வியாழன், 4 ஆகஸ்ட், 2011

கைதாகாமல் தவிர்க்க "வாஸ்து' உதவியை நாடிய நேரு

திருச்சி: மாவட்ட தி.மு.க.,வில் ஏற்படும் பிரச்னைகளை சமாளிக்கவும், முக்கிய பிரமுகர்கள் கைதாவதை தடுக்கவும், முன்னாள் அமைச்சர் நேரு கைதாகாமல் இருக்கவும், வாஸ்துப்படி, திருச்சி தில்லை நகரில் உள்ள தி.மு.க., கட்சி அலுவலகத்தின் முன்புற வாசல் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. உள்ளேயும் ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினின் செல்லப்பிள்ளை என அழைக்கப்படும், திருச்சி மாவட்ட தி.மு.க., செயலரும், முன்னாள் அமைச்சருமான நேருவுக்கு பல முகங்கள் இருந்தாலும், பக்தி முகம் ஒன்று உள்ளது. அதை அவர், திராவிடக் கட்சி என்ற முகமூடியை அணிந்து மறைத்துக் கொண்டாலும், அவரது பக்தி முகம் அடிக்கடி வெளிப்படுகிறது. வீட்டில் இருக்கும் ஆளுயர வெங்கடாசலபதி போட்டோ முன் தான், அனைத்து முக்கிய வேலைகளும் நடக்கும். அந்தளவுக்கு வெங்கடேச பெருமாளின் தீவிர பக்தரான நேரு, ஆட்சி மாற்றத்துக்கு பின், பல்வேறு சிக்கல்களில் சிக்கித் தவிக்கிறார். அவரது ஆதரவாளர்களான மாவட்ட துணைச் செயலர் குடமுருட்டி சேகர், குண்டர் சட்டத்தில் கைதாகி விடுவிக்கப்பட்டார். காஜாமலை பகுதி செயலர் விஜய் மற்றும் குடமுருட்டி சேகரின் தம்பி ஆறுமுகம் ஆகியோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
தொடர்ந்து கோட்டத் தலைவர்கள் அறிவுடைநம்பி, பாலமுருகன், பொருளாளர் தங்கராஜின் தம்பி மூர்த்தி ஆகியோர் மீதும் வழக்கு பாய்ந்துள்ளது. தவிர, இளைஞரணி துணை அமைப்பாளர் ராமசாமியின் மறைவு, நேருவுக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. நேருவின் தம்பி ராமஜெயம் கொடுத்த, "டார்ச்சர்' காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலே ராமசாமியின் மரணத்துக்கு காரணம் என, மணப்பாறை பகுதி தி.மு.க.,வினர் புலம்புகின்றனர். இதனால், தன் தம்பி ராமஜெயத்தால், கட்சிக்குள் ஏற்பட்ட குளறுபடிகளை சமாளிக்கவும், கட்சிக்குள் மேலும் பூசல் ஏற்படாமல் இருக்கவும், தி.மு.க., முக்கிய பிரமுகர்கள் கைதாவதை தவிர்க்கவும், நேருவின் கைதை தவிர்க்கவும், திருச்சி தி.மு.க., அலுவலகத்தில், வாஸ்துப்படி ஏராளமான மாற்றங்கள் சமீபத்தில் நடந்துள்ளன. திருச்சி மாவட்ட தி.மு.க., அலுவலகம், நேரு வீட்டிலிருந்து நான்கு தெரு தள்ளி, தில்லை நகர் ஐந்தாவது கிராசில் உள்ளது. குறிப்பாக அலுவலகத்துக்கு இடது புறம் இருந்த முன்புற வாசல் பகுதி, வலது புறம் மாற்றப்பட்டுள்ளது. முன்பு நேரடியாக நேருவின் கார் உள்ளே செல்லும் வகையில் கதவு இருந்தது. தற்போது அப்படி செல்ல இயலாது. "நேரடியாக, காரில், கட்சி அலுவலகத்துக்குள் செல்வது நல்லதல்ல' என, வாஸ்து நிபுணர்கள் அறிவுரையை ஏற்று இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளதாக கட்சியினர் தெரிவிக்கின்றனர். இதுதவிர, கட்சி அலுவலகம் முழுவதும் புதிதாக பெயின்ட் அடித்து, இருக்கைகள் இடம் மாற்றப்பட்டுள்ளன. உள்ளே ரெங்கநாயகி தாயார், வெங்கடாஜலபதி சுவாமி படங்கள் ஜொலிக்கின்றன. இதற்காக ரகசிய வாஸ்து பூஜை, ஹோமம் நடத்தப்பட்டதாகவும் கட்சியினர் தெரிவித்துள்ளனர். திருச்சி மாவட்ட தி.மு.க., கட்சி அலுவலகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம், திருச்சி மாவட்ட மக்கள் மத்தியில் மட்டுமல்ல, பகுத்தறிவுக்கு பெயர் பெற்ற தி.மு.க.,வினர் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 

http://www.dinamalar.com

2 கருத்துகள்:

ராஜ நடராஜன் சொன்னது…

எனது பார்வையில் உங்களுக்கான பதிவு.

http://parvaiyil.blogspot.com/2011/08/blog-post.html

நன்றி.

சிவா சின்னப்பொடி சொன்னது…

அன்பு சகோதரர் ராஜ நடராஜன் அவர்களுக்கு
எனக்காக ஒரு பதிவை எழுதியதற்குநன்றி

நான் எனது பதிவுகளை எழுதி பதிவேற்றம் செய்ய முடியாமல் இருப்பதற்கு நேரமின்மை ஒரு காரணமாகும்
அதிகாலை 3 மணில் இருந்து இரவு 11 மணிவரை ஜிரிவியின் செய்தி தயாரிப்பு உட்பட வேறும் அரசியல் சார்ந்த பணிகளை செய்து கொண்டிருக்கிறேன்.நினைவழியா வடுக்கள் (மணற்கேணி இதழில் தொடராக வருகிறது) இரண்டாம் முள்ளிவாயக்கால் ஆகிய நூல்களையும் தற்போது எழுதி வருகிறேன.கடந்த காலத்தைப் போல ஆய்வுகளையும் அதிகளவு எழுத முடியாமல் இருப்பதற்கு காரணம் இதுவே செய்தி தயாரிப்பு பணியல் ஈடுபடும் போது எனது கண்ணில் படும் சில பதிவுகளை அவர்களது மூலத்தை குறிப்பிட்டு எனது புளக்கில் பதிவேற்றம் செய்கிறேன்.இதுவும் கூட எனக்கு புளக் ஒன்று இருப்பதை நான் மறந்துவிடக் கூடாது என்பதற்காகவே எனது ஸ்கைப் ஐடி siva.sinnapodi அதில் தொடர்பு கொண்டு என்னோடு உரையாடலாம். மீண்டும் உரிமையோடு எனக்கு ஒரு பதிவை பதிவை எழுதியதற்கு மீண்டும் எனது நன்றியை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்