செவ்வாய், 5 ஜூலை, 2011

கழுத்து அழுத்தப்பட்டதால் பாட்சா மரணம்: டாக்டர் வாக்குமூலம்-தற்கொலை கடிதம் போலி?

சென்னை: முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசாவின் நண்பரான சாதிக் பாட்சா கழுத்து அழுத்தப்பட்டதால் தான் இறந்தார் என்று அவரது உடலை பிரேதப் பரிசோதனை செய்த டாக்டர் டிகால் சிபிஐ அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சாதிக் பாட்சா மரணம் குறித்து சிபிஐ விசாரித்து வருகிறது. முன்பு ற்கொலை என்று கூறப்பட்ட இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க ஆரம்பித்ததையடுத்து, அதில் பல்வேறு முடிச்சுகள் அவிழ ஆரம்பித்துள்ளன. இது கொலையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

சாதிக் பாட்சாவின் மனைவி மற்றும் உறவினர்கள் சொன்ன தகவல் அடிப்படையில் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று முதலில் கருதப்பட்டது. ஆனால் சி.பி.ஐ. அதிகாரிகள் நடத்திய விசாரணை அடிப்படையில், அவர் கொலை செய்யப்பட்டதற்கான வாய்ப்புகளே அதிகம் இருப்பதாகத் தெரியவந்தது.

இந் நிலையில் தனியார் மருத்துவக் கல்லூரியில் தடய அறிவியல் துறை உதவிப் பேராசிரியராக உள்ள டாக்டர் டிகாலை சிபிஐ அதிகாரிகள் சென்னை சாஸ்திரி பவனில் உள்ள சிபிஐ அலுவலகத்துக்கு அழைத்து 1 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் கூறுகையில், சாதிக் பாட்சா உடலை பிரேத பரிசோதனை செய்த பிறகு அவரது மரணம் தற்கொலை என்று நான் கூறவே இல்லை. மாறாக கழுத்து அழுத்தப்பட்டே சாதிக் பாட்சா இறந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறியிருந்தேன் என்றார்.

இந்த விசாரணையின்போது டெல்லி அகில இந்திய மருத்துவக் கழகத்தின் (எய்ம்ஸ்) தடய அறிவியல் துறை முன்னாள் தலைவர் டாக்டர் டோக்ராவும் உடனிருந்தார்.

சாதிக் பாட்சா பிரேத பரிசோதனை அறிக்கை, பிரதேப் பரிசோதனையின் வீடியோ பதிவு ஆகிய அனைத்தையும் சிபிஐ அதிகாரிகள் முழுமையாக ஆய்வு செய்து டாக்டர் டிகாலிடம் விசாரணை நடத்தினர்.

மேலும், சிறப்பு மருத்துவக் குழுவினர் மூலம் சாதிக் பாட்சா உடலை முழுமையாக பிரேத பரிசோதனை செய்யாமல் விட்டது ஏன் என்றும் சிபிஐ அதிகாரிகள் கேள்வி எழுப்பியதாகத் தெரிகிறது.

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிபிஐயால் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் சாதிக் பாட்சா மர்மமாக இறந்தது நினைவுகூறத்தக்கது.

சாதிக் பாட்சா சாவதற்கு முன் எழுதிய கடிதம் போலியானதா?:

இந் நிலையில் சாதிக் பாட்சா சாவதற்கு முன் எழுதியதாக வெளியிடப்பட்ட கடிதம் போலியானதாக இருக்கலாம் என்று சி.பி.ஐ. கருதுகிறது.

அந்த கடிதத்தை டெல்லியில் இருந்து வந்த நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

சாதிக் பாட்சா இறந்தபோது அவர் எழுதி வைத்ததாக ஒரு கடிதத்தை, முதலில் விசாரித்த தேனாம்பேட்டை போலீசார் கைப்பற்றினார்கள். அதில், சிபிஐ விசாரணையால் மன உளைச்சல் ஏற்பட்டதால் தற்கொலை செய்வதாக எழுதப்பட்டிருந்தது.

ஆனால், அந்தக் கடிதமே போலியானதாக இருக்கலாம் என்று சி.பி.ஐ. கருதுகிறது. எனவே அந்தத் கடிதத்தை, எய்ம்ஸ் தடய அறிவியல் துறை முன்னாள் தலைவர் டாக்டர் டோக்ராவிடம் சிபிஐ வழங்கியுள்ளது.

அதை அவரது தலைமையிலான நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இவர்கள் வழங்கும் ஆய்வறிக்கை சாதிக் பாட்சா மரணத்தில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தலாம் என்று கருதப்படுகிறது

கருத்துகள் இல்லை: