செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

மூவரையும் காக்க தமிழ் ஆர்வலர்கள் நடத்திய போராட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றி

சென்னை: 21 வருடங்களாக சிறையில் வாடி வரும் நிலையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கு இன்னும் முடிவுக்கு வராத நிலையில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரை தூக்கிலிடுவது நியாயமில்லை என்ற வாதத்தை முன்னிறுத்தி பல்வேறு அமைப்புகள், கட்சிகள், தமிழ் ஆர்வலர்கள் நடத்திய தீவிரப் போராட்டத்திற்கு கிடைத்துள்ள முதல் வெற்றியாக இன்றைய உயர்நீதிமன்ற உத்தரவும், முதல்வர் ஜெயலலிதாவின் திடீர் தீர்மானத்திற்கும் காரணம் என்று பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் சமீப காலத்தில் இதுபோன்ற ஒரு பரபரப்பான சூழலை மக்கள் பார்த்ததில்லை என்று கூறும் அளவுக்கு தமிழ் ஆர்வலர்கள் மிகப் பெரிய அளவில் பொங்கி எழுந்து நடத்திய போராட்டம் தமிழ் மக்களுக்கு மட்டுமல்லாமல் அத்தனை பேரையும் உணர்ச்சிப் பெருக்கில் தள்ளி விட்டது மறுக்க முடியாத உண்மை.

அந்த அளவுக்கு தமிழகம் முழுவதும் மிகப் பெரிய அளவில் போராட்டங்கள் தீவிரமடைந்து விட்டன. அதிலும் சென்னையில் பெண் வக்கீல்கள் கயல் என்கிற அங்கயற்கண்ணி, சுஜாதா மற்றும் வடிவாம்பாள் ஆகியோர் தொடங்கி, நடத்திய காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம்தான் அனைவரையும் உசுப்பி விட்டு விட்டது.

இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பல்வேறு மட்டங்களில் போராட்டங்கள் வெடித்தன. மாணவர்கள், இளைஞர் அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள், வக்கீல்கள், அரசியல் அமைப்புகள் உள்பட பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் குதித்தனர்.

கோவையில் நேற்று மாணவர்கள் நடத்திய மிகப் பெரிய போராட்டம் கோவை ரயில் நிலையத்தை ஸ்தம்பிக்க வைத்தது. பல மாவட்டங்களில் வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பை மேற்கொண்டதால் கோர்ட் பணிகள் முடங்கின. பல பகுகதிளில் மறியல்கள் உள்ளிட்டவற்றால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு செயலிழந்தது.

தலைநகர் சென்னையிலும் போராட்டங்கள் படு சூடாக நடந்து வந்தன. எப்படி அன்னா ஹஸாரே போராட்டத்தால் வட இந்தியாவில் பரபரப்பான சூழல் நிலவியதோ அதேபோன்றதொரு பரபரப்பும், பதட்டமும் தமிழகம் முழுவதும் காணப்பட்டது.

இந்தப் போராட்டங்களுக்கு பொதுமக்கள் மத்தியிலும் ஆதரவு அலை எழும்பியதன் காரணமாகவே, நேற்று என்னால் காப்பாற்ற இயலாத நிலை இருப்பதாக கூறிய முதல்வர் ஜெயலலிதா, இன்று ஆயுள் தண்டனையாக குறைக்குமாறு கோரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டிய நிலை ஏற்பட்டதாக கருதப்படுகிறது.

மொத்தத்தில் மூவரின் உயிரைக் காக்க நடந்து வரும் போராட்டத்தில் இது முதல் வெற்றியாக தமிழ் ஆர்வலர்கள், மனித உரிமை அமைப்பினர், வக்கீல்கள் கூறியுள்ளனர்.

கருத்துகள் இல்லை: