ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

இன்றைய முக்கிய செய்திகள்


அமெரிக்காவில் தங்கியுள்ள சிறிலங்காவின் அரசுத்தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு நியுயோர்க் மாவட்ட நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது.
நியுயோர்க் தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில் கேணல் ரமேசின் மனைவி தாக்கல் செய்த 'தேவி எதிர் ராஜபக்ச' வழக்கிலேயே சிறிலங்கா அரசுத்தலைவருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாக ஈ ஐ என் செய்திசேவை தெரிவித்துள்ளது
இந்த வழக்கை சிறிலங்கா படைகளிடம் சரணடைந்த பின்னர் படுகொலை செய்யப்பட்ட கேணல் ரமேசின் மனைவி வத்சலாதேவியின் சார்பில் சட்டவாளரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமை அமைச்சருமான  வி.ருத்ரகுமாரன் கடந்த 22ம் திகதி தாக்கல் செய்திருந்தார்.
கேணல் ரமேசின் படுகொலை மற்றும் போரின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள், மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களுக்கு அடிப்படைக் காரணமாக இருந்தவர் என்ற அடிப்படையிலேயே சிறிலங்கா அரசுத்தலைவர்  மகிந்த ராஜபக்ச மீது இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஐநா பொதுச்சபையில் உரையாற்றுவதற்காக அமெரிக்கா சென்றுள்ள சிறிலங்காவின்  அரசுத்தலைவர் மகிந்த ராஜபக்ஷ  இந்த அழைப்பாணையை அடுத்து அவசரமாக நாடு திரும்ப முயல்வதாக செய்திகள் வெளியாகியுள்ளன
0000
இதேவெளை அமெரிக்க நீதிமன்றத்தில் தனக்கு எதிராகத் தொடுக்கப்பட்டுள்ள வழக்கை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக ஐ.நாவுக்கான சிறிலங்காவின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
போர்க்குற்றங்கள் தொடர்பாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக நீதிமன்றத்தில் முன்னிலையாகி பதிலளிக்குமாறு மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவுக்கு நியுயோர்க்கின் தெற்கு மாவட்டத்தில் உள்ள மன்ஹாட்டன் நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை அழைப்பாணை அவரது தனிப்பட்ட வதிவிடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அப்போது அவர் அங்கிருக்கவில்லை.
வீட்டில் இருந்த ஒருவரே அந்த அழைப்பாணையை பெற்றுக் கொண்டுள்ளார்.
அழைப்பாணை அனுப்பிய அமெரிக்க நீதிமன்றத்துக்கு மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா 21 நாட்களுக்குள் பதிலளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இதேவேளை , தன் மீதோ தனது கட்டளையின் கீழ் இருந்தவர்கள் மீதோ சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக உலகின் எந்த நீதிமன்றத்திலும் வழக்கை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா கூறியுள்ளார்.
மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா இது தொடர்பாக நியுயோர்க்கில் தங்கியுள்ள சிறிலங்காவின் அரசுத்தலைவர்  மகிந்த ராஜபக்சவை நேரடியாக சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
000 
அமெரிக்காவில் சிறீலங்காவின் அரசுத்தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கும் ஐ.நாவுக்கான சிறிலங்காவின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவுக்கும் எதிராக தொடக்கப்பட்டுள்ள வழக்குகளை எதிர் கொள்ள தயாராக இருப்பதாக சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்
இந்த வழக்குகள், விடுதலைப் புலிகளின் கொடூரச் செயல்கள் குறித்து அமெரிக்க நீதிமன்றத்தில் விபரிக்க நல்லதொரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாக அவர்  கூறியுள்ளார்.
கேணல் ரமேஸ் ஒரு மோசமான பயங்கரவாதி என்றும், அவர் சரணடைந்த நூற்றுக்கணக்காக காவல்துறையினரையும், அரந்தலாவவில் பௌத்த பிக்குகளையும், முஸ்லிம் கிராமவாசிகளையும் படுகொலை செய்தவர் என்றும் குற்றம்சாட்டியுள்ள கோத்தாபய ராஜபக்ச, அவரது மனைவியும் இந்தக் கொடூரச் செயல்களில் தொடர்புபட்டிருந்தவர் என்றும் கூறியுள்ளார்.
000
பயங்கரவாதத் தடைச்சட்டத்துக்குப் பதிலாக அமெரிக்காவில் உள்ளது போன்று உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் என்ற புதிய சட்டம் ஒன்றைக் கொண்டு வர சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக லக்பிம நியூஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் அடுத்த கூட்டத்தொடர் 2012 மார்ச்சில் ஆரம்பமாவதற்கு முன்னர் இந்தப் புதிய சட்டத்தை கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
பயங்கரவாதத் தடைச்சட்டம் நடைமுறையில் இருப்பதால் தான், மனிதஉரிமை மீறல்கள் இடம்பெறுவதாக அனைத்துலக சமூகம் கொழும்பு மீது கொடுத்து வரும் அழுத்தங்களைக் கொடுத.தவருவதாகவம் இதை குறைப்பதற்காகவே சிறிலங்கா அரசாங்கம் இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பயங்கரவாதத் தடைச்சட்டத்துக்குப் பதிலாக அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்ரேலியா போன்ற நாடுகளில் உள்ளது போன்று தீவிரவாதத்தை முறியடிப்பதற்கான புதிய சட்டம் ஒன்றை கொண்டு வருவதில் சிறிலங்கா அரசாங்கம் அக்கறை காண்பிப்பதாக சிறிலங்காவின் சட்டமா அதிபர் ஈவா வணசுந்தர உறுதிப்படுத்தியுள்ளார்.
0000
யாழ். பல்கலைக்கழக வரவாற்றுத்துறையினரின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண வாழ்வியல், எனும் தலைப்பிலான பொருட்காட்சியொன்றை நேற்று ஆரம்பமானது. சிறீலங்கா  தொல்பொருளியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி செனரத் திசாநாயக்க நாடாவெட்டி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்.
இந்த நிகழ்வில் யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் போராசிரியர் வசந்தி அரசரெட்ணம், யாழ் பல்கலைக்கழக வரலாற்றத்துறைப் பேராசிரியர் புஸ்பரெட்ணம், உட்பட பல பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்
0000
தமிழகத்தில் நடக்கவுள்ள உள்ளாட்சித் தேர்தலில், முதன்முறையாக அனைத்து முக்கியக் கட்சிகளும் தனித் தனியே தேர்தலை சந்திக்கவுள்ளன. திமுகவும் அதிமுகவுக்கும் மாறி மாறி காங்கிரஸ் கட்சியுடனும் பாமகவுடனும் கூட்டணி வைப்பது வழக்கமாகும்
ஆனால், இந்த முறை திமுக. காங்கிரசை கை விட்டுவிட்டது. வழக்கமாக திமுகவால் கைவிடப்படுவோர் அதிமுகவால் கைதூக்கி விடப்படுவதும், அதிமுகவால் கைவிடப்பட்டோர் திமுகவிடம் சரணடைவதும் வழக்கம்.இந்த முறை அது நடக்கவில்லை.
திமுக, அதிமுக, காங்கிரஸ், தேமுதிக, மதிமுக, பாமக, விடுதலைச் சிறுத்தைகள் ஆகியவை இந்தத் தேர்தலில் தனித் தனியே களம் காண்கின்றன.
இதன்மூலம் தமிழகத்தில் நீண்ட இடைவெளிக்குப் பின், கூட்டணி இல்லாத ஒரு தேர்தலாக உள்ளாட்சித் தேர்தல் நடக்கிறது.
00000
தமிழக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களைத் தேர்வு செய்யவும், தேர்தல் முடிவுகளை எடுக்கவும் 13 பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் தலைமை அமைத்துள்ளது. இந்தக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக தங்கபாலு செயல்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக காங்கிரஸ் கட்சி இதுதொடர்பாக ஒரு பட்டியலை சோனியா காந்திக்கு அனுப்பியிருந்தது. தமிழக காங்கிரஸ் கட்சியின் பல்வேறு கோஷ்டிகளின் தலைவர்கள் பெயர்கள் அதில் இடம் பெற்றிருந்தது. அதைப் பரிசீலித்த சோனியா தற்போது இந்தப் பட்டியலுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் ஜனார்த்தன் திவிவேதி தெரிவித்துள்ளார்.
0000
இந்தியாவின் ஒரிசா மாநிலத்தின் ஆளும் பிஜூ ஜனதா தள கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஜக்பந்து மஜி என்பவர் பொதுக்கூட்டம் ஒன்றில் வைத்து நேற்று  மர்ம நபர்களால் சுட்டுப்கொல்லப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்திற்கும் மாவோயிஸ்டுக்களுக்கும் தொடர்பிருப்பதாக அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. உமர்கோட் என்ற தொகுதிக்காக ஒரிசா சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஜக்பந்து மஜி, ராஜ்கார் அருகே உள்ள பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொள்ள சென்ற  போதே படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவருடைய மெய்பாதுகாவலர் உட்பட மேலும் இருவரும் இச்சம்பவத்தின் போது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
உந்துறுளியில் துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர்கள் முதலில் மெய்பாதுகாவலரையும், அடுத்து சட்டமன்ற உறுப்பினரையும் சுட்டுக்கொன்றுள்ளனர்.
0000
நேபாளத்தில்  16 பயணிகளுடன் சென்ற விமானம் திடீரென காணாமல் போயுள்ளது.  நேபாளத்தின்  புத்தா விமான போக்குவரத்து நிறுவனத்திற்கு  சொந்தமான இந்த விமானம் 3 விமானிகளுடனும் 16 பயணிகளுடனும் ; நடுவானில் பறந்து கொண்டிருந்த சிறிது நேரத்தில் விமானக்கட்டுப்பாட்டு ரேடார் திரையிலிருந்து திடீரென மறைந்தது விட்டது 
இந்த விமானம் எவரெஸ்ட் மலை சிகரப் பகுதியில் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது
0000
உலகை அச்சுறுத்திக் கொண்டிருந்த அமெரிக்காவின்  யு.ஏ.ஆர். எஸ். சேயற்கை கோளின் சிதலமடைந்த பாகங்கள் நேற்று கனாடாவில் உள்ள ஓகோமா பகுதியில் விழுந்தது.
அமெரிக்காவின் 'நாசா' விண்வெளி ஆராய்ச்சி மையம், 1991ம் ஆண்டு உயர் வளிமண்டல ஆராய்ச்சிக்காக அனுப்பிய இந்த செற்கை;க கோள் 2005ம் ஆண்டு செயலிழந்தது. ஒரு பேருந்து அளவுள்ள 5670 கிலேர் எடை கொண்ட இந்த செயற்கைக்கோள் நேற்று, பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்து போது அதன் பெரும்பகுதி எரிந்துவிட்ட நிலையில் அதன் துகள்கள் கனடாவில் உள்ள ஒகாமாவில் வீழ்ந்ததாக  தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த செய்திகள் எதுவும் வெளியாகவில்லை

0000
சோமாலியா தலைநகர் மொகாடிசுவில் ஐக்கிய நாடுகள் சபைக்கு சொந்தமான அலுவலகத்தின்  அருகே குண்டுவெடித்ததில்  நிகழ்ந்துள்ளது. ஒருவர் பலியானதுடன்  பலர் படுகாயமடைந்தனர் நியூயார்க் நகரில், ஐ.நா., சபை பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வரும் வேளையில், சோமாலியாவில் ஐ.நா., வளாகத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்திருப்பது சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது
000
இந்தோனேஷியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில், படகு ஒன்று எதிர்பாராதவிதமாக கவிழுந்ததில் 13 பேர் பலியாயினர். 9 பேர் காணவில்லை. மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கடலில் ஏற்பட்ட அலைகளின் காரணமாகவே , படகு கவிழ்ந்ததாக உயிர் பிழைத்த ஒருவர் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை: