வியாழன், 16 ஆகஸ்ட், 2012

நினைவழியா வடுக்கள்-16


அன்று எங்கள் ஊரில் கூட்டம் நடத்த வந்தவர் எங்களுரை உள்ளடக்கிய பருத்தித்துறை தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து பொன். கந்தையாவாகும்.
ஏற்கனவே ஒன்றிரண்டு கூட்டமேடைகளில் அரசியல் தலைவர்கள் என்று சொல்லப்பட்டவர்கள் கைகளை ஆட்டி கண்களை உறுட்டி பல்லைக்கடித்து வீராவேசமாக கத்துவது போலப் பேசியதை தான் நான் பார்த்திருக்கிறேன்.அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று அப்போது எனக்கு புரிவதில்லை.காத்தான் கூத்து அல்லது அரிச்சந்திரா கூத்து பார்க்க செல்லும் போது ராசா ராணி வேடமணிந்தவர்கள் வாய் ஓயாமல் பாடிக்கொண்டிருப்பதை பார்த்திருக்கிறன்.இது பற்றி நான் எனது
தாத்தாவிடம் கேட்ட போது அவர் ‘அது கூத்து. கூத்தெண்டால் அப்படித்தான் பாட வேண்டும்’என்று எனக்கு சொல்லியிருந்தார்.
ஆது போல அரசியல் கூட்ட மேடைகளில் நடக்கும் பேச்சுகளை பார்த்த போது ‘இது பேச்சு, பேச்சென்றால் இப்படித்தான் இருக்கும்’ என்ற ஒரு எண்ணம் என்மனதில் படிந்திருந்தது.
ஆனால் பொன் கந்தையா அவர்கள் எந்தவித ஆர்பாட்டமும் இல்லாமல் அனைவருக்கும் புரியும் விதத்தில்  பேசுவார் என்று எனது தாத்தா சொன்ன போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது மட்டுமல்லாமல் அவர் மீதான ஒருவித ஈர்ப்பையும் எனக்கு எற்படுத்தியது.
அவர் எங்களுரில் பேசிய போது”‘தோழர்களே! உங்களுடைய பூட்டன்மாரிடம் ஒரே ஒரு நாலுமுழ வேட்டி இருந்தது. அதன் நுணியில் ஒருபகுதியை கிழித்து அவர்கள் கோவணமாக கட்டிவிட்டு மீதியை உடுத்திக் கொண்டார்கள். உங்கள் பூட்டிமாரிடம் ஒரே ஒரு புடவை மட்டும் இருந்து.மற்ற பெண்கள் அணியும் உள்பாவாடையோ மற்ற எதுவுமோ அவர்களிடம் இருக்கவில்லை.அந்தச் சேலையை அவர்கள் மானத்தை மறைக்க உடம்பில் சுற்றிக் கொண்டார்கள்.மாதக்கணக்காக வருசக் கணக்காக அவர்கள் அந்த ஒற்றைத் துணியைத்தான் கட்டிக்கொண்டு திரிந்தார்கள்.அவர்கள் தொட்டால் தண்ணீர் அழுக்காகிவிடும் என்று கிணறுகளிலும் குளங்களிலும் தண்ணிர் அள்ளவும் குளிக்கவும் தடைவிதித்தார்கள். அதனால் அவர்கள் அழுக்காக இருந்தார்கள்.அவர்களைப் பார்த்து ஊத்தையர்கள் (அழுக்கானவர்கள்) என்றார்கள்.மழைவந்தால் தான் அவர்களின் உடம்பில் தண்ணிர்; படும் என்ற நிலை அவர்கள் காலத்தில் இருந்தது.
உங்களுடைய தாத்தாமாரிடம் 2 வேட்டிகள் இருந்தன?தனியான கோவணங்கள் கூட இருந்தன.உங்கள் பாட்டிமாரிடம் 2 சேலைகள் இருந்தன.ஆனால் அவர்களிடம் சால்வைகளோ ரவிக்கைகளே இருக்கவில்லை.ஏனென்றால் அவர்கள் அவற்றை அணிய தடைவிதிக்கப்பட்டிருந்து.
அவர்களுக்கும் கிணறுகளிலும் குளங்களிலும் தண்ணீர் அள்ளவும் குளிக்கவும் தடை விதிக்ப்பட்டிருந்து.அவர்கள் தங்களுக்கென்று தண்ணிர் அள்ளவும் குளிக்கவும் துரவுகளை(கிணறாக கட்டப்படாத நிர் நிலை)யும் தோண்டினார்கள்.இந்த நிலைமை உங்களுடைய அப்பாமார்களுடைய காலத்திலும் இருந்தது
இன்று உங்களிடம் பல வேட்டிகளும் சேலைகளும் சால்வைகளும் ரவிக்கைகளும் பாவாடைகளும் கூட இருக்கின்றன.கிணறுகள் கூட நீங்கள் கட்டி இருக்கிறீர்கள்.இவையெல்லாம் உங்களுக்கு கிடைத்த சலுகைகளோ வரப்பிரசாதங்களே அல்ல! இவையெல்லாம் உங்களுடைய நீண்ட போராட்டத்தால் உழைப்பால் உங்களுக்கு கிடைத்தவை.
உங்களுடைய பூட்டன்மார் குளிப்பதற்கும் தோழில் துண்டு போடுவதற்கும் தடைவிதிக்கப்பட்டபோது அதை எதிர்க்க வழிதெரியாது அவர்கள் அடங்கிப்போனார்கள்.உங்களுடைய தாத்தாமாரும் தந்தைமாரும் தோழில்போடும் சால்வைகளை வாங்கினார்கள்? ஆனால் அதை தோழில் போட்டுக்கொண்டு வெளியில் செல்வதற்கு வழியற்றவர்களாக வழிகாட்டுபவர்கள் அற்றவர்களாக இருந்தார்கள்.துரவை தோண்டிய அவர்களிடம் அதை கிணறாக கட்டுவதற்கு வசதி இருக்கவில்லை.அவர்களும் ஒருவகையில் இதெல்லாம் தலைவிதி என்று அடங்கிப் போனார்கள்.
இன்று உங்களிடம் எல்லாம் இருக்கிறது.பல வேட்டிகளையும் பல சேலைகளையும் வாங்கக் கூடிய அளவுக்கு பொருளாதார வசதி உங்களுக்கு இருக்கிறது.இன்று நீங்கள் தைரியமாக தோழில் துண்டைப்போட்டுக் கொண்டு வெளியில் போகலாம்.சேட்டுக் கூட போட்டுக்கொண்டு போகலாம் .பெண்கள் மேலாடைகளை அணியலாம்;.ஆனால் நீங்கள் இதையெல்லாம் செய்யக் கூடாது என்று ஒரு கூட்டம் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறது.அவர்களுக்கு பயந்து சில இடங்களிலே அவர்கள் உங்களை மிரட்டும் போது நீங்கள் தோழிலுள்ள துண்டை எடுத்து கக்கத்தில் வைத்துக்கொண்டு செல்கிறீர்கள்.
உங்களை ஆலயங்களுக்குள்; செல்லக் கூடாது என்றும் உணவங்களில் சமத்துவமாக அமர்ந்து உணவுண்ணக் கூடாது என்றும் அந்தக் கூட்டம் தடுத்துக் கொண்டுதான் இருக்கிறது.
இந்த நிலைமை உங்களுடைய பிள்ளைகளுக்கும் இருக்க வேண்டுமா? ஆவர்களும் போத்தலில் தான் தேத்தண்ணி (தேனீர்) குடிக்கவேண்டுமா?.உங்களுடைய பிள்ளைகளுடைய காலத்தில் இந்தக் கொடிய அடக்குமுறை முற்றாக ஒழிக்கப்பட்டிருக்க வேண்டும்.அதற்காக நீங்கள் இப்போது போராடவேண்டும். அதற்கு முதலில் நீங்கள் பொருளாதரீதியாக விடுதலை பெறவேண்டும்.உங்களுக்கும் உங்களுக்கு மூத்த தலைமுறையினருக்கும் மறுக்கப்பட்ட கல்வியை நீங்கள் உங்களது பிள்ளைகளுக்கு பெற்றுக்கொடுக்கவேண்டும்.பொருளாதாரமும் கல்வியும் மட்டும் தான் நீங்கள் மற்றவர்களுக்கு சரிநிகர்சமானமாக வாழ்வதற்கு உங்களுக்கு கைகொடுக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள்.’என்று  பேசியிருந்தார். அந்தப் பேச்சு கொம்யூனிஸ்ட் கட்சி பத்திரிகையில் வந்திருந்தது. அதை எனது தந்தை முக்கியமான ஆவணத்தைப் போன்று பத்திரப்படுத்தி வைத்து அடிக்கடி என்னை எடுத்துப் படிக்குமாறு சொல்வார். அதனால் இந்த சொற்பொழிவு எனக்கு மனப்பாடமாகிவிட்டது.
இங்கிலாந்தின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் உயர் பட்டப்படிப்பு படித்திருந்த பொன்.கந்தையா அங்கிருந்து தாயகம் திரும்பியபோது துடிப்புள்ள ஒரு இளம் கொம்யூட்டாக இருந்தார்.
அவரது காலகட்டத்தில் பிரித்தானிய ஒக்போட் பல்கலைக்கழக உயர் கல்வியை முடித்து விட்டு தாயகம் திரும்பிய ஏனைய யாழ் மையவாத அதிகார வாக்கத்தினரின் வாரிசுகளைப் போல தனது படிப்பையும் பட்டத்தையும் அவர் தனது சமூக அந்தஸ்த்தை பிரதிபலிப்பதற்கான கருவியாக அல்லது தனது பிழைப்புக்கான மூலதனமாக பயன்படுத்த அவர் விரும்பவில்லை.மாறாக தான் கற்ற கல்வியைக் கொண்டு தாயகத்தில் தான் வாழ்ந்த சூழலை அந்தச் சூழலில் வாழ்ந்த மக்களை அவர் மாற்ற விரும்பினார்.
அரசியல் என்பது வெறும் மேடைப்பேச்சல்ல-அது அடிமட்ட மக்களிடத்தில் களப்பணி செய்வதில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என்பதை அவர் செயலில் செய்து காட்டினார்.
அழுவதும் தொழுவதும் அடங்கிக் கிடப்பதும் தமக்கு விதிக்கப்பட்டிருந்த விதியென்றிருந்த மக்களை எழுவதும் நிமிர்வதும் எதிர்த்து நிற்பதும் அதன் மூலம் அடக்குமுறைகளை தகர்த்தெறிவதும் சாத்தியம் என்றும் அது எழுதப்பட வேண்டிய புதிய விதி என்றும் அவர் உணர வைத்தார்.
சிறீலங்காவின் வெஸ்ட்மினிஸ்டர் மொடல் ஒற்றையாட்சி நாடாளுமன்ற அமைப்புக்குள் சிங்கள அதிகார வர்க்கத்துடன் பேரம் பேசுவதன் மூலம் தமிழீழம் பெற்றுவிடலாம் என்று யாழ் மேட்டுக்குடி அதிகாரவர்க்கம் கூறியதை நிராகரித்து போலியான இலங்கை தேசியம் பேசும் இந்த ஆட்சிமுறையை தூக்கி எறிந்து தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் மாற்று ஆட்சிமுறையை உருவாக்குவதன் மூலந்தான் ஒடுக்கப்படும் தமிழ் மக்கள் தங்களது உரிமைகளை வென்றெடுக்க முடியும் என்று அவர் வாதிட்டார்.
தமிழர்கள் கை கோர்க்க வேண்டியது சிங்கள அதிகார வர்க்கத்தால் ஒடுக்கப்படும் சிங்கள பாட்டாளி மக்களுடனேயே அன்றி தங்களது அதிகாரத்தை தக்க வைப்பதற்காக பௌத்த சிங்கள தூய்மை வாதத்தை கையில் எடுத்துள்ள சிங்கள இனவாதிகளுடன் அல்ல என்று அவர் எடுத்துரைத்தார்
சிங்கள அதிகார வர்க்கம் ஆட்சியமைக்க துணை போவதும் அந்த ஆட்சியை வலுப்படுத்த உதவுவதும் எதிர்காலத்தில் அந்த அமைப்பு தமிழர்களுக்கு எதிரான சர்வவல்லமை படைத்த பேரினவாத அமைப்பாக மாறும் என்றும் அவர் எச்சரித்தார்.
பொன் கந்தையா அரசியலில் பிரவேசித்த காலகட்டத்தில் யாழ் குடாநாடு முழுவதும் சாதி வெறி கோலாச்சிக்கொண்டிருந்தது. தீண்டாமைப் பேய் பட்டி தொட்டி எங்கும் தாண்டவமாடிக்கொண்டிருந்தது.
ஈவிரக்கமற்ற சுரண்டலும் சட்ட ரீதியாக உலகளவில் ஒழிக்கப்பட்ட அடிமை குடிமை முறையும் யாழ்ப்பாணக் குடாநாட்டில் பகிரங்கமாக கடைப்பிடிக்கப்பட்டு வந்தன.
பிரித்தானிய அரசு இதுபற்றி ஆராய்வதற்காக சோல்பரி பிரபு தலைமையில் ஒரு ஆணைக்குழுவை நியமிக்க முற்பட்ட போது யாழ் அதிகார வர்க்கத்தை பிரதிநித்துவப்படுத்தும் 48 அமைப்புக்கள் இது தேச வழமை சட்டத்துக்கு எதிரானது என்று எதிர்ப்புத் தெரிவித்திருந்தன. தமிழ் மக்களுடைய நாடாளுமன்றப் பிரதிநிதியாக இருந்தவர்கள் இந்த ஆணைக்குழு அமைக்கப்படுவதை தடுப்பதற்கு தங்களாலான அனைத்து முயற்சிகளையும் செய்தார்கள்.
இதையும் மீறி அந்த ஆணைக் குழு அமைக்கப்பட்டு உண்மை நிலையை அறிவதற்கு சோல்பரி பிரபு யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த போது, யாழ் அதிகார வர்க்கம் அவருக்கு பிரமாண்டமான வரவேற்பைக் கொடுத்து யாழ்ப்பாணம் நல்லூர் பருத்தித்துறை முதலான நகரப்பகுதிகளுக்கு அழைத்துச் சென்று காண்பித்துவிட்டு அவரை திசைதிருப்பப் பார்த்தது.
இது தற்போது மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் வன்னி மக்களின் உண்மை நிலையை அறிய அங்கு செல்லும் வெளிநாட்டு பிரதிநிதிகளை மேள தாளம் முழங்க மாலை மரியாதையுடன் வரவேற்று தாங்கள் விரும்பிய இடங்களுக்கு மட்டுமே அழைத்துச் சென்று காட்டுவதற்கு ஒப்பானதாகவே இருந்தது.
இவர்களின் இந்த கபடத்தனத்தை சிறுபான்மைத் தமிழர் மகாசபையைச் சேர்ந்த எம். சி. சுப்பிரமணியம்,ஜேம்ஸ், வீ.ரீ. கணபதிப்பிள்ளை ஆகியோர் பருத்தித்துறை வாடிவீட்டிýல்(அரச விருந்தினர் விடுதி) தங்கியிருந்த சோல்பரி பிரபுவுக்கு எடுத்துச் சொல்லி அவரை நெல்லியடியிலுள்ள கன்பொல்லைக் கிராமத்துக்கு நேரடியாக அழைத்துச் சென்று அழைத்துச்சென்று காண்பித்தனர்.
சோல்பரி பிரபு யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்வதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் அந்தக் கிராமம் சாதி வெறியர்களால் தீக்கிரையாக்கப்பட்டிருந்தது.முதியவர்கள் பெண்கள் குழந்தைகள் என்று வயது பால் வேறுபாடின்றி அங்கிருந்த மக்கள் சாதிவெறியர்களால் தாக்கப்பட்டிருந்தனர்.அதை விட அந்தக் கிராமம் எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படாமல் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்து.
இதை நேரில் பார்த்து விசனமடைந்த சோல்பரி பிரபு அந்தக் கிராமம் தீக்கிரையாக்கப்பட்டதற்கு என்ன காரணம் என்று அங்கிருந்த அரச அதிகாரிகளை வினவினார்.
மேட்டுக்குடி அதிகார வர்க்கத்தை சேர்ந்த அந்த அதிகாரிகள் அது அந்தக் கிராமத்தை சோந்தவர்களுக்குள் ஏற்பட்ட தனிப்பட்ட பகையால் நேர்ந்த தென்றும் குடிகாரர்களான அவர்கள் குடித்துவிட்டு தங்களுக்குள் மோதிக்கொண்டு குடிசைகளையும் எரித்துவிட்டதாக கூசாது பொய் சொன்னார்கள்.
பாதிக்கப்பட்ட அந்த கன்பொல்லை கிராம மக்கள் இந்த அக்கிரமத்தை பார்த்து வாயடைத்து நின்ற போது சோல்பரி பிரபுவை அங்கு அழைத்துச் சென்ற சிறுபான்மைத் தமிழர் மகாசபை பிரதிநிதிகள் அந்த அதிகாரிகள் பொய் சொல்கிறார்கள் என்றும், சாதி வெறியர்களான இவர்கள் ஒருபோதும் நீதியாக நடந்து கொள்வதில்லை என்றும் அவருக்கு எடுத்துரைத்தனர்.
‘ஐயா இவர்கள் இங்கிருப்பவர்கள் இல்லை. இங்கிருக்கும் உண்மை நிலை இவர்களுக்குத் தெரியாது.இவர்கள் இந்தக் கிராமத்தவர்கள் சொல்வதை வைத்துக் கொண்டு உங்களுக்கு தவறான தகவலை தருகிறார்கள்’ என்று அந்த மேட்டுக்குடி அதிகாரிகள் அதற்கு விளக்கம் கூறியபோது ‘இல்லை ஐயா இவர்கள் சொல்வது தான் பொய் அவர்கள் சொல்வது உண்மை’ என்று ஒரு இளைஞர் குறுக்கிட்டு பதில் சொன்னார்.
ஆவர் வேறு யாருமல்ல பொன்கந்தையாவே தான்.
அவரது சுத்தமான ஆங்கில உச்சரிப்பை பார்த்து சோல்பரி பிரபு வியந்த போது, ‘அந்த பிரதேசத்தை சேர்ந்த தான் ஒக்ஸ்போட் பல்கலைக் கழகத்தின் பட்டதாரி என்று அவருக்கு தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட பொன் கந்தையா யாழ்ப்பாணக் குடாநாட்டில் நிலவும் சாதிக் கொடுமைகள் பற்றியும் அவை ஒழிக்கப்படவேண்டியதன் அவசியம் பற்றியும் விபரமாக எடுத்துக் கூறினார்.
தீண்டாமையும் பாகுபாடும் தனிமனி;தர்கள் மீது மட்டுமல்லாமல் அவர்கள் வாழும் கிராமங்கள் மீதும் காட்டப்படுவதாகவும் அதற்கு கன்பொல்லை கிராமம் ஒரு எடுத்துக்காட்டு என்றும் அவர் குறிப்பி;ட்டார்
கன்பொல்லை போன்ற கிராமங்களுக்கு மின்சாரம் சுத்தமான குடி தண்ணீர் அடிப்படை மருத்துவ வசதிகள் கல்வி வசதிகள் போக்குவரத்து வசதிகள் என்பன திட்டமிட்டு மறுக்கப்படுவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
கரவெட்டி பகுதில் உள்ள ஒரு பொதுக் குளத்தில் கன்பொன்லைக் கிராமத்தை இளைஞர்கள் சிலர் குளித்ததாலேயே அவர்களது கிராமம் எரியூட்டப்பட்டதாகவும் அந்த கிராம மக்கள் தாக்கப்பட்டதாகவும் இதற்கான முறைப்பாட்டைக் கூட பதிவதற்கு காவல்துறையினரும் அரச அதிகாரிகளும் மறுத்துவருவதையும் அவர் அம்பலப்படுத்தினார்.
இதே கேட்டு கோபமடைந்த சோல்பரி பிரபு அங்கு வந்திருந்த யாழ் அரசாங்க அதிபரிடம் இது பற்றி உடனடியாக விசாரணை நடத்தி அரசாங்கத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்..
சோல்பரி பிரபுவை ஏமாற்றி அவரது தலைமையிலான ஆணைக்குழுவையும் சமாளித்துவிடலாம் என்று நினைத்திருந்து யாழ்ப்பாண அதிகார வர்க்கத்துக்கு இந்தச் சம்பவம் பேரிடியாக அமைந்துவிட்டது.
சரளமான ஆங்கிலத்தில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் நிலவும் உண்மை நிலைமைகளை சோல்பரி பிரபுவுக்கு எடுத்துரைத்த பொன் கந்தையா மீது அவர்களுக்கு அளவிட முடியாத ஆத்திரம் ஏற்பட்டது.அவரை ஒரு துரோகியாகவே அவர்கள் பார்த்தார்கள்.
‘ஒரு சுத்த வெள்ளாளன் ஒருபோதும் கீழ் சாதி நாய்களுக்காக வக்கலாத்து வாங்க மாட்டான்’ என்று அவர்மீது வசைபாடினார்கள்.
கன்பொல்லை கிராமத்துக்கு வந்திருந்த மேட்டுக்குடி சண்டியர்கள் அவருக்கு அடிக்கச் சென்றார்கள்.
கன்பொல்லை கிராமத்து இளைஞர்களும் அந்த சாதி வெறியர்களை தடுத்து பொன் கந்தையாவை காப்பாற்றுவதற்காக கத்தி கோடாரி போன்ற ஆயதங்களை தூக்கியவாறு திரண்டார்கள்.
நிலைமை விபரீதமாகப் போவதைக் கண்ட பொன் கந்தையா கன்பொல்லை இளைஞர்களை அமைதியாக இருக்கும்படி சொல்லிவிட்டு தனக்கு அடிக்க வந்த மேட்டுக்குடி சண்டியர் தலைவனின் தாடையில் ஓங்கி ஒரு குத்துக் குத்தியதோடு அவனது கையைப் பிடித்து மடக்கி அவனை நிலைத்தில் குப்புற விழுத்தினார்.
நெல்லியடிப் பகுதி சண்டியன் என்று பெயரெடுத்திருந்த அவன் பற்கள் உடைந்து வாயில் இருந்து இரத்தம் வழிய மண்கௌவிய அந்தக் காட்சியைப் பார்த்து ஏனைய சண்டியர்களும் அவர்களை அழைத்து வந்த சாதிமான்களும் திகைத்துப் போய் நிற்க, ‘நான் லண்டனில் அரசியலும் பொருளாதாரமும் மட்டும் படிக்கவில்லை. குத்துச் சண்டையும் பழகியிருக்றேன்.இதோடை உந்த அடிக்கிறது வெட்டுறது வெருட்டிறது எல்லாத்தைம் விடுங்கோ’ என்று பொன் கந்தையா கோபமாகச் சொன்னார்.
அவருக்கு அந்தச் சண்டியர்கள் கோபத்தில் கைவைக்க அது சோல்பரி பிரபுவின் காதுக்கு எட்டினால் பிரச்சனையாகிவிடும் என்று பயந்த மேட்டுக்குடி கனவான்கள் இடையில் புகுந்து சண்டியர்களை ஒப்புக்கு திட்டி
அனுப்பி வைத்தார்கள்.
பொன் கந்தையாவும் கன் பொல்லை இளைஞர்களைப் பார்த்து ‘நீங்கள் எப்பவும் அடிதடி வெட்டுக்கொத்தில் ஈடுபடுகிற வன்முறையாளர்களாக இருக்க வேண்டும் என்றுதான் அவர்கள் (மேட்டுக்குடியினர்) விரும்புகிறார்கள்.நீங்கள் எடுத்ததற்கெல்லாம் சண்டை பிடிக்கிறது,தேவையில்லாத விடயங்களுக்கெல்லாம் ஆயுதங்களை தூக்கிறது எல்லாத்தையும் இனியாவது நிப்பாட்டுங்கோ,நீங்கள் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கு’ என்று கூறிவிட்டுச் சென்றார்.
பொன் கந்தையாவிடம் அடியாவாங்கி அவமானப்பட்டு திரும்பிய மேட்டுக்குடி சண்டியர் தலைவன் நிறைய மது அருந்திவிட்டு நெல்லியடி சந்தியில் இருந்த சங்குனி கடைக்கு (மலையாளி ஒருவரின் தேனீர் கடை) முன்னால் நின்று அந்த வழியால் சொல்வேரை தூசண வார்த்தைகளால் திட்டி இம்சித்து அட்காசம் பண்ணிக் கொண்டிருந்தான்.அவனை அவனது அடிப்பொடிகள் சமாதானப்படுத்த முயன்று கொண்டிருந்தனர்.
அந்த நேரம் பார்த்து கன்பொல்லை கிராமத்துக்கு வந்திருந்த சிறுபான்மைத் தமிழர் மகாசபையைச் சேர்ந்த எம். சி. சுப்பிரமணியம்,ஜேம்ஸ், வீ.ரீ. கணபதிப்பிள்ளை ஆகியோர் யாழ்ப்பாணத்துக்கு திரும்பிச் செல்வதற்கு பேருந்து எடுப்பதற்காக நெல்லியடி சந்திக்கு வந்தனர்.
அப்போது சங்குனி கடையில் இருந்து தேனீர் அருந்திக் கொண்டிருந்த சாதி வெறியர்கள் ‘டேய் உவங்கள் தான்டா உந்த கீழ் சாதி நாய்களின்டை தலைவர்கள். உவங்களை அடிச்சுக் கொல்லுங்கோடோ’ என்று கத்தினார்கள்.
ஏற்கனவே கோபத்தில் அங்கிருந்து அட்டகாசம் செய்துகொண்டிருந்த மேட்டுக்குடி சண்டியர் கூட்டம் அவர்கள் மூவரையும் அடித்து உதைத்து சித்திரவதை செய்ததோடு அவர்கள் கட்டியிருந்த வேட்டியை உருவி அதைக் கொண்டு அவர்களை அங்கிருந்த மின் கம்பத்தில் கட்டி வைத்தது.
அத்துடன் அவர்கள் மீது மண்ணெண்ணையை ஊற்றி உயிருடன் எரித்துக் கொல்லவதற்கும் அந்த சாதிவெறிக் குண்டர்கள் தயாரானார்கள்.
(தொடரும்)
பின் குறிப்பு:- (1949 ல் நடந்த இந்தச் சம்பவம் தங்களது அரசியல் அசிங்கத்தையும் கபடத்தனத்தையும் வெளிக்கொண்டுவந்துவிடும் என்பதால் யாழ் மேட்டுக்குடி அரசியல்வாதிகளால் மூடிமறைக்கப்பட்டுவிட்டது.எற்கவே தோழர் டானியல் மட்டும் ஒரு தடவை இதை தனது அனுபவக் குறிப்பில் எழுதியிருந்தார். இந்த சம்பவத்தை நேரடியாகப் பார்த்த சாட்சியான எனது அப்பு இதை எனக்கு ஏற்கனவே சொல்லியிருந்தார்.அந்தப் பகுதியை சோந்த மறைந்த பொதுவுடமைக் கட்சித் தோழர் சிவராசாவும் 1990 களில் இதைப்பற்றி சொல்லியிருந்தார்)

2 கருத்துகள்:

செயபால் சொன்னது…

இதன் தொடர்ச்சி எங்கே இருக்கிறது?

செயபால் சொன்னது…

இதன் தொடர்ச்சி எங்கே இருக்கிறது?