வியாழன், 4 ஆகஸ்ட், 2011

ஜெயலலிதாவின் திட்டத்திற்கு கருணாநிதி வரவேற்பு

சென்னை: ""முகாம்களில் தங்கியிருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற ஜெயலலிதாவின் அறிவிப்பு, வரவேற்கப்பட வேண்டிய திட்டம்,'' என்று, தி.மு.க., தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

தி.மு.க., தலைவர் கருணாநிதி நேற்று அனுப்பிய கேள்வி - பதில் அறிக்கை:

தமிழக முகாம்களில் தங்கியிருக்கும், 5,544 இலங்கைத் தமிழர்களுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் ஓய்வூதியத்தை ஜெயலலிதா அறிவித்துள்ளாரே?
வரவேற்க வேண்டிய திட்டம். ஒரு மாதத்திற்கு 55.44 லட்சம் ரூபாய்தான் செலவாகும்.

நில அபகரிப்பு புகார்கள் வேண்டுமென்றே சொல்லப்படுவதாக, எல்லாரும் சொல்கிறார்களே?
அ.தி.மு.க., ஆதரவு நாளேடான "தினமலர்' நாளிதழில், "நிலஅபகரிப்பு என வரும் புகார்கள் பெரும்பாலும், ஏற்கனவே நிலத்தை விற்றவர்கள், மிரட்டி நிலத்தை அபகரித்ததாக புகார் செய்கிறார்கள். அதனால் நடவடிக்கை எடுக்க முடியாமல், அந்த பிரிவு அதிகாரிகள் திணறுகின்றனர்' என்றும் செய்தி வந்துள்ளது. அ.தி.மு.க.,வினர் மீது புகார்கள் வந்தால், அமைச்சர்களைக் கொண்டு புகார் கொடுத்தவரிடம் பேசி, போலீசார் சமாதானம் செய்து விடுகின்றனர். ஆனால், நிலத்தை உண்மையாக விற்றவர்கள் தி.மு.க.,வினர் மீது புகார் கூறினால், பெரிதுபடுத்தி வழக்கு பதிந்து, கைது செய்கின்றனர்.

மண்ணெண்ணெய் விலையை உயர்த்தியுள்ளனரே?

ஜெ., ஆட்சிக்கு வந்து மூன்று மாதங்களில், அவர்கள் செய்த சாதனைகளில் இதுவும் ஒன்று.

இலவச கறவை மாடு, ஆடு வழங்கும் திட்டம் பற்றி?

ஆக., 4 அன்று (இன்று) அரசின் பட்ஜெட், சட்டசபையில் வைக்கப்படும் என கவர்னர் தெரிவித்துள்ளார். பேரவையும் அன்றே கூடுகிறது. ஆனால், அதற்கு முன் இத்திட்டத்தை அறிவித்ததன் மூலம், கவர்னர் அறிவிப்பு, பட்ஜெட் மற்றும் சட்டசபைக்கும், அரசு எந்த அளவு மதிப்பு கொடுக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.

"சன் டிவி' அலுவலர் சக்சேனா மீது வழக்கு பதிவு செய்வதும், புகார் மனுக்களை பலர் திரும்பப் பெறுவதும் எதைக் காட்டுகிறது?
ஆட்சியினர் எந்த அளவுக்கு பழிவாங்கும் தன்மையோடு, வழக்குகளை சுமத்துவதில் அக்கறை காட்டுகிறார்கள் என்பதை காட்டுகிறது. இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார். 

அடக்கு முறை தொடர்ந்தால் போராட்டம் தொடரும் : ""அடக்கு முறை தொடர்ந்தால் எங்களது போராட்டமும் தொடரும்,'' என்று முன்னாள் முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி நேற்று பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டி.

நாளை சட்டசபை கூட்டம் துவங்குகிறது. அதில் தி.மு.க., பங்கேற்குமா? தி.மு.க., அணுகுமுறை எப்படி இருக்கும்?
நிலைமைக்கு ஏற்ப நடந்து கொள்வோம்.

சட்டப் பேரவையில் தி.மு.க.,விற்கு ஒரே பகுதியில் இன்னும் இடம் ஒதுக்கப்படவில்லையே?
இடம் ஒதுக்கவில்லை என்றால் என்ன செய்ய முடியும்.

நாளை தாக்கல் செய்யப்படும் நிதி நிலை அறிக்கை எப்படி இருக்கும் என்று கருதுகிறீர்கள்?
நிதி நிலை அறிக்கையை படித்த பிறகு தான் கூற முடியும்.

பழி வாங்கும் நடவடிக்கை தொடர்ந்தால் சிறை நிரப்பும் போராட்டம் நடத்த உங்களிடம் அனுமதி கேட்கப் போவதாக தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் கூறியிருந்தாரே?
அடக்கு முறை தொடர்கிறது. அடக்கு முறை தொடர்ந்து கொண்டே இருக்குமானால், நாங்களும் தொடர்ந்து போராடுவோம்.

திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று ராமதாஸ் கூறியிருந்தாரே?
அதற்காக நாங்கள் வருத்தப்படவுமில்லை, மகிழ்ச்சியடையவுமில்லை.

http://www.dinamalar.com

கருத்துகள் இல்லை: