சனி, 13 ஆகஸ்ட், 2011

மாலைச் செய்திகள்


தமிழர்கள் அழுக்கானவர்கள்”: அமெரிக்கத் தூதரின் கருத்தினால் சர்ச்சை - செய்தித்துளிகள்
]
இந்தியாவுக்கான அமெரிக்கத் துணைத்தூதுவர் தமிழர்கள் கறுப்பானவர்கள் அழுக்கானவர்கள் என்று தெரிவித்த கருத்துக்கு அமெரிக்கத் தூதரகம் வருத்தம் வெளியிட்டுள்ளது.

எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் நேற்று உரையாற்றிய அமெரிக்கத் துணைத்தூதுவர் மொறீன் சாவோ, 20 ஆண்டுகளுக்கு முன்னர் தான் கல்வி கற்றுக் கொண்டிருந்த போது கலாசாரம் மற்றும் மொழி பற்றி அறிந்து கொள்ள இந்தியாவுக்கு வந்ததாக கூறியிருந்தார்.

டெல்லியில் இருந்து ஒரிசாவுக்கு தொடருந்து மூலம் 24 மணி நேரப் பயணம் ஒன்றை மேற்கொண்டதாகவும், ஆனால் 72 மணிநேரம் கடந்தும் அந்தத் தொடருந்து பயணத்தை முடிக்கவில்லை என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.

இதனால் தனது தோல் தமிழர்களைப் போன்று கறுப்பாகவும் அழுக்காகவும் மாறி விட்டதாக அவர் மேலும் கூறியிருந்தார்.

இந்தக் கருத்து பொருத்தமற்றது என்றும் இதற்காக துணைத்தூதுவர் வருந்துவதாகவும் அமெரிக்கத் துணைத்தூதரகம் தெரிவித்துள்ளது.

கோத்தாபயவின் கருத்துக்கு இந்திய நாடாளுமன்றில் கண்டனம்

தமிழ்நாடு முதல்வர் ஜெயலிதாவை விமர்சித்த சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு இந்திய நாடாளுமன்றத்தில் நேற்று கடும் கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய நாடாளுமன்றத்தில் நேற்று கேள்வி நேரத்தின் போது உரையாற்றிய அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் தம்பித்துரை கோத்தாபய ராஜபக்சவை கடுமையாக கண்டித்து உரையாற்றியுள்ளார்.

அரசியல் நலன்களுக்காகவே தமிழ்நாடு முதல்வர் ஜெயல்லிதா ஈழத்தமிழர் பிரச்சினையை முன்னிறுத்துவதாக இந்திய தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் கோத்தாபய ராஜபக்ச கூறியிருந்தார்.

அவரது இந்தக் கருத்தை அடியோடு நிராகரித்த அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் தம்பித்துரை, ஐ.நா அறிக்கையில் 40,000 பொதுமக்கள் போரின் இறுதிக் கட்டத்தில் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.

அத்துடன் கோத்தாபய ராஜபக்சவின் இந்தக் கருத்துக்கு சிறிலங்கா தூதுவரை அழைத்து இந்தியா கண்டிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

கோத்தாபய ராஜபக்சவின் கருத்தை தமிழ்நாடு சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதாவும் கண்டித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பேரறிவாளனின் தாயார் உருக்கமான வேண்டுகோள்

இருபது ஆண்டுகளாக சிறையில் வாடிய தனது மகனை காப்பாற்றுங்கள் என்று ராஜிவ்காந்தி கொலை வழக்கின் மரணதண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர், தமது தண்டனையை குறைக்குமாறு கோரி இந்தியக் குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பித்த கருணைமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில், சென்னையில் நேற்று பேரறிவாளின் தாயார் அற்புதம்மாள் செய்தியாளர்களிடம் பேசினார்.

“ 21 ஆண்டுகள் பொறுமையுடன் காத்திருந்து கருணை மனுவை மட்டுமே நம்பி இன்று ஏமாற்றத்தின் உச்சியில் இருக்கிறேன்.

வழக்கில் இத்தனை குளறுபடிகள், முடிவடையாத விசாரணைகள், கண்டுபிடிக்க முடியாத முடிச்சுகள் இருப்பதை காரணம் கொண்டு நிரபராதியான என் மகன் உறுதியாக விடுவிக்கப்படுவான் என்று நம்பி இருந்தேன்.

உலகில் எங்கும் நடக்காத அநியாயமாக- காந்திய நாடு என்று சொல்லிக் கொள்ளும், அஹிம்சையை போற்றும் இந்திய நாட்டில், ஒருவன் நிரபராதி, நிரபராதி என்று கதறிக் கொண்டிருக்கும் போதே தூக்கிலிட துடிக்கிறது காங்கிரஸ் அரசாங்கம்.

மக்களிடம் நான் சொல்ல விரும்புவதெல்லாம் ஒன்று தான்.  பேரறிவாளனுக்கும் ராஜிவ்காந்தி கொலைச்சதிக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.

இனி மக்களாகிய நீங்கள் உணர்ந்து, உங்கள் கருத்தை உரக்கச் சொன்னால் மட்டுமே என் மகனும் அவனை போல இருவரும் உயிர் பிழைக்க வாய்ப்பிருக்கிறது.

தாய்மார்கள் ஒரு தாயின் தவிப்பை உணர்ந்து, என் மகனின் உயிர் மீட்பு போராட்டத்தில் கண்டிப்பாக என்னுடன் வருவார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.

மாணவர்களும், சட்ட நிபுணர்களும் ஒரு வரலாற்று தவறு நிகழ்வதை இப்பொழுதே தடுக்க வேண்டும்.

மனிதஉரிமை ஆர்வலர்களும், சமூக ஆர்வலர்களும், அரசியல் தலைவர்களும் இவர்களின் தண்டனையை மறுபரிசீலனை செய்ய ஒருசேர உரத்து குரல் கொடுக்க வேண்டும்.

இனியும் காலம் இல்லை என்பதை நான் சொல்லத் தேவை இல்லை என்று நம்புகிறேன்.

தமிழ்நாடு முதல்வரும் என் மகனின் குற்றமற்ற தன்மையை உணர்ந்து, அவன் உயிரை காக்கும் அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன்.  நாதியற்ற இந்த தாய்க்கு வேறு வழி இல்லை.“ என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

இது புதினப் பலகை இணையத்தில் இருந்து தொகுக்கப்பட்டது

கருத்துகள் இல்லை: