புதன், 13 ஜூலை, 2011

இந்தியன் முஜாஹிதீன் அமைப்புடன் இணைந்து லஷ்கர் இ தொய்பா நடத்திய தாக்குதல்?

மும்பையில் இன்று 3 இடங்களில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்கு இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பு காரணமாக இருக்கலாம் என மும்பை போலீஸார் சந்தேகிக்கின்றனர். மேலும், லஷ்கர் இ தொய்பாவுக்கும் இதில் தொடர்பு இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.

இன்று மாலை 6.45 மணிக்கு ஆரம்பித்து 7 மணிக்குள் தாதர், ஜவேரி பஜார் மற்றும் ஒபரா ஹவுஸ் என மூன்று இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்து மும்பை நகரை அதிர வைத்தன. இந்த சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

குண்டுவெடிப்பு நடந்த இடங்களை போலீஸார் முற்றுகையிட்டு தடயங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தடயவியல் நிபுணர்களும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

முதல் கட்ட விசாரணையில் இந்த குண்டுவெடிப்புகளை இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பு நிகழ்த்தியிருக்கலாம் என போலீஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். மேலும் லஷ்கர் இ தொய்பா அமைப்புக்கும் இதில் தொடர்பு இருக்கலாம் என நம்பப்படுகிறது.

மூன்று இடங்களிலும் ஐஇடி வகை குண்டுகள் பயன்படுத்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், மக்கள் அதிகம் கூடும் இடங்களைத் தேர்வு செய்து குண்டுகளை வைத்துள்ளதால் பெருமளவில் உயிர்ச்சேதத்தை நிகழ்த்தும் திட்டமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

மகாராஷ்டிர முதல்வருடன் பிரதமர் பேச்சு

குண்டுவெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து பிரதமர் மன்மோகன் சிங், மகாராஷ்டிர முதல்வர் பிருத்விராஜ் சவானை தொடர்பு கொண்டு பேசினார். நிலவரம் குறித்து கேட்டறிந்த அவர் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை முடுக்கி விடுமாறு கேட்டுக் கொண்டார்.
http://thatstamil.oneindia.in/news/2011/07/13/im-let-behind-mumbai-blasts-sources-aid0091.html

கருத்துகள் இல்லை: