செவ்வாய், 26 ஜூலை, 2011

முதல் முறையாக ஜெயலலிதாவைச் சந்திக்கிறார் இயக்குநர் சீமான்!

சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்கிறார். ஜெயலலிதாவை அவர் சந்திப்பது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

நாம் தமிழர் கட்சி இந்தத் தேர்தலில் காங்கிரஸை எதிர்த்து தீவிர பிரச்சாரம் செய்தது. இதன் மூலம் அதிமுகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தது. அந்தப் பிரச்சாரத்தின் பலனாக காங்கிரஸ் வெறும் 5 இடங்களைப் பெற்று படுதோல்வி அடைந்தது.

அதிமுக பதவி ஏற்ற கையோடு, முதல்வர் ஜெயலலிதாவுக்கு நாம் தமிழர் கட்சி சில கோரிக்கைகளை முன் வைத்தது.

தமிழரைக் கொன்று குவித்த இலங்கைக்கு எதிரான பொருளாதாரத் தடை, இலங்கை மீதான சர்வதேச விசாரணை, தமிழகத்தில் உள்ள முகாம்களில் வாடும் ஈழத் தமிழருக்கு நல்ல வசதிகள் செய்து தரவேண்டும் போன்ற தீர்மானங்களை சட்டசபையில் ஜெயலலிதா நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டது நாம் தமிழர் கட்சி.

சட்டமன்றத்தின் முதல் கூட்டத் தொடரிலேயே இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றினார் ஜெயலலிதா. இலங்கைக்கு எதிராக மூன்று முக்கியத் தீர்மானங்களை சட்டமன்றத்தில் தானே முன்மொழிந்தார் ஜெயலலிதா. அத்துடன் ஈழத் தமிழர் முகாம்களுக்கு கூடுதல் வசதிகள் செய்து தரவும் உத்தரவிட்டுள்ளார்.

இதற்காக உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் அவருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். ஏற்கெனவே ஜெயலலிதாவுக்கு பிரமாண்ட கூட்டம் மூலம் நாம் தமிழர் கட்சி நன்றி தெரிவித்தது.

இந்த நிலையில், இன்று பிற்பகல் 1.15 மணிக்கு முதல்வர் ஜெயலலிதாவை கோட்டையில் சந்திக்கிறார் இயக்குநர் சீமான். தங்கள் கோரிக்கையை நிறைவேற்றியதுடன், இலங்கை தமிழர் மீது முதல்வர் காட்டி வரும் அக்கறைக்கும் நடவடிக்கைகளுக்கும் நேரில் நன்றி தெரிவிக்கவே இந்த சந்திப்பு என்று நாம் தமிழர் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் சந்திப்பு

சீமான் இந்தத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளித்தபோதும், ஒரு முறை கூட ஜெயலலிதா நேரில் சந்திக்கவில்லை. தாமாக முன்வந்துதான் இந்த ஆதரவை வழங்கினார். ஜெயலலிதாவை நேரில் சந்திப்பீர்களா என்று கேட்டபோது, நான் எதையும் எதிர்ப்பார்க்கவில்லை. எனவே நேரில் சந்திக்கவில்லை, என்று பத்திரிகையாளர்களிடம் அவர் தெரிவித்திருந்தார்.

இப்போதுதான் அவர் முதல் முறையாக, அதுவும் முதல்வர் பதவி ஏற்றபிறகு ஜெயலலிதாவைச் சந்திக்கிறார்.
http://thatstamil.oneindia.in/news

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

முட்டாள்தமிழர்களை ஏமாற்றிக் கொன்டிருக்கும் ஒரு களவானி ,எத்தன்,.