செவ்வாய், 2 ஆகஸ்ட், 2011

ரூ.200 கோடி நில விவகாரம்: அபகரிப்பு புகார் கொடுத்தவர் மீது மான நஷ்ட வழக்கு-உதயநிதி ஸ்டாலின்

சென்னை: சென்னையில் அறக்கட்டளைக்குச் சொந்தமான ரூ. 200 கோடி நிலத்தை முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதியின் உதவியாளர் போலி பட்டா மூலம் அபகரித்து விட்டதாகவும், இந்த நிலத்தை பின்னர் திமுக தலைவர் கருணாநிதியின் பேரனும், மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலினின் பினாமி நிறுவனத்திற்கு மாற்றி விட்டதாகவும் புகார் கொடுத்துள்ளவர் மீது ரூ. 1 கோடி கேட்டு மான நஷ்ட வழக்குத் தொடரப் போவதாக உதயநிதி கூறியுள்ளார்.

இதுகுறித்து சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த தர்மதோப்பு அறக்கட்டளையின் அறங்காவலர் ரெங்காரெட்டி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருந்தார்.

இந் நிலையில் சென்னை போலீசி்ல் திமுக கொடுத்துள்ள புகாரில், திமுக பொருளாளர் ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஆகியோர் மீது ரெங்கா ரெட்டி போலியான புகார் கொடுத்துள்ளார். இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

அதே போல உதயநிதி சார்பில் வழக்கறிஞர்கள் குமரேசன், ஹசன் முகம்மது ஜின்னா ஆகியோர் இன்று ரெங்காரெட்டிக்கு அனுப்பியுள்ள நோட்டீசில், ஸ்டாலின், உதயநிதியை மனரீதியில் துன்புறுத்தும் கெட்ட நோக்கத்தில் இந்தப் புகார் தரப்பட்டுள்ளது.

ஸ்டாலினுக்கு ரெட்டியை யார் என்றே தெரியாது. அவரிடம் எந்த வகையிலும் எப்போதும் நிலத்தை வாங்கியதும் இல்லை. அதிமுக அரசின் ஆதரவைப் பெறுவதற்காக இந்த போலியான புகார் தரப்பட்டுள்ளது.

ஸ்டாலினுக்கு இதில் சம்பந்தமே இல்லை என்பது ரெட்டிக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும் அரசியல் லாபம் தேடும் நோக்கத்தில் அவர்கள் மீது தவறான புகார் தரப்பட்டுள்ளது.

இந்தப் புகாரை ரெட்டி உடனடியாக வாபஸ் பெற வேண்டும். நிபந்தனையற்ற மன்னிப்பும் கோர வேண்டும். இதில் ஸ்டாலினுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்பதை விளக்கி 3 நாட்களுக்குள் அறிக்கை வெளியிட வேண்டும்.

இதைச் செய்யத் தவறினால் ரெட்டி மீது ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கோரி மான நஷ்ட வழக்குத் தொடரப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

http://thatstamil.oneindia.in

கருத்துகள் இல்லை: