சனி, 9 ஜூலை, 2011

கூட்டணிச் சிக்கலைத் தீர்க்க கருணாநிதியை சந்திக்க வருகிறார் பிரணாப் முகர்ஜி

சென்னை: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் அடுத்தடுத்து திமுக தலைவர்கள் கைதாகி வரும் நிலையில், திமுக கடும் அதிருப்தியிலும், விரக்தியிலும் மூழ்கியுள்ள நிலையில் அதை சமாதானப்படுத்தும் வகையில் பிரணாப் முகர்ஜியை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சென்னைக்கு அனுப்பி வைக்கிறார். பிரணாப் முகர்ஜி இன்று சென்னை வந்து கருணாநிதியை சந்தித்துப் பேசுகிறார்.

இன்று காலை சென்னை வரும் பிரணாப் முகர்ஜி, கோபாலபுரம் வீட்டில் கருணாநிதியை சந்தித்துப் பேசுகிறார். இந்த சந்திப்பின்போது 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கின் விசாரணையில் காங்கிரஸ் கட்சியால் குறுக்கிட முடியாத நிலை இருப்பதை விளக்குவார் என்று தெரிகிறது. மேலும், தயாநிதி மாறன், ராசாவுக்குப் பதில் புதிய அமைச்சர்களை திமுக பரிந்துரைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொள்வார் எனத் தெரிகிறது.

2ஜி விவகாரம் பெரிதாக வெடித்த பின்னர், குறிப்பாக கனிமொழி கைது, தயாநிதி மாறன் ராஜினாமா ஆகிய சம்பவங்களுக்குப் பிறகு காங்கிரஸ் மேலிடத் தலைவர் ஒருவர் கருணாநிதியை தேடி வந்து சந்திப்பது இதுவே முதல் முறையாகும் என்பது நினைவிருக்கலாம்.

காங்கிரஸ் கட்சி திடீரென இறங்கி வருவதற்கு முக்கியக் காரணம் இருப்பதாக கூறப்படுகிறது. கோவையில், திமுக தனது செயற்குழு மற்றும் பொதுக் குழுக் கூட்டங்களைக் கூட்டியுள்ளது. அப்போது காங்கிரஸுடனான கூட்டணி குறித்து அது முடிவெடுக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. குறிப்பாக உறவை முறித்துக் கொள்ளும் முடிவுக்கு அது போகக் கூடும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இதனால்தான் பிரணாப் முகர்ஜியை, சோனியா காந்தி சென்னைக்கு அனுப்பி வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
http://thatstamil.oneindia.in/news/2011/07/09/pranab-mukherjee-meet-karunanidhi-today-aid0091.html

கருத்துகள் இல்லை: