புதன், 3 ஆகஸ்ட், 2011

கலாநிதி மாறன் மீது புகார் கொடுத்த கேபிள் டிவி ஆபரேட்டர் மாரடைப்பால் மரணம்

ராமநாதபுரம்: சன் டிவி உரிமையாளர் கலாநிதி மாறன் மீது புகார் கொடுத்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த கேபிள் டிவி ஆபரேட்டர் இன்று காலை மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

ராமநாதபுரத்தைச் சேர்ந்த நாகராஜன் என்பவர், ராமநாதபுரம் எஸ்பி அனில்குமாரிடம் கலாநிதி மாறன் மற்றும் சுமங்கலி கேபிள் ஆபரேட்டர்கள் இருவர், ஏசி குமாரவேல் ஆகிய நால்வர் மீது கடந்த 27-ம் தேதி காலை ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார்.

அந்தப் புகார் மனுவில், "நான் 1998 முதல் கேபிள் ஆபரேட்டராக இந்தப் பகுதியில் தொழில் செய்துவந்தேன்... 2008ல் இங்கே ஒரு கட்டுப்பாட்டு அறை அமைக்க ரூ. 15 லட்சம் செலவில் தேவையான சாதனங்களை வாங்கி வைத்திருந்தேன்.

இந்நிலையில் கலாநிதி மாறன் தூண்டுதலில் என்னை மதுரை மதிச்சியம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற போலீசார், என்னை மிரட்டினர். அந்தக் கட்டுப்பாட்டு அறையை மூடிவிடு, இல்லை என்றால் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் சிலவற்றை உன் பேரில் எழுதி உள்ளே தள்ளிவிடுவேன் என்று ஏசி குமாரவேல் மிரட்டினார். அதைத் தொடர்ந்து, கலாநிதி மாறன் என்னை ஃபோனில் மிரட்டினார்.

என்னிடமிருந்து வலுக்கட்டாயமாக ரூ. 15 லட்சம் பெறுமான பொருட்களை அபகரித்துக் கொண்டு, என்னை மேலும் தொழிலில் ஈடுபட முடியாமல் தடுத்து விட்டனர். கடந்த 4 வருடங்களாக நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன்.

என்னை ஃபோனில் மிரட்டி மன உளைச்சலுக்கு உள்ளாக்கிய கலாநிதி மாறன், சுமங்கலி கேபிள் விஷன் விநியோகஸ்தர்கள் சரவணன் மற்றும் கமலக்கண்ணன், ஏசி குமாரவேல் ஆகியோர் பேரில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், கேபிள் தொழிலில் ஈடுபட்டிருந்த சுமார் 150-க்கும் மேற்பட்டோர் சுமங்கலி கேபிள் விஷன் நிறுவனத்தினாரால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்துகொண்டுள்ளனர், அல்லது காணாமல் போயுள்ளனர். அவர்கள் குறித்த விசாரணையை போலீசார் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அதில் கூறியிருந்தார்.

இது தொடர்பாக கலாநிதி மாறன் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் ஆலோசித்து வந்ததாகக் கூறப்பட்டது. இந்நிலையில் நாகராஜன் இன்று காலை மாரடைப்பால் மரணம் அடைந்தார்

http://thatstamil.oneindia.in

கருத்துகள் இல்லை: