செவ்வாய், 19 ஜூலை, 2011

கோவை ராசி சரியில்லை என்பதால் திருப்பூருக்கு பொதுக்குழுக் கூட்டத்தை மாற்ற திமுக திட்டம்?

சென்னை: கோவை நமக்கு ராசியானதாக இல்லை. எனவே பொதுக்குழு, செயற்குழுக் கூட்டத்தை திருப்பூரில் நடத்தலாம் என திமுக தலைமைக்கு திருப்பூர் மாவட்ட திமுக நிர்வாகிகள் எடுத்துக் கூறியுள்ளனராம். எனவே பொதுக்குழுக் கூட்டம் திருப்பூரில் நடைபெறலாம் என்று பேச்சு அடிபடுகிறது.

சட்டசபைத் தேர்தலில் கிடைத்த மிகப் பெரிய தோல்வியால் துவண்டு போயுள்ளனர் திமுகவினர். மேலும் அடி மேல் அடியாக மாநிலம் முழுவதும் நில அபகரிப்பு, கட்டப் பஞ்சாயத்து உள்ளிட்டவற்றில் ஈடுபட்டதாக கூறி திமுகவினர் மீது சரமாரியாக வழக்குளும் பாய்ந்து வருகின்றன. இந்த நிலையில் கட்சியினரை தைரியப்படுத்தும் வகையில் செயற்குழு, பொதுக் குழுக் கூட்டங்களை நடத்தி முக்கிய முடிவுகளை எடுக்க திமுக தலைமை திட்டமிட்டது.

அதன்படி கோவையில்வருகிற 23, 24 ஆகிய நாட்களில் இந்தக் கூட்டங்களை நடத்த தீர்மானித்து ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன. இந்த நிலையில் தற்போது புதிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

கோவை நமக்கு ராசியாக இல்லை, சென்டிமென்ட்படி அது நமக்கு பலனைத் தரவில்லை. செம்மொழி மாநாடு கோவையில் நடத்தினோம். சென்னைக்கு அடுத்தபடியாக மிகப் பெரிய தகவல் தொழில்நுட்பப் பூங்காவை உருவாக்கினோம். இருப்பினும் கோவை மக்கள் நம்மைக் கைவிட்டு விட்டனர். மேலும், கோவையில்தான் ஜெயலலிதா முதலில் மிகப் பெரிய கூட்டத்தைக் கூட்டி பொதுக் கூட்டம் போட்டார். அந்த ராசி அவருக்குஒர்க் அவுட்ஆகி ஆட்சியையும் பிடிக்க உதவியது.

ஆனால் திமுகவோ ஆட்சியைப் பறி கொடுத்தது, திமுக குடும்பத்தினரை ஊழல் வழக்கில் சிக்கி சிறையில் தள்ள வைத்து விட்டது, கட்சிக்கும் கெட்ட பெயரை ஏற்படுத்தி விட்டது. எனவே நமக்கு கோவை ராசியானதாக இல்லை. எனவே இங்கு பொதுக்குழுக் கூட்டத்தை நடத்த வேண்டாம். திருப்பூரில் நடத்தலாம் என மு.க.ஸ்டாலினுக்கு நெருக்கமானவரான முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் உள்ளிட்டோர் எடுத்துக் கூறியுள்ளனராம்.

இதுகுறித்து திமுக தலைமையும் யோசித்து வருவதாக தெரிகிறது. எனவே திருப்பூருக்கு பொதுக்குழுக் கூட்டம் மாறக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
http://thatstamil.oneindia.in/news/2011/07/19/sentiment-strikes-will-dmk-general-meeting-in-tirupur-aid0091.html

கருத்துகள் இல்லை: