செவ்வாய், 12 ஜூலை, 2011

ஜெயலலிதாவின் அதிரடியால் தி.மு.க.,வினர் பதட்டம்

சென்னை: நிலம் அபகரிப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்க, ஜெயலலிதா தனி போலீஸ் பிரிவு அமைத்தது, தி.மு.க.,வினரிடையே கடும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழக அரசு, தற்போது, நிலம் அபகரிப்பு தொடர்பான வழக்குகளில், தீவிரம் காட்டி வருகிறது. இதில், தி.மு.க.,வினர் கைதாகினர். தொடர்ந்து, தி.மு.க.,வினர் மீது புகார்கள் குவியத் துவங்கின. இதை கண்ட முதல்வர் ஜெயலலிதா, நில அபகரிப்பு வழக்குகளை விசாரிக்க, தனி போலீஸ் பிரிவை துவக்கி உத்தரவிட்டார். இதனால், தி.மு.க., நிர்வாகிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
ஒவ்வொருவராக கைதாகிக் கொண்டே இருந்தால், கட்சி கலகலத்து விடும் என்பதை, தி.மு.க., தலைமை உணர்ந்தது. ""கட்சியினரை பயமுறுத்துவதற்காக, அரசு கையாளும் தந்திரம், அரசின் அத்துமீறல் குறித்து, எனக்கு தகவல் தெரிவிக்கலாம். நான் தலைமைக் கழகத்தில் எப்போதும் இருப்பேன். இது போன்ற வழக்குகளில் சிக்குபவர்களுக்கு, வழக்கறிஞர் அணியில் உள்ளவர்கள் உதவ வேண்டும்'' என, கருணாநிதி அறிவித்தார்.
அவர் கூறியபடி கடந்த மூன்று நாட்களாக, காலையிலே அறிவாலயம் வந்து செல்கிறார். அவர் வருவதையொட்டி, முன்னாள் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், வழக்கறிஞர்கள் வந்து செல்கின்றனர்.
மாவட்டங்கள்தோறும், தி.மு.க., வழக்கறிஞர்கள் அணிக் கூட்டம் நடைபெறுகிறது. வழக்குகளை சந்திப்பது எப்படி என விவாதிக்கப்படுகிறது. இது குறித்து தி.மு.க., வழக்கறிஞர்கள் சிலர் கூறும்போது, ""போலீசார் வழக்கு எதுவும் போட்டால், கட்சியினர் உடனே, கட்சி வழக்கறிஞர்களை நாடுவது வழக்கம். தற்போது, தலைமை, நில அபகரிப்பு வழக்கில் சிக்குபவர்களுக்கு உதவ வேண்டும் என அறிவித்துள்ளது. ""மாவட்டத் தலைமைக்கு வரும் புகார்களை, அப்பகுதி வழக்கறிஞர்களிடம் பிரித்து ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நபர் கட்டணம் எதுவும் தந்தால் வாங்கிக் கொள்ளலாம். இல்லை என்றாலும், தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது'' எனத் தெரிவித்தனர். ஜெயலலிதாவின் அதிரடி நடவடிக்கை, தி.மு.க.,வினரிடையே பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. அதை மறைக்க முயலும் தி.மு.க.,வினர், ஜெயலலிதா நடவடிக்கை, எங்கள் கட்சியினரை சுறுசுறுப்பாக்கி உள்ளது. தலைவர் தலைமை அலுவலகத்திற்கு வருவதால், அனைவரையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது எனப் பெருமையாக பேசி வருகின்றனர்.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=274076

கருத்துகள் இல்லை: