வியாழன், 7 ஜூலை, 2011

இலங்கையின் கொலைக்களம்: தொலைக்காட்சி விவாதத்தில் முதல்வர் ஜெயலலிதாவும் பங்கேற்பு!

இன்று இந்திய தொலைக்காட்சி ஊடகமான Headlines today இல் ஒளிபரப்பாகவுள்ள சனல் 4 இன் 'இலங்கையின் கொலைக்களம்' காணொளியைத் தொடர்ந்து இடம்பெறவுள்ள விவாதத்தில் கலந்துகொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா சம்மதம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சுனல் 4 இன் இந்தக் காணொளி ஏற்கனவே பிரித்தானியாவிலும் அவுஸ்திரேலியாவிலும் ஒளிபரப்பாகி பெரும் அதிர்ச்சி அலைகளை எழுப்பியுள்ள நிலையில் இன்று இந்தியாவில் முதன்முறையாக ஒளிபரப்பாகியுள்ளது.
இந்திய மக்கள் மத்தியிலும் ஊடகங்கள் மற்றம் அரசியல் கட்சிகளின் மத்தியிலும் இக் காணொளி ஈழமக்கள் மீதான அனுதாபத்தையும் போர்க்குற்ற விசாரணை தொடர்பான அழுத்தங்களையும் ஏற்படுத்திவிடும் என்ற அச்ச உணர்வின் காரணமாக இவ் ஒளிபரப்பைத் தடுப்பதற்கு சிறிலங்கா உயர் ஸ்தானியராலயம் கடும் முயற்சியை மேற்கொண்டபோதும் அது வெற்றியளிக்கவில்லை.
இந்நிலையில் தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா இக்காணொளியின் அடிப்படையில் இடம்பெறம் விவாதத்தில் கலந்து கொள்வது குறித்தும் சிறிலங்கா வட்டாரங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளன.
தமிழ்நாடு சட்டசபையில் ஏற்கனவே போர்க்குற்றவாளிகள் மீதான சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் பொருளாதார தடை விதிக்கக் கோரியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இவற்றை வலியுறுத்தும் முகமாகவே ஜெயலலிதாவின் பேச்சு அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று இரவு 10 ஒளிபரப்பாகிய இக்காணொளி நாளையும் நாளை மறுதினமும் மறுஒளிபரப்பாகவுள்ளது. இது தொடர்பாக நாளை சென்னையில் ஒரு கலந்துரையாடலை நடத்தவும் இத் தொலைக்காட்சி நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. சென்னை மயிலையில் அமைந்தள்ள வித்யா பவனில் இக்கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது பொங்கு தமிழ் இணையத்தின் செய்தி.பொங்கு தமிழை உங்கள் நண்பர்களுக்கும் பரிந்துரை செய்யுங்கள்
http://www.ponguthamil.com

கருத்துகள் இல்லை: