ஞாயிறு, 11 மார்ச், 2012

நினைவழியா வடுக்கள் 14


நினைவழியா வடுக்கள் 14
யாழ்ப்பாணக் குடாநாட்டில் நிலவிய சாதி வெறியை புரிந்து கொள்வதற்கு இலங்கைத் தீவின் அந்தக் காலகட்டத்தில் இருந்த சமூக அரசயில் சூழலையும் அதில் யாழ்ப்பாண குடாநாட்டு அதிகார வர்க்கம் வகித்த பாத்திரத்தையும் புரிந்துகொள்வது அவசியமாகும்.
1950 க்கும் 1960 இடைப்பட்ட காலத்தை இலங்கைத் தீவில் பௌத்த சிங்கள பேரினவாதம் நிறுவனமயப்பட்ட காலமாகவும் தமிழ் தேசிய வாதம் வாக்குச் சீட்டு அரசியலுக்கான பேசு பொருளாக ஆக்கப்பட்ட காலமாகவும் கருதலாம்.
1960 வரை சிங்கள இனத்துக்குள் கண்டிய சிங்களவர்கள் கரையோரச் சிங்களவர்கள் என்ற முரண்பாடு ஆளமாக வேரூன்றி இருந்து.அதை விட தமிழ் சமூகத்தை பின் தள்ளும் அளவுக்கு சாதிய முரண்பாடுகளும் சிங்கள சமுகத்தில் புரையோடிப் போயிருந்து.
பிரித்தானிய ஒக்ஸ்போட் பல்கலைக்கழக கல்வியை மூலதனமாகக் கொண்ட கண்டிய உயர் நிலப்பிரபுத்துவ வர்க்கமும், சாராய வியாபாரம் உள்ளிட்ட உள்ளுர் மற்றும் வெளிநாட்டு ஏற்றுமதி இறக்குமதி வியாபாரத்தில் ஈடுபட்ட கரையோர தரகு முதலாளித்துவ வர்க்கமும் எதிரெதிர் முரண்பாட்டுடன் அதிகாரத்தை தக்கவைக்க போட்டிபோட்டுக்கொண்டிருக்க அடித்தட்டு சிங்கள மக்கள் மிக மோசமான வறுமையில் சிக்கித் தவித்துக்கொண்டிருந்தனர். சிங்களப் பதிகளில் இருந்த பெரும்பாலான காணிகள்(நிலம்) சிறுபான்மையான அதிகார வர்க்கத்துக்கு சொந்தமாக இருக்க பெரும்பான்மையான மக்கள் நிலமற்ற விவசாய கூலிகளாகவும் கூலித்தொழிலாளர்களாகவும் இருந்தனர்.கல்வி அறிவின்மையும் வேலை வாய்ப்பின்மையும் வறுமையும் அந்த மக்களின் அடிப்படை பிரச்சனைகளாக இருந்தன.
கண்டிய சிங்களவர்களும் கரையோரச் சிங்களவர்களும் ஒருபோதும் ஒன்றுபட்டு வாழமாட்டார்கள் என்று எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கா நாடாளுமன்றத்தில் பிரகடனப்படுத்தும் அளவுக்கு கண்டிய கரையோரச் சிங்கள மக்களுக்கு இடையிலான இந்தப் பிளவு வெளிப்படையானதாகவும் அதேநேரத்தில் ஆளமானதாகவும் இருந்தது.
இத்தகைய சமூக அரசியல் பின்னணி 1930 களில் இருந்து இடதுசாரி இயக்கங்கள் இந்த மக்கள் மத்தியில் வேரூன்றுவதற்கு வாய்ப்பாக அமைந்தது.
பாட்டாளி வர்க்க அரசியல் என்பது கூர்மைப்படுத்தப்பட்டு அதன் கீழ் மதங்களை கடந்து அடித்தட்டு சிங்கள மக்கள் ஒன்று பட்டு நின்றார்கள்.
கண்டிய ஆளும் வர்க்கம் பௌத்தத்தையும் கரையோர சிங்கள ஆளும் வர்க்கத்தின் ஒரு பகுதி கிறிஸ்தவத்தையும் இன்னொரு பகுதி பௌத்தத்தையும் தழுவி நின்றது.
இந்தக்காலகட்டத்தில் மலையகத்தில் இருந்த தமிழ் தோட்டத் தொழிலாளர்கள் திரட்சி பெற்ற அமைப்பு ரீதியான பாட்டாளி வர்க்கமாக இருந்தனர்.ஏறக்குறைய 10 இலட்சம் பேரைக் கொண்ட இந்த மக்கள் திரள் என்பது பாட்டாளி வர்க்க அரசியலின் அசைக்க முடியாத பலமாக இருந்தது.
இந்த பலத்துடன் சிங்கள பாட்டாளி மக்களின் பலமும் ஒன்றிணைந்த போது இலங்கையின் அரசியலை தீர்மானிக்கின்ற சக்தியாக அது உருவெடுத்தது.
இதேவேளை தமிழர் தாயகம் என்று நாங்கள் குறிப்பிடுகின்ற வடக்கு கிழக்கு பகுதிகளில் சிங்களப் பகுதிகளுக்கு ஒப்பான பிளவு நிலையே காணப்பட்டது.
அது யாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு என்று பிரதேச ரீதியாகவும் யாழ்ப்பாணத்துக்குள் சாதி ரீதியாகவும் பிளபட்டிருந்து.
ஆறுமுக நாவலரில் இருந்து ஆரம்பித்து சேர் பொன் இராமநாதனின் தொடர்ச்சியாக எஸ்.ஜே.வி. செல்வநாயகம் வரையில் யாழ்ப்பாண மைய வாதக் கருத்தியலே அதாவது சைவ வெள்ளாளிய கருத்தியலே ஈழத் தமிழர்களுடைய தேசிய அரசியலை தீர்மானிக்கின்ற கருத்தியலாக இருந்தது. எஸ்.ஜே.வி. செல்வநாயகம் பிறப்பால் ஒரு கிறிஸ்தவாக இருந்தும் யதார்த்தத்தில் சைவ வெள்ளாளிய கருத்தியலை நடைமுறைப்படுத்துகின்ற அல்லது அதனுடன் சமரசம் செய்துகொண்டு செல்கின்ற ஒரு தலைவராகவே இருந்தார்.இதை அவர் தன்னுடைய செயற்பாடுகள் மூலம் பல சந்தர்பங்களிலே நிரூபித்திருக்கிறார்.
இந்த இடத்திலே சைவ வெள்ளாளிய கருத்தியல் என்றால் என்ன? என்ற ஒரு கேள்வி இதை படிப்பவர்களுக்கு எழலாம்.
சைவ வெள்ளாளியத்தை பின் வருமாறு வரையறுக்கலாம் என்று நினைக்கிறேன்;
அறிவும் தகுதியும் பிறப்பால் வருபவை.
பிறப்பென்பது ஏற்றத்தாழ்வான சாதிய முறைமையை அடிப்படையாகக் கொண்டது.அது கடவுளால் தீர்மானிக்கப்படுவது.
பிறப்பால் வெள்ளாளன் உயர்ந்தவன்.அவனே அனைவரையும் ஆளும் அல்லது அனைவருக்கும் தலைமை தாங்கும் உரிமையுள்ளவன்.
வெள்ளானின் மதம் ஆரிய மயப்படுத்தப்பட்ட சைவம். சைவமும் தமிழும் பிரிக்கமுடியாதவை.அதனால் தமிழும் சாதியும் பிரிக்க முடியாதவை.
சைவ சித்தாந்த பாரம்பரியமும் கந்தபுராண கலாச்சரமும் வெள்ளாளனுக்குரிய பரம்பரை சொத்துக்கள்.
பைரவர் காளி ஐயனார் முனியப்பர் முதலான சிறு தெய்வ வழிபாடுகளும் அதையொட்டிய பறை கூத்து முதலான கிராமிய கலைகளும் பிற மத வழிபாடுகளும் இழிவானவை.அதை கடைப்பிடிப்பவர்களும் இழிவானவர்கள்.
இந்த வகையில் சிங்கள ஆளும் வர்க்கத்தைப் போல பிரித்தானிய உயர்கல்வி பாரம்பரியத்தைக் கொண்ட யாழ்ப்பாண ஆளும் வர்க்கமே தமிழ் மரபுரிமை அரசியலுக்கு தலைமை தாங்கியது.
இந்த மரபுரிமை அரசியல் என்பது தமிழ் தேசிய நலன் என்பதற்கு அப்பால் யாழ் மையவாத ஆளும் வர்க்க நலன்களுக்காக பேரம் பேசும் அரசியலாக இருந்தது.
இந்த மரபுரிமை அரசியல் உயர் கல்வி உயர் வேலைவாய்ப்பு மற்றும் வணிகத்துறைகளில் ஆளுமை செலுத்துகின்ற ஒரு புதிய நடுத்தர அதிகாரவர்க்கத்தை தோற்றுவித்திருந்தது.இந்த அதிகார வர்க்கத்திடம் இந்தியாவில் பார்ப்பணிய அதிகாரக் கும்பலிடம் இருப்பதற்கு ஒப்பான அதிகார மமதையும் சாதிய திமிரும் நிறையவே இருந்தது.
மலையக மக்களை ‘வடக்கத்தையான் தோட்டக்காட்டான் கள்ளத் தோணி’ என்றும் இஸ்லாமிய மக்களை ‘சோனிகள் தொப்பி பிரட்டிகள்’ என்றும் வன்னி மக்களை ‘காட்டான்கள் அல்லது குழைக்காட்டான்கள்’ என்றும் கிழக்கு மாகாண மக்களை ‘வசியக்காரர்கள் அல்லது சூனியக்காரர்கள் ‘என்றும் சாதிரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களை ‘கீழ்சாதி நாய்கள்’(மனிதர்களாக மதிக்க தயாரில்லாத மனோபாவம்) என்றும் சிங்களவர்களை மோட்டுச் சிங்களவன் என்றும் (சிங்கள இனவாதிகள் தமிழர்களை ‘பற தெமிழ’ அதவாது பறைத் தமிழன் என்று அழைத்தது தனிக்கதை)சிறுமைப்படுத்தி அழைத்து மகிழ்ந்த இழிகுணம் இந்த அதிகார மற்றும் சாதிய திமிரில் இருந்தே வந்தது.
தெற்கில் எவ்வாறு சிறுபான்மையான சிங்கள அதிகார வர்க்கம் சுகபோக வாழ்வை அனுபவிக்க பெரும்பான்மையான சிங்கள மக்கள் வறுமையில் உழன்றார்களோ அவ்வாறான ஒரு நிலை தான் தமிழர் தாயகப்பகுதியிலும் நிலவியது.
மிகச் சிறுபான்மையான தமிழ் அதிகார வர்க்கம் சீமை (பிரித்தானிய மலேசிய) தொடர்புகளுடன் கூடிய பணபலம் அதிகாரபலம்
என்பவற்றோடு செழிப்பான சுகபோக வாழ்க்கை வாழ 80 வீதமான தமிழ் மக்கள் அறியாமையிலும் வறுமையிலும் உழன்றார்கள்.
இது தமிழர் தாயப்பகுதியிலும் பொதுவுடமை இயக்கங்கள் தோன்றுவதற்கும் வேகமாக வளர்ச்சியடைவதற்குமான களச் சூழ்நிலையைத் தோற்றுவித்திருந்தது.
இவ்வாறு இலங்கைத் தீவு முழுவதும் நாடு தழுவிய அளவில் பொதுவுடமை இயக்கங்கள் வளர்ச்சி பெற்றதும் இனம் மதம் மொழி சாதி கடந்து அது உழைக்கும் மக்களை ஒன்றிணைத்ததும் சிங்கள அதிகார வர்க்கத்துக்கு மட்டுமல்லாமல் தமிழ் அதிகார வர்க்கத்துக்கும் அச்சுறுத்தலை தந்தது.
அடித்தட்டு மக்களை அரசியல் மயப்படுத்தி பொருளாதார மற்றும் சமூக விடுதலையை நோக்கி நகர்த்தும் பொதுவுடமை இயக்கங்களின் செயற்பாடு தங்களுடைய இருப்புக்கு அச்சுறுத்தலை உண்டாக்கும் என்ற பயம் சிங்கள தமிழ் அதிகார வர்க்கத்துக்கு ஒருபுறம் இருந்தாலும் காலகாலமாக தங்களால் அடக்கி ஒடுக்கப்பட்ட தங்களது அடிமைகளாக இருந்த அடித்தட்டு மக்கள் தங்களுக்கு சமமாக அதிகாரத்துக்கு வருவதை அவர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை என்பதே உண்மையாகும்.
பிரித்தானிய அரசு அனைத்து இலங்கையர்களுக்கும் வாக்குரிமை வழங்க முற்பட்ட போது ‘சாதியில் உயர்ந்தவனையும் சாதி குறைந்தவனையும் ஒரே தரத்தில் வைத்துப் பார்ப்பது சைவ மரபுகளை அவமதிக்கும் செயல் என்றும் படிக்காத முட்டாள்களுக்கு வாக்குரிமை கொடுப்பது கும்பலாட்சிக்கு வழி வகுக்கும்’ என்றும் மனுக்கொடுத்த இராமநாதனின் மனோபாவந்தான் 1950 களிலும் தமிழர் தரப்பு மேலாதிக்க தலைமைகளிடமும் சிங்கள மேலாதிக்கத் தலைமைகளிடமும் இருந்து.
சிங்கள அதிகார வர்க்கம் கண்டிய கரையோர சிங்களவர்கள் என்று ஆளமாக பிளவைக் கொண்டிருந்தாலும் தங்களது பொது எதிரிகளான இடது சாரிகளை அழிப்பதில் ஒன்றுபட்டு நின்றது.இந்த விடயத்தில் தங்களது வர்க்கக்கூட்டாளிகளான தமிழ் அரை நிலப்பிரபுத்துவ மற்றும் தரகு முதலாளித்து வர்க்கத்தையும் அது அரவணைத்துக்கொண்டது.
இந்த முக்கூட்டு அதிகார வர்க்க களவானிக் கும்பலின் முதல் குறி அப்பாவி மலையத் தோட்டத்தொழிலாளர்கள் மீது இருந்தது.இலங்கையின் பாட்டாளி வர்க்க அரசியலின் முதுகெலும்பாக இழப்பதற்கு உயிரைத் தவிர வேறெதுவும் இல்லாத நிலையில் இருந்த மலையக மக்களை அரசியல் ரீதியாக அதிகாரமிழக்கச் செய்வதன் மூலம் தான் பொதுவுடமை இயக்கங்களின் வளர்ச்சியை தடுத்து நிறுத்தலாம் என்பதை உணர்ந்து கொண்ட இந்த அதிகார வர்க்கம் 1947 ம் ஆண்டு இந்திய பாகிஸ்தானியர் குடிவரவுச் சட்டம் என்ற ஒன்றை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றியது.
இதன்முலம் மூன்று அல்லது நான்கு தலைமுறைகளுக்கு மேலாக இலங்கையில் வாழ்ந்த 10 இலட்சத்துக்கும் அதிகமான மக்களின் குடியுரிமை வாக்குரிமை பறிக்கப்பட்டது.
இதை தமிழ் அதிகாரவர்க்கத்தின் இன்றைய தலைமுறையினர் முழுக்க ஒரு இனவாத நடவடிக்கைiயாக சித்தரித்து தங்களுடைய மூதாதையர்களின் துரோகத்தை நியாயப்படுத்த முயல்கின்றனர்.
உண்மையில் 1891 ல் அநாகரிக தர்மபாலா தொடக்கிவைத்த பௌத்த சிங்கள தூய்மைவாத சிந்தனை 1930 கள் வரையில் பரந்துபட்ட சிங்கள மக்களை சென்றடைந்து பௌத்த சிங்கள இனவாதமாக பரிணமிக்க முடியாத ஒரு நிலைய pலேயே இருந்தது.
பிரபல இடதுசாரி தொழிற்சங்க தலைவராக இருந்த ஏ.ஈ.குணசிங்க 1930 களின் தொடக்கத்தில் இந்தப் பௌத்த சிங்கள இனவாத சேற்றுக்குள் விழுந்த போதிலும் இடதுசாரிகளின் வளாச்சியை அது பாதிக்கவில்லை.1947 தேர்தலில் 101 நாடாளுமன்ற ஆசனங்களில் 17 ஆசனங்களை கைப்பற்றுமளவுக்கு இடதுசாரி அமைப்புக்கள் இலங்கைத் தீவு முழுவதும்பலம் பெற்றிருந்தன.
எனவே மலைய மக்களின் வாக்குரிமை மற்றும் குடியரிமையை பறித்ததில் சிங்கள இனவாதம் 20 வீதம் இருந்தால் வர்க்க நலன் 80 வீதம் இருந்தது.
இந்த வர்க்க நலனே சிங்கள இனவாதத்தை தாண்டி மலையக மக்களின் குடியுரிமை மற்றும் வாக்குரிமையை பறிப்பதற்கு தமிழ் அதிகார வாக்கத்தை சிங்கள அதிகார வர்க்கத்துக்கு துணை போகச் செய்தது.
பின்நாளில் தமிழர்களுடைய அரசியல் தந்தை என்று அழைக்கப்பட்ட எஸ்.ஜே.வி செல்வநாயகம் இந்த நடவடிக்கையை எதிர்த்து தமிழ் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிக் கொண்டாலும் இதற்கு எதிரான தீவிரமான அரசியல் எதிர்ப்பியக்கத்தை நடத்தவோ இந்த விடயத்தை கையெடுத்துப் போராடிய இடதுசாரி இயக்கங்களுடன் ஒத்துழைக்கவோ முன்வரவில்லை.இந்த விடயத்தில் அவர் ஒப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து விட்டு சிங்கள அதிகார வாக்கத்தடன் வர்க்க சமரசம் செய்து கொண்டுவிட்டார்.
அதேபோல சிங்களப் பகுதிகளில் இடதுசாரி இயக்கங்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்தும் முயற்சியின் அடுத்த கட்டமாக அப்போது இலங்கையின் தலைமை அமைச்சராக இருந்த டிஎஸ் சேனநாயக்க நிலமற்ற சிங்கள விவசாயிகளை தென் தமிழீழப் பகுதிகளில் திட்டமிட்டு குடியேற்றிய போதும் தமிழ் அதிகார வர்க்கம் அதை தடுத்து நிறுத்துவதற்கான காத்திரமான நடவடிக்கை எதையும் மேற்கொள்ளவில்லை.
இந்தச் சிங்களக் குடியேற்றத்தின் மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை பறிக்க சிங்கள ஆளும் வர்க்கம் முயன்றது.
தமிழர்களுடைய பாரம்பரிய பிரதேசங்களில் சிங்கள மக்களை கொண்டு வந்து குடியேற்றுவதன் மூலம் தமிழ் சிங்கள முரண்பாட்டை தோற்றுவித்து அதன் மூலம் பொதுவுடமைகட்சிகளின் இருப்புக்கு அடிப்படையாக இருக்கும் தமிழ் சிங்கள அடித்தட்டு மக்களின் ஒற்றுமையை குலைப்பது சிங்கள ஆளும் வர்க்கத்தின் முதலாவது திட்டமாகும்.
அடுத்து நிலமற்ற சிங்கள விவசாயிகளையும் கூலித் தொழிலாளர்களையும் திட்டமிட்ட அடிப்படையில் தமிழர் தாயகப் பிரதேசத்தில் குடியேற்றுவதன் மூலம் தமிழ் தாயகத்தின் நிலத்தொடர்ச்சியை சிதைப்பது நிலப்பரப்பை ஆக்கிரமிப்பது,குடிப்பரம்பலின் விகிதாச்சாரத்தை மாற்றி அமைப்பதும் இன முரண்பாட்டுக்கான கொதிநிலையை தொடர்ந்து பேணிவருவது என்பன இரண்டாவது திட்டமாகும்.
வன்னிப் பெரு நிலப்பிலுள்ள மணலாறு வவுனியா மாவட்டத்தின் எல்லைப்பகுதி உட்பட திருகோணமலை கந்தளாய் பொலநறுவை அம்பாறை முதலான பகுதிகளில் உருவாக்கப்பட்ட இந்த சிங்களக் குடியேற்றங்களால் கூலி விவசாயிகள் கடற்தொழிலாளர்கள் உட்பட்ட அடித்தட்டு மக்களே உடனடிப்பாதிப்புக்கு உள்ளானார்கள்.
பிரித்தானிய ஆட்சியாளர்கள் அறிமுகப்படுத்திவிட்டுப் போன ஒற்றையாட்சி பாராளுமன்ற ஆட்சிமுறையையும் அதனோடு இணைந்த பல்லின பல்கலாச்சார சமூக அமைப்பு முறையையும் விமர்சனம் இன்றி ஏற்றுக்கொண்டு அதை வலுப்படுத்துவதற்காக பாடுபாட்ட தமிழ் அதிகார வர்க்கத்துக்கு அந்தக் காலகட்டத்தில் இது ஒரு பாரதூரமான விடயமாகத் தெரியவில்லை.
ஓரு தேசிய இனத்தின் இறைமையை தீர்மானிப்பதில் அந்த இனத்துக்கு சொந்தமான நிலம் அதாவது பாரம் பரிய பிரதேசம் என்பது மிகவும் முக்கியமானது என்பதையும் அந்த நிலம் அல்லது பாரம்பரிய பிரதேசம் பறிபோகும் போது அல்லது ஆக்கிரமிக்கப்படும் போது இயல்பாகவே அந்த இனத்தின் கலை கலாச்சார பண்பாட்டு விழுமியங்கள் சீரழிக்கப்பட்டு அதனூடாக மொழியும் சிதைக்கப்படும் அல்லது அழிக்கப்படும் என்பதை இந்த ஆண்டைகள் கணக்கிலேயே எடுக்கவில்லை.
1958 ம் ஆண்டு சிங்களம் மட்டும் சட்டம் கொண்டுவரப்பட்டபோது அதற்கு காட்டிய எதிர்ப்பில் நூற்றில் ஒரு பங்கைக் கூட இந்தத் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை தடுத்து நிறுத்துவதற்கு காட்டவில்லை என்பதை கவனித்தால் இந்த தமிழ் அதிகார வாக்கம் எவ்வளவு தூரத்திற்கு வர்க்க நலன் சார்ந்து சிங்கள அதிகார வர்க்கத்துடன் கூட்டுச் சேர்ந்துகொண்டு பம்மாத்து அரசியல் நடத்தியது என்பதையும் தமிழ்மொழி தமிழ் மக்களுடைய உரிமை, தமிழ் மக்களுடைய தாயகம் என்பதெல்லாம் வாக்குச் சீட்டு அரசியலுக்காக இந்த அதிகாரவாக்கம் பயன்படுத்திய பம்மாத்து வாhத்தைகள் என்பதையும் புரிந்து கொள்ளலாம்.
சிங்கள அதிகார வர்க்கம் தமிழர் தாயகப் பகுதியிலே சிங்களக் குடியேற்றங்களை உருவாக்கிய காலகட்டத்தில் யாழப்பாணக் குடாநாட்டு அதிகார வர்க்கம் சாதி அடிப்படையில் கீழ் நிலையில் இருந்த மக்களுக்கு விரும்பிய இடத்தில் காணி வாங்கிக் குடியேறும் உரிமையை மறுத்தது.
இவர்கள் நினைத்திருந்தால் காணிற்ற அடித்தட்டு மக்களுக்கு காணிகளை பெற்றுக் கொடுத்து அவர்களது வாழ்நிலையயை மேம்படுத்தும் வகையில் புதிய தமிழ் குடியேற்றங்களை உருவாக்குவதன் மூலம் சிங்கள குடியேற்றங்களை தடுத்திருக்க முடியும்.
நிலமற்ற குடியுரிமையற்ற மலையக மக்களை மணலாறு கந்தளாய் பெலனறுவை,அம்பாறை பகுதிகளில் உரிய அரசியல் வேலைத்திட்டங்களை வகுத்து உரிய அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து குடியேற்றியிருந்தால் அந்த மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி அவர்களது அவலத்தையும் போக்கியிருக்கலாம் அதற்கும் மேலாக தமிழர்களை அவர்களது தாயகப்பரப்பில் இனச் சிறுபான்மையினராக்கும் சிங்கள அதிகார வாக்கத்தின் நீண்ட காலத்திட்டத்தையும் முறியடித்திருக்கலாம்.(1970 களின் காந்தீயம் என்ற அமைப்பின் மூலம் மலையக மக்கள் வடக்கில் குறிப்பாக வன்னியில் குடியேற்றப்பட்ட போது தமிழ் அதிகார வர்க்கம் அதற்கு முட்டுக்கட்டை போட்ட கதை அசிங்கமான பக்கங்களைக் கொண்டது)
ஆனால் இவை எதையும் செய்யாமல் தங்களுடைய வர்க்க நலனுக்காக சிங்கள பௌத்த பேரினிவாதத்தை அரசியல் ரீதிய நிறுவனமயப் படுத்துவதற்கு உதவியும் ஒத்தாசையும் வழங்கிவிட்டு அதை தாங்கள் எதிர்ப்பவர்கள் போல பாசாங்கு செய்து கொண்டு தங்களை தமிழனத்தின் மீட்பாளர்களாகவும் தமிழ் தேசியத்தின் காவலர்களாகவும் காண்பித்த இந்த மேட்டுக்குடி அரசில்வாதிகளின் அரசியலை புரிந்து கொள்வதன்மூலம் தான் யாழ்ப்பாணக் குடாநாட்டில் இன்னும் சாகாவரம் பெற்று நிலைத்து நிற்பதுடன் விமானமேறி மேற்குலகிற்கும் சென்று அங்கும் கால் பதித்து நிற்கும் சாதிய அமைப்பை மட்டுமல்லாமல் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு தற்போது எற்பட்டுள்ள பின்னடவுகளையும் புரிந்து கொள்ள முடியும்
 

கருத்துகள் இல்லை: