சனி, 2 ஜூலை, 2011

வடிவேல் மீதான விஜயகாந்த் மேலாளர் தொடர்ந்த வழக்கு-தள்ளி வைப்பு

சென்னை: விஜயகாந்தின் மேலாளர் தொடர்ந்த நடிகர் வடிவேல் மீதான அடிதடி வழக்கின் இறுதி விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.

சென்னை சாலிகிராமத்தில் வசித்து வந்தவர் வக்கீல் முத்துராம். இவர், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மைத்துனர். இவர் 12.9.07 அன்று மரணமடைந்தார். எனவே இறுதி அஞ்சலிக்காக பலர் அவரது வீட்டுக்கு வந்திருந்தனர். அங்கு அதிக கூட்டமாக இருந்ததால், அதே பகுதியில் வசித்து வந்த நகைச்சுவை நடிகர் வடிவேல் தனது அலுவலகத்துக்கு செல்வதில் இடையூறு ஏற்பட்டது.

இதனால் வடிவேலுவுக்கும், இறுதி அஞ்சலிக்கு வந்த சிலருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டது. பின்னர் வடிவேல் வீட்டுக்குச் சென்றுவிட்டார். மீண்டும் வடிவேல் 20 பேரை அழைத்து வந்து விஜயகாந்தின் மேலாளர் சதீஷ்குமாருடன் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. அப்போது சதீஷ்குமாருக்கு காயம் ஏற்பட்டது.

இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசில் சதீஷ்குமார் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் வடிவேல் உட்பட 20 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

பதிலுக்கு தன் வீட்டு மீது கல்லெறிந்து, குடும்பத்தினரை காயப்படுத்தியதாக வடிவேல் கொடுத்த புகாரின் அடிப்படையில் சதீஷ்குமார் உட்பட 8 பேர் மீது விருகம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த நிலையில் வடிவேல் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை விருகம்பாக்கம் போலீசார் கைவிட்டனர். அந்த வழக்கை ரத்து செய்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். சதீஷ்குமார் மீதான வழக்கு சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

வடிவேலுவின் வக்கீல் வரவில்லை

இந்த நிலையில் மாஜிஸ்திரேட்டு உத்தரவை ரத்து செய்து, தனது புகாரை வேறொரு இன்ஸ்பெக்டர் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் சதீஷ்குமார் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதி கே.என்.பாஷா முன்னிலையில் இறுதி விசாரணைக்கு வந்தது.

சதீஷ்குமார் தரப்பில் வக்கீல்கள் நமோ நாராயணன், பெரியசாமி ஆகியோர் ஆஜரானார்கள். ஆனால் வடிவேல் தரப்பில் வக்கீல்கள் யாரும் ஆஜராகவில்லை. எனவே வழக்கின் இறுதி விசாரணையை அடுத்த வாரத்துக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.

http://thatstamil.oneindia.in/movies/news/2011/07/02-case-against-vadivelu-postponed-aid0136.html

கருத்துகள் இல்லை: