புதன், 24 ஆகஸ்ட், 2011

இன்றைய முக்கிய செய்திகள் 01


அமெரிக்க விமானங்களில் இருந்து அம்பாறையில் பொதிகள் வீச்சு
இருபது நாடுகளின் விமானப்படை அதிகாரிகள் பங்கேற்கும் பசுபிக் வான் மீட்பு ஒத்திகையின் ஒரு கட்டமாக இன்று அம்பாறை மாவட்டத்தில் வான்வழியாகப் விநியோகப் பொதிகளை போடும் ஒத்திகைப் பயிற்சி மேற்கொள்ளப்படவுள்ளது.

இன்று காலை 10 மணிக்கும் 4 மணிக்கும் இடையில் சி-130 இராட்சத விமானங்களில் இருந்து அம்பாறை மாவட்டத்துக்கு மேலாக பொதிகளை போடும் பயிற்சிகள மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒத்திகைப் பயிற்சியில் சிறிலங்கா, அவுஸ்ரேலியா, மலேசிய விமானப்படைகளின் தலா ஒரு விமானமும், அமெரிக்க விமானப்படையின் மூன்று விமானங்களும் பங்கேற்கவுள்ளன.

அதேவேளை நாளை சிறிலங்கா மற்றும் அமெரிக்க விமானங்களில் இருந்து பரா படையினரை தரையிறக்கும் ஒத்திகைப் பயிற்சி மேற்கொள்ளப்படவுள்ளது.
இரத்மலானைப் பகுதியில் இந்த ஒத்திகை நாளை பிற்பகல் 2 மணிக்கும் 4.30 மணிக்கும் இடையில் இடம்பெறவுள்ளதாக சிறிலங்கா விமானப்படைப் பேச்சாளர் குறூப் கப்டன் அன்ரூ விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

இரத்மலானை விமான்படைத் தளத்தை மையப்படுத்தி கடந்த திங்களன்று ஆரம்பிக்கப்பட்ட பசுபிக் வான் மீட்பு ஒத்திகையில் சிறிலங்கா விமானப்படையின் 150 அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளினதும் 300 வெளிநாட்டு விமானப்படை அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

0000
தமிழ் மக்களின் உற்ற நண்பரொருவரை நாங்கள் இழந்துவிட்டோம் - நா.க.த.அரசு
மாபெரும் கனேடிய தலைவர் மதிப்புக்குரிய 'ஜாக் லேட்டன்' அவர்களின் மறைவையிட்டு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தனது அழ்ந்த அனுதாபத்தையும் கவலையும் தெரிவிக்கின்றது. 

புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவரும், கனேடிய நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவருமான மாண்புமிகு 'ஜாக் லேட்டன்' Jack Layton அவர்கள் மறைந்த செய்தி கேட்டு நாங்கள் மிகுந்த துயரமும் அதிர்ச்சியும் அடைகின்றோம். 

புலம் பெயர் வாழ் தமிழ் மக்கள் சார்பிலும், இலங்கைத் தீவில் வாழும் தமிழ் மக்களின் சார்பிலும் நாங்கள் அவரது துணைவியார் திருமதி 'ஒலிவியா சவ்' Ms Olivia Chow அவர்களுக்கும், அவர்களது பிள்ளைகளுக்கும் ஏனைய குடும்ப உறவினர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தையும் கவலையும் தெரிவித்துக் கொள்கின்றோம். 

மறைந்த 'ஜாக் லேட்டன் ' அவர்கள் தமிழ் மக்களின் நல்லதோர் நண்பனாக இருந்து வந்துள்ளார். 

நீண்ட காலமாக இலங்கைத் தீவில் நீதியை நிலைநாட்டுவதற்காகவும், தமிழர்கள் அங்கு தன்னாட்சி உரிமை பெற்று சமத்துவத்துடன் வாழவேண்டும் எனும் வகையிலான எமது போராட்டங்களுக்கும் அவர் தன் ஆதரவைத் தொடர்ந்து வழங்கி வந்துள்ளார். 

2009
ம் ஆண்டின் முதல் கூற்றில், தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கில் கொன்று குவிக்கப்பட்ட போதும், அங்கு தமிழ் மக்களைப் பாதுகாக்கவும் அமைதி வேண்டியும், இங்கு மக்கள் தெருக்களில் இறங்கி குரல் எழுப்பியவேளைகளில் 'ஜாக் லேட்டன்' அவர்கள் மட்டுமே எங்களுடன் மேடைகளில் தோன்றி தமிழ் மக்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தவர் என்பதனை நாங்கள் இவ்வேளையில் நன்றியுடன் நினைவு கூர்கின்றோம். 

இதே போன்று, இவ்வாண்டின் ஜூன் மாதத்தில் வன்கூவர் நகரில் நடைபெற்ற புதிய ஜனநாயக் கட்சியின் மகாநாட்டில், இலங்கைத் தீவில் இடம்பெற்ற அநீதிகளை விசாரணை செய்வதன் மூலம் உண்மை, வெளிப்படைத் தன்மை, நீதி என்பவற்றை நிலைநாட்டும் வகையில் விசாரணை செய்வதற்காக அனைத்துலக மட்டத்திலான ஒரு சுதந்திரமான விசாரனைக்கானதோர் செயல் முறையினைக் கொண்டு வரல் வேண்டும் என ஐநா சபையைக் கோரும் பிரேரணையை நிறைவேற்றியதையும் நாங்கள்இத்தருணத்தில் நன்றியுடன் நினனைவு கூர்கின்றோம். 

இலங்கைத் தீவில் தமிழ் மக்களுக்கான நீதியினை நிலை நாட்டுவதற்காக 'ஜாக் லேட்டன்' அவர்கள் நல்ல சந்தர்ப்பத்தில் இந்த பிரேரணையை நிறைவேற்றியமைக்காகவும், நீதியினை நிலைநாட்டுவதில் அவருக்கு இருந்த உறுதியினையும், பற்றினையும் நாங்கள் அப்பொழுதே வெகுவாகப் பாராட்டியிருந்தோம்.

அது மட்டுமன்றி, 'ஜாக் லேட்டன்' அவர்கள் இளம் கனேடிய தமிழர் ஒருவரை முதன் முதல் மேலை நாடொன்றில், கனடாவில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்யப்படுவதற்கான சந்தர்ப்பத்தைக் கொடுத்ததன் மூலம் தமிழ் இனத்துக்கே பாரியதோர் சிறப்பையும் பெருமையையும் உலகளாவில் தேடித் தந்துள்ளார் என்பதை தமிழ் இனம் என்றும் பெருமையுடன் நினைவு கூரும். 

தங்களின் சிறப்பான தலைமையின் கீழ் நாங்கள் இது போன்ற பல செயற்பாடுகளை எதிர்காலத்தில் நிறைவேற்ற எண்ணியிருந்தோம். 

தமிழ் மக்களின் உற்ற நண்பரொருவரை நாங்கள் இழந்துவிட்டோம். மனித உரிமைகளுக்காகக் குரல் கொடுத்து வந்த மாபெருந் தலைவரை இழந்துவிட்டோம். 

இவ்வுலகில் நல்லதோர் சமுதாயத்தை உருவாக்குவதற்காக அவர் கண்ட கனவுகள், அவர் தம் சிந்தனைகள், அவரின் துணிவுடைமை என்பன எம் மனதில் என்றும் நிலைத்து நிற்கும். அவரது துணைவியாருக்கும் குடும்பத்தினருக்கும் நாங்கள் எங்கள் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம். 

ஆகஸ்ட் 23, 2011 
விசுவநாதன் ருத்திரகுமாரன் 
பிரதமர், 
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்
000
அம்பாந்தோட்டைத் துறைமுக வாயில் கடற்பாறை - ஒப்புக்கொள்கிறது சிறிலங்கா அரசு
புதிதாக அமைக்கப்பட்ட அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் நுழைவாயிலில் காணப்படும் பாரிய கடற்பாறையை அகற்றுவதற்கு சீனாவிடம் 40 மில்லியன் டொலர் கடனுதவியை கோரியுள்ளதாக சிறிலங்காவின் துறைமுக அதிகாரசபை கூறியுள்ளது.

1.4
பில்லியன் டொலர் செலவில் அமைக்கப்பட்டுள்ள அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் நுழைவாயிலில் காணப்படும் பாரிய கடற்பாறையினால், துறைமுகத்துக்குள் பாரிய கப்பல்கள் நுழைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தை முன்னர் ஐதேக அம்பலப்படுத்திய போது, அதனை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்திருந்தது.

வெற்றுக் கொள்கலன்களுடன் ஒரு கப்பலை துறைமுகத்துக்குள் கொண்டு சென்ற சிறிலங்கா அரசாங்கம் ஐதேக பொய் கூறுவதாகவும் தெரிவித்திருந்தது.

ஆனால் தற்போது அந்தப் பாறையை அகற்ற சீனாவிடம் கடனுதவியை சிறிலங்கா அரசாங்கம் கோரியுள்ளது.

அத்துடன் துறைமுக வாயிலில் பாறை இருப்பதை, துறைமுக வேலைகளைத் தொடங்க முன்னரே தாம் அறிந்திருந்ததாகவும், அதனை அகற்ற தேவைப்படும் 40 மில்லியன் டொலரை சீனாவிடம் கடனாகக் கேட்டுள்ளதாகவும் சிறிலங்காவின் துறைமுக அதிகாரசபைத் தலைவர் பிரியத் விக்கிரம ரொய்ட்டரிடம் தெரிவித்துள்ளார்.
0000
சங்கர்ராமன் கொலை வழக்கு: நீதிபதியுடன் ஜெயேந்திரர் தொலைபேசியில் 'டீல்' பேசினாரா?-சிடியால் பரபரப்பு!
சென்னை: சங்கர்ராமன் கொலை வழக்கை விசாரித்து வரும் நீதிபதியுடன் ஜெயேந்திரர் தொலைபேசியில் பேசுவது போன்ற ஆடியோ சிடி வெளியாகியுள்ளது. நீதிபதிக்கு பணம் கொடுத்து வழக்கிலிருந்து தப்பிக்க ஜெயேந்திரர் முயல்வதாக இந்த சிடி உரையாடல் மூலம் தெரிய வருவதாகவும், இதனால் இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை புதுச்சேரி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை நீதிபதி ராமசாமி விசாரித்து வருகிறார். இந்த வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
இந் நிலையில் இந்த விசாரணைக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சுந்தர்ராஜன் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், ஜெயந்திரர், அவரது பெண் உதவியாளர், 2 இடைத்தரகர்கள் மற்றும் நீதிபதி ஆகியோர் பேசிக்கொள்ளும் உரையாடல் அடங்கிய சி.டி. வெளியாகி உள்ளது. இதை ஒரு தமிழ்த் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.
அந்த சி.டி.யில் சங்கரராமன் கொலை குறித்தும், பணம் பட்டு வாடா குறித்தும் பேசுவது போன்று உரையாடல் உள்ளது. இந்தக் கொலை வழக்கிலிருந்து விடுதலையாக ஏதோ 'டீல்' நடந்துள்ளதாகத் தெரிகிறது.
அதில் பேசும் பெண் குரலுக்குச் சொந்தக்காரர் கெளரி என்பவர் ஆவார். இவர் ஜெயேந்திரரின் உதவியாளர் என்று அந்தத் தொலைக்காட்சி கூறியுள்ளது.
இந்த சி.டி. உண்மையானதா, உண்மை என்றால் பேசியவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து விசாரிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.
அதுவரை புதுச்சேரி நீதிமன்றத்தில் நடைபெறும் சங்கரராமன் கொலை வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனு மீது வார இறுதியில் விசாரணை நடக்கும் என்று தெரிகிறது. இதன்மூலம் புதிய பிரச்சனையில் சிக்கியுள்ளார் ஜெயேந்திரர்.
இந்தக் கொலை வழக்கில் ஜெயேந்திரரைக் கைது செய்தவர் அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாதான் என்பது குறிப்பிடத்தக்கது. இடையில் திமுக ஆட்சியின்போது இந்த வழக்கின் சாட்சிகள் அடுத்தடுத்து ஜெயேந்திரருக்கு ஆதரவாக பல்டியடித்தனர்.
இப்போது மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், ஜெயேந்திரர் தொடர்பான புதிய சிடி வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0000
பேரறிவாளன், முருகன், சாந்தன் தூக்கு தண்டனை-ரத்து செய்யக்கோரி பாமக, விசி கருத்தரங்கம்
சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி பாமக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவை சேர்ந்து வரும் 28-ம் தேதி சென்னையில் கருத்தரங்கம் நடத்தவுள்ளன.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய 3 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அவர்களின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டதையடுத்து அவர்கள் தூக்கு தண்டனையை எதிர்நோக்கியிருக்கின்றனர். 

இந்நிலையில் அவர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி இன்று சென்னை ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்ட ராமதாஸ் கூறுகையில், பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி பாமக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவை சேர்ந்து வரும் 28-ம் தேதி சென்னையில் கருத்தரங்கம் நடத்த முடிவு செய்துள்ளோம்.

இந்த கருத்தரங்கில் நானும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும் பேசவிருக்கிறோம். மேலும் இதில் தமிழ் உணர்வாளர்கள் பலர் கலந்து கொள்ளவிருக்கின்றனர் என்றார். 

தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி மனித சங்கிலி போராட்டம்: பழ. நெடுமாறன் அழைப்பு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி வரும் 26-ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மனித சங்கிலி போராட்டம் நடத்துமாறு அனைத்துக் கட்சிகளையும் தமிழ் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் கேட்டுக் கொண்டுள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது,

தூக்கு மேடையின் நிழலில் நிறுத்தப்பட்டுள்ள சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவரின் மரண தண்டனையை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், சட்டப் புத்தகத்தில் இருந்து மரண தண்டனையை அறவே நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி 26-8-2011 அன்று அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாலை 5 மணி முதல் 6 மணி வரை மனித சங்கிலிப் போராட்டம் நடத்துமாறு அனைத்துக் கட்சிகள், அனைத்துத் தமிழ்த் தேசிய அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள் ஆகியவற்றை வேண்டிக்கொள்கிறேன் என்று அதில் தெரிவித்துள்ளார்.
00000
நில அபகரிப்பில் யார் ஈடுபட்டாலும் கடும் நடவடிக்கை: ஜெயலலிதா
சென்னை: நில அபகரிப்பில் போலீசார் உள்பட யார் ஈடுபட்டாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

சட்டசபையில் இன்று காவல்துறை, தீயணைப்புத்துறை, மது விலக்கு, ஆயத்தீர்வை, உள்துறை ஆகியவற்றின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடந்தது.

முன்னதாக இந்தத் துறைகளின் கொள்கை விளக்கக் குறிப்புகளை முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் இன்று தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:

இந்த அரசு பதவி ஏற்றவுடன் பொதுமக்களிடையே சட்டம்- ஒழுங்கு பராமரிப்பின் மீது நம்பிக்கை ஏற்படுத்தும் வகையிலும், கடந்த காலத்தில் சமூக விரோதிகளின் செயல்பாடுகளினால் பாதிக்கப்பட்ட மக்களின் மனதில் நிலவி வந்த பய உணர்வை போக்கும் விதத்திலும் நடந்துள்ளது.

சட்டத்துக்கு புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டு தனிமனித உயிருக்கும் உடமைகளுக்கும் பாதுகாப்பற்ற சூழலை ஏற்படுத்தி வந்த சமூக விரோதிகள் தப்பிக்க இடம் கொடுக்காமல் இரும்பு கரம் கொண்டு அடக்கிட இந்த அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆட்களை கடத்தி பணம் பறித்தல், மணல் கொள்ளை, அத்தியாவசிய பொருட்களை கடத்துதல், நில ஆக்கிரமிப்பு, கட்ட பஞ்சாயத்து போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த இரண்டரை மாதங்களில் 323 பேர் மீது குண்டர் சட்டத்திலும், 4 பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்திலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திறமையும், ஆற்றாலும் தமிழக காவல் துறையின் பணி தரத்தின் தனி அடையாளங்களாக திகழ்கின்றன. ஆனாலும், காவல் பணியில் மேலும் சில மாற்றங்களும், சீர் திருத்தங்களும் தேவை என்பதில் சந்தேக மில்லை. எனவே திட்டமிட்ட மற்றும் தொடர் சீர்திருத்த நடவடிக்கைகளை மேற் கொள்ள இந்த அரசு உறுதி பூண்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து நடந்த விவாதத்தில் பேசிய பென்னாகரம் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் நஞ்சப்பன், கடந்த திமுக ஆட்சியில் சமூக விரோதிகள் மீது போலீசார் சரிவர நடவடிக்கை எடுக்கவில்லை. அடியாட்களாகவே காவல்துறையில் சிலர் நடந்து கொண்டார்கள். என் மீதே பல்வேறு வழக்குகள் போட்டார்கள். அதிலிருந்து விடுதலையாகி விட்டேன். ஒரே ஒரு வழக்குதான் உள்ளது. அதுவும் கூட பொய் வழக்கு தான்.

முதல்வர் ஜெயலலிதா: தி.மு.க. ஆட்சியில் பல பொய் வழக்கு போடப்பட்டதாக உறுப்பினர் நஞ்சப்பன் கூறினார். அந்த வழக்கின் விவரங்களை கொடுத்தால், பொய் வழக்கு என்றால் திரும்ப பெறப்படும்.

மேலும் நில அபகரிப்பில் போலீசார் சிலர் ஈடுபட்டதாகவும் கூறினார். நில அபகரிப்பில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதில் போலீசார் விதி விலக்கு அல்ல. ஏற்கனவே தவறு செய்த போலீஸார் மீதும் நடவடிக்கை எடுத்துள்ளோம். எந்த துறையை எடுத்துக் கொண்டாலும் அதில் நல்லவர்களும் உள்ளனர். குற்றம் புரிந்தவர்களும் உள்ளனர். எனவே, நில அபகரிப்பில் ஈடுபடுவது யாராக இருந்தாலும் தயங்காமல் இந்த அரசு நடவடிக்கை எடுக்கும்.

அதே நேரத்தில் உறுப்பினர் நஞ்சப்பன் பேசும்போது, போலீசை பிடிபிடியென விளாசித் தள்ளினார். இடையில் போலீசாருக்குப் பரிந்து கோரிக்கைகளையும் வைக்கிறார். இதில் எதை எடுத்து கொள்வது என்று புரியவில்லை.

பாலபாரதி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்):- இரண்டையும் எடுத்து கொள்ள வேண்டும்.

பாலபாரதி இவ்வாறு கூறியதும் முதல்வர் உள்பட அனைவரும் சிரித்தனர்,
00000
கவுன்சிலர் உள்பட 50 திமுகவினர் அமைச்சர் செந்தூர் பாண்டியன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்
செங்கோட்டை: திமுக கவுன்சிலர் உள்பட 50 பேர் அக்கட்சியில் இருந்து விலகி தமிழக கதர் மற்றும் கிராம தொழில் துறை அமைச்சர் செந்தூர் பாண்டியன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

புளியங்குடி நகராட்சி 31வது வார்டு திமுக கவுன்சிலர் மாரியம்மாள் கருப்பசாமி, நகர திமுக இளைஞர் அணி செயலாளர் கருப்பசாமி, ஆறுமுகநாடார், தர்மர் நாடார், மாரியப்பன், திருமலைசாமி, கணேசன், அருணாசலகனி, அருள், மணி, செந்தில், மாயி, ராகு நடராஜன் உள்ளிட்ட 50 திமுகவினர் அக்கட்சியிலிருந்து விலகி தமிழக கதர் மற்றும் கிராம தொழில் துறை அமைச்சர் பா. செந்தூர் பாண்டியன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் துரையப்பா, கடுவாய் என்ற முகமது உசேன், சண்முக சுந்தரம், சௌகத் அலி, கருப்பையா, கிருஷ்ணசாமி, தொகுதி இணை செயலாளர் பிவி நடராஜன், நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் ஆ. வெங்கடேசன், நகர செயலாளர் எம். தங்கவேலு, இணை செயலாளர் வீ. ராஜா, அவைத் தலைவர் பூசராஜாஉள்பட பலர் கலந்து கொண்டனர்.

விபத்தில் காயமடைந்தவருக்கு ஆறுதல் கூறிய அமைச்சர்

விபத்தில் படுகாயம் அடைந்தவரை சந்தித்து அமைச்சர் செந்தூர்பாண்டியன் ஆறுதல் கூறினார். 

செங்கோட்டை நகர எம்ஜிஆர் இளைஞர் அணி துணை செயலாளராக இருக்கும் வி. கணேசன் வாகன விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். அவரை தமிழக கதர் மற்றும் கிராம தொழில்துறை அமைச்சர் செந்தூர்பாண்டியன் அவரது வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறி உடல் நலம் விசாரித்தார்.

அமைச்சருடன் தொகுதி இணை செயலாளர் பிவி நடராஜன், மாவட்ட அண்ணா தொழிற்ச் சங்க தலைவர் சிவனு பாண்டியன், பொருளாளர் பரமசிவன், நகர செயலாளர் தங்கவேலு, அவைத் தலைவர் பூசராஜா, துணை செயலாளர் வீ ராஜா, ஜெயலலிதா பேரவை செயலாளர் வெங்கடேசன், ஜாகீர் உசேன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் ஜானராஜ்,திலகர், முத்தையா, செல்வகுமாரி, வார்டு செயலாளர் முத்துராமலிங்கம், டாக்டர் ஜாபர் உள்பட பலர் சென்றனர்.

10000 பணியாளர்களை நீக்கும் பாங்க் ஆப் அமெரிக்கா!
சிக்கன நடவடிக்கையின் ஒரு பகுதியாக 10000 பணியாளர்களை இந்த காலாண்டில் நீக்குகிறது பாங்க் ஆப் அமெரிக்கா.

இதில் 3500 பேரை செப்டம்பர் இறுதிக்குள் நீக்க அந்த வங்கி முடிவு செய்துள்ளதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது.

புராஜெக்ட் நியூ பாங்க் ஆப் அமெரிக்கா எனும் பெயரில் மறுசீரமைப்பு முயற்சியில் இறங்கியுள்ளது அமெரிக்காவின் மிகப்பெரிய வங்கியான பாங்க் ஆப் அமெரிக்கா.

இந்த முயற்சியின் முதல் முக்கிய நடவடிக்கையே, அதிகப்படியாக உள்ள பணியாளர்களைக் குறைத்து செலவைக் கட்டுப்படுத்துவதுதான். அதன்படி மொத்தம் 10000 பேரைக் குறைப்பதென்றும், இதில் முதல் கட்டமாக 3500 பேரை வரும் செப்டம்பருக்குள் நீக்குவதென்றும் முடிவு செய்துள்ளனர்.
இவர்களில் சிலருக்கு ஏற்கெனவே பணிநீக்க உத்தரவும் வழங்கப்பட்டுவிட்டதாம்.
சர்வதேச அளவில் பெரிய வங்கிகள் ஏற்கெனவே பெரிய அளவிலான வேலை நீக்க நடவடிக்கையை அறிவித்துள்ளன. எச்எஸ்பிசி வங்கி 30000 பேரையும், பிரிட்டனின் லாயிட்ஸ் வங்கி 15000 பேரையும் அடுத்த இரண்டாண்டுகளுக்குள் நீக்கிவிடுவதாக அறிவித்துள்ளன.

கருத்துகள் இல்லை: