புதன், 28 செப்டம்பர், 2011

மெல்லத் தமிழ் இனிச் சாகும் 01

01நான் முதலிலேயே  சொல்லிவிடுகிறேன் இது ஒரு இனவாதப்பதிவல்ல. ஆனால் உலகத் தமிழினத்தில் இருப்பும் அடையாளமும் தொடர்பாக என்னுள் எழுந்த ஆதங்கத்தின் விளைவே இந்தப் பதிவாகும்.
'தமிழன் இல்லாத நாடுமில்லை தமிழனுக்கு என்றொரு நாடும் இல்லை.'
இதை நான் எனது தாத்தா காலத்தில் இருந்தே கேட்டுவருகிறேன். சில வேளை என்னுடைய தாத்தாவுக்கு தாத்தாவும் அதாவது எனது கொப்பாட்டன் முப்பாட்டனும் . கூட இதை சொல்லியிருக்கலாம்
ஆனால் இன்றைக்கும் இதை நாங்கள் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறோம்.சில வேளை என்னுடைய பேரப்பிள்ளைகளும் இதை சொல்லக் கூடும்.
ஏனென்றால் நிலமை அப்படித்தான் இருக்கிறது.
நாங்கள் யார்? அதாவது தமிழர்கள் என்றால் யார்? ஏங்களுடைய அடையாளம் என்ன? எங்களுடைய மெய்யியில் என்ன? எங்களுடைய வரலாறு என்ன?எங்களுடைய பண்பாடு என்ன? எங்களுடைய கலாச்சாரம் என்ன? எங்களுடைய அரசுகள் எங்களுக்கான தனித்துவமான அடையாளங்களைக் கொண்ட நவீனத்துவ அரசுகளாக வளரமுடியாமல் போனது ஏன்?தமிழ் சமூகத்தின் மூலதனத் திரட்சி அதை ஒரு அரசுடைய சமூகமாக வளர்த்தெடுப்பதற்கு தடையாக இருந்தது எது? அல்லது தமிழ் சமூகத்தில் மூலதனத் திரட்சி ஒன்று இருக்கவில்லையா?
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பொதுவான விடையிருக்கிறதா? அப்படி இருந்தால் இந்தக் கேள்விகளுக்கான விடைகளைக் காணும்; விடயத்தில் நாங்கள் ஒன்று பட்டு நின்று ஒரு பொதுக் கருத்தை எட்டியிருக்கிறோமா?
உதாரணமாக நாங்கள் யார்? என்ற ஒரு பொதுவான கேள்வியை எழுப்பி அதற்கு 'நாங்கள் தமிழர்கள்' என்று விடை சொல்வதானால் இந்த ஒருமை விடைக்குள் நாங்கள் ஒன்றுபட்டு நிற்கிறோமா?. அதே போல தமிழர்கள் என்ற இந்த அடையாளம்  உலகம் முழுதும் பரவி வாழும் தமிழ் இனத்தை ஒன்றுபடுத்தியிருக்கிறதா?
தமிழகத்தை எடுத்துக் கொண்டால் முதலியார் பிள்ளை கவுண்டர் தேவர் தலித் என்பவை தானே அங்குள்ள தமிழ் பேசும் மக்களுடைய முதன்மையான அடையாளமாக இருக்கிறது.
தமிழகத்திலே வாழக் கூடிய தமிழர்களுடைய வரலாறு மிகத் தொன்மையானது. ஆரியர்களுடைய இந்திய வருகைக்கு முற்பட்டது.இது எல்லோருக்கும் தெரியும். பல உள்நாட்டு வெளிநாட்டு வரலாற்று, ஆய்வாளர்கள் இது பற்றி விரிவாக ஆய்வு செய்து ஆதாரபூர்வமாக இதை நிறுவியிருக்கிறார்கள்.
ஆனால் வரலாற்றுப் புத்தகங்களில் ஆரியர்களின் இந்திய வருகைக்கு பின்னரான அவர்களது வரலாற்றின் நீட்சியாகத்தானே தமிழர்களுடைய வரலாறு எழுதப்பட்டுள்ளது.கிழக்கு ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியப் பிராந்தியங்களில் இருந்து தெற்கு நோக்கி நகர்ந்து இந்தியாவுக்கு வந்த ஆரியர்களே தமிழர்களுக்கு நாகரிகத்தை போதித்ததாக தானே வரலாறு எழுதப்பட்டிருக்கிறது
இன்றைய கேரளா என்பது பழைய சேரநாடு. தமிழ் பேசும் மக்கள் வாழ்ந்த வரலாற்றைக் கொண்ட பிரதேசம்.தமிழ் மொழியோடு சமஸ்கிரதம் கலந்து மலையாள மொழி உருவாகியது. தமிழர்களுடைய சேரநாடு மலையாள நாடாக மாறியது.இது தான் உண்மையான வரலாறு
ஆனால் மலையாள ஆளும் வர்க்கம் ; சமஸ்கிரதத்தோடு தமிழ் கலந்து தான் மலையாளம் உருவானதாக சொல்லிக் கொள்கிறதே தவிர மலையாள மொழி பேசுபர்களுடைய முன்னோர்கள் தமிழர்கள் என்பதை முதன்மைப்படுத்துவதில்லை.தமிழர்கள் என்றால் 'பாண்டி' என்று இழிசொற் குறியீட்டை பயன்படுத்தி அழைக்கும் வழக்கம் தானே அங்கு இன்றுவரை நிலவுகிறது.
'தமிழர்கள் கல்தோன்றி மண்தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி' என்று மேடைகளிலே வீர வசனம் பேசுவதிலும் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று கவிதை பாடி மகிழ்வதிலும் தழிழை வைத்து அரசியல் நடத்துவதிலும் மகாநாடுகள் நடத்துவதிலும் காட்டிய அக்கறையில் நூற்றில் ஒரு பங்கு கூட தமிழ் மொழியினதும் தமிழ் சமூகத்தினதும் இருப்பை தொன்மையை வரலாற்றை திரிபுகளில் இருந்தும் ஆக்கிரமிப்புக்களில் இருந்தும் மீட்டு புதிய உலக ஒழுங்குக்கு தாக்குப்பிடிக்கக் கூடிய வகையில் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்துவதற்கு செலவிடப்படவில்லை.
பாப்புலிசம் எனப்படுகின்ற உணர்வுத் தூண்டல் அரசியலுக்குள் மக்களைக் கட்டுப்படுத்திவைத்து வாக்குச் சீட்டு அரசிலுக்காக இலவசங்களுக்காக  கையேந்தி நிற்கும் நிலைக்கும்  கட்சி சாதிச் சண்டைகளுக்காக வேல்கம்பு வீச்சருவாளோடு அலையும் நிலைக்கும் தானே மக்கள் பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்;
ஈழத்து நிலை இதை விட மோசம். ஒரு காலத்தில் அங்கிருந்த தமிழர்களின் அடையாளம் யாழ்ப்பாணத்தான் வன்னியான் மட்டக்களப்பான் வடக்கத்தையான் என்று இருந்தது.அதை விட யாழ்ப்பாணத்தார்; என்றால் அதற்குள் வெள்ளாளர் கோவியர் கரையார் நளவர் பள்ளர் பறையர் அம்பட்டர் வண்ணார் என்று இருந்தது.
30 வருட தமிழ் தேசிய விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் அதை மாற்றி ஈழத்தழினத்தை ஒன்று பட்ட தமிழ் தேசிய அடையாளத்துக்குள் கொண்டு வர முயன்றது. ஆனால் அங்கேயும் கூட ஒரு பக்கம் வீரம் செறிந்த போராட்டம் என்றால் மறுபக்கம் வெட்கம் கெட்ட பிழைப்பு வாதம்.ஒரு பக்கம் எந்தவொரு அளவு கோலாலும் அளவிட முடியாத அர்ப்பணிப்பும் தியாகமும் என்றால் மறுபக்கம் கேவலமான காட்டிக் கொடுப்பும் அருவருக்கத்தக்க சந்தர்ப்பவாதமும்.
ஒரு கணனியும் அதில் தமிழ் ஆங்கில எழுத்துருக்களும் இருந்துவிட்டால் ஈழத்தில் புரட்சியை நடத்திவிடலாம் என்று பம்மாத்துவிட்ட கூட்டம் ஒரு பக்கம் என்றால்  ஈழத் தமிழத்தை வேரறுப்பதை  தனது மூலோபாயமாகக் கொண்டிருந்த சிங்களப் பேரினவாதத்தை விட விடுதலைப்புலிகளே தங்கள் பிரதான எதிரிகள் என்று சொல்லிக் கொண்டு ஈழத்தமிழர்களுடைய விடுதலைப் போராட்டத்தில் உள்ள நியாயத் தன்மைக்கு களங்கம் கற்பிக்கும் சிங்களப் பேரினவாதிகளின் முயற்சிகளுக்கு துணைபோன  களவாணிக் கூட்டம் மறுபக்கம்.
சிறீலங்கா அரசின் தமிழினப்படுகொலைகளையும் தமிழின அழிப்பையும் எதிர்த்து ஒரு சிறு துரும்பைக் கூட அசைக்காமல் அரசியல் ரீதியான ஒரு சிறு எதிர்ப்பைக் கூடக்காட்டாமல் விடுதலைப்புலி எதிர்ப்பை மட்டுமே மூலதனமாகக் கொண்டு அந்நிய உளவு நிறுவனங்களின் தயவில் குப்பை கொட்டிவிட்டு முள்ளிவாய்க்காலின் பின்னரான இன்றைய காலகட்டத்தில் ஈழத்தமிழ் மக்களின் இரட்சகர்கள் தாங்களே என்று கொஞ்சங்கூட கூச்சமில்லாமல் களமிறங்கும் இரட்சகர்கள்  கூட்டமும் ஒரு புறம் என்றால்
30 வருட வீரம் செறிந்த விடுதலைப் போராட்டம் எங்களால் எங்களால் மட்டும் தான் நடந்தது. நாங்கள் தான், நாங்கள் மட்டும் தான் விடுதலைப் போராட்டத்தின் தூண்கள் மற்றவர்கள் எல்லாம் தூசுகள் என்றும் புலத்தில் இருந்து கொண்டு நா கூசாமல் பொய் செல்லும் தேசிய வியாபாரிகள் (தாயக விடுதலையை உண்மையாக நேசித்து அதற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய செயற்பாட்டாளர்களையோ  பங்களிப்புச் செய்த மக்களையோ இந்தக் கூட்டத்துக்குள்; நான் அடக்கவில்லை) மறுபக்கம்.
போரிலே அனைத்தையும் இழந்தவன் துரோகி.போரை வைத்த பிழைப்பு நடத்தியவன் தியாகி.என்ன கொடுமை இது?
எப்படித் தமிழ் இனி வாழும்?
'நெஞ்சு பொறுக்குதில்லையே -இந்த
நிலைகெட்ட மனிதரை நினைக்கையிலே'
(தொடரும்)

2 கருத்துகள்:

இறைகற்பனைஇலான் சொன்னது…

அண்பரே ஏதோ தமிழ் ஆய்வு முனைப்புடன் செய்தி சொல்லவருகிறீர்கள் என்று எண்ணினேன். இந்த தமிழினத்தின் தாழ்மைக்குக் காரணம் இன்று எல்லாத்தமிழரும் ஆரியக் கலாச்சாரத்தில் வாழ்ந்து வருவதுதான். அதனின்று வெளிவர யாரும் முனைவதில்லை.முற்றிவிட்ட இந்த இழ்விலிருந்து வெளியேர உள்ளத்தில் உரம் இல்லை . கோழையாக இருக்கிறார்கள். கோழைத்தனம் தன்ந்ம்பிக்கை இல்லாமையால் வருகிறது.கடவுள் மருப்பாளரும் கூட தம் பெண்டுகளின் நெற்றியில் பொட்டுகளை வைத்துக்கொண்டு இந்து நாத்திகக்குடும்பம் என்ற அளவில்தான் இருக்கிறார்கள். பொட்டு இல்லை என்றால் கிருத்துவன் ,இசுலாமியன், சிங்களவன் என் ஆகிவிடுமோ என்று அங்ஜுகிறார்கள். எதை எதையோ சொன்ன துரு வள்ளுவன் பொட்டுவை,கோயிலில் போசைச்ய்,தேங்காய் உடை என்று சொல்லவில்லையே . ஆரியக் கலாச்சாரத்திலிருந்து மாரினால் ஒழிய தமிழன் தமிழனாக வாழமுடியாது.

சிவா சின்னப்பொடி சொன்னது…

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே.