செவ்வாய், 9 ஆகஸ்ட், 2011

சமச்சீர் கல்வித்திட்டம் ஜெயலலிதா திசைதிருப்பப்பட்டாரா?


பெரும் பரபரப்பையும் சலசலப்பையும் ஏற்படுத்திய சமச்சீர் கல்வித் திட்டம் தொடர்பான வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் 10 நாட்களுக்குள் சமச்சீர் கல்வித் திட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட இந்தச் சமச்சீர் கல்வித் திட்டம் முதல் கட்டமாக முதலாம் மற்றும் 6 ம் வகுப்புகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஆண்டு முதல் அனைத்து வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வித் திட்டம் அமலாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் திமுக அரசின் சமச்சீர் கல்வித் திட்டம் தரமானதாக இல்லை என்று கூறிய தமிழக அரசு இத்திட்டத்தை நடப்பாண்டில் அறிமுகப்படுத்துவதில்லை என்று முடிவெடுத்தது. இதுதொடர்பாக சட்டசபையில் சட்டத் திருத்தமும் கொண்டு வந்தது.
இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த உயர்நீதிமன்றம் தமிழக அரசின் சட்டத்திருத்தத்திற்கு தடை விதித்தது. மேலும் நடப்பாண்டிலேயே அனைத்து வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல்படுத்துமாறும் அது உத்தரவிட்டது.
இதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. அதை விசாரித்த உச்சநீதிமன்றம் 1 மற்றும் 6 ஆகிய வகுப்புகளில் சமச்சீர் கல்வித் திட்டம் தொடர வேண்டும். மற்ற வகுப்புகளில் அமல்படுத்துவது குறித்து குழு அமைத்து ஆய்வு செய்ய உத்தரவிட்டது. அதன்படி தமிழக அரசின் தலைமைச் செயலாளர் தேவேந்திர நாத் சாரங்கிதலைமையில் குழு அமைத்து ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வறிக்கையின் அடிப்படையில் விசாரணை நடத்திய சென்னை உயர்நீதிமன்றம்  சமச்சீர் கல்வித் திட்டத்தை நடப்பாண்டில் தொடர வேண்டும் என தீர்ப்பளித்தது.
இதையடுத்து இந்தத்தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு. மேல் முறையீடு செய்தது அந்த வழக்கில் தமிழக அரசுத் தரப்புஇ பெற்றோர்கள் தரப்பு மற்றும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் தரப்பு என முத்தரப்பில் வாதங்கள் நடந்தன. இந்த நிலையில் இன்று 10 நாட்களுக்குள் சமச்சீர் கல்வித் திட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும் தீர்ப்பு வெளியானது.
நம்மவர்கள் பலருக்கு இந்த சமச்சீர் கல்வித்திட்டம் என்றால் என்ன வென்று தெரியாது
சமச்சீர் கல்வி என்பது என்ன? தமிழ்நாட்டில் நடப்பில் பலவிதமான கல்விமுறைகள் அமுலில் இருக்கின்றன. 1. ஸ்டேட் போர்ட் கல்வி முறை , 2. மெட்ரிகுலேசன் கல்வி முறை  3. சி.பி.எஸ்.இ கல்வி முறை , 4. ஆங்கிலோ இண்டியன் கல்வி முறை , 5. ஐ.சி.எஸ்.இ. கல்வி முறை, 6. சர்வதேச பாடசாலைகளுக்கான கல்விமுறை என்று பல கல்வி முறைகளில் பள்ளிக்கூடங்கள் செயல்படுகின்றன. ஒவ்வொன்றிலும் ஒருவிதமான பாடத் திட்டம் கடைபிடிக்கப்படுகிறது. பொதுவாக இந்தியாவின் மற்ற மாநிலங்களில் அந்தந்த மாநிலத்தின் ஸ்டேட் போர்டு கல்வித் திட்டமும், மத்திய அரசின் சி.பி.எஸ்.இ. கல்வி திட்டமும்தான் இருக்கின்றன. தமிழ்நாட்டில் மட்டும்தான் இத்தனை விதவிதமான பாடத்திட்டங்கள் இருக்கின்றன. இதில் எண்ணிக்கையில் அதிகம் இருப்பவை ஸ்டேட் போர்ட் பள்ளிகளாகும் அதற்கு அடுத்ததாக மெட்ரிக் பள்ளிகள் இருக்கின்றன். தமிழ்நாட்டில் 10461 மெட்ரிக் பள்ளிகள் இருக்கின்றன. இவை அனைத்தும் தனியார் முதலாளிகளுக்கு சொந்தமானவை.
அரசுப் பள்ளிக்கூடங்களின் தரமின்மை மற்றும் ஆங்கில வழிக் கல்விக்கு இருக்கும் மோகம் இவற்றை மூலதனமாக வைத்துதான் மெட்ரிக் பள்ளிகளின் வர்த்தகம் நடக்கிறது. எம்.ஜி.ஆர். காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மெட்ரிக் பள்ளிகள் அதன் பிறகு அரசியல்வாதிகளுக்கு பணம் கொழிக்கும் வாத்தகமாக மாறிப்போயிற்று. இப்போது தமிழ்நாட்டில் விஜயகாந்த் முதல் செங்கோட்டையன் வரை, நத்தம் விஸ்வநாதன் முதல் பொன்முடி வரை, வீரபாண்டி ஆறுமுகம் முதல் தம்பிதுரை வரை அனைத்து அறியப்பட்ட அரசியல்வாதிகளுக்கும் பள்ளியோ, கல்லூரியோ இருக்கிறது. பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவர்களுக்கு இதுதான் நிரந்தர வருமானத்துக்கான ஊற்று.
இந்த நிலையில்தான் கடந்த தி.மு.க. ஆட்சியில் 2006-ம் ஆண்டு சமச்சீர்க் கல்வி குறித்து ஆராய்வதற்காக முத்துக்குமரன் கெமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கெமிட்டி சமமான பாடத் திட்டம், தனியார் பள்ளிகளுக்கு இணையான உட் கட்டமைப்பு வசதிகள், முறையான கட்டடங்கள், மாணவர் விகிதத்துக்கு ஏற்ப ஆசிரியர்களின் எண்ணிக்கையை முறைப்படுத்துவது என்பன உள்ளிட்ட 108 பரிந்துரைகளை முன் வைத்தது. இதில் நான்கு பரிந்துரைகளை மட்டும் உடனடியாக ஏற்றுக்கொண்ட தி.மு.க. அரசு, அதன் துவக்கமாக சமமான பாடத் திட்டத்தை அமுல்படுத்துவதற்கான நடவடிக்கையை எடுத்தது. இதன்படி ஸ்டேட் போர்டு, மெட்ரிகுலேஷன் என்ற வித்தியாசம் இல்லாமல் அனைத்து பள்ளிகளிலும் ஒரே பாடத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது
இதற்காக கல்வியாளர்களையும், எழுத்தாளர்களையும் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டு அவர்கள் சமச்சீர் கல்விக்கான பாடத்திட்டத்தை உருவாக்கினார்கள். 200 கோடி ரூபாய் செலவில் புத்தகங்களும் அச்சடிக்கப்பட்டுவிட்டன. கல்வித்துறையின் இணையத்தளத்தில் இந்தப் புத்தகங்களை இலவசமாக மின்னிறக்கம் செய்து கொள்ளவும் வசதி செய்யப்பட்டது. இந்த நிலையில்தான் தேர்தலில் ஜெயலலிதா வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையாக சமச்சீர் கல்விக்கு எதிரான நபர்கள் அதற்கு  ஆப்படிக்க வைத்தனர்.
ஒரே மாதிரி கல்வி எல்லாம் சரிப்படாது. மக்களுக்கு வேறு தெரிவுகள் வேண்டும். எந்தக் கல்விமுறையில் தங்கள் பிள்ளைகளை படிக்க வைப்பது என்பதைத் தேர்ந்தெடுக்க பெற்றோருக்கு உரிமை உண்டு' என்று இதை ஒரு மனித உரிமை போலவே சிலர் பேசுகின்ரனர். கல்வி என்பது கத்தரிக்காய் வர்த்தகம் அல்ல. அது அடிப்படை உரிமை. அது அனைவருக்கும் சமமாகத்தான் வழங்கப்பட வேண்டும். திமுக அரசு கொண்டு வந்த சமச்சீர் பாடத் திட்டத்தில் சில குறைகள் அல்ல... ஏராளமான குறைகளே இருக்கலாம். ஆனால் அவற்றை கலைந்துவிட்டு சமச்சீர் கல்வியை கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, அதையே ஒரு காரணமாகக் காட்டி திட்டத்தையே நிறுத்தக்கூடாது என்பது பல கல்வியாளர்களின் கருத்து. சமூக நீதியை விரும்பும் சக்திகளின் கருத்தும் இதுவாகத்தான் இருக்க முடியும்.
இந்த சர்ச்சசைகளுக்குகெல்லாம்  இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்று முற்றுப் புள்ளி வைத்துவிட்டது

4 கருத்துகள்:

ramalingam சொன்னது…

missing the obvious என்பார்கள். மிகத் தெளிவான, சாதாரணமான உண்மையைக் கூட முதலமைச்சரை சுற்றியிருப்பவர்கள், தங்கள் சுய லாபத்துக்காக குழப்பி விடுகிறார்களோ என்று தோன்றுகிறது.

சிவா சின்னப்பொடி சொன்னது…

உங்களது வருகைக்கு நன்றி நண்பரே ! நீங்கள் சொல்வது நூறு வீதம் உண்மை

அருள் சொன்னது…

சமச்சீர் கல்வி: முதல்வரை ஏமாற்றியது பத்திரிகைகளா? பார்ப்பனக் கூட்டமா?

http://arulgreen.blogspot.com/2011/08/blog-post.html

சிவா சின்னப்பொடி சொன்னது…

உங்களது வருகைக்கு நன்றி அருள் ! அதுதான் உண்மை கல்வியில் கூட சமத்துவம் இருக்க் கூடாது என்று அந்தக் கூட்டம் நினைக்கிறது