செவ்வாய், 21 ஆகஸ்ட், 2012

நினைவழியா வடுக்கள்-17


நினைவழியா வடுக்கள்-17
சாதி வெறிக் குண்டர்கள் சிறுபான்மைத் தமிழர் மாகாசபை பிரதிநிதிகளை முற்றுகையிட்டுத் தாக்குவதை கண்ட கன்பொல்லை இளைஞர்கள் அவர்களை மீட்பதற்கு தங்களது ஆட்களை திரட்டிவருவதற்கு தங்கள் கிராமத்தை நோக்கி ஓடினார்கள்.சிலர் ஒடிச் சென்று பொன் கந்தையாவுக்கும் தகவல் தெரிவித்தார்கள்.
அவரும் தன்னுடன் பேசிக்கொண்டிருந்த இளைஞர்கள் சிலரையும் அழைத்துக் கொண்டு நெல்லியடிச் சந்திக்கு விரைந்தார்.
அதிஷ்டவசமாக அதற்குள் கரணவாய் பகுதில் இடம்பெற்ற மரணவிசாரணை ஒன்றுக்காக காவல்துறையினரோடு அவர்களது வாகனத்தில் அவ்வழியால் சென்ற மருத்துவர் பஸ்தியான் என்பவர் தலையிட்டு சிறுபான்மைத் தமிழர் மகாசபையைச் சேர்ந்த எம். சி. சுப்பிரமணியம்,ஜேம்ஸ், வீ.ரீ. கணபதிப்பிள்ளை ஆகிய மூவரையும் காப்பாற்றினார்.
அதற்குள் பொன் கந்தையாவும் அங்கு வந்துவிட இந்தச் சம்பவத்துக்கு காரணமான மேட்டுக்குடியினரால் காவல்துறைக்கு கையூட்டுக் கொடுத்து நிலைமையை சமாளிக்க முடியவில்லை.
ஈற்றில் குண்டர் படைத்தலைவன் அவனது சகாக்கள் மூவர் சங்குனிகடையில் இருந்து அவர்களை ஏவிவிட்ட மூவர் என்று 7 பேர் கைது செய்யப்பட்டு பருத்தித்துறை நீதி மன்றத்தில் நிறுத்தி தண்டிக்கப்பட்டனர்.
அவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கப்பட்டது என்ற விபரம் தெரியவில்லை.
ஆனால் இந்தச் சம்பவம் தான் பொன் கந்தையா தீவிரமான அரசிலில் ஈடுபடுவதற்கு காரணமாக அமைந்தது.
ஒரே இனத்தை சேர்ந்த ஒரே மொழியைப் பேசுகின்ற ஒரே கலாச்சார பண்பாட்டு மூலத்தைக் கொண்ட மக்களை அதே இனத்தை சேர்ந்த ஒரு சாரார் உயிரோடு தீயிட்டு எரித்துக்கொல்லும் அளவுக்கு வெறிபிடித்து அலைகிறார்கள் என்றால் அதற்கு காரணமான அந்தச் சாதி முறைமை ஒழிக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் அவருக்குள் எழுந்தது.
சிங்களவர்களும் சிங்களக் கட்சித்தலைவர்களும் தழிர்களின் எதிரிகள் என்று மேடைகளில் முழங்கிவிட்டு யாழ் குடாநாட்டுக்கு வரும் ஆளும் கட்சி (ஐக்கிய தேசியக் கட்சி-அப்போது சிறீலங்கா சுதந்திரக்கட்சி உருவாகவில்லை) பிரமுகர்களையும் அவர்களது பரிவாரங்களையும் மாலை மரியாதையோடு வரவேற்று உபசரிக்கும் அதேநேரம் தங்களுடைய இனத்தைச் சேர்ந்த தாங்கள் பேசுகின்ற அதே மொழியை பேசுகின்ற ஒரு சாராரை ஆள் வைத்து அடிப்பிக்கும்- அவர்களது தலைவர்களை உயிரோடு எரிப்பிக்கத் துணியும் யாழ் மேட்டுக்குடி தலைவர்களின் அயோக்கியத்தனங்களை தோலுரித்துக்காட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவும் அவர் கருதினார்.
முதல் வேலையாக ஆண்டான் அடிமை முறையிலான இந்த சமூக அமைப்பு மாற்றப்பட வேண்டும் தீண்டாமை கொடுமை ஒழிக்கப்பட வேண்டும் என்ற கருத்தியல் உடன்பாடு கொண்ட படித்த இளைஞர்களை அவர் ஒன்று திரட்டினார்.
அதன் பின்னர் கிழக்கே வல்லிபுரக்குறிச்சி மற்றும் சந்தாதோட்டத்தில் ஆரம்பித்து மேற்கே கம்பர்மலை கெருடாவில் தெற்கே கன்பொல்லை கரணவாய் ஈறாக பருத்தித்துறை நாடாளுமன்றத் தொகுதியில் சாதிவெறியால் பாதிக்கப்பட்ட அனைத்து கிராமங்களுக்கும் அவர் சென்றார்.
ஒவ்வாரு கிராமங்களிலும் வாழும் மக்களின் வாழ்நிலை மற்றும் அவர்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகளை பட்டியலிட்டார்.அந்தக் கிராமங்களில் உள்ள வழங்கள் என்ன? அவை யாருடைய கைகளில் இருக்கின்றன? அவற்றை அந்தக் கிராம மக்கள் பயன்படுத்த தடையாக இருக்கக் கூடிய காரணிகள் என்ன? ஏன்பவற்றையெல்லாம் அவர் ஆராய்ந்தார்.
பொதுவாக அந்தக் காலகட்டத்தில் வடமாரட்சி(அப்போது ஒன்றுபட்ட பருத்தித்துறை நாடாளுமன்றத் தொகுதி) பிரதேசத்தில் வெள்ளாளர்களுக்கு அடிமை சேவகம் செய்யத்தக்க விதத்திலேயே சமூக பொருளாதாரக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டு அது தேச வழமை சட்டத்தின் கீழ் வலுப்படுத்தப்பட்டிருந்தது.
கிராம அமைப்புக்களில் கூட வெள்ளார்களின் குடியிருப்புகள் போக்குவரத்து வசதி குடிநிர் வசதி முதலான அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ள இடங்களில் அமைக்கப்பட்டிருந்தது.பஞ்சமர்கள் எனப்படும் சாதிரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களின் குடியிருப்புக்கள் ஊரின் ஒதுக்குப்புறத்திலுள்ள சதுப்பு நிலங்கள் அல்லது தரிசு நிலங்களில் அமைக்கப்பட்டிருந்தன.பெரும்பாலும் இந்தக் குடியிருப்புக்கள் போக்குவரத்து வசதியற்ற குச்சொழுங்கை (சிறுபாதை)களை மட்டுமே கொண்டிருந்தன.சுத்தமான குடி தண்ணீர் கூட இந்தக் குடியிருப்புகளில் கிடைப்பதில்லை.
நிலக்கிழார்கள் எனப்படும் ஒவ்வொரு வெள்ளாளக் குடும்பத்துக்கும் பஞ்சமர் குடும்பங்கள் தொண்டூழியம் செய்வது கட்டாயமாக்கப்பட்டிருந்தது.
ஓரு வெள்ளாளரின் நிலத்தை வாரம் எனப்படும் குடிமை குத்தகைக்கு (குடிமை குத்தகை என்பது நிலத்தை உழுது விதைக்கும் பஞ்சமர் அந்த நிலத்தில் விளையும் விளைச்சலில் அரைவாசியை நிலவுடமையாளருக்கு கொடுக்க வேண்டும்.இது சில இடங்களில் மூன்றில் ஒரு பங்காக இருந்தது.) எடுக்கும் பஞ்சமர் குடும்பம் ஒவ்வொரு நாளும் அந்த வெள்ளாள நிலக்கிளாரின் வீட்டுக்குச் சென்று அவர்களது ஆடு மாடு முதலான கால் நடைகளை பராமரிக்க வேண்டும்.அவற்றுக்கு உணவு கொடுக்க வேண்டும்.இதைவிட ஓலை வெட்டுவது கதியால் (மரக்குச்சிகள்)வெட்டுவது வேலி அடைப்பது என்று அவ்வப்போது அவர்களுக்கு தேவையான வேலைகளை கூலியின்றி செய்து கொடுக்க வேண்டும். பஞ்சமர் குடும்பப் பெண்கள் அந்த நிலக்கிளாரின் வீட்டு முற்றங்களை ஒவ்வாரு நாள் காலையிலும் கூட்டி பெருக்கி தண்ணீர் தெளிக்க வேண்டும்.
கோவியர் சாதி பெண்கள் அவர்கள் வீட்டுக்கு வந்து பாத்திரம் கழுவிக் கொடுப்பது அரிசி மா இடித்துக் கொடுப்பது நெல்லுக் குத்திக் கொடுப்பது
முதலான வேலைகளை செய்து கொடுக்க வேண்டும்.பஞ்சமர் சாதிப் பெண்கள் இந்த வேலைகளை செய்ய அனுமதிக்கப்படாததால் கோவியர் சாதி பெண்கள் இதை செய்தார்கள்.நாவிதர்கள் அவர்கள் வீட்டுக்கு வந்து சவரம் செய்ய வேண்டும் அல்லது முடி வெட்ட வேண்டும்.வெள்ளாருக்கு முடி வெட்டும் நாவிதர் ஏனைய சாதியினருக்கு முடிவெட்டுவது தடை செய்யப்பட்டிருந்தது.
வண்ணார் எனப்படும் சலவைத் தொழிலாளர்களும் வெள்ளார் வீட்டுக்கு வந்து அழுக்குத் துணிகளை எடுத்துச் சென்று சலவை செய்துவிட்டு கொண்டு வந்து கொடுக்க வேண்டும்.அவர்களும் ஏனைய சாதியினருக்கு சலவை செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது.
வெள்ளாள நிலக்கிளார் வீட்டு பெண்ணுக்கு திருமணம் நடக்கும் போது அவளுடைய சீதண வரிசையில் (வரதட்சணை) அவளது தாய் வீட்டில் சேவகம் செய்த நளவர் அல்லது பள்ளர் சாதிப் பெண் ஒருவரையும் கோவியர் சாதிப் பெண் ஒருவரையும் சேர்ப்பது கட்டாய மாக்கப்பட்டிருந்தது. அது போலவே ஒரு நளவர் அல்லது பள்ளர் அந்த திருமணத்துக்கு கொடுக்கப்பட்ட சீர்வரிசைகளை தடி ஒன்றின் இரு முனைகளிலும் கட்டித் தொங்க விட்டவாறு காவிச் செல்ல வேண்டும். இது கா காவுதல் என்று அழைக்கப்பட்டது.
அடுத்து ஓரு வெள்ளாள நிலக்கிளார் வீட்டில் மரணம் நிகழும் போது அந்த உடலத்தை சுடுகாட்டுக்கு கொண்டு செல்லும் வரை பராமரிப்பதற்கு ஒரு கோவியர் சாதியை சேர்ந்த ஒரு ஆணும் பெண்ணும் உடனடியாக அங்கு செல்வது எழுதப்படாத விதியாக இருந்தது.
அடுத்து இறந்தது ஆணாக இருந்தால் நாவிதர் வந்து முகச்சவரம் செய்யவேண்டும்.
சலவைத் தொழிலாளி விரைந்து வந்து இறந்தவர் போட்டிருந்த துணிகளை எடுப்பது வெள்ளை கட்டுவது முதலான தனது கடமைகளை செய்து விட்டு அந்த உடலம் சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்லப்படும் வரை இழவு நடந்த வீட்டின் ஒரு மூலையில் குந்தி இருக்க வேண்டும்.
உடலத்தை சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்வதற்கு முன்னர் நளவர்கள் அல்லது பள்ளர்கள் அந்த உடலத்தை எரிப்பதற்கான விறகுகட்டைகளை சேகரித்து சிதையை அமைத்து தாயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்;.
பின்னர் பள்ளர் அல்லது நளவர் சாதிப் பெண்கள் குடமூதி குரவை எழுப்பி முன் செல்ல பறையர்கள் பறையடித்துச் செல்ல வண்ணார் நிலபாவாடை (துணியை நிலத்தில் விரித்துச் செல்வது) விரித்துச் செல்ல நாவிதர் நவதானியத்தை வழியெங்கும் தூவிச் செல்ல நான்கு கோவியர்கள் உடலம் வைக்கப்பட்ட பாடையை தூக்கிச் செல்ல இன்னும் நான்கு கோவியர்கள் மேலாக்குப் பிடிக்க கொள்ளிச் சட்டி தூக்கிய வரும் எனைய சொந்த பந்தங்களும் அதன் பின்னால் அணிவகுத்துவர நடக்கும் அந்த மரண ஊர்வலம் அடிமை முறையின் அப்பட்டமான வெளிப்பாடாக இருந்தது.
யாழ் குடா நாடு முழுவதும் வானம் பார்த்த விவசாயமே செய்யப்பட்டது.அதாவது மழை பெய்யதால் பயிர் விளையும்.மழை பெய்யாது விட்டால் பயிர்கருகிவிடும்.மழை பெய்து பயிர் நன்றாக விளையும் போது மன மகிழ்ச்சியோடு வார நெல்லை (குத்தகை) பெற்றுக் கொள்ளும் நிலக்கிளார்கள் மழை பொய்த்து நெல் விளைச்சல் குறையும் போது நியாய தர்மத்தோடு நடந்து கொள்வதில்லை.மழை பெய்து பயிர் விளைந்த காலத்தில் எவ்வளவு மூடை நெற்களை அவர்கள் (நளவர் பள்ளர்;) கொடுத்தார்களோ அதேயளவு நெல் மூடைகளை கொடுக்கும் படி வற்புறுத்தப்படுவார்கள்.இதை எதிர்த்துக் கேட்டால் அந்த நிலத்தை பறித்து மற்றொருவருக்கு வாரத்துக்கு கொடுத்துவிடுவார்கள்.இதனால் பலர் வறட்சிக்காலத்தில் தங்கள் உழைப்பு முழுவதையும் நிலக்கிளார்களுக்கு வாரிக் கொடுத்துவிட்டு பட்டிணியில் வாடிய சம்பங்கள் நிறையவே இருந்தன.
சமூக வன்முறையை திணிப்பது பொருளாதார அடக்குமுறையை திணிப்பது என்ற இரண்டு முனைகளில் இந்த சைவ வெள்ளாளிய அதிகார வர்க்கம் பஞ்சமர்கள் மீதான தங்களது பிடியை தக்க வைத்திருந்து.சமூக வன்முறையை திணிப்பதன் மூலம் பஞ்சமர்கள் ஒருங்கிணைவதும் எழுச்சிபெறுவதும் தடுக்கப்பட்டது.
பொருளாதார அடக்குமுறையை திணித்ததன் மூலம் அவர்கள் மத்தியில் உபரி((தேவையை மிஞ்சிய இருப்பு) உருவாகாமலும் அது மூலதனத் திரட்சியாக மாறி அவர்கள் பொருளாதார ரீதியாக வளர்ச்சி பெறாமலும் தடுக்கப்பட்டது.
இந்த சுரண்டல் முறையை தகர்த்தெறிவதன் மூலம் தான் தமிழ்
சமூகத்தில் அடிப்படை மாற்றத்தை கொண்டு வர முடியும் என்று பொன் கந்தையா உறுதியாக நம்பினார்.
இது தான் அந்தக்காலத்தில் தமிழ் தமிழர் தமிழீழம் என்று கூறிக்கொண்டு பம்மாத்து அரசியல் நடத்திய ஏனைய தமிழ் தலைவர்களிடமிருந்து அவரை வேறுபடுத்தியது.
ஏனைய தலைவர்கள் இந்த சுரண்டல் முறைக்கு பங்கம் வராத வகையில் அதை காப்பாற்றி வைத்துக்கொண்டு சமபந்தி போசனம் முதலான பம்மாத்து நடவடிக்கைகள் மூலம் சாதி ஒழிந்துவிடும் என்று மக்களை நம்பச் சொன்னார்கள்;.இவர்கள் யாரும் ‘வாரம்’ எனப்படும் அடிமைக் குத்தகை முறை ஒழிக்கப்பட வேண்டும் என்று குரல் கொடுக்கவில்லை. குடிமைச் சேவக முறை தவறு அது ஒழிக்கப்பட வேண்டும் என்றும் மேட்டுக்குடி தமிழர்கள் எவரும் பஞ்சமர்களை கட்டாயப்படுத்தி சேவகம் செய்ய நிர்பந்திக்கக் கூடாது என்றும் கோரவில்லை.சாதியை தலைமுறை தலைமுறையாகக் கடத்தும் சாதியதிருமணமுறையை மாற்றி அதாவது கலப்புத் திருமணத்தை ஒரு சமூக அரசியல் நெறிமுறையாக முன்னெடுத்துச் செல்ல இவர்கள் முன்வரவில்லை.
இவற்றையெல்லாம் செய்தால் தங்கள் வாக்கு வங்கிக்கு ஆபத்து எற்பட்டு தங்களது நாடாளுமன்ற நாற்காலி கனவு தகர்ந்து போய்விடும் என்று இவர்கள் பயந்தது ஒருபக்கம் என்றால் மறுபக்கம் இந்த அமைப்பு தொடர்ந்து நிலைத்திருக்க வேண்டும் தலைமுறை தலைமுறையாக அடுத்தவரும் சந்ததிகளுக்கும் கடத்திச் செல்லப்பட வேண்டும் என்பதில் இவர்கள் குறியாக இருந்தார்கள் என்பதே உண்மையாகும்.
பொன் கந்தையா தன்னுடைய முதல் வேலைத்திட்டமாக மேட்டுக்குடியினரின் பிரித்தாளும் தந்திரத்தால் தங்களுக்குள்ளேயே மோதிக் கொண்டு காவல் நிலையங்களுக்கும் நீதிமன்றங்களுக்கும் நடையாய் நடந்து தங்களது அற்ப செற்ப தேட்டங்கiயும் தொலைத்துக்கொண்டிருந்த மக்களை ஒருங்கிணைக்கும் வேலையை தொடங்கினார்.
இதற்கென ஒவ்வொரு ஊர்களிலும் கிராம முன்னேற்றச் சங்கங்கள் ஆரம்பிக்கப்பட்டன.
இந்தச் சங்கங்கள் மூலமாக மக்கள் ஒரே இடத்தில் கூடி ஒன்றாய் இருந்து நாட்டு நடப்புகளை விவாதிக்கும் பழக்கம் உருவாக்கப்பட்டது.
அடங்கிக் கிடப்;பதும் அடிமைச் சேவகம் செய்வதும் தலைவிதி அல்ல,அது சுரண்டிப் பிழைக்கும் கூட்டத்தால் உருவாக்கப்பட்ட சதி என்று மக்களுக்கு எடுத்துச் சொல்லப்பட்டது.
ஆனால் அது அவ்வளவு சுலபமானதாக இருக்கவில்லை.தங்களுக்கு தொழில் பிச்சை போட்டு வாழவைக்கும் தெய்வங்களான நயினார்மாரையும் நாச்சியார்மாரையும் குறைசொல்வதை முதலில் அந்த மக்கள் ஏற்றுக்கொள்வில்லை. பொன் கந்தையாவையும் அவரது தோழர்களையும் தங்களது பிழைப்பில் மண் அள்ளிப்போட வந்த சதிகாரர்களாவே அவர்கள் பார்த்தார்கள்.
பல இடங்களில் காதுகொடுத்துக் கேட்க முடியாத வசவுகளும் கல்லெறிகளும் கூட விழுந்தன.
அந்த மக்களின் அறியாமையையும் அவர்களிடம் இருந்த குடி பழக்கத்தையும் தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்ட மேட்டுக்குடியினர் அவர்களை பொன் கந்தையாவுக்கு எதிராக தூண்டிவிட்டனர்;. அவரையும் அவரது தோழர்களையும் ஊருக்குள் வர அனுமதிப்பது குழப்பங்களும் மோதல்களும் ஏற்பட வழி வகுக்கும் என்றும் காவல்துறையினர் வந்து அவர்களை பிடித்துக்கொண்டு போய்விடுவார்கள் என்று அவர்கள் பயமுறித்தி வைத்திருந்தனர்.
ஆனால் பொன் கந்தையா இதைக் கண்டெல்லாம் சோர்ந்து போய்விடவில்லை.சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான தனது பயணத்தை அவர் இடை நிறுத்திவிடவில்லை.கல்அடியையும் சொல்லடியையும் தாங்கிக் கொண்டு தொடர்ச்சியாக அவர் மக்களை சந்தித்தார்.உண்மை நிலையை அவர்களுக்கு புரியக் கூடிய விதத்தில் எடுத்துவிளக்கினார்.
அவர்களைப் போல அவர்களது பிள்ளைகளும் குலத் தொழிலைத்தான் செய்ய வேண்டுமா?அடிமைச் சேவகம் தான் செய்ய வேண்டுமா? அவர்களும் மதுவுக்கு அடிமையானவர்களாக ஒருவரோடு ஒருவர் சண்டை பிடித்துக்கொண்டு காவல்நிலையங்களினதும் நீதிமன்றங்களினதும் வாசல் படிகளில் காத்துக் கிடக்கவேண்டுமா?
ஏன் அவர்கள் மற்றவர்களைப் போல படித்துப் பட்டம் பெற்று அரசுப் பணிகளில் சேரமுடியாது?ஏன் அவர்கள் சுயமாக தொழில் செய்து முன்னேற முடியாது?ஏன் சொந்தமாக நிலம் வாங்கி சுயமாக விவசாயம் செய்ய முடியாது? என்ற நியாயமான கேள்விகளை அவர் எழுப்பினார்.
இந்தக் கேள்விகள் கணிசமான மக்களை சிந்திக்க வைத்தது.சமூக மாற்றத்தை விரும்பும் துடிப்புள்ள போர் குணம் மிக்க இளைஞர் கூட்டத்தை அவர் பின்னால் அணிதிரள வைத்தது.
முதல் முயற்சியில் வெற்றியடைந்த பொன் கந்தையா அடுத்த முயற்சியாக பெயர் மாற்றும் இயக்கத்தை ஆரம்பித்தார்.
பஞ்சமர்கள் வெள்ளார்களின் அடிமைகள் என்பதை உளவில் ரீதியாக உணர்த்திக்கொண்டிருக்கும் விதத்தில் அவர்களுக்கு கந்தன் முருகன் வேலன் பூதன் பொன்னன் கணபதி வள்ளி பாறி சின்னாச்சி என்று வைக்கப்பட்ட பெயர்களை அழகேசன் முருசேன் சிவபாதம் கந்தவனம் பொன்னம்பலம் சிற்றம்பலம் மலர்விழி கயல்விழி பொற்கொடி என்று மேட்டுக்குடியினரில் இருந்து வேறுபடுத்தி காட்டாத பெயர்களாக மாற்றும் முயற்சியை அவர் தொடர்ந்தார்.
விதானை என்று அழைக்கப்படும் கிராம அதிகாரிகளும் றிஜித்தார் எனப்படும் பிறப்பு இறப்புப் பதிவாளர்களும் பஞ்சமர்களின் பெயர்களை தீர்மானிக்கும் முறையை முடிவுக்கு கொண்டு வந்து பெற்றோர் தீர்மானிக்கும் பெயரை பிள்ளைக்கு வைக்கும் முறையை கொழும்பிலுள்ள தனது கட்சித் தலைமையை தொடர்புகொண்டு அரச ஆணை மூலம் நிறைவேற்ற வைத்தார்.
பிறப்பு சான்றிதழில் சாதி கோரும் முறையை நீக்குவித்து அந்த இடத்தில் தேசிய இனம் என்று குறிப்பிடும்படி செய்வித்தார்
தேசிய இனம் என்று வந்த பின்பு அந்த இடத்தில் இலங்கை தமிழர்.இலங்கைத் தமிழ். இலங்கை தமிழன் என்று எழுதும் மோசாடியான எழுத்து முறையை மேட்டுக்குடி அதிகாரிகள் கையாண்டு வந்தனர்.
அதாவது ஒரு பிள்ளையின் பிறப்புச்சான்றிதழில் தேசிய இனம் என்ற இடத்தில் இலங்கை தமிழர் என்று குறிப்பிட்டால் அது வெள்ளாளர் முதலான மேட்டுக்குடியினரை குறிக்கும். இலங்கைத் தமிழ் என்று குறிப்பிட்டால் கரையார் கோவியர் முதலான இடைநிலை சாதியினரை குறிக்கும்.இலங்கைத் தமிழன் என்று குறிப்பிட்டிருந்தால் அது பஞ்சமர்களைக் குறிக்கும்.
மேட்டுக்குடி அதிகாரிகளின் இந்தக் கள்ளத்தனத்தையும் அம்பலப்படுத்திய பொன் கந்தையா இலங்கைத் தமிழர் என்ற பொது குறியீட்டின் மூலமே அனைவரையும் அழைக்க வேண்டும் என்பதையும் அரச ஆணை மூலம் நிறைவேற்ற வைத்தார்.
பொன் கந்தையாகின் இந்த நடவடிக்கைகள் பல நூற்றாண்டுகளாக சாதியின் பேரால் ஒடுக்கப்பட்டு நடைப்பிணங்களாக வாழந்து வந்த பஞ்சமர்களுக்கு நம்பிக்கையைக் கொடுத்து அவர்களை எழுச்சி கொள்ள வைத்தது.
மாற்றம் என்ற சொல்லத் தவிர மாறாதது என்று ஒன்றும் இல்லை என்றும் துணிந்து போராடினால் மாற்றத்தை கொண்டு வரமுடியும் என்றும் நம்பிய இளைஞர் படை அவர் பின்னல் திரண்டது.
(தொடரும்)

2 கருத்துகள்:

செயபால் சொன்னது…

பொன். கந்தையா என்பவரைப் பற்றிப் பல தெரியயாத விடயங்களைத் தெரிந்து கொள்ள உதவியாக இருக்கிறது உங்கள் பதிவு. இதை ஒரு புத்தகமாக வெளியிடலாமே? நன்றி

செயபால் சொன்னது…

பொன். கந்தையா என்பவரைப் பற்றிப் பல தெரியாத விடயங்களைத் தெரிந்து கொள்ள உதவியாக இருக்கிறது உங்கள் பதிவு. இதை ஒரு புத்தகமாக வெளியிடலாமே? நன்றி