திங்கள், 8 ஆகஸ்ட், 2011

மனைவியருக்கு சிறந்த பொருளாதார நிபுணர் பட்டம் வழங்குவீராக!!உலக அளவில் அதிகளவுக்கு தங்கத்தில் முதலீடு செய்வதில் இந்தியர்களுக்கு குறிப்பாக தமிழர்களுக்கு முக்கிய பங்கிருக்கிருக்கிறது.சாரசரியாக  தமிழ் குடும்பங்களில் ஓரு குண்டுமணி அளவு தங்கம் இல்லாத குடும்பத்தை பார்க்க முடியாது.
தற்போது தங்கம் என்பது அந்தஸ்த்தையும் செல்வச் செழிப்பையும் வெளிப்படுத்தும் ஒரு ஆடம்பரப் பொருளாகப் பார்க்கப்பட்டாலும் நமது முன்னோர்களால் அது குடும்பங்களின் பொருளியல் இருப்புக்கான- எதிர்கால சந்ததியினருக்குரிய சேமிப்புக்கான ஒரு அத்தியாவசிய பொருளாகப் பார்க்கப்பட்டது. 'தங்கத்தில் போட்ட காசு தங்கும்' என்ற ஒரு முது மொழி தமிழ் கிராங்களிலே வழக்கத்தில் இருந்தது.
1950 களிலே ஈழத்து கிராமங்களில் இருந்த முதியவர்கள் பத்து ரூபாவை ஒரு பவுண் என்றுதான் சொல்வார்கள். அவர்களது காலத்திலே ஒரு பவுண் அதாவது 8 கிராம் தங்கம் பத்து ரூபா விற்றதாம்;
ஆனால் இன்று திங்கட்கிழமை இலங்கையில் ஒரு பவுன் ஆபரணத்தங்கம் அதாவது 22 கரட் தங்கம் 49 ஆயிரத்து 400 ரூபாவுக்கும்; சென்னையில் 18 ஆயிரத்து 208 ரூபாவுக்கும் விற்கப்பட்டது.
இங்கே புலம் பெயர் நாடுகளிலே தமிழர்கள் அதிகமாக புலம் பெயாந்து வந்த 90 களில் ஒருவருடைய மாதாந்த அடிப்படை சம்பளத்தில் 8 முதல் 10 பவுண்களை வாங்கக் கூடியதாக இருந்தது.ஆனால் இன்றைக்கு ஒரு மூன்று அல்லது 4 பவுண்களை வாங்குவதே கஷ்டமான ஒன்று.அந்தளவு தங்கம் விலை ஏறிவிட்டது.
இன்றைய செய்தியும் அதுதான். தங்கம் இன்னும் விலை எறப் போகிறது.
ஏன் தெரியுமா? அமெரிக்காவின் கடன் பிரச்சனை கடந்த வார இறுதியில் உலகப் பங்குச் சந்தையை ஒரு புரட்டிப் போட்டு விட்டதால். பெரும்பாலான முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்ப்போவதாக பங்குச் சந்தை நிபுணர்கள் எதிர்வு கூறியுள்ளனர்.குறிப்பாக சீனாவும்  இந்தியாவும் தங்கத்தில் அதிகம் முதலீடு செய்யும்  என்றும் இதனால் தங்கத்தின் விலை இன்னும் அதிகரிக்கும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
அமெரிக்காவின் கடன் பிரச்சனைக்குத்தான் கடந்த 2ம் திகதி தீர்வு கண்டாயிற்றே பின்பு என்ன புதிய பிரச்சனை என்று யோசிக்கிறீர்களா?
அமெரிக்காவின் கடன்பிரச்சனைக்கு காணப்பட்ட தீர்வு என்பது தற்காலிகமான ஒன்று. அந்தத் தீர்வை காண அமெரிக்க அரசுத் தலைவர் பாராக் ஓபாமா பட்ட பாடுதான் சிக்கலுக்கே காரணமாகிவிட்டது.
உலக வல்லரசான அமெரிக்கா மூதலீடுகளை செய்வதற்கு பாதுகாப்பான நாடு, அதற்க கடன் கொடுத்தால் வட்டியுடன் நாணயமாக திருப்பித்தரும் என்பதற்கு உத்தரவாதமாக  அதற்கு வழங்கப்பட்டிருந்த 3 ஏ அதியுயர் தரவரிசையை -அதை வழங்கும் ஸ்டாண்டர்ட் அண்ட் பவர் நிதி அமைப்பு 2 ஏ ஆக குறைத்துவிட்டது. அமெரிக்கா தனது கடன் சிக்கல்களில் இருந்து தொடர்ந்தும் மீளாது விட்டால் இந்த தரவரிசையை இன்னும் குறைக்கப் போவதாக அந்த அமைப்பு எச்சரித்துவிட்டது. இதற்குக் காரணம் அமெரிக்க பொருளாதார நிலைமை மட்டும் அல்ல. அந் நாட்டில் நிலவும் அரசியல் நிலைமை - அதாவது  கடன் வாங்கும் அளவை கடைசி நாள் வரை உயர்த்த முடியாமல் நாடாளுமன்றத்தில் ஒபாமா பட்ட பாட்டை வைத்துத் தான்; இந்த முடிவுக்கு வந்ததாக  ஸ்டாண்டர்ட் அண்ட் பவர் நிறுவன அதிகாரிகள் கூறுகிறார்கள்.இது தான் பங்குச் சந்தை முதலீட்டாளர்களை கிலிகொள்ள வைத்துவிட்டது.
இந்த இடத்திலே 3 ஏக்கும் 2 ஏக்கும் என்ன வித்தியாசம்என்று பார்க்கிறீர்களா? புரியும் படி சொன்னால் நீங்கள் நேர்மையானவர் உங்களை நம்பி கடன் தரலாம் பொறுப்புக்களை உங்களிடம் ஒப்படைக்கலாம் என்பதற்கான சான்றிதழாக 3ஏயை பார்க்கலாம். 2 ஏ என்பது உங்களுக்கு கடன் தருவதற்கோ உங்களிடம் பொறுப்புக்களை ஒப்படைப்பதற்கோ உங்களுடைய நம்பகத் தன்மையை பரிசீலக்க வேண்டும். உங்களுடைய ஆவணங்களை எங்களிடம் தாருங்கள் நாங்கள் பரிசீலித்துவிட்டு முடிவு சொல்கிறோம் என்பதற்கு ஒப்பானது.
இந்தத் தரவரிசை  இறக்கம் அமெரிக்காவின் நம்பகத் தன்மையை பொருளாதா உறுதிப்பாட்டை கேள்விக்குள்ளாக்கி விட்டதால் இது அமெரிக்க பங்குச் சந்தையிலும் டொலர் நாணய கட்டமைப்புட இணைந்து இயங்கிய ஏனைய பங்குச் சந்தைகளிலும் முதலீடுகளை செய்திருந்த முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டின் பாதுகாப்பை கருதி அந்த முதலீடுகளை தங்கத்தின்; பக்கம் திருப்பப் போகிறார்கள் என்றும் இது தங்கத்தின் விலையை தொடந்து அதிகரிக்கச் செய்யும் என்றும் உலகப் பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர்
தங்கத்தின் விலையேற்றத்துக்கு பின்னால் இவ்வளவு வரலாறு இருக்கிறது என்று பிரமிப்பாக இருக்கிறதா? தமிழ் கணவன்மாரே முன்பு உங்கள் துணைவியர் அதிக பவுனில் தாலிக்கொடி செய்து தரும்படி உங்களை நச்சரித்து அதற்காக நீங்கள் அவர்களை கடிந்திருந்தால் இப்போது அவர்களிடம் மன்னிப்பு கோருங்கள்.ஏனென்றால்  அவர்கள் சிறந்த பொருளாதார நிபுணர்கள் என்பது இப்போது நிரூபனமாகிவிட்டதே!

கருத்துகள் இல்லை: