வியாழன், 21 ஜூலை, 2011

திமுக கருணாநிதியின் கையைவிட்டுப் போகிறதா? கோவை பொதுக் குழுவில் பூகம்பம் வெடிக்கலாம் : கலக்கத்தில் கருணாநிதி

தேர்தல் தோல்வி, 2ஜி ஊழல், கட்சியின் முன்னணி தலைவர்களது அதிருப்தி என பல குழப்பமான சூழ்நிலைகளுக்கு இடையே, நாளை மறுதினம் கோவையில் கூட உள்ள திமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தை எண்ணி கட்சித் தலைவர் கருணாநிதி மிகவும் கலக்கம்டைந்துபோய் உள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் கவலை தெரிவிக்கின்றன.

திமுகவின் கடந்த கால வரலாற்றில், தேர்தல் தோல்வி அக்கட்சியை அத்தனை அழுத்தமாக பாதித்ததில்லை.அந்த அளவுக்கு, தோல்வியடைந்த தேர்தலிலும் திமுக பெற்ற வாக்குகளின் புள்ளிவிவரங்களை எடுத்துரைத்து, அண்ணா காலத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றிலிருந்து கற்றுக்கொண்ட பாடம் என்று எதையாவது ஒன்றை முரசொலியில் எழுதி உடன் பிறப்புகளை எப்போதும் உற்சாகத்தில் வைத்துக்கொள்வதில் வல்லவராக திகழ்ந்தவர் கருணாநிதி.

அதேப்போன்று தொண்டர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுமே தேர்தல் தோல்வியை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல், கருணாநிதி அழைப்பு விடுக்கும் போராட்டங்களில் உற்சாகமாக பங்கேற்று, எதிர்கட்சியின் பங்கை சிறப்பாக ஆற்றி திமுகவை உயிர்ப்புடனேயே வைத்திருப்பார்கள்.

அதிலும் எம்ஜிஆர் ஆட்சி செய்தபோது ராமர் வனவாசம் சென்றதுபோன்று, 14 ஆண்டு காலத்திற்கும் மேலாக அவர் மறைந்தபின்னர்தான் கருணாநிதியால் ஆட்சியை பிடிக்க முடிந்தது.ஆனாலும் அண்ணா மறைவுக்கு பின்னரும் சரி; எம்ஜிஆரிடம் ஆட்சியை இழந்த பின்னரும் சரி கட்சியை உயிர்ப்புடன் கட்டிக்காத்த பெருமை கருணாநிதியையே முழுக்க முழுக்க சாரும்.

அப்படி எந்த கருணாநிதியால் திமுக, சோதனையான காலத்திலும் கட்டிகாக்கப்பட்டதோ, அந்த அதே கருணாநிதியால் முடிவுரை எழுதப்பட்டுவிடுமோ என்ற அச்சம் அண்ணா காலத்து திமுக மீது வெறியும்,அபிமானமும் கொண்ட கட்சியினர்களிடையே காணப்படுகிறது.

கூடவே பெரியாரின் திராவிடர் கழகம் மற்றும் அண்ணா காலத்தின் திமுகவின் வரலாறுகளை கேட்டும், படித்தும் கருணாநிதி தலைமையிலான் திமுக மீது பற்று ஏற்பட்டு தங்களை அக்கட்சியின் அபிமானிகளாக அல்லது தொண்டர்களாக மாற்றிக்கொண்ட இரண்டாம் தலைமுறை திமுகவினர்களும் கூட, சொக்கத்தங்கம் சோனியா மனது நோகக்கூடாது என்று இலங்கையில் ஈழத்தமிழர்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டபோது உண்ணாவிரத நாடகம் நடத்தியும், தமிழகத்தில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக எழுந்த போராட்டங்களை நசுக்கியும் கருணாநிதி நடந்துகொண்ட விதத்தை பார்த்து விக்கித்தே போனார்கள்.
அந்த அதிர்ச்சி பின்னர் 2ஜி ஊழலில் கருணாநிதி குடும்பம் சிக்கி சந்தி சிரித்ததை பார்த்தும், திமுகவில் கருணாநிதி குடும்பத்தினர் செலுத்திய ஆதிக்கத்தையும் பார்த்து வெறுப்பாகவே மாறிவிட்டது.

பொதுவாகவே நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு வரை, எந்த ஒரு தேர்தலிலும் திமுகவுக்கு அதற்கு நிரந்தரமாக இருக்கும் தொண்டர்கள் மற்றும் அபிமானிகளின் வாக்குகள் அப்படியே கிடைத்துவிடும். ஆனால் 2011 சட்டமன்ற தேர்தலில் அந்த வாக்குகள் கருணாநிதி மீது ஏற்பட்ட வெறுப்பினால், மாற்று முகாமுக்கு சென்றது அல்லது எந்த கட்சிக்கும் பதிவாகாமலேயே போய்விட்டது.இதனால்தான் திமுக தேர்தலில் இந்த அளவுக்கு சரிவை சந்தித்தது.

இதனை கருணாநிதியும் நிச்சயம் உணர்ந்திருப்பார்.ஆனால் தற்போது அவரே நினைத்தாலும் ஒதுக்கி அல்லது ஓரம் கட்டிவைக்க முடியாத அளவிற்கு அவரது குடும்ப வாரிசுகளின் ஆதிக்கமும்,கட்சித் தலைமையை கைப்பற்ற அவர்களுக்குள் நடக்கும் குடுமிப்பிடிச் சண்டையும் உச்சத்திற்கு சென்றுவிட்டது.

ஒருபக்கம் மு.க. ஸ்டாலின் கட்சி தலைவராக தம்மை நியமிக்க வலியுறுத்துவதாகவும், இதற்கு ஏதுவாக தமக்கு அச்சுறுத்தலாக உள்ள கட்சியின் மாவட்டச் செயலாளர்களாக உள்ள மூத்த தலைவர்களை டம்மியாக்குவதற்காக, மாவட்டச் செயலாளர் பதவியையே நீக்கிவிட்டு சட்டமன்ற தொகுதி வாரியாக நிர்வாகிகளை நியமிக்க வலியுறுத்துவதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாகவும், வேறு சில பிரச்சனைகள் தொடர்பாகவும் அறிவாலயத்தில் வைத்து கருணாநிதிக்கும், ஸ்டாலினுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், இதனையடுத்து கருணாநிதி கோபித்துக்கொண்டு, மகாபலிபுரம் சென்றதாகவும் தகவல் வெளியானதால் கடந்த வாரம் அறிவாலயம் பரபரத்து காணப்பட்டது.

இதுமட்டுமல்லாது கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான துரைமுருகன், கருணாநிதியுடன் ஏற்பட்ட மோதலால் திமுகவிலிருந்தே விலகக் கூடிய முடிவுக்கு வந்துவிட்டதாக வெளியான தகவல் திமுகவில் அதிர்ச்சி அலைகளை மேலும் அதிகரித்துள்ளது.
2ஜி ஊழல் வழக்கில் கைதாகி டெல்லி திகார் சிறையில் இருக்கும் கனிமொழியை துரைமுருகன் அண்மையில் சந்தித்தபோது சில தகவல்களை கூறியதாகவும், இத்தகவல் கருணாநிதிக்கு எட்டியதை தொடர்ந்து, அறிவாலயத்திற்கு வந்த துரைமுருகனை பார்த்து, " உங்கிட்டத்தான்யா கேட்கிறேன். என் குடும்பத்தில குழப்பதை ஏற்படுத்தறீயா, இது உனக்கே நல்லா இருக்கா?" என்று திட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த துரைமுருகன்,"என்னை எத்தனையோ முறை சந்தேகப்பட்டீங்க. பலமுறை அசிங்கப்படுத்தி இருக்கறீங்க. என்கிட்ட இருந்த பொதுப் பணித்துறையை கூட பறிச்சீங்க.

கட்சிக்கும், உங்களுக்கும் கட்டுப்பட்டு இருந்தேன். குடும்பத்துல நான் குழப்பம் செஞ்சிட்டதா சொல்லிட்டீங்க. இனிமே நான் இங்கே இருக்கறதுல அர்த்தம் இல்லை!" என்று சொல்லிவிட்டு கோபமாக சென்றதாகவும், அவரை சமாதானப்படுத்த மு.க.ஸ்டாலின் எவ்வளவோ முயன்றும் அது முடியாமல் போனதாகவும், விரைவில் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு, கட்சியிலிருந்தும் விலக துரைமுருகன் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

துரைமுருகன் விடய்ம் இதுவென்றால், மாவட்டச் செயலாளர் பதவியை நீக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்கனவே 2 மாவட்டச் செயலாளர்கள் பதவி விலகிவிட்டனர்.

இவர்கள் தவிர வீரபாண்டி ஆறுமுகம்( இவரை நில அபகரிப்பு வழக்கில் தற்போது போலீஸ் தேடுகிறது), கே.என்.நேரு, கருப்பசாமி பாண்டியன் போன்றவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இவர்களையெல்லாம் விட மு.க. அழகிரி கூட மாவட்டச் செயலாளர் பதவியை நீக்க எதிர்ப்பு தெரிவிப்பதோடு, இப்போதைக்கு கட்சி அமைப்புகளில் எந்த மாற்றமும், அதாவது ஸ்டாலின் கை ஓங்கும் விதமான எந்த நடவடிக்கையும் தேவையில்லை என்றும் கூறுவதாக அறிவாலய வட்டாரங்கள் கூறுகின்றன.

இப்படி கட்சிக்குள் எழுந்துள்ள கலகக் குரல்களால், கட்சியின் பொதுக் குழு மற்றும் செயற் குழு கூட்டத்தில் என்ன நடக்குமோ என்ற கலக்கத்தில் கருணாநிதி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதால்,23 ஆம் தேதியை கவலையுடன் எதிர்நோக்கியுள்ளனர் உடன் பிறப்புகள்!
http://tamil.webdunia.com/newsworld/news/currentaffairs

கருத்துகள் இல்லை: