சனி, 20 ஆகஸ்ட், 2011

ஈழத்தமிழரின் பொருளாதார வளத்தை பலவீனமாக்கும் சிறிலங்கா அரசு


தமிழர் பிரதேசங்களில் சிங்களக் கடைகள் பல புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. நாளொன்றிற்கு 5000 வரையான சிங்களவர்கள் யாழ்ப்பாணத்தைப் பார்வையிடச் செல்வதை நாம் எமது கண்களால் காணமுடியும்.

எதிர்காலத்தில் தமிழ்மக்கள் சுபீட்சமாக வாழ்வதைத் தடுக்கும் நோக்கில், தமிழ் மக்களால் கடந்த பல ஆண்டுகளாகக் கட்டி வளர்க்கப்பட்ட உள்ளுர் பொருளாதாரத்தை சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டு சிதைத்துவருகின்றது. தமிழ் மக்களின் பிரதேசங்களில் உள்ள பொருளாதார வளமானது திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருவதுடன், இப்பிரதேசங்களில் தற்போது சிங்கள வர்த்தகர்களின் பிரசன்னம் அதிகரித்துக் காணப்படுகின்றது.

குருதி தோய்ந்த உள்நாட்டு யுத்தத்தின் அழிவுகளிலிருந்து தமது வாழ்வை மீளக் கட்டியெழுப்ப வேண்டிய நிலையிலுள்ள தமிழ் மக்கள் தம்மைத் தக்க வைத்துக் கொள்வதற்காகக் கூலித் தொழில்களுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் இவ்வாறானதொரு சூழலில், தமிழ்ப் பெண்கள் கூடத் தமது குடும்பங்களைப் பராமரித்துக் கொள்வதற்காக நிலக்கண்ணிவெடி அகற்றும் தொழிலில் ஈடுபட்டுவருகின்றனர்.

செட்டிக்குளம்-மன்னார் வீதியிலமைந்துள்ள பெரியதொரு குளத்தில் அதிகாலை 4 மணியளவில் அங்கு வாழும் இளம் தமிழ்ப் பெண்கள் மீன்பிடிப்பதற்காகச் செல்கின்ற காட்சிகளைப் பார்ப்பதென்பது மிகவும் பரிதாபத்திற்குரிய ஒரு விடயமாகும். இப்பெண்களில் பெரும்பாலனவர்கள் தமது கணவன்மாரை இழந்தவர்களாவர். இவர்கள் தமது குடும்பத்தைப் பராமரித்துக் கொள்வதற்காக மீன்பிடித் தொழிலில் ஈடுபடுகின்றனர்.

தமிழர் பிரதேசங்களில் சிங்களக் கடைகள் பல புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. நாளொன்றிற்கு 5000 வரையான சிங்களவர்கள் யாழ்ப்பாணத்தைப் பார்வையிடச் செல்வதை நாம் எமது கண்களால் காணமுடியும். இது வெளிப்படையாகத் தெரிகின்றது.

இடம்பெயர்ந்தவர்களுக்கான புனர்வாழ்வுப் பணிகள் மிகவும் மெதுவாகவே இடம்பெற்றுவருகின்றன. இந்த மக்களுக்கு 25,000 ரூபா பணமும் 06 மூங்கில் தடிகளும், 06 கூரைத்தகரங்கள் மட்டுமே வீடு கட்டுவதற்காக வழங்கப்பட்டுள்ளன. இந்த உதவியைப் பெறும் இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் தமக்கான தற்காலிகக் கொட்டகைகளை மட்டுமே அமைக்க முடியும்.

இதற்கு மாறாக, மீள்குடியேற்றப்பட்டுள்ள சிங்கள மக்களுக்கு நிரந்தர வீடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதற்கும் மேலாக, தமிழர்களுக்குச் சொந்தமான வயல்நிலங்கள், மீன்பிடி இடங்கள் என்பன உயர் பாதுகாப்பு வலயங்களுக்குள் உள்ளதால் அவர்கள் மீளவும் தமது சொந்த இடங்களுக்குத் திரும்ப முடியாதுள்ளனர். உயர் பாதுகாப்பு வலயத்தில் நீண்ட காலமாக பயிர் செய்யப்படாததால் அங்குள்ள நிலங்கள் தரிசு நிலங்களாக மாறியுள்ளன.

புதைக்கப்பட்டுள்ள நிலக்கண்ணி வெடிகள் மற்றும் எறிகணை வீச்சுக்கள் போன்றவற்றால் பயிர்செய் நிலங்களில் காணப்படும் மண் வளமானது பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டுப் போரானது நிறைவுக்கு வந்து இரு ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் கூட தற்போதும் தமிழ் மக்களை வேட்டையாடுகின்ற நிலை தொடர்கின்றது. அத்துடன் தமிழ் மக்கள் இன்னமும் தமது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியாத சூழலும் காணப்படுகின்றது.

கடலுக்குச் செல்கின்ற தமிழ் மீனவர்கள் தொழில் அனுமதி அட்டையுடன் மட்டுமே மீன்பிடிக்கச் செல்ல முடியும். இதற்கான அனுமதி அட்டையைப் பெறுவதற்காக உள்ளுர் கிராம அலுவலர், மற்றும் உள்ளுர் நிர்வாகம், மீன்பிடித் திணைக்களம் போன்றவற்றில் கடமையாற்றும் அதிகாரிகளின் 05 கையொப்பங்களும், புலனாய்வு அதிகாரிகள் உள்ளடங்களாக இராணுவ மற்றும் கடற்படை அதிகாரிகளிடமிருந்து 07 கையொப்பங்களும் என மொத்தம் 12 கையொப்பங்கள் பெறவேண்டியுள்ளன.

தொழில் அனுமதியைப் பெற்றுக் கொள்ள வேண்டிய மீனவர் ஒருவர் 1-2 மாதங்களையும், 15,000-20,000 ரூபாக்கள் வரையும் செலவிட வேண்டியுள்ளனர். இதே விதமான அனுமதியானது இம்மீனவர்களால் பயன்படுத்தப்படுகின்ற மீன்பிடிப் படகுகளுக்காகவும் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.

இவ்வளவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரும் கூட தமிழ் மீனவர்கள் மிகக் குறுகிய ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே தமது மீன்பிடித் தொழிலை மேற்கொள்ள முடியும். இம்மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபட முடியாது. இவர்கள் நடைமுறைகளை மீறுகின்ற சந்தர்ப்பத்தில் இவர்களது அனுமதி அட்டைகளும் நிராகரிக்கப்பட்டுவிடும்.

முல்லைத்தீவு போன்ற இடங்களில் சிங்கள மீனவர்கள் மட்டுமே மீன்பிடித் தொழிலை மேற்கொள்ள முடியும். தமிழ் மீனவர்கள் இங்கு தொழில் செய்வதற்கான அனுமதிகள் வழங்கப்படவில்லை. முருங்கன்-நானாட்டன் பகுதியானது ஒரு காலத்தில் வாழைப் பயிர்ச்செய்கைக்கும் வாழைப்பழ ஏற்றுமதிக்கும் பிரபல்யம் பெற்றிருந்தது. போர் ஓய்வுற்ற நிலையில் தற்போது தமது இடங்களில் மீளக் குடியேறியுள்ள தமிழ் மக்கள் கொழும்பிலிருந்து சிங்கள வர்த்தகர்களின் ஊடாகக் கொண்டு வரப்படுகின்ற வாழைப்பழங்களை வாங்கவேண்டிய கட்டாய சூழல் நிலவுகின்றது.

அத்துடன் இராணுவத்தினரின் அனுமதியுடன் தமிழ் மக்களுக்குச் சொந்தமான காடுகளில் சிங்களவர்கள் வியாபார நோக்கத்திற்காக மரங்களை வெட்டுகின்றார்கள். இதனால் தமிழர்களின் வளங்கள் அருகிக்கொண்டு செல்கின்ற துர்ப்பாக்கிய சூழல் நிலவுகின்றது. பெரும் பொருளாதார வளத்தைக் கொண்டுள்ள பனைமரமானது தமிழர் நிலங்களில் செறிந்து காணப்படுகின்றது. பனைமரத்தின் எல்லாப் பகுதிகளும் பயன்பாட்டிற்குகந்தன.

சீனி, சர்க்கரை, கள், பனம்பழம் போன்றன மிக்க பயனைத் தருகின்றன. பனை மரத்தின் ஓலைகள் கூரை வேய்வதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. அத்துடன் இவை வேலி அமைக்கவும், பாய்கள், கூடைகள், கைவிசிறிகள், குடைகள் போன்ற உற்பத்திக்குப் பயன்படுத்தப்படுகின்றன.

கடந்த முப்பது ஆண்டுகாலப் போரின் விளைவாக 04 மில்லியன் பனைமரங்கள் அழிக்கப்பட்டுள்ளன. பனை மர உற்பத்திகளை நம்பி வாழ்ந்த மக்கள் தற்போது தம்மைக் காப்பதற்காக வேறு தொழில்களை நாடவேண்டியுள்ளது. தற்போது பனைமர விதைகள் புதிதாக விதைக்கப்பட்டாலும் கூட அவை வளர்ந்து பயன் தர இன்னும் 60 ஆண்டுகள் ஆகும்.
(சென்னையை தளமாகக் கொண்ட The Weekend Leader இணையத்தளத்தில் அதன் சிறப்பு செய்தியாளர் தொடராக எழுதிவரும் 'சிறிலங்காவின் உள்ளே' என்னும் பத்தியில் தெரிவித்துள்ளார். அதனை 'புதினப்பலகை'க்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.) 

கருத்துகள் இல்லை: