வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011

இன்றைய முக்கிய செய்திகள் 01


ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவருக்கும் செப்டெம்பர் 2ம் திகதிக்குள் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்படும் என்று நேற்று செய்தி வெளியாகியுள்ளது 
மத்திய உள்துறை அமைச்சகம் வேலூர் சிறை அதிகாரிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்  எதிர்வரும் செப்டெம்பர் 2ம் திகதிக்குள் மூவரையும் தூக்கிலிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரிடமும் இன்று சிறை நிர்வாகம் இந்த தகவலை தெரிவிக்கும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த 21 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவர்கள் மூவரும் தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள  தூக்குத்தண்டனையை ரத்து செய்யக்கோரி இந்திய குடியரசுத்தலைவருக்கு அனுப்பிய கருணை மனு 11 வருடங்கள் கிடப்பில் போடப்பட்டு அண்மையில் நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
000
இதேவேளை மத்திய உள்துறை அமைச்சின் இந்த முடிவால் அதிர்ச்சியடைந்துள்ள தமிழ் தேசிய ஆதரவு அமைப்புகள் கடந்த இரவு தமிழகத்தில் இது பற்றி அவசரமாக கூடி ஆராய்ந்துள்ளன. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரின் தண்டனையையும் நிறுத்தக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று வழக்கு தொடரப்படவுள்ளதாக தெரிகிறது. பிரபல வழக்கறிஞர் ராம்ஜேத்மலானி இந்த வழக்கில் வாதாடவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
00000
பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரது மரண தண்டனைக்கான திகதியை இந்திய உள்துறை அமைச்சு உறுதிப்படுத்தியுள்ள நிலையில் இதை தடுத்து நிறுத்துவதற்கான போராட்டங்களை புலம்பெயர் நாடுகளில் முன்னெடுக்க  நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்வந்துள்ளது
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 17 மணிக்கு பாரிசிலுள்ள -  மனித உரிமைச் சதுக்கத்தில் இந்த கண்டன ஒன்றுகூடலுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்தக் கண்டன  ஒன்றுகூடல் பேரறிவாளன் முருகன் சாந்தன் ; ஆகியோரின் மரண தண்டனையை நிறுத்தக் கோருவதோடு தமிழகமெங்கும் முன்னெடுக்கப்படும் இதற்கான  போராட்டங்களுக்கு, புலம்பெயர் தமிழ் மக்களது தார்மீக ஆதரவை வெளிப்படுத்தும் நோக்கில், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது
தமிழகத்தில் இந்த விடயத்தில் கட்சி- அமைப்பு – இயக்க வேறுபாடுகளின்றி அனைவரும் அணிதிரண்டு நிற்பது போல், இந்த மூவரின் உயிர் காக்க  புலம்பெர்ந்த தமிழ்மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என்றும் நாடுகடந்த அரசாங்கம் தெரிவித்துள்ளது
00000
அமெரிக்கா தொடர்ச்சியாக கூறிவரும் ஆலோசனைகளை சிறிலங்கா புறக்கணித்தால், அனைத்துலக சமூகம் நடவடிக்கையில் இறங்க வேண்டிய நிலை ஏற்படும் என்று அமெரிக்கா மீண்டும் எச்சரித்துள்ளது. 
வொசிங்டனில் நேற்று நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் விக்ரோரியா நுலன்ட்; சிறிலங்காவுக்கு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். 
அவசரகாலச்சட்டத்தை நீக்குவதாக சிறிலங்காவின் அரசுத்தலைவர்; மகிந்த ராஜபக்ச வெளியிட்டுள்ள அறிவிப்பை அமெரிக்கா வரவேற்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இது சிறிலங்காவில் உள்ள மக்களுக்கு சாதகமானதமாக அமையும் என்று எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார். 
இதனால் எதிர்வரும் 29ம் நாள் அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிறேக் கொழும்புக்கு மேற்கொள்ளவுள்ள பயணம் இனிதாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 
அவசரகாலச்சட்டம் மற்றும் அதுதொடர்பான விவகாரங்கள் குறித்து சிறிலங்கா அரசாங்கத்தரப்பு, அரசார்பற்ற நிறுவனங்கள், மனிதஉரிமை அமைப்புகளின் கருத்துகளை அவர் அறிந்து கொள்வார் என்றும் விக்ரோரியா நுலன்ட் அம்மையார் தெரிவித்துள்ளார். 
றொபேட் ஓ பிளேக் யாழ்ப்பாணத்துக்கும் சென்று நிலைமைகளை அவதானிக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 
அனைத்துலக மனிதாபிமான மற்றும் மனிதஉரிமைச் சட்டங்களை சந்திக்குமாறு சிறிலங்கா அரசாங்கத்தை மீண்டும் கேட்டுக் கொள்வதாகவும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 
0000
அவசரகாலச்சட்டத்தை நீக்க சிறிலங்கா அரசாங்கம் எடுத்துள்ள முடிவை அமெரிக்கா வரவேற்பதாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் நேற்றிரவு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியுள்ளது. 
விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக எந்தவொரு தீவிரவாதச் செயல்களும் இடம்பெறாத நிலையில், சுமுகமான சூழலைக் கட்டியெழுப்புவதற்கான முக்கியமானதொரு நகர்வு இது என்றும் அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது. 
000 
இலங்கைக்கு வரும் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்காவின் உதவி இராஜங்கச் செயலாளர் ரொபட் ஓபிளேக்குடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சு நடத்தும் என இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
இலங்கைக்கு கடந்த முறை விஜயம் செய்தபோது ரொபட் ஓ பிளேக் முதலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சந்தித்தே பேச்சு நடத்தினார். அதேபோன்று இம்முறையும் அவர் முதலில் பேச்சு நடத்துவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
அரசுக்கும் கூட்டமைப்புக்குமிடையிலான பேச்சுக்கள் முறிவடைந்துள்ள நிலையில் இது விடயம் தொடர்பில் கூட்டமைப்புக்கு ரொபட் ஓ பிளேக்குக்கு தெளிவுப்படுத்தும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.  அதுமட்டுமின்றி, இலங்கைத் தமிழர் விவகாரம் தொடர்பாக அமெரிக்காவின் நிலைப்பாடு என்னவென்பதை ரொபட் ஓ பிளேக் இதன்போது அறிவிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன
0000
அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தைத்தைப் பெறுவதற்கு சிறிலங்கா அதிகாரிகளுக்கு சீனா பெருந்தொகைப் பணத்தை லஞ்சமாக வழங்கியதாக அமெரிக்கா நம்புவதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
நேற்றிரவு வெளியிடப்பட்ட சிறிலங்கா தொடர்பான  ஆவணங்களில் ஒன்றிலேயே, இதுபற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. 
அம்பாந்தோட்டைத் துறைமுக ஒப்பந்தத்தை சீன நிறுவனங்கள் பெறுவதற்கு லஞ்சமும், அரசியல் செல்வாக்குமே காரணமாக அமைந்தது என்றும் அமெரிக்கத் தூதரகம் அனுப்பிய இரகசிய ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது. 
அத்துடன் அம்பாந்தோட்டைத் துறைமுகம் சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் இருந்து வெகு தொலைவில் இருப்பதாகவும், அதற்கருகில் கைத்தொழில், வர்த்தக கட்டமைப்புகள் ஏதும் இல்லை என்றும் விக்கிலீக்ஸ் வெளியிட்ட இரகசிய ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
உள்நாட்டு ஏற்றுமதி இறக்குமதியாளர்களுக்கு இந்தத் துறைமுகத்தினால் எந்தப் பயனும் கிடைக்காது என்றும், அம்பாந்தோட்டையில் அமைக்கப்படும் அனைத்துலக விமான நிலையமும் கூட வாடகை விமானங்களை தரையிறக்கவே பயன்படும் என்றும் அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
000
1986ம் ஆண்டு தொடக்கம் 2010 ஜனவரி வரையிலான காலப்பகுதியில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்துக்கும், கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கும் இடையில் பரிமாறிக் கொள்ளப்பட்ட 1646 இரகசியத்தகவல் ஆவணங்களை விக்கிலீக்ஸ் நேற்றிரவு வெளியிட்டுள்ளது. 
இவற்றில் விடுதலைப் புலிகள் தொடர்பாக ஆவணங்களும், சிறிலங்கா அரசு வெளிநாடுகளுடன் கொண்டுள்ள இரகசியத் தொடர்புகள் தொடர்பான ஆவணங்களும் அடங்கியுள்ளன. 
சிறிலங்கா தொடர்பாக அமெரிக்கத் தூதரகத்தினால் பரிமாற்றப்பட்ட ஆவணங்கள் சிலவற்றை விக்கிலீக்ஸ் ஏற்கனவே வெளியிட்டிருந்தது. 
இந்தநிலையில் சிறிலங்கா தொடர்பான ஆயிரத்துக்கும் அதிகமான ஆவணங்கள் ஒரே நேரத்தில் வெளியாகியுள்ளதானது கொழும்பு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
0000
இலங்கையின் இறுதி யுத்தம் ஐ.நா நிபுணர் குழு அளித்த அறிக்கை பற்றி, ஐநா மன்றத்தில் விவாதத்துக்கு வரும்போது இந்தியா தனது நிலைப்பாட்டைத் தெரிவிக்கும் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா இந்திய நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். 
இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நேற்று விவாதம் நடைபெற்றது. 
மாநிலங்களவையில், நடந்த விவாதத்தின் முடிவில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் கிருஷ்ணா ஐநா அறிக்கை தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுப்பப்படுவதாகவும் அந்த அறிக்கை ஐநா மன்றத்தின் எந்த அமைப்பிலும் இதுவரை விவாதத்துக்கு வரவில்லை என்றும்  அது வரும்போது இந்தியா தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்த வாய்ப்புக் கிடைக்கும் என்றும் கூறினார்
யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் நடந்த நிகழ்வுகள் தொடர்பாக, சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட காட்சிகள் தொடர்பில், இலங்கை அரசு நியாயமான, வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்ட அவர் தமிழக முதல்வர் தொடர்பாகவும், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்ள் தொடர்பாகவும், சிறிலங்காவின்  பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ் தெரிவித்த கருத்தை நிராகரிப்பதாக தெரிவித்தார்.
00000
தலைமறைவாக உள்ள லிபிய தலைவர் கடாபி, அரசாங்க கருவூலத்தில் இருந்த தங்கத்தின் பெரும்பகுதியை  எடுத்துச் சென்றுவிட்டதாக  அந்நாட்டு மத்திய வங்கி ஆளுனர்; தெரிவித்துள்ளார்.இந்தத் தங்கத்தை, அவர் தனது கூலிப் படையினர் மூலம், அமெரிக்க டொலராகவோ, யுரோ கரன்சியாகவோ மாற்றியிருக்கலாம என்றும்  இந்தப் பணத்தை, அவர் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளச் செலவிடலாம். அல்லது தற்கொலைப் படைத் தாக்குதலுக்குப் பயன்படுத்தலாம் என்றும் அவர் கூறியுள்ளார் இதற்கிடையில், பாகிஸ்தானில் உள்ள லிபிய தூதரகத்தில், லிபியாவின் தேசியக் கொடி இறக்கப்பட்டு, கிளர்ச்சியாளர்களின் கொடி நேற்று ஏற்றப்பட்டது. இது குறித்து, கருத.தத் தெரிவித்த இஸ்லாமாபாத்தில் உள்ள லிபிய தூதர் லிபியாவில், ஆட்சி மாற்றத்தை ஐ.நா.,மற்றும் உலக நாடுகள் ஆதரித்துள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக குறிப்பிட்டார்
0000
லிபியாவில் இடம்பெறுகின்ற மோதல்களில், சட்ட விரோதமான  செயற்பாடுகள் மற்றும் பழிவாங்கல்களை நிறுத்திக் கொள்ளுமாறு ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது. 
லிபிய அரச தரப்பு மற்றும் போராட்டக் குழுவினர்கள், பழிவாங்கல் மற்றும் சட்ட மீறல்களை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக வெளிவந்தகுற்றச்சாட்டினைத் தொடர்ந்து, இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இரண்டு தரப்பினராலும் பொது மக்கள் கொல்லப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில் லிபியாவில் ஏற்பட்டுள்ள அவசர மனிதாபிமான தேவைகளுக்காக, 1.5 மில்லியன் டொலர்களை வழங்குவதாக ஐக்கிய நாடுகள் சபை இணக்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை தொடர்ந்தும் ட்ரிபொலியில் மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.கடாபியின் வசம் உள்ள அபு சலிம் பகுயில் துப்பாக்கி பிரயோகங்களை காணக்ககூடியதாக இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
 இந்த நிலையில் போராட்டக் குழுவினர் கடாபியின் வசமுள்ள மற்றுமொரு நகரான சிரட்டை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
0000
அதிநவீன தொழில்நுட்பம் வாய்ந்த போர் விமானங்கள் மற்றும் பீரங்கிகளை இந்தியாவுக்கு வழங்க அமெரிக்க ராணுவ தலைமையகம் முன்வந்துள்ளது. இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்தரைத்த அமெரிக்க பாதுகாப்புத்துறை துணை அமைச்சர் ரொபர்ட் ஸ்கெர் கடந்த, 1990ம் ஆண்டுகளில் இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே, ராணுவ ரீதியான வர்த்தகம் ஏதும் இல்லை என்றும் ஆனால், தற்போது, 27 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு, இந்தியாவுடன் ராணுவ தளவாட விநியோக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. என்றும் குறிப்பிட்டார்
கடந்த பெப்ரவரி மாதம் அமெரிக்க படையில் சேர்க்கப்பட்ட அதிநவீன தொழில் நுட்பம் வாய்ந்த சி-130ஜெ என்ற நான்கு இன்ஜின்கள் பொருத்தப்பட்ட ஜம்போஜெட் போர் விமானங்கள் தற்போது இந்தியாவுக்கு விற்பனை செய்யப்பட உள்ளதாகவும்  அமெரிக்க ராணுவத்தில் சேர்க்கப்பட்ட உடனேயே எந்த ஒரு ஆயுதங்களையும், விமானங்களையும் அமெரிக்கா இதுவரை எந்த நாடுகளுக்கும் உடனடியாக விற்றது கிடையாது என்றும்  அவர் குறிப்பிட்டார்
0000
அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதியை அடுத்துவரும் நாட்களில் ஐரின் சூறாவளி தாக்கும் என அமெரிக்க தேசிய சூறாவளி மைய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
தற்போது பஹாமஸ் தலைநகர் நசாவுக்கு கிழக்கு வடகிழக்கில் 65 மைல் தொலைவில் மயம் கொண்டுள்ள  இந்த சூறாவளி வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து ஓரிரு நாளில் அமெரிக்காவை தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதன் காரணமாக அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதியில் மணிக்கு 185 கி.மீ வேகத்தில் சூறைக் காற்றுடன் கன மழை பெய்யும் என்றும், கடலில் ராட்சத அலைகள் உருவாகும் என்றும் சூறாவளி மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வடக்கு கரோலினா மற்றும் நியூயோர்க் கடற்கரை பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறும், மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
000
கனடாவின் புதிய ஜனநாயக கட்சியின் தலைவரான ஜாக் லெய்டனின் இறுதி அஞ்சலி துப்பாக்கி குண்டுகள் முழங்க பெரும் கார் ஒலியுடன் ஜீரொ நெடுஞ்சாலையில் நேற்று நடைபெற்றது.
கனடா நாடாளுமன்ற பொதுச்சபை வளாகம் வெளியே 15 குண்டுகள் முழங்கி மறைந்த தலைவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. ஒட்டவா நதியில் இருந்து கியூபெக் வரையிலான பயணமும் இடம் பெற்றது.
மறைந்த தலைவருக்கு மரியாதை செய்யும் வகையில் ஏராளமான மக்கள் தங்கள் சைக்கிள்களில் மணியை ஒலித்தும், ஒலிப்பான்களில் சத்தம் எழுப்பியும் அஞ்சலி செய்தனர்.
லெய்டனின் உடலுக்கு டொரண்டோ காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதை செய்தனர்.
இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் லெய்டனின் மனைவி ஒலிவியா சோ, லெய்டனின் மகன் மைக், மகள் சாரா மற்றும் பேத்தி ஆகியோர் திரண்டு வந்த ஆதரவாளர்கள் மத்தியில் வந்தனர். அவர்கள் தங்களுக்கு ஆறுதல் சொன்னவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.


000
கடன் நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் இத்தாலி மற்றும் ஸ்பெயின் உரிமை பங்கு பத்திரங்களை ஐரோப்பிய மத்திய வங்கிகள் மீண்டும் வாங்கத் தீர்மானித்துள்ளது. இந்த மாதம் ஐரோப்பிய மத்திய வங்கி இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாடுகளின் பத்திரங்களை வாங்க துவங்கி உள்ளது. சந்தை நெருக்கடியில் இருந்து அவை மீள வேண்டும் என்ற முயற்சியில் அதன் பத்திரங்களை வாங்குகிறது
இந்த நடவடிக்கையை ஜேர்மன் அரசுத்தலைவர் கிறிஸ்டியன் வுல்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்;. நிதி பரிவர்த்தனையில் மிகவும் பலவீனமாக இருக்கும் நாடுகளின் கடன் பத்திரங்களை ஐரோப்பிய வங்கி வாங்குவது பிரச்னையை வாங்குவது போல உள்ளது என்று கிறிஸ்டியன் வுல்ப் குற்றம்சாட்டியுள்ளார்


ஜேர்மன் அரசுத்தலைவர் வுல்ப் தலைமை அமைச்சர் ஏங்கலா மார்கெலின் கென்சர்வேடிவ் கட்சியின் உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது
00000
அப்பிள் கணிப்பொறி நிறுவனத் தலைமை நிர்வாகியும், அதன் நிறுவனர்களில் ஒருவருமான ஸ்டீவ் ஜாப்ஸ் நேற்று வியாழக்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
தனது ராஜினாமா முடிவை நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவுக்கு கடிதம் மூலம் தெரிவித்த அவர் தனக்கு தகுதியிருப்பதாக இயக்குநர்கள் குழு முடிவெடுத்தால் அக்குழுவின் தலைவராக தான் பணிபுரிய விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
தான் ஏற்கெனவே தெரிவித்தபடி தன்னால் பணிபுரிய இயலாத சூழல் ஏற்பட்டதாலேயே ராஜினாமா செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.
தனக்குப் பிறகு தலைமை நிர்வாகியாக பணிபுரிய டிம் குக்கை ஜாப்ஸ் பரிந்துரை செய்துள்ளார். அப்பிள் நிறுவனம் தன்னுடைய எதிர்காலத் திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தும் என்று நம்புவதாகவும், நிறுவனத்தின் எதிர்காலம் பிரகாசமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
கணையப் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஸ்டீவ் ஜாப்ஸ் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்தே நீண்ட விடுப்பில் இருந்துவருகிறார்
000

கருத்துகள் இல்லை: