திங்கள், 20 ஆகஸ்ட், 2012

பயணிகளிடம் கையேந்திய ஏர் பிரான்ஸ் நிறுவனம்


பிரான்சின் விமானபோக்குவரத்து நிறுவனமான ஏர் பிரான்ஸ் நெதர்லாந்தின் கேஎல்எம் நிறுவனத்துடன் இணைந்து விமானப் போக்குவரத்து சேவையை உலகளவில் நடத்திவருகிறது.
உலக பொருளாதார நெருக்கடி இந்தக் கூட்டு நிறுவனத்தையும் பாதித்தாலும் சேவைகள் முடங்கிப் போகும் அளவுக்கு பாரிய நெருக்கடி எதுவும் ஏற்படவில்லை.
ஆனால் கடந்த 15 ம் திகதி இந்த நிறுவனம் பயணிகளிடம் கையேந்த வேண்டிய ஒரு புதிய நெருக்கடியை எதிர் கொண்டது
கடந்த 15 ம் திகதி பாரிசில் இருந்து லெபனான் தலைநகர் பெய்ரூட் நோக்கி 174 பயணிகள் மற்றும் 12 பணியாளர்களுடன்  சென்று கொண்டிருந்த போயிங் 777 ரகத்தைச் சேர்ந்த ஏர்பிரான்ஸ் விமானம் எரிபொருள் பற்றாக் குறையால் சிரிய தலைநகர் டமஸ்கசலுள்ள சர்வதேச விமானநிலையத்தில் அவசரமாக தரையிறங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஏற்கனவே சிரியா மீது பிரான்ஸ் பொருளாதாரத் தடை விதித்துள்ள நிலையிலும் சிரியாவுக்கான விமானப் போக்குவரத்தை ஏர் பிரான்ஸ் நிறுவனம் நிறுத்திவிட்ட நிலையிலும் அந்த விமானத்துக்கு டமஸ்கஸ் விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்பமுடிவில்லை.விமானிகளிடம் இருந்த வங்கி கடன் அட்டைகளையும் அங்கு உபயோகப்படுத்த முடியில்லை.பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்து தூதரங்களும் அங்கு மூடப்பட்டுள்ள நிலையில் உதவி கோருவதற்கும் வழியிருக்கவில்லை.
பிரான்ஸ் மீது கடும் கோபத்தில் இருக்கும் அசாத்தின் அரச படைகளால் விமானத்துக்கும் விமானத்தில் இருக்கும் பயணிகளுக்க ஆபத்து ஏற்படக் கூடும் என்ற அச்சமும் ஏற்பட்டிருந்து.
இந்த நிலையில் அந்த விமானத்தின் விமானிகள் பயணிகளுக்கு நிலைமை யை எடுத்துக் கூறி எரிபொருள் நிரப்புவதற்கு பண உதவி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தனர்.
அதை ஏற்றுக்கொண்ட பயணிகள் பணமாகவும் வங்கி கடனட்டைகள் மூலமும் உதவி செய்ததை அடுத்து விமானத்துக்கு எரிபொருள் நிரப்பப்பட்டு விமானம் புறப்பட்டது.
பெய்ரூத் விமானநிலையத்தில் விமானம் தரையிறங்கியதும் பயணிகளிடம் வாங்கிய பணத்தை ஏர் பிரான்ஸ் நிறுவன அதிகாரிகள் திருப்பிக் கொடுத்ததோடு பயணிகளிடம் பணம் கேட்டதற்காக மன்னிப்புக் கோரியதோடு பணத்தை வழங்கியதற்காக நன்றியும் தெரிவித்துக்கொண்டது.
பாரிசில் விமானம்புறப்படுவதற்கு முன்னர் அந்த விமானத்தின் எரிபொருள் அளவு மற்றும் அந்த எரிபொருளைக் கொண்டு அந்த விமானம் பயணிக்க கூடிய தூரம் என்பவை ஏன் கணக்கிடப்படவில்லை? என்பது தொடர்பாக விசாரணை நடைபெற்றவருகிறது.