வெள்ளி, 12 ஆகஸ்ட், 2011

தமிழகத்தில் திருச்சி, சேலம், பெரம்பலூர் உள்பட 7 மாவட்டங்களில் நில நடுக்கம்- மக்கள் பீதி, ஓட்டம்

 தமிழகத்தில் இன்று முற்பகலில் திருச்சி, சேலம், அரியலூர், பெரம்பலூர், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று லேசான நில அதிர்ச்சி ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.9 ரிக்டராக பதிவானது.

இந்த நில அதிர்ச்சி காரணமாக மக்கள் பெரும் பீதியடைந்தனர். வீடுகளை விட்டு வெளியேறினர். பள்ளிகளுக்கும் பல இடங்களில் விடுமுறை விடப்பட்டது.

அரியலூரை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

திருச்சியில்...

திருச்சியில் இன்று முற்பகல் 11.20 மணியளவில் நில அதிர்ச்சி ஏற்பட்டது.

திருவெறும்பூர் பகுதியில் கிட்டத்தட்ட 20 விநாடிகளுக்கு நிலநடுக்கம் நீடித்தது. வீடுகளும், அதில் உள்ள பொருட்களும் லேசாக ஆடியதால் மக்கள் பீதியடைந்து வெளியே ஓடி வந்தனர். பள்ளிகளில் மாணவர்களும், ஆசிரியர்களும் பீதியடைந்து வெளியேறினர். பள்ளிகளுக்கு விடுமுறையும் விடப்பட்டது.

அதேபோல திருச்சி மன்னார்புரம், லால்குடி, சிறுகனூர், உறையூர் உள்ளிட்ட இடங்களில் நில அதிர்வு உணரப்பட்டது.

வலிகண்டாபுரம் பகுதியில் ஒரு வீட்டின் முகப்பு நிழற்கூரை இடிந்து விழுந்தது.

சேலத்தில்...

சேலம் மாவட்டத்தில் ஆத்தூர், தலைவாசல், விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, சின்னசேலம் ஆகிய இடங்களில் நில அதிர்வு ஏற்பட்டது. இதையடுத்து, மக்கள் பீதியில் உறைந்தனர்.

தலைவாசல் பகுதியில் 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் நில அதிர்ச்சியை உணர்ந்துள்ளனர்.

வீடு, அலுவலகங்களை விட்டு வெளியேறி தெருக்களில் திரண்டனர். சில நொடிகள் நில அதிர்வு நீடித்ததாக மக்கள் தெரிவித்தனர்.

கள்ளக்குறிச்சி பெரியசிறுவத்தூரில் நில அதிர்வால் ஆறுமுகம் என்பவர் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது. புதிதாக கட்டப்படும் வீட்டிலிருந்தபோது ஆறுமுகம் இறந்ததாக கூறப்படுகிறது.

பெரம்பலூரில்...

பெரம்பலூர் மாவட்டம் எறையூர், வேப்பந்தட்டை ஆகிய பகுதிகளில் வீடு மற்றும் அலுவலகங்களில் இருந்தவர்கள் நில அதிர்வை உணர்ந்தனர்.

கடலூரில்...

கடலூர் மாவட்டத்தில் பெண்ணாடம், திட்டக்குடி மற்றும் நில அதிர்வை தொடர்ந்து மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர்.

பெரம்பலூரில்..

பெரம்பலூர் மாவட்டத்தில் 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் மக்கள் நில அதிர்வை உணர்ந்தனர். அங்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூரில் உள்ள செஞ்சேரி பள்ளியில் நில அதிர்வால் விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் வெண்கலம் கிராமத்தில் உள்ள சிவன் கோவில் கலசம் ஒன்று நில அதிர்வால் கீழே விழுந்து நொறுங்கியது.

கடந்த ஜூனிலும் நிலநடுக்கம்

கடந்த ஜூன் மாதமும் சேலம் பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இப்போது மீண்டும் வந்துள்ளதால் மக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர். இருப்பினும் மக்கள் பீதியடையாமல் இருக்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

http://thatstamil.oneindia.in

கருத்துகள் இல்லை: