வியாழன், 15 செப்டம்பர், 2011

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளை மடக்கும் மகிந்தவின் இரகசிய முயற்சி - வெளிச்சத்துக்கு வந்தது

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஈழத்தமிழர் ஆதரவுப் போக்கை உடைப்பதற்காக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, மூத்த அமைச்சரான டியு. குணசேகரவை இந்தியாவுக்கு அனுப்பி வைத்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இதுகுறித்து கொழும்பு ஊடகம் ஒன்றில் வெளியான தகவல்களின் தொகுப்பு.

“வைகோ, நெடுமாறன் போன்றவர்கள் எப்போதும் புலிகளுக்குப் பின்னால் தான் நிற்பார்கள். ஆனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் சிறிலங்காவைப் பற்றி தவறாகப் புரிந்து கொண்டிருக்கின்றனர்.

அவர்களை சரிப்படுத்த வேண்டும்.“ என்று அண்மையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் கூறியுள்ளார் சிறிலங்கா அதிபர்.

அத்துடன் டியு குணசேகரவைப் பார்த்து “நீங்கள் சிறிலங்கா கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக இருக்கிறீர்கள், இந்தியாவிலுள்ள இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் உங்களால் ஏன் இது பற்றி விளக்கமளிக்க முடியாது?“ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு டியு குணசேகர ‘பழுதுநீக்கும்‘ பயணத்தை மேற்கொள்ளத் தயாராக இருப்பதாக கூற, அடுத்தவாரமே இந்தியாவுக்கு செல்லுமாறு மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.

இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து பிந்திய நிலவரங்கள் குறித்து எடுத்துக் கூறுமாறும் டியு குணசேகரவிடம் கூறியுள்ளார் மகிந்த ராஜபக்ச.

வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசும், பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேராவும் வெளிநாடுகளுக்கு சென்றிருந்த நிலையில், டி.யு குணசேகரவை பதில் வெளிவிவகார அமைச்சராக நியமித்த மகிந்த ராஜபக்ச, அந்தப் பதவியுடன் அவரை இந்தியாவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

சிறிலங்கா அதிபரின் பணிப்பை அடுத்து, நேரத்தை வீணடிக்காமல், இந்தியத் தலைவர்களுக்கு விளக்கமளிப்பதற்குத் தேவையான தகவல்களை டியு.குணசேகர திரட்டியுள்ளார்.

இடம்பெயர்ந்தோர் மீள்குடியமர்வு, முன்னாள் போராளிகளின் புனர்வாழ்வு மற்றும் அவசரகாலச்சட்ட நீக்கம், வடக்கில் மீள் ஏற்படுத்தப்பட்ட குடியியல் நிர்வாகம் குறித்த தகவல்களைத் திரட்டிக் கொண்ட அவர், சில மேற்கு நாடுகள் சிறிலங்காவில் குழப்பத்தை ஏற்படுத்த மேற்கொள்ளும் முயற்சிகள் பற்றிய தகவல்களையும் சேகரித்துக் கொண்டே தனது பயணத்தைத் தொடங்கியுள்ளார்.

பதில் வெளிவிவகார அமைச்சர் பதவியுடன் கடந்த 7ம் நாள் புதுடெல்லிக்குப் பயணமான டியு.குணசேகர, மறுநாள் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலர் டி.ராஜாவை கட்சியின் தலைமையகத்தில் சந்தித்துப் பேசியிருந்தார்.

இதன்போது, பேரினவாத சிறிலங்கா அரசுக்குப் பின்னால் கம்யூனிஸ்ட் கட்சிகள் எவ்வாறு இருக்கின்றன என்று டி.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு டியு.குணசேகர சிறிலங்கா அரசு இனவாத அரசு அல்ல என்றும், அங்குள்ள களநிலைமையை இந்தியா சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலர் பிரகாஸ் கரட்டையும் சந்தித்த டியு.குணசேகர சிறிலங்கா நிலவரங்கள் குறித்து விளக்கமளித்துள்ளார்.

வியாழக்கிழமை இரவு இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளினதும் மத்திய குழு உறுப்பினர்களையும் ஒன்றாக டியு.குணசேகர சந்தித்துப் பேசியுள்ளார்.

இந்தச் சந்திப்புகளின் போது அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் சிறிலங்காவுக்கு எதிராகச் செயற்படுவது குறித்து டியு.குணசேகர எடுத்துக் கூறியுள்ளார்.

தமது போர்நிறுத்த அழைப்பைப் புறக்கணித்ததால் தான் சிறிலங்காவுக்கு எதிராக இந்த நாடுகள் திரும்பியுள்ளதாகவும், சிறிலங்கா அரசை குழப்ப மேற்குலக நாடுகள் முனைவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இதையடுத்து கடந்த 9ம் நாள் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து விட்டு அன்று பிற்பகலே கொழும்பு திரும்பியுள்ளார் டியு.குணசேகர.

அவரது இந்தியப் பயணம் வெற்றிகரமாக அமைந்ததாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.puthinappalakai

கருத்துகள் இல்லை: