வெள்ளி, 8 ஜூலை, 2011

திருவள்ளுவர் என்ன திமுக பொதுச் செயலாளரா?- நாஞ்சில் சம்பத்

சென்னை: சமச்சீர் கல்விக்கு எதிரான தமிழ்நாடு அரசின் போக்கை கண்டித்து போராட்டம் நடத்திய திராவிடர் கழக மாணவரணியினர், சமச்சீர் கல்வி தொடர்பாக தமிழக அரசு அமைத்த குழுவின் அறிக்கையை எரித்தனர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

சமச்சீர் கல்விக்கு எதிரான தமிழ்நாடு அரசின் போக்கினைக் கண்டித்து திராவிடர் கழகத்தின் மாணவரணி சார்பில், அண்ணா சாலையிலுள்ள பெரியார் சிலையருகே, திராவிடர் கழக மாநில மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சமச்சீர் கல்விக்கு எதிராக கல்வி வியாபாரிகளைக் கொண்டு அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை தீயிட்டு கொளுத்தப்பட்டது.

தமிழர் வரலாற்றையும், திருவள்ளுவர், பெரியார், அண்ணா, டி.எம். நாயர், தியாகராயர் போன்ற தலைவர்களின் பற்றிய பாடங்களை மறைத்தும், கிழித்தும் பாடத் திட்டத்தை சீரழித்துள்ள மனுதர்ம போக்கினைக் கண்டித்து சென்னை மாவட்டத்திலுள்ள திராவிடர் கழக மாணவரணியினர் திரளாகக் கலந்துகொண்டு முழக்கமிட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருவள்ளுவர் மீது ஜெயலலிதாவுக்கு என்ன கோபம்?-நாஞ்சில் சம்பத்

இந் நிலையில் திமுக தலைவர் கருணாநிதியால் கொண்டு வரப்பட்டது என்ற ஒரே காரணத்துக்காக சமச்சீர் கல்வி திட்டத்தை அதிமுக அரசு ரத்து செய்ய முயற்சித்து வருவதாக மதிமுக கொள்கைப் பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் கூறினார்.

அவர் கூறுகையில், பாடப்புத்தகத்தின் பின்னால் வள்ளுவர் படம் இருக்கிறது. வள்ளுவர் படத்தை பச்சை அட்டை வைத்து ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள். வள்ளுவர் என்ன திமுக பொதுச் செயலாளரா?. வள்ளுவர் மீது உங்களுக்கு (ஜெயலலிதா) என்ன கோபம்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சொன்னது தப்பா?. ஏன் வள்ளுவர் மீது ஆத்திரம். உயர்நீதிமன்ற உத்தரவுக்கு காத்திருக்காமல், உயர்நீதிமன்றத்தையே நீங்கள் அவமதிக்கின்றீர்களா?.

நீங்கள் செய்தது இமாலய மடத்தனம். நீங்கள் சமச்சீர் கல்விக்கு சமாதி கட்டி விடுவோம் என்று கருதாதீர்கள். சமூக நீதிக்கு சமாதி கட்டுவதற்கு நீங்கள் முயற்சிக்கிறீர்கள் என்றார்.

உயர் நீதிமன்றம் முன் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது:

இந் நிலையில் சமச்சீர் கல்வி தொடர்பாக அதிமுக அரசு அமைத்த நிபுணர் குழுவின் அறிக்கையின் நகல் சென்னை உயர்நீதிமன்றம் முன் எரிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

சமச்சீர் கல்வி திட்டத்தை இந்த ஆண்டு தொடர்ந்து நடைமுறைபடுத்த வலியுறுத்தி புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மற்றும் மக்கள் கலை இலக்கியம் அமைப்புகளை சேர்ந்தவர்கள் சென்னை உயர்நீதிமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அப்போது சமச்சீர் கல்வி தொடர்பாக தமிழக அரசு நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கை நகலை எரித்தனர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.
http://thatstamil.oneindia.in/news/2011/07/08/dk-students-front-burn-copies-use-review-report-aid0090.html

கருத்துகள் இல்லை: