வியாழன், 15 செப்டம்பர், 2011

விடுதலைப் புலிகள் மீதான 'பயங்கரவாத' முத்திரை நீக்கப்படுமா? - நெதர்லாந்தில் விசாரணை ஆரம்பம்

ஹேக்கில் மேற்கொள்ளப்பட்ட வழக்கு விசாரணையானது புலிகள் மீதான தடை நீக்கம் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட நெதர்லாந்துத் தமிழர்களின் விவகாரத்தில் நெகிழ்வுத்தன்மையை ஏற்படுத்தும் என நம்பப்படுகின்றது.

இவ்வாறு உலகளாவிய ஒலிபரப்பு சேவையைக் கொண்ட நெதர்லாந்து வானொலியின்  [Radio Netherlands Worldwide - RNW] இணையத்தளத்தில் Richard Walker எழுதியுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். அதனை 'புதினப்பலகை'க்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

தமிழீழ விடுதலைப் புலிகள் அல்லது பிரிவினைவாத தமிழ்ப் புலிகளுக்கு ஆதரவு வழங்கியவர்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஐந்து சிறிலங்காத் தமிழர்கள் விசாரணைக்காக ஹேக்கில் முன்னிறுத்தப்படவுள்ளனர்.

சிறிலங்காவில் 30 ஆண்டுகளாக இடம்கெற்ற உள்நாட்டுப் போரில் பங்குபற்றிய தரப்புக்களில் சரியானவர் யார் பிழையானவர் யார் என்பது தொடர்பாகத் தீர்வை எட்டுவதற்கு இவ்வழக்கு விசாரணையின் சாத்தியமான தீர்ப்புக்கள் பதிலாக அமையும்.

சிறிலங்காவின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் கடந்த முப்பது ஆண்டுகளாகத் தொடரப்பட்ட குருதி தோய்ந்த யுத்தத்தின் விளைவாக, புலம்பெயர்ந்து உலகெங்கும் பரவி வாழும் தமிழ் மக்கள் தமது தலைமைக்கு ஆதரவாகப் பலவிதமான பங்களிப்புக்களை ஆற்றிவந்துள்ளனர்.

குறிப்பாக இப்புலம்பெயர் வாழ் தமிழ் மக்கள் தமிழ்த் தலைமைக்கு ஆதரவாக நிதி சேகரிப்புப் பணிகளில் அதிகம் ஈடுபட்டிருந்தனர். இவ்வாறு புலம்பெயர் வாழ் தமிழ் உறவுகளால் சேகரிக்கப்பட்ட மில்லியன் கணக்கான டொலர்களின் உதவியுடன் சிறிலங்கா அரசின் இராணுவத்தை எதிர்த்து நிற்பதற்கான ஆயுதங்களைப் புலிகள் கொள்வனவு செய்தனர்.

நெதர்லாந்தில் இடம்பெற்ற தமிழர்களின் கலந்துரையாடல்களை அந்நாட்டின் காவற்துறைப் புலனாய்வாளர்களை உள்ளடக்கிய குழுவொன்று கண்காணித்தது.

இவ்வாறு இப்புலனாய்வுக் குழுவால் நெதர்லாந்துத் தமிழர்களின் புலி ஆதரவுச் செயற்பாட்டை எதிர்த்து Operation Koninck என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையில், சிறிலங்காவில் தமிழீழம் என்ற பெயரில் தமிழ் மக்களுக்கான தனிநாடு கோரிப் போராடிய விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட 'இறுதி யுத்தத்திற்கு' புலம்பெயர் தமிழ் மக்கள் எவ்வாறு நிதியைத் திரட்டிக் கொடுத்தார்கள் என்பது தொடர்பாக விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழர்களின் தனிநாட்டுக் கோரிக்கையானது விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணத்திற்குப் பின்னரும், 2009ல் முடிவிற்கு வந்த யுத்தத்தை அடுத்தும் வெறும் கனவாகிப் போனது.

நெதர்லாந்துக் காவற்துறையால் Operation Koninck என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட இந்நடவடிக்கை மூலம் சில நெதர்லாந்துத் தமிழர்கள் கைதுசெய்யப்பட்டனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் ஐந்து தமிழர்கள் மீது சிறப்பு போர்க் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு ஹேக்கில் விசாரணைக்கு முன்நிறுத்தப்படவுள்ளனர்.

தற்போது ஹேக்கில் முன்னிறுத்தப்படவுள்ள நெதர்லாந்துத் தமிழர்கள், பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபட்ட குற்றவியல் அமைப்பொன்றின் உறுப்பினர்கள் என்றும் இந்நோக்கத்திற்காக நிதி சேகரிப்பில் ஈடுபட்டிருந்தனர் எனவும் இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இவர்கள் முதலில் விசாரணைக்காக முன்நிறுத்தப்பட்ட நீதிமன்றானது இவர்களைப் பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர்கள் எனக் குற்றம் சாட்டியுள்ளது.

இந்நீதிமன்றானது அனைத்துலக குற்றவியல் நீதிமன்று போன்று அனைத்துலக அமைப்பாக இல்லாவிடினும் கூட,நெதர்லாந்து நாட்டின் குற்றவியல் நீதிமன்றாகச் செயற்படுவதுடன், இங்கு பணிபுரியும் நீதிபதிகள் நெதர்லாந்தின் 'பொதுவான' நீதிமுறைமைகளின் கீழேயே செயற்பட்டுவருகின்றனர்.

இதில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான 46 வயதுடைய ஆர்.சிறிறங்கம் என்பவர் ஹேக்கைச் சேர்ந்தவராவார். இருபது ஆண்டுகளுக்கு முன்னர் நெதர்லாந்திற்கு தப்பியோடி வந்த இவர் தமிழ்ப் புலிகளின் நெதர்லாந்துப் பிரிவின் தலைவராகாச் செயற்பட்டவர் என நம்பப்படுகின்றது.

இவரின் வழக்குரைஞரும் சட்ட ஆலோசகருமான விக்ரர் கோப்பே [Victor Koppe] என்பவர், ஐரோப்பிய ஒன்றியத்தால் தடைசெய்யப்பட்டுள்ள பயங்கரவாத அமைப்புக்களின் பெயர்ப் பட்டியலிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயர் நீக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய மனுவொன்றை அண்மையில் ஐரோப்பிய நீதிமன்றில் சமர்ப்பித்திருந்தார்.

ஹேக்கில் மேற்கொள்ளப்பட்ட வழக்கு விசாரணையானது புலிகள் மீதான தடை நீக்கம் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட நெதர்லாந்துத் தமிழர்களின் விவகாரத்தில் நெகிழ்வுத்தன்மையை ஏற்படுத்தும் என நம்பப்படுகின்றது.

தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதை நிரூபிப்பது மிகவும் கடினமானதாகும். இந்த வழக்கு விசாரணையில் விக்ரர் கோப்பேக்கு உதவியாகச் செயற்படும் சட்ட ஆலோசகரான ரமரா புறூமா [Tamara Buruma]  என்பவர் "நெதர்லாந்துத் தமிழர் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட முதற் கட்ட விசாரணையில் நிதி சேகரித்தது தொடர்பாக அதிகம் பேசப்படவில்லை. ஆனால் சிறிலங்காவில் புலிகள் உண்மையில் என்ன செய்தார்கள் என்பது தொடர்பாகவே அதிகம் விசாரிக்கப்பட்டது.

இதிலிருந்து கைதுசெய்யப்பட்ட நெதர்லாந்துத் தமிழர்கள் புலிகளுக்கு நிதி வழங்கினார்களா அல்லது இல்லையா என்பது பிரதான விசாரணையாக இருக்கவில்லை. மாறாக தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களா அல்லது இவர்கள் சுதந்திரப் போராளிகளா என்பதே விசாரணையின் பிரதான கேள்வியாக அமைந்துள்ளது" எனத் தெரிவித்தார்.

நீதிமன்றானது புலிகள் என்ன செய்தார்கள், நெதர்லாந்து குற்றவியல் சட்டத்தின் கீழ் புலிகள் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டார்களா, இவற்றைச் சாட்சிப்படுத்துவதற்கு அரசியல் ரீதியாக ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாதப் பட்டியல் போதுமானதா என்பது தொடர்பாக சரியான வரையறைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

நெதர்லாந்து காவற்துறையினரின் அறிக்கையின் பிரகாரம், நெதர்லாந்தில் வாழும் ஒவ்வொரு தமிழ்க் குடும்பங்களும் ஆண்டிற்கு €2000 நிதியை சிறிலங்காவின் தமிழ்ப் பகுதிகளுக்கு மானியமாக வழங்க வேண்டும் என எதிர்பார்க்கப்பட்டனர்.

இவர்கள் நிதி வழங்க மறுத்தால் சிறிலங்காவில் வாழும் இவர்களது உறவுகள் பின்விளைவுகளைச் சந்திக்க வேண்டும் என அச்சுறுத்தப்பட்டதாகவும், நெதர்லாந்துக் காவற்துறையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தம்மால் சேகரிக்கப்பட்ட நிதியானது மனிதாபிமான நோக்கத்திற்காக வழங்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் வாதிடுகின்றனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் சிறிலங்காவின் வடக்கு கிழக்குப் பகுதிகளில் நிழல் அரசாங்கத்தை உருவாக்கி பல ஆண்டுகளாக நிர்வாகத்தை நடைமுறைப்படுத்தியதிலிருந்து, இவ்வமைப்பானது சுகாதார வசதிகள் தொடக்கம் இராணுவப் பயிற்சி மற்றும் குண்டுத் தயாரிப்புப் போன்ற பல்வேறு விடயங்களுக்கும் நிதியை செலவிட்டிருந்தது. இதில் எந்த நிதி எதற்காகச் செலவிடப்பட்டது என்பதை பிரித்துப் பார்க்கவேண்டும்.

புலம்பெயர் நாடுகளில் சேர்க்கப்படும் நிதியானது புலிகள் அமைப்பிடம் நேரடியாக வழங்கப்பட்டிருந்தாலும் கூட, அவர்கள் பயங்கரவாதிகள் அல்லர், புலிகள் அமைப்பானது ஒரு விடுதலை அமைப்பாகும் என பிரதிவாதிகள் தெரிவிக்கின்றனர்.

தமிழ்ப்புலிகள் எவ்வாறு செயற்பட்டார்கள் என்பதையும் அவர்கள் எவ்வாறு சிறிலங்காவில் இடம்பெற்ற இரத்தம் தோய்ந்த போருக்கு மையப்பொருளாக இருந்தார்கள் என்பதை விவரிக்கமுடியாது.

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தின் பார்வையில், விடுதலைப் புலிகள் தற்கொலைக் குண்டுத்தாக்குதல் தொடக்கம் சிறுவர் ஆட்சேர்ப்பு வரை பல்வேறு சட்டரீதியற்ற செயற்பாடுகளின் மூலம் பெரும்பான்மைச் சிங்கள மக்களுக்கு எதிராக இரக்கமற்ற பயங்கரவாதச் செயற்பாடுகளைக் கட்டவிழ்த்துவிட்டவர்கள் எனக் கருதப்படுகின்றனர்.

பெரும்பாலான தமிழ் மக்களைப் பொறுத்தளவில் தமிழ்த் தாய்நாட்டை சட்டரீதியாக உருவாக்குகின்ற நோக்கத்திற்கு மிக அருகில் சென்றவர்கள் எனக் கருதுகின்றனர்.

இதுதொடர்பான முதலாவது வழக்கு விசாரணையானது நாளை ஹேக்கில் இடம்பெறவுள்ளது. அதன்பிறகு, தமிழ்ப் புலிகள் பயங்கரவாதிகளா அல்லது விடுதலை அமைப்பா என்பதைத் தீர்மானிப்பதற்கு நீதிமன்றிற்கு மூன்று வாரங்கள் எடுக்கும்.

கருத்துகள் இல்லை: