரிகேடியர் ரணவக்க, மற்றும் படை அதிகாரிகயுளும் கலந்து கொண்டனர்.

அத்துடன் அயல் கிராமங்களில் வாழும் தமிழ்மக்களையும் சிறிலங்காப் படையினர் கட்டாயமாக இந்த நிகழ்வுக்கு அழைத்து வந்திருந்தனர்.

கனகராயன்குளத்தில் புதிய விகாரையை அமைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள சிறிலங்காப் படையினர் அங்கு முன்னர் ஒரு பௌத்த விகாரை இருந்ததாக வரலாற்றைத் திரிபுபடுத்தவும் முயன்றுள்ளனர்.

வரலாற்றுச் சிறப்புமிக்க சிறி சம்புத்த ரஜமகா விகாரை இங்கு அமைந்திருந்ததாக சிறிலங்காப் படையினர் கூறியுள்ளனர்.

அத்துடன் முன்னர் இந்த விகாரையில் இருந்த பிக்குகள் புலிகளின் தீவிரவாதம் உச்சமடைந்திருந்த போது அங்கிருந்து வெளியேறி விட்ட நிலையில்- அங்கிருந்த பழைய அரசமரம் தானாகவே இறந்து போய் விட்டதாகவும் கட்டுக்கதை ஒன்றை சிறிலங்கா இராணுவம் அவிழ்த்து விட்டுள்ளது

கனகராயன்குளத்தில் எந்தவொரு காலத்திலும் பௌத்த விகாரை இருக்கவில்லை என்பதும், சிறிலங்கா அரசின் திட்டமிட்ட பௌத்த மயமாக்கல் நடவடிக்கையை மறைப்பதற்காகக் கூறப்படும் கட்டுக்கதையே இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

http://www.puthinappalakai.com/view.php?20110702104190

கருத்துகள் இல்லை: