திங்கள், 15 ஆகஸ்ட், 2011

ஒரு ஒடுக்கப்பட்ட தேசத்தில் ஆன்மா இன்று வாய் திறக்கிறது


இன்று இந்தியாவின் 64 வது சுதந்திர தினம். இந்தச் சுதந்திரம் ஒன்றும் இந்தியாவுக்கு சும்மா கிடைத்துவிடவில்லை.மகாத்மா காந்தியின் தலைமையிலான இந்திய தேசியக் காங்கிரசிலும்  சுபாஸ் சந்திரபோஸ் தலைமையிலான இந்திய தேசிய இராணுவத்திலும் இணைந்து கோடிக்கணக்கான மக்கள் செய்த தியாகத்தின் பயனாக இந்தச் சுதந்திரம் கிடைத்தது.
இன்று இந்த சுதந்திர இந்தியா எங்கே செல்கிறது? ஏப்படி இருக்கிறது? ஏன்ற கேள்விகள் ஒரு புறம் இருந்தாலும் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த அந்த நாள் எப்படி இருந்தது என்பதை இந்தியாவின் பிரபல ஊடகவிலாளர் ஏ.கே. கான் இப்படி வர்ணிக்கிறார்

இரண்டாம் உலகப் போர் முடிவடைந்து, இங்கிலாந்து சின்னாபின்னாவாகிக் கிடந்த நேரம். இனியும் நம்மால் உலகை ஆள முடியாது என்ற முடிவுக்கு இங்கிலாந்து வந்த நேரம், இந்தியாவில் சுதந்திரப் போராட்டம் உச்சத்தை அடைந்திருந்தது.

1948ம் ஆண்டுக்கு முன்பே இந்தியாவுக்கு சுதந்திரம் தந்துவிடுவது என்ற முடிவுக்கு வந்தது இங்கிலாந்து. ஆனால், நாட்டை இரண்டாகப் பிரிப்பது என்ற அந் நாட்டின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய அந்தப் பொழுதில், திட்டமிட்டதைவிட 7 மாதங்கள் முன்னதாக, அதாவது 1947 ஓகஸ்ட் 15ம் திகதியே, இந்தியாவுக்கு சுதந்திரம் தந்துவிடும் முடிவுக்கு வந்தார் கடைசி வைஸ்ராயான மௌன்ட் பேட்டன்.
அதற்குள் நாட்டை அமைதியான முறையில் பிரிக்கவோ, இரு அரசாங்கங்களை உருவாக்கவோ, இரு ராணுவங்களை உருவாக்கவோ, மக்களை அமைதியாக இடம் பெயரச் செய்யவோ எந்தத் திட்டமும் இங்கிலாந்திடமும் இல்லை, இந்தியாவிடமும் இல்லை, புதிதாக உருவாக இருந்த பாகிஸ்தானிடமும் இல்லை.
ஆனால், கடும் எதிர்ப்பையும் மீறி நாடு பிளவுபட, பஞ்சாபில் எல்லைகள் திருத்தி அமைக்கப்பட்டு ஒரு பகுதி பாகிஸ்தானுக்குப் போய்விட மேற்கு வங்கத்திலும் எல்லைகள் திருத்தப்பட்டு ஒரு பகுதி கிழக்கு பாகிஸ்தானுக்கு அதாவது இப்போதைய வங்கதேசத்துக்கு போய்விட அங்கெல்லாம் வன்முறை தாண்டவமாடி லட்சக்கணக்கான மக்கள் உயிர்களை இழந்து கொண்டிருக்க, 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் திகதி நள்ளிரவில் இந்தியாவுக்கு சுதந்திரத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது இங்கிலாந்து.
அந்த கடும் இரவு நேரத்தில் சுதந்திரம் வந்த மகிழ்ச்சியோடும்.. லட்சக்கணக்கான மக்கள் எல்லைப் பகுதியில் உயிர்களை இழந்து கொண்டிருந்த சோகத்தோடும், மறுநாள் டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார் முதல் தலைமை அமைச்சரான ஜவகர்லால் நேரு..
ஆனால், அதே நாள் இரவில் அரசியல் நிர்ணய சபையில் அவர் ஆற்றிய உரை.. காலத்தால் அழியாதது.
ஓகஸ்ட் 15 பிறந்து கொண்டிருந்த அந்த நள்ளிரவு 12 மணிக்கு 'விதியோடு நாம் செய்த ஒப்பந்தம்' என்ற அந்த முதல் சுதந்திர தின உரையை இந்திய வானொலியில் கோடிக்கணக்கான மக்கள் சுதந்திரம் கிடைத்த குதூகலத்துடனும், அடுத்தது என்ன என்ற கேள்விகளோடும் கேட்டனர்.
இந்த நடு நிசி நேரத்தில், உலகம் உறங்கிக் கொண்டிருக்கும் பொழுதில், இந்தியா சுதந்திரத்துடன் விழித்துக் கொண்டிருக்கிறது என்றார் நேரு.
இந்த ஒரு கணம், வரலாற்றில் மிக அரிதாகவே வரும். ஒரு வரலாறு முடிவுக்கு வந்து ஒரு புதிய வரலாறு உருவாகும் காலகட்டத்தில் நாம் நின்று கொண்டிருக்கிறோம், ஒரு ஒடுக்கப்பட்ட தேசத்தில் ஆன்மா இன்று வாய் திறக்கிறது.
இந்த புனிதமான நேரத்தில், நாம் இந்திய மக்களுக்கும், மனித குலத்துக்கும் சேவை செய்ய நம்மை அர்ப்பணித்துக் கொள்வோம். வரலாற்றின் தொடக்கத்திலிருந்தே இந்தியாவின் வரலாற்றுப் பயணத்தில் பல வெற்றிகள், பல தோல்விகள். நல்லதோ கெட்டதோ எது நடந்திருந்தாலும் இந்தியா தனது தாகத்தைத் தொலைத்ததில்லை. இன்று ஒரு துரதிர்ஷ்டத்திலிருந்து மீண்டுள்ள இந்த தேசம், தன்னை மீண்டும் அடையாளப்படுத்திக் கொள்ளும் காலத்தில் அடி எடுத்து வைக்கிறது.
நாம் சுதந்திரம் பெற்றுவிட்ட சாதனையை இன்று கொண்டாடுகிறோம். ஆனால், இது முதல் படி தான். எதிர்காலம் நமக்கு கொடுக்க இருக்கும் வாய்ப்புக்களை, சவால்களை சந்திக்க நாம் தயாராக வேண்டும். நம்மிடம் அதற்கான தைரியமும் புத்திசாலித்தனமும் இருக்கிறதா...? என்ற கேள்வியோடு தனது உரையை முடித்தார் நேரு. என்கிறார் கான்

1947ம் ஆண்டு ஓகஸ்ட்மாதம் 15 திகதி நேரு  எழுப்பிய இந்தக் கேள்விக்கான விடையை இந்தியா இன்னும் கண்டறியவில்லை என்பதே பொதுவான அபிப்பிராயமாகும்.
இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்ததை ஒரு ஒடுக்கப்பட்ட தேசத்தில் ஆன்மா இன்று வாய் திறக்கிறதுஎன்றார் நேரு.
ஆனால் இன்றைய இந்தியா ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் ஆன்மாக்களை அழிக்க முயல்வதும் அவ்வாறான முயற்சிகளுககு தணை போவதும் காலத்தின் கோலமாகும்.
00000

கருத்துகள் இல்லை: