செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

சிறையில் பலருக்கு கல்வியறிவு புகட்டியவர் பேரறிவாளன்: சகோதரிகள் பெருமிதம்

எங்களது சகோதரர் குறித்து நாங்கள் பெருமிதத்துடன்தான் இருக்கிறோம். அவர் குறித்து நாங்கள் பெருமைப்படுகிறோம். சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவர் மூலம் எத்தனையோ பேர் சிறைக்குள்ளேயே படித்து பட்டமும் வாங்கியுள்ளனர். பலருக்குக் கல்வி அறிவு புகட்டிய பெருமை பேரறிவாளனுக்கு உண்டு என்று கூறியுள்ளனர் அவரது இரு சகோதரிகளும்.

குயில்தாசன்-அற்புதம் அம்மாள் தம்பதிக்கு பேரறிவாளன் ஒரே மகன் ஆவார். இவர்களுக்கு அருள் செல்வி, அன்புமணி என இரு மகள்களும் உள்ளனர்.

இவர்களில் அருள் செல்வி சிதம்பரம் அண்ணாமலப் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். அன்புமணி, ஊரக வளர்ச்சித்துறையில் பணியாற்றி வருகிறார்.

19 வயதிலேயே சிறைக்குப் போனவர் பேரறிவாளன். இதனால் இரு சகோதரிகளின் திருமணத்தையும் அவர் காணவில்லை. மேலும் அவர்கள் இருவருமே பேரறிவாளன் திரும்பி வரும் வரை மணம் புரியப் போவதில்லை என்று பிடிவாதமாக இருந்தவர்கள். இருப்பினும் பேரறிவாளனின் வற்புறுத்தலைத் தொடர்ந்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

தங்களது சகோதரர் குறித்து அருள்செல்வி கூறுகையில், எங்களது சகோதரர் அறிவு குறித்து நாங்கள் பெருமைப்படுகிறோம். அவர் ஒரு நிமிடம் கூட அமைதியாக இருக்க மாட்டார். அடுத்தவருக்கு எந்த மாதிரி உதவலாம் என்பதுதான் அவரது ஒரே சிந்தனையாக இருக்கும்.

அடுத்தவருக்கு அவர் உதவுவதற்கு அளவே இருக்காது. பாரபட்சம் பார்க்காமல், பேதம் பார்க்காமல் உதவுவார். மற்றவர்களை மதிப்பதிலும் அவருக்கு நிகர் யாருமில்லை. அதேபோல மிகவும் நேர்மையாக நடந்து கொள்வார் என்றார்.

அன்புமணி கூறுகையில், சிறையில் அடைக்கப்பட்டது முதல் அங்குள்ள கைதிகளுக்கு கல்வி போதனையூட்டுவதிலும், கல்வி குறித்த விழிப்புணர்வை ஊட்டுவதிலும்தான் அறிவு ஈடுபட்டுள்ளார். நாங்கள் அவரைப் பார்க்கப் போகும் போதெல்லாம் புத்தகங்கள் வாங்கி வா என்று மட்டும்தான் கேட்பார். அந்தப் புத்தகங்களை கைதிகளுக்குக் கொடுத்து படிக்க வைப்பார். தானே சொல்லியும் கொடுப்பார். பல கைதிகள் இவரிடம் படித்து தேர்வு எழுதி பட்டங்களும் வாங்கியுள்ளனர் என்பதை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது என்றார் கண்களில் கண்ணீர் மல்க.

2 கருத்துகள்:

அருள் சொன்னது…

தூக்குதண்டனை-சட்டமன்ற தீர்மானம்: முதலமைச்சருக்கே அதிகாரம் இருக்கும் போது நடுவண் அரசிடம் கெஞ்சலாமா?

http://arulgreen.blogspot.com/2011/08/blog-post_30.html

அருள் சொன்னது…

தூக்குதண்டனை-சட்டமன்ற தீர்மானம்: முதலமைச்சருக்கே அதிகாரம் இருக்கும் போது நடுவண் அரசிடம் கெஞ்சலாமா?

http://arulgreen.blogspot.com/2011/08/blog-post_30.html