சனி, 27 ஆகஸ்ட், 2011

இன்றைய முக்கிய செய்திகள்


இந்தியாவின் முன்னாள் தலைமை அமைச்சர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோருக்கு செப்டம்பர் 9-ம் திகதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது என வேலூர் சிறைத் துறை அதிகாரிகள் நேற்று அதிகார பூர்வமாக தெரிவித்தனர்.


இந்தத் தண்டனையை ரத்து செய்யக் கோரி, தமிழகத்தில் தொடங்கியுள்ள போராட்டம் உலக மெங்கும் தீவிரமடைந்து வருகிறது.


முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகின்றன. 


தமிழக முதல்வரால் மட்டுமே மூவரின் உயிரையும் காப்பற்ற முடியும் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர். 


இந்தத் தூக்கு தண்டனையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் ஜெயலலிதாவுக்கு மதிமுக பொதுச் செயலர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்துடன், இதுகுறித்து தமிழக அரசிடம் மனு ஒன்றை அளிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 


இதே கோரிக்கையை ராமதாஸ் உள்ளிட்ட இன்னபிற அரசியல் தலைவர்களும் முன்வைத்துள்ளனர்.


பழ.நெடுமாறன் உள்ளிட்ட தமிழ் உணர்வாளர்கள் இணைந்து சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர். 


தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும் இந்தத் தூக்கு தண்டனைக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.


சமூக வலைத்தளங்களில் தமிழகம், இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழர்களும் தூக்கு தண்டனைக்கு எதிராக தீவிரமாக குரல் கொடுத்து வருகின்றனர்.


''Stop Death Penalty in India'    என்ற பெயரிலான ஃபேஸ்புக் பக்கத்தில், இந்தியக் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலுக்கு கோரிக்கை விடுக்கும் மனு ஒன்றில், சமூக ஆர்வலர்கள் பலரும் கையெழுத்திட்டு வருகின்றனர். 


சமூக ஆர்வலர்கள் பலரும் தங்களது ஃபேஸ்புக் பக்கத்தில் தூக்கு தண்டனைக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். 


அதேபோல், டிவிட்டரிலும் #stopdeathpenalty என்ற பெயரில் பலரும் தங்களது எண்ணங்களை அழுத்தமாக பதிவு செய்து வருகின்றனர்.


0000


மூவரின் கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகுவது என தமிழர் அமைப்புக்கள் முடிவு எடுத்துள்ளன.


கடந்த 20 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் இவர்களது கருணை மனுக்களை, முந்தைய இரண்டு குடியரசுத்தலைவர்களும்  நிராகரிக்காத நிலையில், தற்போது அம்மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதை எதிர்த்து வாதிடப்படவுள்ளது.


முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோர் சார்பில் பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மலானில் வாதாடவுள்ளார்.


இதுதொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்யப்படுகிறது.இந்த மனுமீது ராம் ஜெத்மலானி எதிர் வரும் திங்கட்கிழமை முன்நின்று வாதிடுவார் எனத் தெரிகிறது.
0000
 பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி சேலத்தில் சட்டக் கல்லூரி மாணவர்கள் இன்று தொடரூந்து மறியலில் ஈடுபட்டனர்.இதனால் இந்தத் தடத்திலான தொடரூந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டன:


அதே போல இந்த மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி தர்மபுரியில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில பாமக, மதிமுக மற்றும் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினர்; ஆயிரக் கணக்கில் கலந்து கொண்டனர்.


இவற்றை விட தமிழகத்தின் பல் வேறு நகரங்களிலும் கண்டன பேரணிகள் ஏற்பாடு செய்ப்பட்டுள்ளன
000
இதேவேளை நேற்று நள்ளிரவு முதலே தமிழகம் முழுக்க அதிரடி ப்படையினர் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். முக்கிய பிரமுகர்கள் திவீர கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் சிறீலங்கா  அரசு நிறுவனங்கள் தூதரகம், வங்கி, பௌத்த மடாலயம், உள்ளிட்ட பகுதிகளில் அதிரடிப்படையினர்  நிறுத்தப்பட்டுள்ளனர். வேலூர் சிறையைச் சுற்றி அதிரடிப்படை பாதுக்காப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
வேலூர் சிறையதிகாரிகளும் சிறைத்துறை கண்காணிப்பு அதிகாரியும் வேலூரில் முகாமிட்டு சிறையில் சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிகிறது. 

00000
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று பேரையும் தூக்கு தண்டனையில் இருந்து காப்பாற்ற தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேரறிவாளனின் தாயார் கோரிக்கை விடுத்துள்ளார்.


நேற்றிரவு டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.


அப்போது, குடியரசுத் தலைவரை சந்திக்க ஏதாவது முயற்சி செய்தீர்களா? என்று செய்தியாகர்கள் கேட்டதற்கு பதில் அளித்த அவர், எந்த வித முயற்சியும் செய்யவில்லை என்றார்.


டெல்லியில் எந்த தலைவர்களை சந்தித்து பேசினீர்கள் என்ற கேள்விக்கு, கம்யூனிஸ்டு கட்சி தலைவர்களான பரதன், ராஜா மற்றும் வைகோ ஆகியோரை சந்தித்து பேசியதாகவும் 3 பேரும் தூக்கு தண்டனையில் இருந்து தப்பிப்பார்கள் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளது என்றும் கூறினார்


3 பேரையும் தூக்கு தண்டனையில் இருந்து காப்பாற்ற கோரி தமிழக முதலமைச்சரிடம் மனு தந்து உள்ளீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த அற்புதம்மாள், ஏற்கனவே தமிழக முதலமைச்சரிடம் கோரிக்கை மனு தந்து உள்ளதாகவம்  அவரை சந்திக்க அனுமதி கிடைத்தால் நேரில் கோரிக்கை வைப்பேன் என்றும் தெரிவித்தார்
0000


பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று பேர்களின் உயிரை காப்பாற்றுவதற்காக, தமிழகத்தில் மாணவர்களை திரட்டி போராடுவோம் என்று திரைப்பட இயக்குனர் பாரதிராஜா அறிவித்துள்ளார்.


இதுகுறித்து நேற்று மாலை ஊடகங்களுக்கு கருத்துரைத்த அவர்  
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கருணை மனு தள்ளுபடி செய்யப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று பேர்களுக்கும் மரண தண்டனை நிறைவேற்றக் கூடாது என்று தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் செயற்குழுவின் அவசர கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் 


இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்களை படுகொலை செய்த பாவம் இன்னும் போகாத நிலையில், மூன்று தமிழர்களுக்கு தூக்குத்தண்டனை விதிப்பது மகா பாவம் என்றும்  ஒரு கொலைக்கு இன்னொரு கொலைதான் தீர்வு என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறினார்


இந்த 3 தமிழர்களின் உயிரையும் காப்பாற்றுவது, இனமானத்தை காப்பாற்றுவது போல் ஆகும என்றும் குறிப்பிட்ட இயக்குனர் பாரதிராஜா தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள மூன்று தமிழர்களையும் காப்பாற்றுவதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா குரல் கொடுக்க வேண்டும் என்று தமிழர்கள் அத்தனை பேரும் எதிர்பார்க்கிறார்கள். என்றும் இதுதொடர்பாக, தாங்கள் முதல்வரை நேரில் பார்த்து மனு கொடுக்க இருப்பதாகவும் தெரிவித்தார்


00000
இதேவேளை பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை பார்ப்பதற்கு பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.  அவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பார்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


இது தொடர்பாக கருத்துரைத்த வேலூர் மத்திய சிறை அதிகாரி 
தூக்குத் தண்டனையை நிறைவேற்றும் உத்தரவு வந்துவிட்டதால், இனி அவர்கள் மூன்று பேரும் முன்பு போல் சிறைக்குள் தாராளமாக நடமாட முடியாது என்றும் நூலகத்துக்கு செல்ல அவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.


அவர்கள் உடற்பயிற்சி செய்ய விரும்பினால், காவலுடன் அனுமதி வழங்கப்படும் என்று தெரிவித்த அந்த அதிகாரி, தூக்குத் தண்டனை கைதிகள் மூன்று பேரையும் பார்ப்பதற்கு பார்வையாளர்கள் யாருக்கும் அனுமதி இல்லை என்றும் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறினார்.
0000
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தில் இன்று 27 ஆம் திகதி தேர்த்திருவிழா நடைபெற்றது
இந்தத்திருவிழாவுக்காக காலை 7 மணிமுதலே பக்தர்கள் அலைமோதத் தொடங்கியிருந்தனர்.தமிழர் தாயகப் பகுதிகளில் இருந்து மட்டுமல்லாமல் சிறீலங்காவில் இருந்தும் புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்
(விடியோ)

0000
சிறிலங்கா அரசுக்கு எதிராக கருத்துகளை வெளியிட்டு வரும் முன்னாள் தலைமை நீதியரசர் சரத் என் சில்வா மீது விசாரணை நடத்த நாடாளுமன்றத் தெரிவுக் குழுவொன்றை அமைக்க சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. 


அலரிமாளிகையில் நேற்று சிறிலங்காவின் அரசுத்தலைவர் மகிந்த ராஜபக்சவை சந்தித்த 14 முன்னாள் நீதிபதிகள், சரத் என் சில்வா தலைமை நீதியரசராக பதவி வகித்த காலத்தில் தாம் முறையற்ற விதத்தில் ஓய்வுபெற நிர்ப்பந்திக்கப்பட்டதாக முறைப்பாடு செய்துள்ளனர். 


இதையடுத்தே சரத் என் சில்வா மீது விசாரணை நடத்த சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. 


முன்னாள் தலைமை நீதியரசர் சரத் என் சில்வா, அதிபர் தேர்தலின் போது சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாக பரப்புரை செய்ததுடன் சிறிலங்கா அரசுக்கு எதிராக அண்மைக்காலமாக தீவிர பரப்புரைகளை மேற்கொண்டு வருகிறார்.


அத்துடன் சிறிலங்கா அரசின் ஊழல்களை வெளிக் கொண்டு வரும் இணையத் தளம் ஒன்றையும் ஆரம்பித்து வைக்கும் நிகழ்விலும் அவர் கடந்தவாரம் கலந்து கொண்டிருந்தார். 


இந்தநிலையிலேயே சரத் என் சில்வாவுக்கு எதிராக சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளது. 


ஓய்வுபெற்ற நீதிபதிகள் சிலரை சிறிலங்கா அதிபரிடம் முறையிடச் செய்து அவர் மீது விசாரணைக் குழுவொன்றை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
00000
நெடுந்தீவு உதவி அரசஅதிபர் பணிமனைக்குப் பின்புறமாக எட்டு மனித மண்டை ஓடுகள் மீட்கப்பட்டுள்ளன.
உதவி அரச அதிபர் பணிமனைக்குப் பின்புறத்தில் கட்டடம் ஒன்றை அமைப்பதற்காக அத்திபாரம் வெட்டும் பணி முன்னெடுக்கப்பட்ட போது மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் சில தென்பட்டன.


இதனையடுத்து நேற்று ஊர்காவற்றுறை மாவட்ட நீதிபதி திருமதி ஜோய் மகிழ் மகாதேவா, சட்ட வைத்திய அதிகாரி எஸ். சிவரூபன் ஆகியோர் முன்னிலையில் அந்த இடம் தோண்டப்பட்டது.


இதன்போது 8 மனித மண்டை ஓடுகள், எலும்புக் கூட்டு எச்சங்கள் என்பன அந்தக் குழியில் இருந்து மீட்கப்பட்டன. இவற்றுடன் உடைகளோ வேறு எந்தவிதமான தடயப் பொருள்களோ காணப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த எலும்புக் கூடுகள் 10 வருடங்களுக்கு முற்பட்டவையாக இருக்கலாம் எனச் சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
0000
சிறீலங்காவில் அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டுள்ள நிலையில், தடுத்து வைத்திருக்கும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக  'அவசரகால விளைவு விதிகள் சட்டம்' எனும் பெயரில் புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிடுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அவசரகாலச சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட அல்லது தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் சந்தேக நபர்களை கையாள்வதற்காக இந்த புதிய சட்டம் கொண்டுவரப்படவுள்ளது.


புதிய சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக அச்சட்டமூலத்தை வரையும் நடவடிக்கையில் சட்டமா அதிபர் திணைக்களம் தற்போது ஈடுபட்டுள்ளது.


அதேவேளை, பயங்கரவாத சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட அமுலாக்கல் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வதற்காக பயங்கரவாத தடைச்சட்டமும் தொடர்ந்து அமுலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
000
யுத்தத்தம் செய்ததை விட சர்வதேச சமூகத்தை திருப்திபடுத்தவது மிகவும் சவால் மிக்கது என்று சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம தெரிவித்துள்ளார்.

30 ஆண்டு கால யுத்தத்தை விடவும், சர்வதேச சமூகத்தை திருப்திபடுத்துவது கடினமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாரிய ஊடக வலையமைப்பு, பெரிய நாடுகள் பில்லியன் கணக்கான வளங்களைக் கொண்ட சர்வதேச சமூகம், இலங்கை விவகாரத்தில் திருப்தியடையவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாரியளவிலான வளங்களையும் சக்திவாய்ந்த ஊடக வலையமைப்புக்களையும் எதிர்கொள்வது சிறீலங்கா போன்ற சிறிய நாடொன்றுக்கு சவால் மிகுந்தது என அவர் தெரிவித்துள்ளார்.

இணையதளம், அச்சு ஊடகம், ஓவியங்கள் மற்றும் ஏனைய ஊடகங்களைப் பயன்படுத்தி சிறீலங்காவுக்கு எதிரான யுத்தக் குற்றச்சாட்டுக்களுக்கு மக்கள் பதிலளிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

வெல்ல முடியாத யுத்தத்தை வெற்றி காணுதல் என்ற தலைப்பிலான நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

0000
இலங்கையில் உண்மை நிலையைக் கண்டறியும் வகையில் தான் மேற்கொள்வதாக அறிவித்திருந்த இலங்கைப் பயணத்தை ரத்து செய்வதாக பாஜக மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான சுஷ்மா ஸ்வராஜ் நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
 அடுத்த மாதம் 17-ம் திகதி இரண்டுநாள் பயணமாக இலங்கை செல்வதாக அவர் அறிவித்திருந்தார். 
 ஆனால், நேற்று ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் தவிர்க்க முடியாத சில சொந்த காரணங்களால் தனது இலங்கைப் பயணத்தை ரத்து செய்து விட்டதாக சுஷ்மா தெரிவித்தார்.
 மத்திய அரசு சார்பாக நாடாளுமன்ற அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் குழுவுடன் செல்வீர்களா என்ற கேள்விக்கு அது குறித்து இன்னும் எந்த முடிவையும் மேற்கொள்ளவில்லை எனவும் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார்.
0000


தமிழர்கள் அழுக்கானவர்கள், அசுத்தமானவர்கள் என்ற ரீதியில் பேசி சர்ச்சையில் சிக்கிய அமெரிக்க துணைத் தூதர் மௌரீன் சாவ் சென்னையில் இருந்து வெளியேற தீர்மானித்துள்ளார்.
வெகுவிரைவில் சென்னையில் தனது பதவியில் இருந்து வெளியேற அவர் தீர்மானித்துள்ளதாக அமெரிக்க தூதரக செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
0000
000
ஐரின் சூறாவளியை எதிர்பார்த்து அமெரிக்காவின் கிழக்குகரையோரமாக வட கரோலினாவிலிருந்து நியூயோர்க் வரை அவசரகால  நிலைபிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று வெள்ளிக்கிழமை அத்லாந்திக்கிலிருந்து வந்த முதலாவது
சூறாவளி பலவீனமடைந்து பின்னர் மணிக்கு 110 மைல் வேகத்தில் வீசுகின்ற புயலாகமாறியது.
டெலவாரே, மேரிலாந்து, நியூஜேர்சி, மற்றும் வட கரோலினா ஆகிய பகுதிகளிலிருந்துமக்களை வெளியேறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

ஐரின் சூறாவளி கரிபியனில் பகுதியில் சேதத்தை ஏற்படுத்திய பின்னர் பஹாமாஸிலிருந்து விலகிச்செல்கின்றது.
இன்று சனிக்கிழமை பிற்பகல் ஐரின் சூறாவளி தாக்கும் அபாயத்தில் உள்ள வடகரோலினாவில் அவசரகால நிலையை அதிபர்  பராக் ஒபாமா பிரகடப்படுத்தினார்.
வொஷிங்டனிலும் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
இதன்காரணமாக அங்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த
மார்டடின் லூதர் கிங்கின் நினைவுச்சின்னத்திறப்பு நிகழ்வு செப்டம்பர்
மாதத்திற்கு ஒத்தவைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் அதிபர் ஒபாமா
பங்குபற்றவிருந்தார்.
000
தென் அமெரிக்க நாடான சிலியில் அரசின் கல்விக்கொள்கை, பொருளாதார மாற்றம் மற்றும் தொழிலாளர் கொள்கைளை கண்டித்து நேற்று நாடு முழுவதும் 6 லட்சத்து 10 ஆயிரம் பேர் வீதியில் திரண்டு போராட்டம் நடத்தினர்.
தேசிய அளவில் நடந்த இந்தப் போராட்டத்தில்  கலந்துகொண்டவர்களுக்கும் காவல்துறையினருக்கும்  இடையே நடந்த மோதலில் 26 பேர் காயம் அடைந்தனர்.


போராட்டக்காரர்கள் பல லட்சம் பேர் திரண்டாலும் அரசு தரப்பில் 1 லட்சத்து 75 ஆயிரம் பேர் மட்டுமே கலந்து கொண்டனர் என தெரிவிக்கப்பட்டது. நாடு தமழுவிய அளவில் நடந்த போராட்டத்தில் 210 பேர் கைது செய்யப்பட்டார்கள்.


இதில் தலைநகர் சான்டியாகோவில் அதிகபட்சமாக 140 பேரை காவல்துறையினர்; கைது செய்தனர். 
நாடு முழுவதும் 51 இடங்களில் எதிர்ப்பு பேரணி நடந்தது. இதில் 8 இடங்களில் வன்முறை ஏற்பட்டது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
000
ஒஸ்ரேலியாவில் கல்லூரிகளுக்கு செல்லாத இந்திய மாணவர்கள் 72 பேரின் விசாக்களை அந்நாட்டு அரசு ரத்து செய்துள்ளது.
ஒஸ்ரேலியாவில் 4 லட்சத்து 70 ஆயிரம் வெளிநாட்டு மாணவர்கள் தங்கி படித்து வருகிறார்கள். இதில் அதிகம் பேர் இந்திய மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் கல்லூரிகளுக்கு செல்லாமல் ஊர் சுற்றி திரியும் மாணவர்களை ஒஸ்திரேலிய அரசு கண்டுபிடித்து அவர்களது விசாக்களை ரத்து செய்து வருகிறது. இதற்காக நாடு முழுவதும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 9 ஆயிரம் மாணவர்கள் கல்லூரிகளுக்கு சரிவர செல்லாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.


இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 159 மாணவர்கள் அதிக அளவில் கல்லூரிகளுக்கு செல்லாமல் இருப்பது தெரியவந்தது. அவர்கள் அனைவரின் விசாக்களும் ரத்து செய்யப்பட்டன.


இதில் 72 பேர் இந்திய மாணவர்கள். இவர்கள் அனைவரும் அவர்களது சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.


0000
கூகுள் நிறுவனம் ஐரோப்பாவில் அடுத்த ஆண்டு தனது தொலைக்காட்சி சேவையை ஆரம்பிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. கூகுள் தொலைக்காட்சியை பார்வையாளர்கள் செய்மதி வழியாகவும்  இணையதளம் மூலமும்  பார்க்கலாம் என அறிவிக்ப்பட்டுள்ளது அமெரிக்காவில் இந்த கூகுள் தொலைக்காட்சி எதிர்வரும் அக்டோபர் மாத ஆரம்பிக்கப்பட உள்ளது
000
இந்தியாவில் தங்கம், விலையில்  இன்றும் அதிரடியான ஏற்றமே காணப்படுகிறது. தங்கம் விலை சவரனுக்கு.696ரூபா  அதிகரித்துள்ளன. சென்னையில் இன்று ஒரு கிராம் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை 2612 ரூபா .ஆகவும், 24 காரட் தங்கத்தின் விலை 27940ரூ. ஆகவும் உள்ளது. ஒரு சவரன் ஆபரணத்தங்கம்.20896 ரூபாவுக்கு விற்பனையாகியது. 
இதேவேளை கொழும்பில் 24 கரட் தங்கம், 52 ஆயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் நகைத்தங்கம் கூலியுடன் 52 ஆயிரத்து 400 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
இதன் படி ஒரு கிராம் தங்கத்தின் விலை 5 ஆயிரத்து  300 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
சவரன் காசொன்றின் விலை 52 ஆயிரத்து 200 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது
0000

கருத்துகள் இல்லை: