வியாழன், 7 ஜூலை, 2011

இன்று இலங்கைத் தமிழர்களுக்கான ஒருமைப்பாட்டு தினம்-இணைய வேண்டிய நேரமிது!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு கூட்டம் கடந்த 18,19 ஆகிய இரு தினங்கள் தில்லியில் நடைபெற்றது. கூட்டத்தில் இலங்கைத் தமிழர்களுக்கான தமிழக சட்டமன்றத் தீர்மானத்தை வரவேற்றதுடன், இலங்கைத் தமிழர்களுக்கு ஒருமைப்பாட்டையும், அவர்களது கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், ஜூலை 8-ம் தேதி நாடு தழுவிய அளவில் பேரியக்கங்களை நடத்திட, கட்சி அணிகளையும், பொதுமக்களையும், அறைகூவி அது அழைத்துள்ளது.
அத்துடன் இலங்கைத் தமிழ் மக்களுக்காக உடனடிச் செயல் திட்டமாகவும், எதிர்கால அரசியல் தீர்வாகவும் சில முன்மொழிவுகளைக் கூற, இந்திய நாட்டின் பிரதமரை கட்சியின் உயர்மட்டக் குழு சந்திப்பது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
உடனடி செயல்திட்டமாக, சொந்தநாட்டு மக்கள் மீது இனவெறியைக் கட்டவிழ்த்துவிட்டு இனப்படுகொலைகள் புரிந்தவர்களையும், சகலவிதமான நீதிபோதனைகளையும், சட்டநெறிகளையும் மீறி போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்களையும், உலக நீதியின் முன்நிறுத்த வேண்டும். அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
அடுத்து, அகதி முகாம்கள் என்ற பெயரில் இன்னமும் சித்திரவதை முகாம்களில் உள்ள தமிழ் மக்கள், தேடப்படுவோர் என கூறப்பட்டு ரகசியச் சிறைகளில் உள்ள தமிழ் இளைஞர்கள் என யாவரும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்.
அதற்கடுத்து, உலகம் முழுவதுமுள்ள தமிழ் அகதிகள் சொந்த நாடு திரும்பும் சூழல் உருவாக்கப்பட வேண்டும். அவர்களின் நிலங்கள் - உடைமைகள் - சொத்துகள், ஆயுள்காலச் சேமிப்புகள் என யாவும் தமிழ் மக்களுக்குக் கிடைக்க வழிவகை செய்யப்பட வேண்டும்.
பிரதேச ஒருமைப்பாடு, கூட்டாட்சி, இணையாட்சி எனும் குறைந்தபட்ச அரசியல் ஒருமைப்பாடு, உரிமைகள் என எது பற்றிப் பேசினாலும் அது மறுக்கப்படுகிறது. அடக்கி ஒடுக்கும் அரசின் அணுகுமுறையும் - கோட்பாடும்தான் அரசியல் தீர்வு என்கிறது இலங்கை அரசு. அது இன்றைய உலகம் ஏற்றுக்கொண்டுள்ள சமஷ்டி முறையைக்கூட புறம்தள்ளுகிறது.
எஸ்.டபிள்யு.ஆர், டி . பண்டாரநாயகா, ஜெயவர்த்தனா, ஸ்ரீமாவோ பண்டாரநாயகா என பலரும் பல நேரங்களில் சமஷ்டி குறித்து இசைவு தெரிவித்துள்ளனர்.
நீண்ட நெடும் காலத்துக்கு முன் காந்திய வழியில் போராடிய பொன்னம்பலம், தமிழர் தந்தை செல்வா, அமிர்தலிங்கம் மற்றும் போராளிக் குழுக்கள் என காலம்தோறும் பேச்சுவார்த்தைகளில் இலங்கை அரசு சமஷ்டி குறித்து ஒப்புதல் அளித்துள்ளது. இப்போது சமஷ்டியும்கூட இலங்கை அரசுக்குப் பிரச்னையாகப் பிரிவினையாகத் தெரிகிறது.
சமஷ்டி முறை என்பது தமிழர்களுக்கு ஏற்புடையது. அது உலகுக்கும் ஏற்புடையது.
சமஷ்டி என்பது பிரிவினை அல்ல, ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ்மக்களின் அரசியல் அதிகாரங்களுக்கான உத்தரவாதம் அது. தேசிய இனங்கள் பிரிந்துபோவது எனும் கோரிக்கைக்கும், அரசின் ஒடுக்கும் நடவடிக்கைகளுக்கும் இடைப்பட்டது அது.
மேலும், உடனடிக் கடமை என்பது போரில் பாதிக்கப்பட்ட பெண்கள், முதியோர், குழந்தைகள் அனைவரையும் பாதுகாப்பது. தொற்று நோய்களாலும், ஆறாத உடற்புண்களாலும் அவர்கள் அல்லல்படுகிறார்கள்.
சர்வதேசத் தகவல்கள் இதை உறுதிப்படுத்துகின்றன. எனவே, இந்திய மருத்துக்குழு அல்லது உலக மருத்துவக்குழு தமிழ் மக்களுக்கு உயர் மருத்துவத்தை வழங்க ஆவன செய்ய வேண்டும். இவை யாவற்றையும் இலங்கை அரசு செயல்படுத்த, இலங்கையை இந்தியா நிர்பந்திக்க வேண்டும்.
இத்துடன் - இலங்கைத் தமிழர்களுக்கு எதிர்கால அரசியல் தீர்வாக சில திட்டவட்டமான வரையறைகளை இலங்கை மீது இந்தியா முன்மொழிய வேண்டும். இன்றைய இலங்கையின் அரசியல் யதார்த்தம் முழுக்க முழுக்க தமிழ் மக்களுக்கு எதிராக உள்ளது.
தமிழர்கள் சொந்த நாட்டு மக்கள். தொன்மையும், சிறப்பும் மிக்கவர்கள். இலங்கையின் வளவாழ்வுக்கும்-அதன் மேன்மைக்கும் உயிர் கொடுத்து உழைத்தவர்கள் என்ற சிந்தனைக்கு மாறாக, தமிழர்கள் அந்நியர்கள் - அவர்கள் தோற்கடிக்கப்பட வேண்டியவர்கள் என்ற சிந்தனையே மேலோங்கி நிற்கிறது. அனைத்தும் சிங்களமயமாக்கப்பட வேண்டும். ஒற்றை ஆட்சி, ஒரே அதிகார மையம், அரசியல் ஏகபோகம் என்ற ஆதிக்க சிந்தனையும்-செயலுமே அங்கு மோலோங்கி நிற்கிறது.
தேசிய இனப் பிரச்னைகளில் பிரிந்துபோவது அல்ல உடனடித் தீர்வு. மாறாக, இனங்கள் ஒற்றுமையாக, இணக்கமாக வாழ உயர் காரணிகளை கொண்டது சமஷ்டி முறை. அது இன்றும் ஐரிஷ், கனடா போன்ற நாடுகளில் காக்கப்படுகிறது. சமஷ்டி வெறும் சட்டம் சார்ந்தது அல்ல, உயர் கலாசாரப் பண்பாட்டு வகை சார்ந்தது. சிங்களர், தமிழர், இதர இனத்தவர் யாவரும் மனித குலத்தின் அங்க கூறு.
அவர்கள் ஒருவருக்கொருவர் ஒத்திசைந்து உதவிபுரிந்து வாழ்வது தான் வாழ்க்கை நெறி, பண்பாடு என்பது. இத்தகைய பண்பாடுகள் சிங்களப் பகுதியில் வெறிச்சோடி காணப்படுகிறது. பெüத்தம் போதித்த மிக உயர்ந்த நெறிகள் மீறப்பட்டதன் அடையாளம் மட்டுமே அங்கு தெரிகிறது.
இத்தகைய பின்னணியில்தான் தேசிய இனங்கள் பிரிந்துபோகும் சுயநிர்ணயக் கோட்பாடு பேசப்படுகிறது. அரசின் சுயநிர்ணயக் கோட்பாட்டில் உள்ள சமஉரிமை, கூடுதல் அதிகாரம், சுயாட்சி என யாவும் மீறப்படும்போதும், பிரிவினை அல்ல ஒன்றுபட்ட இலங்கைக்குள் வாழ்வோம்.
ஆனால், நாங்கள் அடக்கப்படும்போது பிரிந்து போவோம் என்ற உரிமை கொண்ட சமஷ்டி முறை மீறப்படும்போதும், பாதிக்கப்படும் தேசிய இனத்தின் தீர்வு பிரிந்து போவதுதான். இது லெனின் வகுத்தளித்த கோட்பாடு. அதாவது, பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் கதியின்போக்கைத் தாங்களே தீர்மானித்துக் கொள்வது.
மேற்கண்ட எத்தகைய அரசியல் தீர்வுக்கும் இலங்கை அரசு தயாராக இல்லை. தமிழர்களின் அரசியல் தீர்வு குறித்து பேசப்படும்பொழுது, அதை இலங்கை நாடாளுமன்றம் முடிவு செய்யும் என்கிறார் ராஜபட்ச. இலங்கைத் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு என்பது இலங்கை நாடாளுமன்றமோ, சிங்கள ஆளும் வர்க்கமோ தீர்மானிப்பது அல்ல. மாறாக, அது பாதிக்கப்பட்ட தமிழர்களின் நலன் சார்ந்தது. அவர்களின் விருப்பம் சார்ந்தது.
அயர்லாந்து இனப் பிரச்னையில் பாதிக்கப்பட்ட ஐரிஷ் மக்களின் விருப்பங்கள் மீது தான் தீர்வு அமைந்தது. கனடாவில் பாதிக்கப்பட்ட கீயுபக் மக்களின் விருப்பம் சார்ந்துதான் பிரச்னைக்குத் தீர்வு காணப்பட்டது.
அதேபோல் கிழக்கு திமோர், எரித்ரியா, இந்தோனேசியா என பல நாடுகளிலும் தேசிய இனப் பிரச்னைக்கான தீர்வு பாதிக்கப்பட்ட மக்களின் விருப்பங்கள் மீதுதான் எழுதப்பட்டது.
சம உரிமையோடு இலங்கையில் தமிழர்கள் வாழ்வது என்றாலும், அது அரசியல் தீர்வுதான். ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் தேசிய இனம் பிரிந்து போவது என முடிவெடுப்பதும் அரசியல் தீர்வுதான். இதற்கு இடைப்பட்ட சமஷ்டி முறை என்பதும் அரசியல் தீர்வுதான். ஆனால், எத்தகைய அரசியல் தீர்வு ஏற்புடையது என்பதை முடிவு செய்வது தமிழர்களாக இருக்க வேண்டும். அதுதான் மிகமிகச் சரியான தீர்வு முறைமை.
இதற்குரிய சூழல் இலங்கையில் உருவாக்கப்பட வேண்டும். அதற்கு அரசியல் திருப்புமுனை தேவைப்படுகிறது. இலங்கை அரசின் போர்க்குற்றங்களை ஐ.நா. அறிக்கை அம்பலப்படுத்தியது ஒரு திருப்புமுனை. இலங்கை அரசின் இனவெறி, ராணுவ அட்டூழியங்களை லண்டனில் சேனல் 4 வெளியிட்டு உலக மனசாட்சியைத் தட்டி எழுப்பியது இரண்டாவது திருப்புமுனை.
இன்று, இலங்கைத் தமிழர்களுக்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நடத்த உள்ள அகில இந்திய இயக்கம் மூன்றாவது திருப்புமுனையாக அமைய, சகல பகுதி மக்களும், அந்த பேரியக்கத்தில் இணைய வேண்டிய நேரமிது.
எல்லாவற்றுக்கும் மேலாக மாபெரும் இந்தியா, தன் கடந்தகாலத் தவறுகளையும், நிகழ்காலப் பொறுப்புகளையும் இலங்கைத் தமிழர்தம் நலன் பொருட்டு உணர வேண்டிய நேரமிது.

மு. வீரபாண்டியன்

கட்டுரையாளர்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர்.
இது தினமணியில் வெளிவந்த கட்டுரை

கருத்துகள் இல்லை: