திங்கள், 25 ஜூலை, 2011

நில அபகரிப்பு வழக்கில் போலீசார் முன்பு சரண் ; வீரபாண்டி ஆறுமுகத்திடம் இன்று விசாரணை

சேலம்: சேலம் மாவட்டத்தில் தனக்கென முழுச்செல்வாக்கு கொண்ட தி.மு.க., மாஜி அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் நில அபகரிப்பு வழக்கில் இன்று காலை 10 மணிக்கு போலீசார் முன்பு சரண் அடைந்தார். முன்னதாக 10 கார்களில் புடைசூழ வந்த போது குறிப்பிட்ட எல்லை பகுதியில் போலீசார் ( கோட்டை மாரியம்மன் கோயில் வாசல் அருகே ) தடுத்து நிறுத்தி அவர் வந்த காரை மட்டும் அனுமதித்தனர். கே.பி.,ராமலிங்கம் எம்.பி., கள்ளக்குறிச்சி எம்.பி., ஆதிசங்கர், மாஜி எம்.எல்.ஏ., வீரபாண்டி ராஜா, வக்கீல் மூர்த்தி, குடும்ப டாக்டர் ஒருவர் ஆகியோர் வீரபாண்டி ஆறுமுகத்துடன் வந்திருந்தனர்.

போலீஸ் விசாரணை அறைக்குள் வீரபாண்டி ஆறுமுகம் மட்டும் அனுப்பி வைக்கப்பட்டார். மற்றபடி யாரும் அனுமதிக்கப்படவில்லை. மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் பிச்சை ‌தலைமையிலான போலீசார் விசாரிக்கின்றனர். இவர்களுடன் துணை தாசில்தார் பாலகிருஷ்ணன், பெரியசாமி, அரசு டாக்டர்கள் கண்ணன், நடராஜன், கோகிலா ஆகியோரும் உள்ளனர்.

போலீஸ் விசாரணைக்கு செல்லும்போது தொண்டர்கள் போலீஸ் மற்றும் அ.தி.மு.க, அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

அ.தி.மு.க., அரசு பொய் வழக்கு போட்டிருக்கிறது என்றும் தனக்கு முன்ஜாமின் வழங்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்த போதிலும் முதலில் விசாரணைக்கு ஒத்துழையுங்கள் என்று கோர்ட் கூறி விட்டது. போலீஸ் காவலில் 3 நாள் விசாரிக்கப்படவும் உத்தரவிட்டது.

சேலம் அங்கம்மாள் காலனி மக்களுக்கு தானமாக வழங்கப்பட்ட நிலத்தை, அபகரித்ததாக, மாஜி அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் உட்பட, 13 பேர் மீது, சேலம் மாநகர மத்திய குற்றப்பிரிவு நில அபகரிப்பு மீட்புக் குழு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அது போல பிரிமியர் ரோலர் மில் வழக்கிலும், வீரபாண்டி ஆறுமுகம் உட்பட, 11 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சேலம், பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில், டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கு பின்புறம் நில அபகரிப்பு மீட்புக் குழு அலுவலகம், மிகவும் குறுகலான சந்தில் அமைந்துள்ளது. முன்னாள் அமைச்சர் ஆஜராகும் நிலையில், அவரது ஆதரவாளர்கள், சேலத்தில் அதிக அளவில் கூடுவர். இதனால் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக்கிய வீதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

13 பேரில் 4 பேர் கைது : அங்கம்மாள் காலனி நில விவகார வழக்கில், முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், தி.மு.க.,வைச் சேர்ந்த மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் பாரப்பட்டி சுரேஷ்குமார், கவுசிக பூபதி, காங்கிரஸ் பிரமுகர்கள் எம்.ஏ.டி., கிருஷ்ணசாமி, உலகநம்பி, கவுன்சிலர் ஜிம்மு ராமு, மகேந்திரன், சித்தானந்தம், கனகராஜ், ஆட்டோ முருகன், கறிக்கடை பெருமாள், மாஜி போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணன், முன்னாள் ஆர்.டி.ஓ., பாலகுருமூர்த்தி ஆகிய 13 பேர் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது. எம்.ஏ.டி., கிருஷ்ணசாமி, கனகராஜ், ஆட்டோ முருகன், கறிக்கடை பெருமாள் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கருணாநிதி ஆறுதல்: நேற்று நடந்த தி.மு.க., பொதுக்குழுவில் பங்கேற்ற வீரபாண்டி ஆறுமுகம் தம்மீதும், கழக தொண்டர்கள் மீதும் பொய்வழக்கு போடப்பட்டு என்னை தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதே இதற்கு இதுவரை கட்சி ஏதாவது நடவடிக்கை எடுத்ததா ? இப்படி விட்டு விட்டால் கட்சி ஒன்றுமில்லாமல் போய்விடும் என தனது குமுறலை வெளியிட்டார். பேச்சைக்கேட்டுக்கொண்டிருந்த கருணாநிதி சும்மா விட்ருவோம்மாய்யா., என்று தேற்றினார்.

பஜார் தெருவில் கடைகள் அடைப்பு : இவரது விசாரணை இன்று நடப்பதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேலம் பஜார் தெருவில் உள்ள கடைகளை போலீசார் அடைக்கும் படி கூறிவிட்டனர். இவருடன் வந்த வாகனங்கள் பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் பழைய பஸ் ஸடாண்ட் முதல் , கோட்டை மாரியம்மன் கோயில் வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தற்போது இவரிடம் விசாரரணை நடந்து வருகிறது. இவர் 3 நாள் போலீஸ் கஸ்டடியில் இருப்பார். வரும் புதன்கிழமை மாலை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார்.
http://www.dinamalar.com

கருத்துகள் இல்லை: