சனி, 13 ஆகஸ்ட், 2011

இன்றைய முக்கிய செய்திகள் 01கிழக்கில்; சட்டம் ஒழுங்கை கையில் எடுத்துக் கொள்ளும் பொதுமக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச எச்சரித்துள்ளார். 

பொத்துவிலில் அரச படையினரின் அடாவடித்தனங்களைக் கண்டித்து அமைதி வழியில் போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது நேற்று சிறிலங்கா காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டதை அடுத்து அங்கு நேற்றிரவு 8 மணி முதல் இன்று காலை 6 மணிவரை ஊரடங்குச்சட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. 

ஊறணிப் பகுதியில் யானைகள் கணக்கெடுப்பில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா இராணுவத்தினர் மற்றும் அரசாங்க அதிகாரிகளை கிறிஸ் பூதங்கள் என்ற தவறான நினைத்துக் கொண்ட கிராமமக்கள் தாக்கியுள்ளனர். 

கிராம மக்களிடம் சிக்கிக் கொண்டவர்களை சிறிலங்கா படையினரும், காவல்துறையினரும் படைபலத்தை பிரயோகித்தே மீட்டெடுத்தனர். 
இந்தச் சம்பவத்தில் சிறிலங்காப் படையினர் மூவர் காயமடைந்தனர்.

இந்தநிலையில் யானைகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டவர்களைத் தாக்கியதாக சந்தேகத்தின் பேரில் சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட 6 பேரை விடுவிக்கக் கோரி பொத்துவில் நகரில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் மீது சிறிலங்கா காவல்துறையினரும், படையினரும் கண்ணீர்புகைக் குண்டுத் தாக்குதலை நடத்தினர். 

இதையடுத்து சிறிலங்காப் படையினரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் முஸ்லிம் பொதுமகன் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் ஐந்து பேர் காயமடைந்தனர். கொல்லபட்டவர் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் சார்பில் தேர்தலில் போட்டியிட்டவராவார். 
000

சம்மாந்துறையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணியளவில் சந்தேகநபர்கள் சிலரை கைது செய்யச் சென்ற சிறிலங்கா காவல்துறையினரை பொதுமக்கள் சுற்றிவளைத்து தாக்கியுள்ளனர். 

இந்தச் சம்பவத்தில் சம்மாந்துறை காவல்நிலையப் பொறுப்பதிகாரி உட்பட 4 காவல்துறையினர் காயமடைந்துள்ளனர். 

புதிய வளத்தாப்பிட்டி பிரதேசத்தில் நடமாடிய மர்ம மனிதர்களைத் தாக்கியவர்களைக் கைது செய்யச் சென்ற போதே சிறிலங்கா காவல்துறையினர் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

பின்னர் அங்கு சிறப்பு அதிரடிப்படையினர் அனுப்பி வைக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. 

00000

விநாயகபுரத்தில் மர்மமனிதர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் நேற்று பொதுமக்களால் பிடிக்கப்பட்ட இருவரை திருக்கோவில் காவல்துறையினர் கொண்டு சென்றனர். 

அவர்களைத் தம்மிடம் ஒப்படைக்கக் கோரி திருக்கோவில் காவல் நிலையத்தை பொதுமக்கள் நேற்று முற்றுகையிட்டனர். 

பொதுமக்களை கலைக்க சிறிலங்கா காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியதுடன் வானத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகமும் மேற்கொண்டனர். இதனால் இரு பொதுமக்கள் காயமடைந்தனர். 

0000

பொத்துவில் பாக்கியவத்தை பகுதியில் உள்ள சில வீடுகளை நேற்றுமுன்தினம் இரவு 11 மணியளவில் மர்மனிதர்கள் தட்டியுள்ளனர். 

இதனையடுத்து பிரதேச மக்கள் இரண்டு மர்ம மனிதர்களைத் துரத்தி சென்ற போது மேலும் இரண்டு மர்ம மனிதர்கள் இவர்களுடன் இணைந்து ஓடியுள்ளனர். நான்கு மர்ம மனிதர்களும் அங்கிருந்த பாழடைந்த வீடொன்றுக்குள் புகுந்து விட்டனர். 

பின்னர் அந்த வீட்டுக்குள் பொதுமக்கள் சென்றபோது அவர்கள் தப்பிவிட்டனர்.  அங்கிருந்து சிறிலங்கா காவல்துறையினரின் தொப்பிகள், காலணிகள், அடையாள அட்டை, மற்றும் கடவுச்சீட்டு நிழற்படப்பிரதிகள், உடைகள், வாக்காளர் பட்டியல், சிங்களத்தில் எழுதப்பட்ட கோப்புகள், கத்தி போன்றவற்றை பொதுமக்கள்  கைப்பற்றியுள்ளனர். 

இதையடுத்து அங்கு சென்ற சிறிலங்கா காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையில்  கைகலப்பு ஏற்பட்டது. இதனால் பலருக்கு காயம் ஏற்பட்டதுடன், காவல்துறையினரின் வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டன. 

00000

கிழக்கில் பரவலாக  மர்ம மனிதர்கள் பற்றிய பீதி அதிகரித்துள்ளது. இதன் பின்னணியில் சிறிலங்கா படையினரே இருப்பதாக பொதுமக்கள் சந்தேகிப்பதுடன்,  சிறிலங்காப் படையினரும், காவல்துறையினரும் அவர்களைப் பாதுகாப்பதாகவும் கருதுகின்றனர்.

மர்மமனிதர்களை பாதுகாக்கும் சிறிலங்கா படையினர் அவர்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கிழக்கிலுள்ள மக்கள் சீற்றமடைந்துள்ளனர்.
இதேவேளை மட்டக்களப்பு நொச்சிமுனை நாவற்குடா வீதியில் இன்று காலை 8 மணியளவில் நடமாடிய மர்ம மனிதனை பொதுமக்கள் துரத்திப்பிடித்து கடுமையாக தாக்கியுள்ளனர். 

மர்ம மனிதன் பிடிபட்டதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த இராணுவத்தினர் அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மீது தடியடிப்பிரயோகம் செய்து மக்களைக்கலைத்தனர்
ஆயினும்  வீதிகளில் டயர்களைப் போட்டு எரித்து பொதுமக்கள் தமது எதிர்ப்பைக் காட்டினர். 
0000


இதற்கிடையே மலையகத்தில் கிறிஸ் பூதங்கள் என்ற சந்தேகத்தில் இரண்டு அப்பாவித் தமிழர்கள் அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர். 

ஹற்றன் தொட்டலகம தோட்டத்தின் ஊடாக பயணம் செய்து கொண்டிருந்த போதே வியாழக்கிமை இவர்கள் அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர். 
சோமசுந்தரம் மகேந்தரன் , சில்வ்வெஸ்ரர் ஜொனி பீற்றர் ஆகியோரே கொல்லப்பட்டவர்களாவர். 

இதையடுத்து தமக்கு பாதுகாப்பு அளிக்குமாறு அங்குள்ள தோட்டத் தொழிலாளர்கள் கோரியுள்ளனர். அங்கு 50 பேர் கொண்ட சிறப்பு அதிரடிப்படையணி ஒன்று அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 
00000000
பதுளை - எல்ல பகுதியிலுள்ள தெம்மோதரை தோட்டத்தின்  தேயிலை தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் வெடிப்புச் சம்பவம் ஒன்றில் மூன்று தொழிலாளர்கள் பலியாகியுள்ளதுடன் 
ஒருவர் படுகாயமமைந்து பதுளை மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார்

இவ்வெடிப்புச் சம்பவம் இன்று காலை 7.30 அளவில் இடம்பெற்றுள்ளது. 

இந்தத் தொழிற்சாலையின் கொதிகலன் ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பே இவ்விபத்துக்கான காரணமென அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தச் சம்பவம் தொடர்பில் எல்ல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
0000

ஊள்ளுராட்சித் தேர்தலுக்காக யாழ். மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட துரித அபிவிருத்தித் திட்டங்கள் யாவும் தேர்தலின் பின்னர் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அந்தப்பகுதி பிரதேச செயலக வட்டாரங்கள் தெரிவித்தள்ளன. மின் விநியோகம், குடிநீர் விநியோகம், வீதி அபிவிருத்தி, வீடமைப்பு, காணி வழங்கல் போன்ற திட்டங்கள் இவ்வாறு நிறுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 

அபிவிருத்தித் திட்டங்களுக்காகப் பயன்படுத்தப்பட்ட இயந்திரங்களும் மீளப்பெறப்பட்டுள்ளதாகவும் தேர்தலுக்கு முன்னர் விவசாய அமைப்புக்களுக்கு வழங்கப்பட்ட உழவு இயந்திரங்கள், மின் கம்பங்கள் என்பன மீண்டும் அநுராதபுரத்திற்கு கொண்டுசெல்லப்படுவதாகவும் யாழ். பிரதேச செயலக வட்டாரங்கள் தெரிவித்தன
மீளக்குடியேற்றப்பட்ட தெல்லிப்பளை, ஊர்காவல்துறை, பளை, உடையார்கட்டு, வள்ளிபுரம், தேவிபுரம், மூங்கிலாறு உள்ளிட்ட பல பிரதேசங்களில் குடிநீர் விநியோகத் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன
0000
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகள் 11 ஆயிரம் பேரில் இதுவரை 8240 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறீலங்காவின் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார். 

விடுதலைப் புலிகள் இயகத்தின் முன்னாள் போராளிகள் 152 பேர் நேற்று வவுனியாவில் வைத்து அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட போதே சுதந்த ரணசிங்க இவ்வாறு கூறினார். 

இன்னும் 2700 முன்னாள் போராளிகளே விடுவிக்க மீதமிருப்பதாகவும் அவர்கள் 7 மத்திய நிலையங்களில் புனர்வாழ்வு பெற்று வருவதாகவும் சில மாதங்களில் இவர்கள் விடுதலை செய்யப்படுவர் எனவும் அவர் குறிப்பிட்டார். 

இதுவரை காலமும் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகமாக பணிபுரிந்துவந்த மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க, நேற்றுடன் தனது கடமைகளை மற்றுமொருவரிடம் கையளித்தமை குறிப்பிடத்தக்கது.
0000

இலங்கை விடயம் தொடர்பிலான விசேட விவாதம் ஒன்று இந்தியாவின் மக்களவை மற்றும் மாநிலங்கள் அவை ஆகியவற்றில் இடம்பெறவுள்ளது.

இந்த விவாதம் எதிர்வரும் 16ம் திகதி செவ்வாயக்கிழமை  இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அனைத்திந்திய அண்ணா திராவிட கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் பாரதீய ஜனதா கட்சி ஆகியவற்றின் கோரிக்கையின் அடிப்படையில் இந்த விவாதம் இடம்பெறவுள்ளது.

ஏற்கனவே இவ்வாறான விவாதம் ஒன்று நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த போதும், அது நடைபெறவில்லை.
0000
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது கருணைமனுக்கள் நிராகரிக்கப்பட்டதை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று பாமக தலைவர் டாக்டர் ராம்தாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட மூவரும் தங்களது வாழ்க்கை எந்த நொடியில் முடிவுக்கு வருமோ என்ற கவலையுடன் 20 ஆண்டுகளை சிறையில் கழித்துள்ளதாகவம் இது மிகவும் கொடுமையானது என்றும் 

எனவே 3 பேரின் கருணை மனுக்களை தள்ளுபடி செய்யும் முடிவை மறுஆய்வு செய்து அவர்களின் விடுதலைக்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.
0000
இதேவேளை ராஜுவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரது மனுக்கள் நிராகரிக்கப்பட்ட விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பப்படும் என்று தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். பேரறிவாளன், சாந்தன், முருகன் கருணை மனு நிராகரிக்கப்பட்டது மன வேதனையை அளிக்கிறது என்றும் மேலும் தமிழ் பாதுகாப்பு இயக்கம் சார்பில் இவர்களது மரணதண்டனையை ரத்தச் செய்யக் கோரி போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
000
மத்திய அரசுக்கு பாரதீய ஜனதா கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. டில்லியில் நேற்று ஊடகங்களுக்கு பேட்டியளித்த மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், குஜராத் மாநிலத்தில் கலவரம் தொடர்பாக சாட்சியளிக்கும் காவல்துறையினருக்கு மத்திய அரசு பாதுகாப்பு அளிக்க தயார் என கூறியிருந்தார். இது குறித்து டில்லியில் பேட்டியளித்த பா.ஜக,வின் மூத்த தலைவர் அருண் ஜெட்லி, மத்திய அரசு பெரியண்ணன் போல் செயல்படக்கூடாது என்றும் சிதம்பரத்தின் கருத்துக்கள் கூட்டாட்சி தத்துவுத்திற்கு எதிரானது என கூறினார்.
0000
உலகின் அதிவேக விமானம் பரிசோதனை செய்யப்பட்ட போது விபத்துக்குள்ளாகி பசுபிக் கடலில் விழுந்துள்ளது. அமெரிக்க ராணுவத்தின் பால்கன் எச்டிவி - 2 ரக  விமானமே விபத்துக்குள்ளாகியுள்ளது சாதாரண வர்த்தக விமானத்தைக் காட்டிலும் 22 மடங்கு அதிவேகமாக செல்லும் இந்த விமானம் கலிபோர்னியாவில் வான்டென் பெர்க் விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்ட 9 நிமிடத்தில் விபத்துக்குள்ளாகி பசிபிக் கடலில் விழுந்து நொறுங்கி உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
இந்த விமானம் 2000 சென்டிகிரேடு வெப்பநிலையை தாங்கக் கூடிய இந்த சுப்பர் சோனிக் விமானம் 139 வினாடிகளில் மணிக்கு 16700 மைல் வேகத்தில் சென்று உள்ளது குறிப்பிடத்தக்கது.
0000
சீனாவில் அதிவேக தொடரூந்துகளின் வேகம் குறைக்கப்பட்டுள்ளது சீனாவில் பெய்ஜிங், ஷாங்காய், பெய்ஜிங்-திலாங் ஜின், ஷாங்காய்-ஹாங்ஷி ஆகிய நகரங்களுக்கு இடையே மணிக்கு 200 கி.மீட்டர் முதல் 350 கி.மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டு வருந்தன.
 கடந்த மாதம் 23-ந்  திகதி ஒரு 300 கிலேமீட்டர் வேகத்தில் சென்ற அதிவேகத் தொடரூந்து விபத்துக்குள்ளானதில் 40 பேர் பலியானதுடன் 200 பேர் காயம் அடைந்ததை அடுத்து இந்தத் தொடரூந்துகளின் வேகத்தை குறைக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது
இது  இதாடர்பாக நடந்த விசாரணைகளை அடுத்து  மணிக்கு 350 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் தொடரூந்துகள்  300 கிலோமீட்டர் ஆகவும், 250 கிலோமீட்டர் வேக தொடரூந்துகள் 200 கி.மீட்டர் ஆகவும், 200 கி.மீட்டர் வேக தொடரூந்துகள் 160 கி.மீட்டர் ஆகவும் வேகம் குறைக்கப்பட்டுள்ளது
0000
விண்வெளியில் மேலும் ஒரு புதிய கிரகத்தை கண்டுபிடித்துள்ள விஞ்ஞானிகள் அதற்கு  ட்ரெஸ் 2 பி என்று பெயரும் சூட்டியுள்ளனர்.
விண்வெளியில் ஆய்வு நடத்திவரும்  அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தை சேர்ந்த கெப்லர் விண்கலம் 
இந்தப்புதிய கிரகம் இருப்பதை கண்டுபிடித்து படம் எடுத்து அனுப்பியுள்ளது. அளவில் பெரிய கிரகமான வியாழனை விட மிக பெரியதாக உள்ள இந்தக் கிரகம் மிகவும கறுப்பாக காட்சியளிக்கிறது. சூரிய ஒளியில் 1 சதவீதத்தை மட்டுமே இந்த கிரகம் பிரதிபலிப்தனால் நிலக்கரியை விட கறுப்பாக இந்தக் கிரகம் காட்சி தருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்
இந்த புதிய கிரகம் 750 ஒளி ஆண்டுகள் தூரத்தில் அமைந்துள்ளது 
0000
பராமரிப்பு பணிகளுக்காக அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் அமைந்துள்ள சுதந்திர சிலை எதிர்வரும் அக்டோபர் 28ம் திகதியுடன் மூடப்படுகிறது.


சுமார் 27 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் இந்த பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன. பராமரிப்பு பணிகள் ஓராண்டு காலம் நடக்கவுள்ளன.


எனினும் சுதந்திர சிலை அமைந்துள்ள பகுதி பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டிருக்கும் என அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


000 


இந்திய இங்கிலாந்து அணிகளுக்கிடையில் பெர்மிங்ஹாமில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி மிக வலுவான நிலையில் உள்ளது. 710 ஓட்டங்களுக்கு 7 விக்கட் எடுத்திருந்த நிலையில் தனது முதல் இன்னிங்சை நிறுத்திக் கொண்ட இங்கிலாந்து இந்தியாவை துடுப்பெடுத்தாடுமாறு அழைத்து. இங்கிலாந்து சார்பில் அபாரமாகத் துடுப்பெடுத்தாடிய அலிஸ்டார் குக் இரட்டைச் சதம் குவித்தார். இந்தியாவின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் வீரேந்தர் ஷெவாக் இரண்டாவது இன்னிங்சிலும் ஓட்டமெதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இந்திய அணி தனது முதலாவது இன்னிங்சில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 224 ஓட்டங்கள் மாத்திரமே பெற்றிருந்தது. இங்கிலாந்தை விட 451 ஓட்டங்கள் பின்னிலையில் உள்ள நிலையில், இந்தியா தோல்வியில் இருந்து மீள்வதற்கு மிகக் கடுமையாகப் போராட வேண்டிய நிலையில் உள்ளது.
0000


கருத்துகள் இல்லை: