புதன், 10 ஆகஸ்ட், 2011

இப்போதுள்ள உலக ஒழுங்கு தமிழீழத்தை பிரசவிக்குமா?
இப்போதுள்ள உலக ஒழுங்கு ஈழத்தமிழ் மக்கள் தங்களது விடுதலையை பெற்றுக் கொள்ள சாதமாக இருக்கிறதா?
இது ஒரு முக்கியமான கேள்வி. ஆராயப்பட வேண்டிய கேள்வியும் கூட.
1948லிருந்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானிக்கும் இடையிலான முரண்பாடு பங்களாதேசின் விடுதலைக்கு துணைபுரிந்தது
1980 களுக்கு முன்பு சோவித் யுனியனுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நிலவி வந்த பனிப் போர் எரித்திரியா போன்ற பல ஆபிரிக்க நாடுகளின் விடுதலைக்கு உதவியது
மேற்குலகிற்கும்  சோவியத் அணியில் இருந்த கிழக்கு ஐரோப்பிய ஆட்சியாளர்களுக்கும் அரை நூற்றாண்டுக்கு மேலாக நிலவிவந்த முரண்பாடு 1990 களின் சோவியத் ஒன்றியம் சிதறுண்ட பின்னர் அந்தப் பிராந்தியத்திலுள்ள பல நாடுகள் விடுதலையடையவும் பல நாடுகளின் ஆட்சி மாற்றங்கள் நடக்கவும் வழிவகுத்தது.
இதே காலகட்டத்தில் கொம்யூனிச ஆட்சியாளராகவும் அதேநேரம் செர்பிய மேலாதிக்க வாதியாகவும் இருந்த முன்னாள் யூகஸ்லோவிய அரசுத்தலைவர் சிலபதான் மிலோசவிச்சுக்கும் மேற்குலகிற்கும் இடையில் இருந்த முரண்பாடு யூகஸ்லோவிய குடியரசில் இருந்த பெஸ்னியா ஹெர்சகோவினா,குரொட்சியா,மசிடோனியா,சிலவோனியா, மொந்தனிகரோ,கொசோவே ஆகிய மாநிலங்கள் தனிநாடாக பிரிந்து செல்வதற்கு வழிவகுத்தது.
இஸ்லாமிய உலகத்துக்கும் கிறிஸ்தவசார்பு உலகத்துக்கும் இருந்த முரண்பாடு கிழக்கு தீமோர் மற்றும் தெற்கு சூடன் அகிய நாடுகளின் விடுதலைக்கு உதவியது.
2001 செப்டம்பர் 11 ல் அமெரிக்க இரட்டைக் கோபுரத்தாக்குதலும் அதைத் தொடர்ந்து அமெரிக்கா பிரகடப்படுத்திய பயங்கரவாதத்தக்கு எதிரான போரும் ஈழத்தமிழர்களுடைய விடுதலைப் போராட்டத்தை மட்டுமல்லாமல் உலகிலுள்ள அனைத்து விடுதலைப் போராட்டங்களுக்கும் பின்னடைவை ஏற்படுத்தியது. ஒரு அரசுக்கு எதிராக ஆயுதமேந்திப் போராடவது பயங்கரவாதம் என்ற ஒருமைப் பார்வைக்குள் அனைத்து ஆயுதம்தாங்கிய விடுதலைப் போராட்டங்களும் அடக்கப்பட்டுவிட்டன.
இந்தப் போராட்டங்களில் உள்ள நியாயத் தன்மை பற்றி எல்லாம் இப்போது பேச முடியாது.
லிபியாவில் கடாபிக்கு எதிரான ஆயுதப்போராட்டத்தை ஆதரிக்கும் அதேநேரம் அங்கே இராணுவத்தலையிடும் செய்யும் மேற்குலகம் முள்ளிவாய்க்காலில் எமது மக்கள் இலட்சக்கணக்கில் கொல்லப்பட்ட போது என்ன செய்தது? என்று நாங்கள் கேட்டால் அதற்குரிய பதில் உலக ஒழுங்கு என்பதிலிருந்து தான் வரும்.
இந்த இடத்திலே உங்களுக்குள் சில  கேள்விகள் எழலாம்;
இப்போதைய உலக ஒழுங்கு என்பது என்ன?
இந்த உலக ஒழுங்கிலே தமிழர்களான எங்களை விட சிங்கள மக்கள் முக்கியத்துவம் பெற்றிருக்கிறார்களா?
இதற்கான பதில்
இன்றைய உலக ஒழுங்கு வணிக நலன் சார்ந்தது.அரசாங்கங்கள் என்பவை  பெரு வணிக நிறுவனங்களின் ஆளுமைக்கு உட்ட அவற்றின் நலன்களுக்காக உழைக்கும் நிறுவனங்களாக இருக்கின்றன.
வெளிப்படையாகப் பார்த்தால் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில்  பாரிய அரசியல் கொள்கை முரண்பாடுகள் இருப்பது போலத் தோன்றும். ஆனால் இந்த நாடுகளுக்கிடையில் வணிக ஒத்துழைப்பும் வணிக கூட்டுறவும் இருக்கிறது.
சூடான் பிரச்சனையிலே சீனா ஆரம்பத்தில் சூடான் அரசுத்தலைவர் பசீரின்; பக்கமே நின்றது அவர் செய்த இனப்படுகொலை எல்லாவற்றையும் நியாயப்படுத்தியது.போர் குற்றச்சாட்டுக்களில் இருந்து அவரைக் காப்பற்றவும் முயன்றது.
சூடான் பிரச்சனை பின்னர் இஸ்லாமிய எதிர் கிறீஸ்தவ சார்பு பிரச்சனையாக கூர்மையடைந்தபோது இஸ்லாமிய கடும் போக்களரான பசீரின் பக்கம் நின்று தான் வணிகம் செய்யும் பெரும்பாலான ஆபிரிக்க கிறிஸ்தவ நாடுகளின் எதிர்ப்;பை சம்பதிக்க விரும்பதாத  சீனா அவரை கைவிட்டது
அது போலவே  இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் முரண்பாடு இருப்பதாக சொல்லிக் கொண்டாலும் இந்;திய உற்பத்திப் பொருட்களை அதிகளவில் சந்தைப்படுத்தும் நாடாக சீனா இருக்கிறது.அவ்வாறே சீனப் பொருட்களுக்கான மிகப் பெரிய சந்தையாக சீனா இருக்கிறது.இரு நாடுகளுக்கும் இடையே வணிக ஒப்பந்தங்களும் இருக்கின்றன.
இன்றைய உலக ஒழுங்கைப் பொறுத்தவரை இப்போது உலகளவிலே எற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மேற்குலகை ஆட்டங்காண வைத்திருக்கிறது.
இந்தியாவையும் சீனாவையும் அது பாதித்தாலும் மேற்குலகைப் போல ஆட்டங்காண வைக்கவில்லை.
இப்போது மேற்குலகின் கவலை இந்தியாவும் சீனாவும் ஐரோப்பிய ஒன்றியம் போல ஒரு அணிக்குள் வந்துவிடக் கூடாது என்பதுதான்.
அப்படி அந்த இரண்டு நாடுகளும் ஒன்றிணைந்தால் உலகின் மிகப் பெரியசந்தை மிகப் பெரிய மனிதவளம் மிகப்பெரிய இராணுவ பொருளாதார கட்டமைப்புக்கள் என்று எல்லாமே பெரிதாகி உலக அதிகார மையம் என்பது ஆசியாவை நோக்கி வந்துவிடும்.
இதை தடுப்பற்கான அல்லது இவ்வாறான முயற்சிகளை உடைப்பதற்கான களமாக இலங்கைத் தீவு இருக்கிறது.
சீனாவுக்கு ஆபிரிக்க நாடுகளுனான தனது வணிக நடவடிக்கைகளை தொடர்வதற்கு இந்து சமுத்திரத்தினூடான கடல் போக்குவரத்து முக்கிமானது.அதற்கு இலங்கைத்தீவில் தன்னுடைய தளம் அல்லது ஆளுமை  இருக்க வேண்டும் என்று சீனா விரும்புகிறது. இந்தியா  தென்மாநிலங்களின் பாதுகப்புக்கும் கொழும்பிலுள்ள அதன்  முதலீட்டாளர்களின் பாதுகாப்புக்கும் இலங்கைத் தீவு மீது செல்வாக்கு செலுத்துவது அவசியம் என்று நினைக்கிறது.
இந்த முரண்பாட்டை கையாளும் சிறீலங்கா அரசு அதனுடாக தன்னுடைய இருப்பை தக்க வைக்க முயல்கிறது
சிங்கள மக்கள் அரசுடைய சமூகமாகவும் அதேநேரத்தில் தங்களுக்கான ஒரு அரசாங்கத்தை கொண்டுள்ள சமூகமாகவும் இருப்பதால் உலக ஒழுங்கில் தங்களது நலன்களை பேணும் பொறிமுறையை கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் ஈழத்தமிழ் மக்கள் தங்களுடைய அரசுரிமையை இழந்து தொடர்ந்து அடிமைப்பட்டு வாழ்ந்ததால் உலக ஒழுங்கிற்கு அவர்கள் இதுவரை முக்கியமற்ற அந்த ஒழுங்கில் சாதாரணமாகப் பயணிக்கும் பயணிகளாகவே இருந்தார்கள்
ஆனால் விடுதலைப்புலிகளின் போராட்டமும் முள்ளிவாய்க்கால் பேரவலமும் நாடுகடந்த அரசாங்கத்தின் தோற்றமும் மேற்குலகிற்கு புலம் பெயாந்த ஈழத் தமிழினத்தின் அடுத்த தலைமுறையின் வளர்ச்சியும் ஈழத்தமிழர்கள் உலக ஒழுங்கில் புறக்கணிக்கப்பட முடியாதவர்கள் என்று ஒரு நிலையை இப்போது தோற்றுவித்திருக்கிறது.
இலங்கைத் தீவில் யார் அதிக ஆளுமை செலுத்தப் போவது என்பதில் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் ஏற்படப் போகும் போட்டியும் அந்தப் போட்டியை கூர்மையாக்கிவிட வேண்டிய மேற்குலகின் தேவையும் நிட்சயமாக தமிழீழம் என்ற ஒரு நாட்டை உருவாக்கும்.
இதுவே காலத்தின் கட்டாயமாகவும் இருக்கும்;.இதை சிறீலங்கா அரசு எந்தச் சாத்தானுடனும் கூட்டு வைத்துக் கொண்டும் தடுக்க முடியாது

கருத்துகள் இல்லை: