ஞாயிறு, 11 மார்ச், 2012

நினைவழியா வடுக்கள் 15


நினைவழியா வடுக்கள் 15

தென்னிலங்கை எனப்படும் சிறீலங்காவிலே எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா சிறீலங்கா சுதந்திரக் கட்சியை ஆரம்பிக்கும் வரை சிங்கள ஆளும் வர்க்கத்தை பிரதிநிதித்துவப்படுத்திய ஐக்கிய தேசியக் கட்சியே ஆட்சியதிகாரத்தை கைப்பற்றும் வல்லமை கொண்ட கட்சியாக இருந்து.அந்த வல்லமைக்கு பாதிப்பு எற்படும் போது அதற்கு   முட்டுக் கொடுத்து தூக்கிவிடும் முக்கியமான சக்திகளாக  யாழ் குடாநாட்டு அதிகார வர்க்கத்தால் தலைமை தாங்கப்பட்ட தமிழ் காங்கிரஸ் மற்றும் தமிழரசுக் கட்சிகள் இருந்தன.
எதிர்கட்சி வரிசையில் இருந்த இடதுசாரிக் கட்சிகளிடையே குறிப்பாக கொம்யூனிஸ்ட் கட்சியில் ரஷ்ய சார்பு சீன சார்பு என்றும் அதிலும் ரஷ்ய சார்பில் ரொஸ்கியின் வழியை பின்பற்றும் ஒரு பிரிவு(சமசமாஜ கட்சி) லெனின் ஸ்டாலின் வழியை பின்பற்றும் ஒரு பிரிவு (கம்யூனிஸ்ட் கட்சி) என்றும் பிரிவுகள் இருந்தன.இந்தக் கட்சிகள் அடித்தட்டு மக்களிடையெ அமோக ஆதரவைப் பெற்றிருந்த போதிலும் தேர்தல் என்று வரும்போது இவர்களிடையே இருந்த பிளவுகள் இவர்களுக்கான பொதுவான ஆதரவுத் தளத்தை பிளவுபடுத்தி தரகு முதலாளித்துவ மற்றும்  அடிப்படைவாதக் கட்சிகள் வெற்றிபெறுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தின.
ஆதிலும் இந்த ரஷ்ய சார்பு மற்றும் ரொஸ்கியவாத பொதுவுடமைவாதிகளின் பெரும்பாலனவர்கள்  அடிப்படைவாத அரசியலுக்கும் வர்க்க அரசிலுக்கும் இடையில் சமரசம் செய்து கொண்ட திரிவுவாதிகளாக இருந்தார்கள்.இந்தியாவில் மார்க்சிசத்தை பார்பணிய நலன்களுக்கு  ஏற்வாறு  இசைவாக்கம் செய்ய முயன்ற வைதீக மார்க்சிஸ்டுகளுக்கு இiயானவர்களாக இவர்கள் இருந்தார்கள்.

சிறீலங்காவில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த ஐக்கிய தேசிக்கட்சி ஒரு தரகு முதலாளித்துவ ஏகாதிபத்திய சார்புக் கட்சியாக இருந்தது.அந்தக் கட்சி நாட்டின் தேசிய நலனை பிரதிபலிக்கவில்லை என்ற அதிருப்;தி சிங்கள புத்திஜீவிகளிடத்திலும் சிங்கள தேசியவாதிகளிடத்திலும் இருந்தது.
இதற்கு தலைமை தாங்குபவராக  எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா இருந்தார். ஏறத்தாழ 1953-54 காலகட்டத்திலே இந்த நிலைமைகள் உருவாகிவிட்டன.
அநாகரிக தர்பாலாவின் காலத்தில் புத்துயிர்ப்பு செய்யப்பட்ட பௌத்த சிங்கள தேசியவாதத்தை ஒரு மாபெரும் அரசியல் இயக்கமாக வளர்த்தெடுத்துச் செல்லமுடியாமல் சேடமிழுத்துக்கொண்டிருந்த சிங்கள இனவாதிகளுக்கு  எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்காவின் வருகை ஒரு திருப்பு முனையாக அமைந்தது.
பௌத்தமதத்தையும் பௌத்த கலாச்சாரத்தையும் முதன்மைப்படுத்தல்...
சிங்கள மொழியையும் சிங்கள பண்பாட்டையும் முதன்மைப்படுத்தல்...
என்கின்ற கோசங்களோடு இவர்கள் பண்டாரநாயக்காவின் பின்னால் அணி திரள ஆரம்பிக்கின்றனர்.
இந்த இடத்திலேதான் பௌத்த சிங்கள தேசிய வாதம் பௌத்த சிங்கள பேரினவாதமாக உருமாற்றம் பெறுகிறது.

ஆட்சியை கைப்பற்றுவதில் குறியாக இருந்த பண்டாரநாயக்காவுக்கு இந்த பௌத்த சிங்கள பேரிவாத சிந்தனை என்பது ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது.
அவர் இதை எகாதிபத்திய எதிர்ப்பு சோசலிச சமத்துவம் என்கின்ற முலாங்களை பூசிக்கொண்டு சிறீலங்கா சுதந்திரக்கட்சி என்ற பெயரில் களம் இறங்குகிறார்.வலது சந்தர்ப்பவாத அரசியல் போக்கை கொண்டிருந்த கொல்வின் .ஆர்;.டி.சில்வா, என்.எம்.பெரேரா, பீட்டர் கெனமன் போன்ற பல சிங்கள இடதுசாரித் தலைவர்களும் ஏகாதிபத்திய எதிர்ப்புக் கூட்டணி என்ற பெயரில் பண்டாரநாயக்காவின் முகாமுக்குள் ஐக்கியமாகின்றனர்.

இந்தப் பின்ணியிலேதான் சிறீலங்காவிலே ஆட்சிமாற்றம் நடக்கிறது.எஸ்.டபிள்யூ.ஆர்;.டி. பண்டாரநாயக்கா இலங்கை ஒற்றiயாட்சி நாடாளுமன்றத்தின் தலைமை அமைச்சராகின்றார்.
சிங்களம் மட்டும் சட்டம் கொண்டுவரப்படுகிறது.
1958 இனக்கலவரம் நடக்கிறது

1918 ம் ஆண்டு  தமிழர் தலைவர் என்று சொல்லப்பட்ட சேர்.பொன் இராமநாதனை சிங்கள மக்கள் கொழும்பு வீதிகளிலே தங்களது தேள்களிலே சுமந்தவாறு  ஊர்வலம் போகிறார்கள். அவர் பயணம் செய்த குதிரை வண்டியை குதிரைகளுக்கு பதிலாக தாங்களே இழுத்துச் செல்கிறார்கள்.

1958ம் ஆண்டு அதே சிங்கள மக்கள்  அதே கொழும்புத் தெருக்களிலே தமிழர்களை உயிரோடு எரிக்கிறார்கள்.தமிழ் பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துகிறார்கள்.தமிழர்களுடைய உடைமைகளை சூறையாடுகிறார்கள்.

1918ற்கும் 1958 க்கும் இடைப்பட்ட 40 வருடத்தில் என்ன நடந்தது? ஏன் இந்த மாற்றம்?

இதை சிங்கள பௌத்த பேரனிவாத மயப்படுத்தப்பட்ட அரச அதிகாரத்தின் வெற்றியாகவும் பிரித்தானியர்கள் அறிமுகப்படுத்துவிட்டுச் சென்ற பல்தேசிய பல்கலாச்சார  அரசமைப்பின் தோல்விவும் எடுத்துக்கொள்ளலாம்.
1918 லே ஆட்சியாளர்களாக பிரித்தானியர்கள் இருந்தார்கள். ஆளப்படுபவர்களாக சிங்களவர்களும் தமிழர்களும் இருந்தார்கள்.ஆள்பவர்களை எதிர்த்து ஆளப்படுபவர்கள் ஐக்கியப்படுவது இயல்பு.அந்த இயல்பு தான் சேர்.பொன்.இராமநாதனை சிங்களவர்கள் தூக்கி வைத்துக் கொண்டாடிய போது இருந்தது.

ஆனால் 1958ல் ஆள்பவர்களாக சிங்களவர்களும் ஆளப்படுபவர்களாக தமிழர்களும் இருந்தார்கள்.1948 ல் பிரித்தானியர்கள் உருவாக்கிய ஒற்றையாட்சி அரசில் சட்டமும் சிங்கவர்களும் தமிழர்களும் இணைந்த இலங்கை தேசம் இலங்கைத் தேசியம் என்ற ஒற்றையாட்சி நாடாளுமன்ற ஆட்சிமுறை சிங்களவர்களை ஆளும் தரப்பாகவும் தமிழர்களை ஆளப்படும் தரப்பாகவும் மாற்றிது.
ஐக்கிய இராட்சியத்தில் இருந்து ஸ்கொட்லாந்து பிரிந்து செல்லும் முடிவை தற்போது எடுத்திருப்பதையிட்டு பிரித்தானியா கையறு நிலையில் புலம்பிக்கொண்டிருக்கிறது.
பிரித்தானியவும் பிரான்சும் தாங்கள் அறிமுகப்படுத்திய பல்லினக் கலாச்சாரம் பலதேசியவாதம் என்பன தோற்றுப்போய்விட்டதாக இப்போது தான் ஒப்புக் கொள்கின்றன.
ஆனால் 1958லேயே இலங்கைத் தீவில் அது தோற்றுப் போய்விட்டது.

உயரிய நாடாளுமன்ற ஜனநாயக மரபு மற்றும் கல்வியறிவு அடிப்படை பொருளாதார வளர்ச்சி என்பவற்றை கொண்ட தமது நாட்டிலேயே பல்கலாச்சார ஒருங்கிணைவு பல்தேசிய ஒருங்கிணைவு என்பது தோற்றுப் போய் விட்டதாக இன்று ஒப்புக்கொள்ளும் பிரித்தானிய ஆட்சியாளர்கள் மதவாதமும் இனவாதமும் கல்வியறிவின்மையும் சமச்சீரற்ற  பொருளாதார கட்டமைப்பையும் சாதி அடிப்படையிலான ஏற்றத்தாழ்வான
சமூகக் கட்டமைப்பையும்  கொண்ட இலங்கைத் தீவில் வாழும் மக்களை அதை கடைபிடிக்கும்படி கூறியதென்பது புதிய மருந்தொன்றை சோதனைக் கூடத்தில் எலிகளுக்கும் அதையொத்த சிறு பிராணிகளுக்கும் கொடுத்து பரிசோதிக்கும் செயலுக்கு ஒப்பானதாக இருந்தது.

பிரித்தானிய காலணித்துவ எஜமான்கள் 1948ல் அறிமுகப்படுத்திவிட்டுச் சென்ற ஒற்றையாட்சி நாடாளுமன்ற முறையின் தோல்வியே 1958 இனக்கலவரமாகும்.

இந்த ஒற்றையாட்சி நாடாளுமன்ற அமைப்புமுறை என்பது தமிழர்களை சிங்கள அதிகாரவர்க்க அரசுக்கு ஜனநாயகத்தின் பேரால்; அடிமைப்படுத்தும் ஒரு பொறி என்பது இந்த யாழ்குடாநாட்டு அதிகார வர்க்க அரசியல் தலைவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை என்று எழுந்தமானமாக கூறிவிடமுடியாது.

இலங்கைக்கு கிடைத்திருப்பது சுதந்திரமல்ல. ஆட்சிமாற்றமே என்றும் முன்பு பிரித்தானிய ஆட்சியாளர்கள் இருந்த இடத்தில் இப்போது அவர்களுக்கு சேவகம் செய்யக்ககூடிய அவர்களது நலன்களுக்காக செயற்படக் கூடிய ஏகாதிபத்திய சார்பு அரசே அதிகாரத்துக்கு வந்திருக்கிறது என்றும் இடதுசாரிகள் திரும்பச் சொல்லிக்கொண்டே இருந்தார்கள்.

இலங்கையில் வாழும் அனைத்து உழைக்கும் மக்களும் ஒன்றிணைந்து இந்த அரசை தூக்கி எறிந்து விட்டு அனைவருக்கும் சமத்துவமான சிங்கள தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்கிற பாட்டாளி வர்க்க அரசை உருவாக்க வேண்டும் என்று அவர்கள் கூறியது இவர்களுக்கு எட்டிக்காயை விடக் கசப்பானதாக இருந்தது.

குட்டுப்பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப்பட வேண்டும் என்ற ஆங்கில வழிச் சிந்தனையும் அதன்பால்;பட்ட ஏகாதிபத்திய சார்பு நிலையும்   இவர்களை தமிழ் மொழி தமிழ் இனம் தமிழ் நிலம் தமிழர்களுடைய வரலாற்றின் நீட்சி அதனடிப்படையில் தமிழர்களுடைய பிரதேசத்தில் அவர்கள் ஒரு தனித்தேசிய இனமாக வாழ்வதற்கு அவர்களுக்கிருந்த  இறைமைபற்றியும் தமிழர்கள் சுயநிர்ய உரிமையுள்ள ஒரு இனம் என்பது பற்றியும்  தமிழ் சிந்தனைத் தளத்தில் இருந்து சிந்திக்கவிடாமல் தடுத்தது.

1958 இனக்கலவரம் நடந்த பின்பாவது அரசு என்ற அடக்குமுறைக் கருவி பற்றியும் அந்த அடக்குமுறைக்கருவியை சிங்கள அதிகார வர்க்கம் ஒரு துப்பாக்கி வேட்டைக் கூட திர்க்காமல் கைபற்றியுள்ளது பற்றியும் அந்த அரசு  சிங்கள பௌத்த பேரினவாத அரசாக தன்னை மறுநிர்மாணம் செய்துகொள்ள ஆரம்பித்திருப்பது பற்றியும் இவர்கள் புரிந்துகொண்டிருக்க வேண்டும்.இந்த அரச இயந்திரத்திரத்துக்கு ஒத்துழைப்பு வழங்குவது எதிர்காலத்தில் தமிழ் மக்களை மிகப்பெரிய அடிமைத்தனத்துக்குள் தள்ளும் என்பதையாவது இவர்கள் உணர்ந்திருக்க வேண்டும்.

ஆனால் இவர்கள் திரும்பத் திரும்ப தமிழ் மக்களை முட்டாள்களாக்கப் பார்த்தார்கள்.

எந்த அரச இயந்திரம் தமிழ் மக்கள் மீது அடக்குமுறையை திணித்ததோ, எந்த அரச இயந்திரம் வன்முறையாளர்களையும் குண்டர்களையும் ஏவிவிட்டு தமிழ் மக்களின் உடமைகளை சூறையாடி  உயிர்களை பறித்து அவர்கள் ஏதிலிகளாக்கியதோ அந்த இனவாத அரச இயந்திரத்திடம் நியாயம் கேட்கும் அகிம்சைப் போராட்டத்தை இவர்கள் நடத்தினார்கள்.
கொலைகாரனிடம் அவன்செய்த கொலைக்கு பிராயசித்தம் கேட்கும் இந்த நடவடிக்கையை இவர்கள் அகிம்சை வழியிலான உரிமைப் போர் என்று வெட்கமின்றி பிரகடனப்படுத்தவும் செய்தார்கள்.

இந்த நிலையில் கூட இவர்கள் இந்த சிங்கள மேலாதிக்க அரச இயந்திரத்தை பகிரங்கமாக நிராகரித்துவிட்டு தமிழ் மக்களின் இழந்த இறைமையை மீட்பதற்கான போராட்டத்தை ஆரம்பிக்க முன்வரவில்லை.
பிரித்தானிய எஜமான் திணித்துவிட்டுப் போன அந்த பல்தேசிய பல்கலாச்சார நாடாளுமன்ற அமைப்பு முறைக்குள் தான் இவர்கள் தீர்வைத் தேடி ஓடினார்கள்.

தமிழர்கள் சிங்களவர்களுக்கு சமானமாக சுயநிர்ணய உரிமையுடன் வாழக்கூடிய ஒரு தீர்வை இவர்கள் கேட்கவில்லை.சிங்கள மேலாதிக்க நாடளுமன்ற முறைமையின் கீழ் ஒட்டுண்ணிகளாக ஒரு ஓரத்தில் ஒட்டிக்கொண்டிருக்கக் கூடிய கூட்டாட்சி முறையைத்தான் இவர்கள் கேட்டார்கள்.

சிங்களவர்களுக்கு இலங்கைத் தீவில் தங்களுடைய அரசை தாங்களே உருவாக்குவதற்கு எந்தளவுக்கு அருகதையும் உரிமையும் இருந்ததோ அதைவிட மேலான அருகதையும் உரிமையும் தமிழர்களுக்கு இருக்கிறது  என்பதை சட்ட ரீதியாக நிராகரித்து இலங்கை நாடாளுமன்றம் என்ற அந்த  சிங்கள மேலாதிக்க அமைப்பை தூக்கி எறிய ஏன் இவர்களால் முடியவில்லை?

முஸ்லீம்களுக்கும் சிங்களவர்களுக்கும் பிரச்சனை நடந்த போது போக்குவரத்து வசதிகள் குறைவான முதலாம் உலகப்போர் நடைபெற்ற ஆபத்தான காலப்பகுதியில் லண்டனுக்குச் சென்று பிரித்தானிய அரசிடம் சிங்களவர்களுக்காக பேசிய இவர்களால் எந்த நெருக்கடிகளும் இல்லாத போக்குவரத்து வசதிகள் சுலபமாகிப் போன ஒரு காலகட்டத்தில் லண்டனுக்கு சென்று நீங்கள் எங்கள் மீது திணித்த ஆட்சிமுறைதான் எங்கள் மக்களின் அழிக்கிறது.எங்களை அடிமைப்படுத்துகிறது. எங்களிடம் இருந்து வலுக்கட்டாயமாக பறிக்கப்பட்ட எங்களது இறைமையை எங்களுக்கு திருப்பித்தாருங்கள் என்று இவர்கள் கேட்டிருக்கவேண்டும்.காலிமுகத் திடலிலே செய்த சத்தியாகிரகப் போராட்டத்தை இவர்கள் லண்டனில் செய்திருக்க வேண்டும்.ஏன் செய்வில்லை?
பாரிஸ்டர் கியூசி என்று மிகப் பெரிய சட்டமேதைகளாக திகழ்ந்த இவர்களால் தமிழர்கள் இழந்த உரிமையை மீட்பதற்கு பிரித்தானிய அரசுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றத்தில் ஏன் வழக்குப் போடமுடியவில்லை?

இத்தனை கேள்விகளுக்கும் ஒரே விடை இவர்கள் செய்தது தமிழ் மக்களின் விடுதலைக்கான அரசியல் அல்ல!தங்களது அதிகாரத்தை தக்க வைப்பதற்கான பிழைப்புவாத அரசியலையே இவர்கள் செய்தார்கள்.

குறிப்பாக சொல்வதானால் பிரித்தானியர்கள் அறிமுகப்படுத்திய வெஸ்ட் மினிஸ்ட்டர் ஆட்சிமுறை இலங்கைக்கு ஏற்புடையது அல்ல என்றோ  இலங்கை தேசியம் என்பது தவறான ஒரு கோட்பாடு என்றோ இவர்கள் ஒருபோதும் ஆணித்தரமாக எடுத்து சொல்லவில்லை.அது ஒரு உன்னதமான அமைப்பு வடிவம் என்றும் இந்த அமைப்பு வடிவத்தை பலப்படுத்துவதன் மூலமே தங்களுக்கான அதிகாரத்தை தக்கவைக்க முடியும் என்றும் இவர்கள் நம்பினார்கள்.அதை நம்பும்படி தமிழ் மக்களையும் கோரினார்கள்
ஒருவகையில் பௌத்த சிங்கள பேரினவாதத்தை தங்களது அரசியல் இருப்புக்கான அடிப்படை கொள்கையாக கடைப்பிடித்த சிங்கள அதிகார வர்க்கத்துக்கும், அதற்கு எதிரான தமிழ் எதிர்ப்பியக்கத்தை நடத்திய தமிழ் அதிகாரவர்க்கத்துக்கும் இடையில் அடிப்படையில் ஒரு ஒற்றமை இருந்தது.அதாவது இரண்டு பகுதியினருமே மக்கள் நலன் சார்ந்த அரசியலை புறந்தள்ளி உணர்ச்சி அரசியலை அல்லது சுலோக அரசியலை முதன்மைப்படுத்தினார்கள்.

சிங்களவன் எதிர் தமிழன் அல்லது தமிழன்  எதிர் சிங்களவன் என்ற இந்த உணர்ச்சி அரசியல் அல்லது சுலோக அரசியல் இலங்கை நாடாளுமன்றத்துக்கான ஆசனங்களை பெறுவதற்கான போட்டியில் வெற்றிபெறுவதற்கு இரண்டு பகுதியினருக்கும் கைகொடுத்தது.அரசியல் அரங்கத்திலும் தேர்தல் மேடைகளிலும் இவர்கள் எதிரிகள் போல் வெளிக்காட்டிக் கொண்டாலும் தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்கு  சென்ற பின்னர் அதிகாரத்தை பங்கு போட்டுக்கொள்வதற்காக கைகோர்த்துக் கொண்டார்கள்.
இந்தக் கைகோர்த்லை நியாயப் படுத்துவதற்காக சிங்களக் கட்சிகளுடன் ஆட்சிமைப்பதற்காக பேரம் பேசுவதன் மூலம் தமிழர்களுடைய உரிமைகளை பெற்றுக் கொள்லாம் என்றொரு மாயத் தோற்றத்தை இவர்கள் தமிழ் மக்கள் மத்தியில் எற்படுத்தியிருந்தார்கள்.
சிங்களம் மட்டும் சட்டத்தை எதிர்த்து தமிழர்கள் குறிப்பாக தமிழ் பிள்ளைகள் சிங்கள மொழியை படிக்கக்கூடாது என்ற மேடைகளில் முழங்கிய இவர்கள் தங்களது பிள்ளைகளக்கு சிங்களத்தை படிப்பித்தது அன்றைய காலகட்டத்தில் விமர்சனத்துக்கு உரிய ஒன்றாக இருந்தது.

ஆனால் இதே அதிகார வர்க்க அமைப்பில் பிறந்து லண்டன் ஒக்ஸ்போட் பல்கலைக் கழகத்தில் உயர்கல்வி கற்று தாயகம் திரும்பி அரசியலில் ஈடுபட்ட ஒருவர்  அன்றைய காலகட்டத்தில் தமிழ் தலைவர்கள் என்று சொல்லிக் கொண்ட தமிழ் தலைவர்களை விட வித்தியாசமாக சிந்தித்தார். வித்தியாசமாகச் செயற்பட்டார். வித்தியாசமான மனிதராக இருந்தார்.

நான் அவரை முதன் முதலாக 1952 ல் பாhத்ததாக ஞாபகம் இருக்கிறது. ஏனென்றால் எங்களுரில் நான் அறிந்தவரை எந்த அரசியல்வாதியும் வந்து கூட்டம் வைத்ததில்.ஆனால் எங்களுரும் அருகிலுள்ள புலொலியில் இருக்கும் சின்னத்;தாய் பிள்ளையார் கோவில் விதியில் அல்லது உபய கதிர்காமம் கோவில் வீதியில் தான் தமிழரசு தமிழ் காங்கிரஸ்கட்களுடைய  கூட்டங்கள் நடக்கும்.
நான் அதை வேடிக்கை பார்ப்பதற்கு எனது தந்தையுடன் அல்லது எனது உறவினர்களான பாடசாலை நண்பர்களுடன் செல்வதுண்டு.
பேரிய மேடை போடப்பட்டு கட்சிக் கொடிகள் மற்றும் வண்ண காகிதங்களால் அலங்கரிக்கப்பட்டு நாற்புறவும் ரியூப் லைட்டுகள் போடப்பட்டு ஒலிபெருக்கிகளில் பாடல்கள் ஒலிக்க விடப்பட்டு ஏறக்குறை ஒரு திருவிழா காட்சியைப் போல அந்த அரசியல் கூட்டங்கள் இருக்கும்
அரசியல் தலைவர்கள் என்று சொல்லப்படுபவர்களும் அவர்களது தொண்டரடிப்பொடிகளும் காரர்களில் அணிவகுத்து வந்து இறங்குவார்கள்.மாலை மரியாதை மேளதாளங்களுடன் அவர்கள் மேடைக்கு அழைத்துவரப்படுவார்கள்.அவர்களது வருகையை அறிவிக்கும் வகையில் பட்டாசு வெடிப்பு வாணவேடிக்கையும் நிகழ்த்தப்படும்.இது சிறுவர்களான எங்களுக்கு ஒரு புதுமையான வித்தியாசமான நிகழ்வாக இருக்கும்.அதை பார்த்து அந்த அரசியல் தலைவர்கள் கடவுளுக்கு நிகரான பெரிய மனிதர்கள் என்று ஒரு பிரம்மை எங்களுக்குள் ஏற்படும்.
ஆனால் மேடை இல்லாமல் ஒலிபெருக்கி இல்லாமல் 2 பெற்றோல்மாக்ஸ் வெளிச்சத்தில் 1962 ம் ஆண்டு முதல் முதலாக எங்களுடைய ஊரில் ஒரு அரசியல் கூட்டம் நடந்தது.
அந்த கூட்டத்தில் உரையாற்றவந்தவர் காரில் வந்து இறங்கவில்லை ஒற்றை மாடு பூட்டிய கரத்தை வண்டிலில் வந்து இறங்கினார்;. அவருக்கு துணையாக ஒரு நான்கு ஐந்து பேர் சைக்கிளில் வந்திருந்தார்கள். எல்லோருமே மிக எழிமையான தோற்றத்தில் இருந்தார்கள்.
மாட்டுவண்டியில் வந்து இறங்கிய மனிதருக்கு சற்று இருமல் வந்தது.
அந்தக் கூட்டத்தை ஒழுங்குசெய்தவர்களில் ஒருவரான எனது சித்தப்பா செல்லத்தம்பி அவர்கள் உடனே ஏற்கனவே வாங்கி வைத்திருந்த ஒரு சோடாவை உடைத்து அவரிடம் கொடுக்கச் சென்றார்.
அவர் அதை மறுத்துவிட்டு குடிக்க தண்ணீர் கொண்டுவரும்படி கேட்டார்.
ஊடனே அருகிலிருந்து எமது உறவுக்காரர் ஒருவர் வீட்டில் இருந்து ஒரு பெரிய கிளாசில் தண்ணீர் கொண்டு வந்து கொடுக்கப்பட்டது.
அவர் எந்தவித தயக்கமும் இல்லாமல் வாங்கி மடமடவென்ற குடிக்க எனக்கு அருகில் இருந்த எனது அப்பு(தாத்தா) சொன்னார்....
'இவர் எந்தப் பெரிய மனிசன்.இந்த தொகுதியின் எம்பி.. எங்களட்டை வந்து தண்ணி வாங்கி குடிக்கிறார். இவரல்லவோ மனிசன்.. தமிழ் தமிழர் எண்டு கத்திற தமிழரசு தமிழ் காங்கிரஸ் கட்சிக்காரங்கள் இப்படி எங்களட்டை தண்ணிவாங்கி குடிப்பாங்களோ?இல்லை எங்கடை ஊருக்குத்தான் வருவாங்களோ?;;' என்று.
எனது அப்பு சென்ன அந்த வார்த்தை பசுமரத்து ஆணி போல என் பிஞ்சு மனதில் சுறக்கென்று தைத்தது
(தொடரும்)

கருத்துகள் இல்லை: