புதன், 3 ஆகஸ்ட், 2011

அமெரிக்காவில் மாபெரும் மருத்துவ காப்பீட்டு மோசடி-19 இந்தியர்கள் சிக்கினர்


நியூயார்க்: அமெரிக்காவில் மாபெரும் மருத்துவ காப்பீட்டு மோசடியில் ஈடுபட்டதாக 19 இந்தியர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் பல மோசடிகளை செய்து பல லட்சம் டாலர்களை இவர்கள் சுருட்டியுள்ளனர்.

இந்த மோசடியில் பாபுபாய் படேல் (49) என்ற இந்திய பார்மசிஸ்ட் தான் முக்கிய புள்ளியாக இருந்துள்ளார். இவர் மீது 34 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்கா முழுவதும் பல பினாமி பெயர்களில் 26 மருத்துக் கடைகளை நடத்தி வரும் படேல், ஏராளமான மருத்துவமனைகள், மருத்துவர்களுக்கு லஞ்சம் தந்து, மருந்துகளை கட்டாயமாக தனது கடைகளில் வாங்கச் செய்துள்ளார்.

மெடிகேர், மெட்காய்ட் மற்றும் பிற தனியார் மருத்துவ காப்பீட்டு நிறுவனங்களின் அட்டைகளை வைத்திருப்போரை குறி வைத்து இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளார். இந்த அட்டைகளை வைத்திருப்போர், காப்பீட்டுத் திட்டத்தில் பணத்தைப் பெற, இந்த குறிப்பிட்ட கடையி்ல் தான் மருந்து வாங்க வேண்டும் என்ற நிலைக்கு தள்ளியுள்ளார். இதற்கு மருத்துவர்களும், மருத்துவமனைகளும் இவருக்கு உடந்தையாக இருந்துள்ளனர்.

மேலும் நோயாளிகளுக்கு தாங்களே மருந்துகளைத் தரும் சில மருத்துவமனைகள் அதற்கான பில்களை இவரது மருத்துக் கடைகளின் பெயரில் உருவாக்கியுள்ளன. இதன்மூலமும் இன்சூரன்ஸ் நிறுவனங்களில் பணத்தை சுருட்டி வந்துள்ளார்.

மிச்சிகன் மாகாணத்தில் தான் இந்த மோசடி பெருமளவில் நடந்துள்ளது. மேலும் மன அழுத்தத்தைப் போக்கும் மருந்துகள் உள்ளிட்ட சில கட்டுப்படுத்தப்பட்ட மருந்துகளையும் உரிய மருத்துவ பரிந்துரை இல்லாமல் வினியோகித்துள்ளன படேலின் மருந்துக் கடைகள்.

இதற்காக பல முக்கிய மருத்துவமனைகள், மருத்துவர்கள், மன நல நிபுணர்களுக்கு ஏராளமான பணத்தை லஞ்சமாகத் தந்துள்ளார். இந்த மோசடியில் இதுவரை 26 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 19 பேர் இந்தியர்கள் ஆவர்.

இதில் பிரபல மருத்துவர்கள் பால் பெட்ரே, முஸ்தாக் வெத், பார்மசிஸ்டுகள் தினேஷ்குமார் படேலே, அனிஷ் பவ்சார், அஸ்வினி சர்மா, பினகீன் படேல், கார்த்திக் ஷா, விரால் தாக்கர், ஹிரேன் படேல், மிதேஷ்குமார் படேல், லோகேஷ் தயால், நரேந்திர செராகு, சேத்தன் குஜராத்தி,

அர்பித்குமார் படேல், சுமன்ரே ராவல், ஹர்ப்ரீத் சச்தேவா, ரமேஷ் படேல், ராணா நயீம், மன நல ஆலோசகர் சன்யானி எட்வர்ட்ஸ், கோமல் ஆச்சார்யா ஆகியோர் அடங்குவர்.http://thatstamil.oneindia.in

கருத்துகள் இல்லை: