வெள்ளி, 5 ஆகஸ்ட், 2011

கலைந்தது வேஷம் ! குழம்பியது நாடகம்!


நேற்றைய எனது செய்திப்பார்வையில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் சிறீலங்கா அரசுக்கும் இடையில் நடைபெறும் பேச்சு வார்த்தைகள் ஒரு நாடகம் என்றும் இந்த நாடகம் நீண்ட நாளைக்கு தொடராது என்றும் கூறியிருந்தேன்;. அதற்கான அறிகுறிகள் நேற்று இரவே வெளிப்பட்டுவிட்டன.
நேற்று சிறீலங்கா அரசுடன் பேச்சு வார்த்தைக்குச் சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு சிறிலங்கா அரசுடன் பத்துச் சுற்றுப் பேச்சுக்களை நடத்திய போதும் உருப்படியான எந்த முன்னேற்றமும் எட்டப்படாததால் விசனமடைந்துள்ள நிலையில்  சிறிலங்கா அரசக்கு இரண்டு வாரகால காலக்கெடு ஒன்றை கொடுத்துள்ளது.
சமஸ்டி அமைப்பின் கட்டமைப்பு , மத்திய, மாகாண அரசுகளுக்கு இடையேயான அதிகாரப் பகிர்வு, நிதி அதிகாரங்கள் ஆகிய மூன்று முக்கிய விடயங்கள் குறித்த நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த சிறிலங்கா அரசுக்கு கொடுக்கப்பட்டுள்ள இந்தக் காலக்கெடுவுக்குள் எழுத்து மூலமான பதில் தரப்படாது போனால் பேச்சுக்களில் இருந்து விலக நேரிடும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.
இதன்காரணமாக, கடந்த எட்டு மாதங்களாக நடைபெற்று வந்த சிறிலங்கா அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுக்கள் முறிவடையும் நிலை தோன்றியுள்ளது.
சிறிலங்கா அரசுடன் நடத்தி வரும் பேச்சுக்களில் ஏற்பட்டுள்ள நிலைமைகள் தொடர்பாக நேற்றிரவு தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
சிறிலங்கா அரசு பேச்சுக்களை நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான ஒரு முயற்சியாக வெளியுலகுக்கு காட்ட முனைவதாகவும், ஆனால் இது ஒரு வெளித்தோற்றத்தை உருவாக்கும் முயற்சியே என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூறியுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட இந்தப் பேச்சுக்களில் உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியமர்வு மற்றும் புனர்வாழ்வு, உயர்பாதுகாப்பு வலயங்கள் அகற்றுதல், வடக்கு,கிழக்கில் செயற்படும் ஆயுதக் குழுக்களிடமிருந்து ஆயுதங்களை களைதல், அரசியல் கைதிகளின் பிரச்சினை ஆகியன குறித்தே பேசப்பட்டு வந்ததாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் பத்துச் சுற்றுப் பேச்சுக்களுக்கு பிறகும் இந்தப் பிரச்சினைகளில் எந்தவிதமான முன்னேற்றமும் காணப்படவில்லை என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு சிறிலங்கா அரசாங்கத்திடம் சமர்ப்பித்த யோசனைகள் தொடர்பாக, பல மாதங்களாகியும் எந்தவிதமான பதிலும் தரப்படவில்லை என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசியல் தீர்வுப் பிரச்சினையில், எந்தவிதமான காத்திரமான விவாதமும் நடத்த முடியாத சூழலில் பேச்சுவார்த்தை என்ற 'ஏமாற்று வழிமுறையை' தொடர வேண்டிய அவசியம் இருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறியுள்ளது
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்தக் கோரிக்கைக்கு பதிலழித்த சிறிலங்கா அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அணுகுமுறை விடுதலைப் புலிகளின் பாணியில் இருப்பதாக் குற்றம்சாட்டியுள்ளது.
அரசாங்க பேச்சுக்குழுவின் செயலரான நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தன வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.
சிறிலங்கா அரசினால் முன்வைக்கப்பட்ட அடுத்த சுற்றுப் பேச்சுக்களுக்கான திகதியை ஏற்றுக்கொள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு மறுத்து விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
மூன்று நிபந்தனைகளுக்கு இணங்குவதன் அடிப்படையிலேயே சிறிலங்கா அரசுடன் தொடர்ந்து பேச்சுக்களை நடத்த முடியும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறியுள்ளது விடுதலைப் புலிகளால் கையாளப்பட்ட அணுகுமுறையை ஒத்ததாகவே இருப்பதாகவும் சஜின் வாஸ் குணவர்த்தன குறிப்பிட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் இவை குறித்து பரந்தளவில் ஆராய்ந்தே முடிவுகளை எடுக்க முடியும் என்றும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தமிழ்மக்களின் ஏக பிரதிநிதிகள் என்று தாம் கருதவில்லை என்றும் ஏனைய தரப்பினருடனும் பேச வேண்டியுள்ளதாகவும் அவர்; குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்கா அரசிடம் தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சனைக்குரிய தீர்வு எதுவும் இல்லை என்பதும் சர்வதேசத்தை எமாற்றுவதற்காகவே அவர்கள் பேச்சுவார்த்தைகளை நடத்துகிறார்கள் என்பதும் மீண்டும் ஒரு முறை நிரூபணமாகி இருக்கிறது. இதிலே மீண்டும் ஒரு முறை என்ற சொல்லை நான் அழுத்திச் சொல்லவதற்குக் காரணம் ஏற்கனவே திம்பிலும்  தாய்லாந்து நோர்வே மற்றும் ஜெனிவாவில் நடந்த பேச்சுவார்த்தைகளிலும் சிறீலங்கா அரசு எங்களுக்கு எந்தவிதமான உரிமைகளையும் தராது என்று விடுதலைப்புலிகளால் கூறப்பட்ட போது 'நீங்கள் உங்கள் பயங்கரவாத நடவடிக்கைகளை கைவிடுங்கள்.அவர்கள் உங்களுக்கான உரிமைகளை தருவார்கள்' என்று இந்த உலகம் உபதேசம் செய்தது.
இன்று விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட நிலையில் விடுதலைப்புலிகளையும் தனது நாட்டில் இருந்த பயங்கரவாத செயற்பாடுகளையும் ஒழித்துவிட்டோம் என்று கூறும் தற்போதைய சூழ்நிலையிலும் சிறீலங்கா அரசு தமிழ் மக்களின் உரிமைகளை வழங்க மறுக்கிறது என்பது நிரூபணமாகிற போது விடுதலைப்புலிகளின் ஆயுதம் தாங்கிப் போராடியதில் உள்ள நியாயத் தன்மையையும் அரை நூற்றுண்டுகளுக்கு மேலாக இலங்கைத் தீவில் சிங்கள அரசாங்கங்களின் நிர்வாகத்தின் கீழ் தமிழ் மக்கள் வாழ முடியாது என்று தமிழர் தரப்பு தொடாச்சியாக சொல்லிவந்ததில் உள்ள உண்மைத் தன்மையையும் இந்த உலகம் உணரும்;.இது இலங்கைத் தீவில் தமிழீழம் என்ற  ஒரு நாட்டை உருவாக்குவது தான் தமிழ்மக்கள் உரிமையுடன் வாழ்வதற்கு உள்ள ஒரே வழி என்ற முடிவுயை நோக்கி இந்த உலகத்தை நகர்த்தும்.
இது வரலாறு எமக்கு உருவாக்கித் தந்துள்ள ஒரு வாய்ப்பு
இந்தவாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி இந்த நகர்வை துரிதப் படுத்துவதென்பது தமிழர் தரப்பின் ராஜதந்திர நகர்வுகளிலே தான் தங்கியுள்ளது

கருத்துகள் இல்லை: