ஞாயிறு, 14 அக்டோபர், 2012

நினைவழியா வடுக்கள்-18


நினைவழியா வடுக்கள்-18

1956 ம் ஆண்டு ஒருங்கினைந்த பருத்தித்துறை தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக பொன்; கந்தையா தெரிவு செய்யப்பட்டிருந்தார்.அவரது இந்த வெற்றி என்பது மாற்றத்தை வேண்டி நின்ற மக்களின் வெற்றியாகவே கருதப்பட்டது.
1940 களின் இறுதியில் சமூக விடுதலைக்கான பணியை ஆரம்பித்திருந்த அவர் 1950களின் நடுப்பகுதிவரை பிரதேசம் தழுவிய களப்பணிகள் ஊடக சமூகத்தின் தேவைகளை பிரச்சனைகளுக்கான முடிச்சுக்களை துல்லியமாக அடையாளம் கண்டுகொண்டார்.
அந்தக்காலகட்டத்தில் வடமராட்சிப்பிரதேசத்தில் வெண்காயம் மிளகாய் போன்ற உப உணவு பயிர் செய்கையும் புகையிலை போன்ற பணப்பயிர் செய்கையும் முக்கியமான தொழிலாக இருந்தது.
இந்தப் பயிர் செய்கையை பஞ்;சமர்கள் வாரத்துக்கு அல்லது குத்தகைக்கு செய்த அதேநேரத்தில் வெள்ளார்களும் கோவியர் முதலான இடைநிலை சாதியினரும் முக்கிய தொழிலாக செய்துவந்தனர்.விரல் விட்டு எண்ணக்ககூடிய ஒரு சில நிலவுடமையாளர்களை தவிர இந்தத் தொழிலைச் செய்த ஏனைய அனைவரும் கூலி விவசாயிகள் என்ற நிலையிலேயே இருந்தனர்;.
இந்த பயிர் செய்கையை ஆரம்பிப்பதற்காக வட்டிக்கு கடன் எடுப்பதும் பின்னர் அறுவடை முடிந்ததும் அந்தக் கடனை திருப்பிச் செலுத்துவதும் இந்தத் தொழிலின்; மரபாக இருந்தது.இந்த விவசாயிகளுக்கு கடன் கொடுக்கும் நிலவுடமையாளர்கள் அந்தக்கடனை அறவிடுவதற்காக அவர்களின் உற்பத்திப் பொருட்களை தாங்களே கொள்வனவு செய்வதற்காக வெண்காய சங்;கம் அல்லது வியாபாரச்சங்கம் என்ற பெயரில் சங்கங்களை ஆரம்பித்திருந்தார்கள்.

சமூக அந்தஸ்த்தும் அதிகார பலமும் மிக்க இவர்களை மீறி வேறெந்த வியாபாரிகளும் நேரடியாக விவசாயிகளிடம் பொருட்களை கொள்வனவு செய்யமுடியாத நிலையும் விவசாயிகளும் இவர்களைப் பகைத்துக்கொண்டு அவர்களுக்கு பொருட்களை விற்க முடியாத நிலையுமே அப்போதிருந்தது.

இதனால் அந்த பணமுதலைகள் குறிக்கும் அறாவிலைக்கு தங்கள் உற்பத்திப் பொருட்களை விற்றுவிட்டு இந்த விவசாயிகள் வறுமையில் வாடிக்கொண்டிருந்தார்கள்.
மழை வெள்ளம் மற்றும் பூச்சித் தாக்கம் போன்ற புறக்காரணிகளால் விளைச்சல் பாதிக்கப்படும் போது வாங்கிய கடனுக்காக வட்டிக்கு வட்டி கட்டும் நிலையும் இந்த விவசாயிகளுக்கு இருந்தது.

இதைவிட இந்த விவசாயம் என்பது கிணற்றில் இருந்து நீரை இறைப்பதன் மூலமே மேற்கொள்ளப்பட்டது.
அதிலும் இந்த விவசாய நிலங்களில் இருந்த கிணறுகள் மிகவும் ஆளமானவை. இந்தக் கிணறுகளில் இருந்து தண்ணீரை விவசாய நிலத்துக்கு பாய்ச்சுவதற்கு துலா மூலம் அள்ளி ஊற்றுவதுஇசூத்திரப் பொறிமுறையை பயன்படுத்தி ;இறைப்பது என்ற இரண்டு வழிமுறைகள் கையாளப்பட்டன.
துலாமூலம் அள்ளி ஊற்றும் போது துலா கயிற்றை பிடித்து தண்ணீரை அள்ளி ஊற்றவதற்கு ஒருவரும் துலாவின் மேல் ஏறி நின்று முன்பின் அசைந்து (துலா மிதித்தல்) தண்ணீர் அள்ளுவதை இலகுவாகக் இருவரும் அதை பயிருக்கு வாய்க்கால் மடைகளை திறந்து பாய்ச்சவதற்கு ஒருவரும் என்று குறைந்த பட்சம் நான்கு பேர் தேவைப்பட்டார்கள்.பொதுவாக அந்தக்காலகட்டத்தில் துலா மிதிக்கும் வேலையை பஞ்சமர்களே செய்தார்கள்.


நிலவுடமையாளர்கள் தாங்கள் நேரடியாக விவசாயம் செய்த நிலங்களில் இந்த துலா மதித்தல் என்பது அடிமை குடிமைகளின் கட்டயாய சேவை என்று பணிக்கப்பட்டிருந்து.சூத்திரக் கிணறு என்கிறபோது செக்கு போன்ற ஒரு அமைப்பில் அடி அச்சில் சக்கரங்களும் அந்தக் சக்ரங்களின் சுழற்சிக்கு ஏற்ப மேலும் கீழும் சென்று வரத்தக்கதாக இருப்புப் பட்டை (வாளிகள்) களும் பெருத்தப்பட்டிருக்கும் நடு அச்சிலிருந்து நீண்டு செல்லும் நுகத்தடியில் முனையில் மாடுகள் பூட்டப்பட்டிருக்கும். இந்த மாடுகள் சுற்றும் போது சக்கரங்கள் அசைந்து கீழே கிணற்றுக்குள் சென்று தண்ணீரை அள்ளிக் கொண்டு வந்து மேலே ஊற்றும்.இதற்கும் ஒரு மாடு அல்லது இரண்டு மாடுகளும் அதை ஓட்டுவதற்கு ஒருவரும் தண்ணிர் பாச்சுவதற்கு ஒருவரும் தேவைப்பட்டார்கள்.
1950 களுக்கு முன் வாரத்தை(குத்தகை பணம் அல்லது பொருள்) ஒழுங்காக செலுத்தாத அல்லது சாதிய மீறலில் ஈடுபட்டதற்காக தண்டனை விதிக்கப்பட்ட பஞ்சமர்கள் மாடுகளுக்கு பதிலாக இந்த சூத்திரக்கிணறுகளின் நுகத் தடிகளில் பூட்டி வேலை வாங்கப்பட்டதாக எனது அப்பு தெரிவித்திருந்;தார்
மொத்தத்தில் இந்த விவசாய முறை என்பது சுரண்டலையும் அடிமை குடிமை முறையையும் பாதுகாக்கின்ற ஒரு முறையாக இருந்து வந்தது.
இதை உடைத்தெறிவதற்கு பொன் கந்தையை பலமுறை முயன்ற போதும் அது முடியாமல் போனது.

உழைக்கும் விவசாயிகள் அனைவரும் ஒன்றிணைந்து கூட்டுறவுச் சங்கங்களை உருவாக்க வேண்டும்இ தண்ணீர் இறைக்கும் இயந்திரங்களை இறக்குமதி செய்து பயன்படுத்த வேண்டும் என்று அவர் சொன்ன போது அதிகார வர்க்கத்தினர் அதற்கு எதிராக சீறி எழுந்தார்கள்.கூட்டுறவு என்றால் என்ன? நளவன் பள்ளன் பறையைனோடு கூட்டுச் சேருவதா? என்று சாதி வெறியை தூண்டிவி;ட்டார்கள்.தண்ணீர் இறைக்கும் இயந்திரம் வந்தால் கிணறுகளில் உள்ள தண்ணீரையெல்லாம் அவை உறிஞ்சிவிடும்.கிணறுகளில் நீர் வற்றிவிடும் என்று அச்சுறுத்தினார்கள்.

பொன்; கந்தையா நாடளுமன்ற உறுப்பினராக ஆகியதும் விவசாய அலுவலர்களை நியமித்து தண்ணிர் இறைக்கும் இயந்திரங்களை இறக்குமதி செய்து முதலில் தனது கட்சித்தோழர்களின் விவசாய நிலங்களில் பயன்படுத்த வைத்தார்
அத்துடன் பலநோக்கு கூட்டுறவுச்சங்கங்களை உருவாக்கி விவசாயிகளுக்க மானிய விலையில் விளைபொருட்கள் மற்றம் உரம் கிருமிநாசினிகளை வழங்கவும் விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களை அந்தசங்கங்களே கொள்வனவு செய்வும் எற்பாடு செய்தார்.அதே வேளை இந்தக் கூட்டுறவுச்சங்கங்களிலிருந்து விவசாயிகள் விவசாயக் கடன் பெறவும் எற்பாடு செய்யப்பட்டது.
அதேபோல இந்த நினைவுக்குறிப்பில் நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல கள் இறக்குவதில் இருந்தசுரண்டல் பொறிமுறையான தவறணை முறையை நீக்கி மரவரி முறையை அமுல்படுத்தியதுடன் பதநீர் இறக்குவதை ஊக்குவிப்பதற்காக பதநீரிலிருந்து சீனி உற்பத்தி செய்வதற்காக பொலிகண்டியில் சீனித் தொழிற்சாலை ஒன்றiயும் பொன்; கந்தையா உருவாக்கினார்.இந்தத் தொழிற்சாலைக்கான இயந்திரங்கள் அப்போதையை சோவியத் யூனியனில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது
நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அதிகாரத்தை வைத்துக்கொண்டு பொன் கந்தையா மேற்கொண்ட இந்த நடவடிக்கைகள் சாதியம் என்ற குட்டையில் ஊறி தேங்கிப் போயிருந்த சமூக அமைப்பில் உண்மையான மாறுதலைக் கொண்டுவந்தது.
தவறணை முறை நீக்கம் சீனித் தொழிற்சாலை அமைப்பு கூட்டுறவுச் சங்கங்கள் அமைப்பு என்பவற்றுக்கான சட்ட அங்கீகாரங்களை நாடாளுமன்றத்தில் பெற்றுவிட்டு கொழும்பில் இருந்து அவர் ஊர் திரும்பிய போது அதிகார வாக்கத்தினர் 'நளக் கந்தைiயாவே வருக' என்று உடுப்பிட்டி மாலிசந்தி நெல்லியடி கரவெட்டி பகுதி சுவர்களில் எழுதி அதற்கு பக்கத்தில் அவரது கட்சிச் சின்னமான அருவாள் சுத்தியலுக்கு பதிலாக கள் இறக்கும் தொழிலாளர்கள் பயன்படுத்தும் கத்தியையும் தளநாரையும் (மரம் ஏறம்போது காலில் மாட்டிக்கொண்டு ஏறுவது) சிவப்பு வர்ணத்தில் வரைந்து தமது வயிற்றெரிச்சலை வெளிப்படுத்திக் கொண்டார்கள்.
சமூக மாற்றத்துக்கும் அடக்குமுறைகளில் இருந்து விடுதலை பெறுவதற்கும் கல்வி முக்கியம் என்பதை உணர்ந்த பொன் கந்தையா தனது அடுத்த நடவடிக்கையாக அந்த கல்வியை அனைத்து மக்களுக்கும் கிடைக்கும் படியான வேலைத்திட்டங்களை ஆரம்பித்தார்.
கரவெட்டி சந்தாதோட்டம் கம்பர்மலை ஆகிய பகுதிகளில் அனைத்து மக்களும் கல்வியை பெறும் வகையில் ஆரம்பப் பாடசாலைகளை ஆரம்பித்த அவர் உயர் கல்வியையும் எந்தவித பாரபட்சமுமின்றி அனைவரும் பெறும் விதத்தில் அரச கல்லூரி (மத்திய கல்லூரி அல்லது மத்திய மகாவித்தியாலயம்) ஓன்றை பருத்தித்துறை தொகுதியில் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
இதற்கான அனுமதியை சிங்கள பிரதிநிதிகளை பெரும்பான்மையாகக் கொண்ட அப்போதைய இலங்கை அரசாங்கத்திடமிருந்து சுலபமாகப் பெற்றுக்கொண்ட அவர் நூற்றுக்கு 99.99 வீதம் தமிழர்களே வாழ்ந்த வடமராட்சிப் பிரதேசத்தில் அதாவது அன்றைய பருத்தித்துறை தொகுதியில் அந்தக் கல்லூரியை அமைப்பதற்கான நிலத்தை பெற்றுக்கொள்வதில் பெரும் நெருக்கடிகளை எதிர் கொண்டார்.
பருத்தித்துறை தொகுதியின் மையப்பகுதியாகவும் கல்வியறிவில் மிகவும் பின் தங்கிய பகுதிகளை அண்டியதாகவும் இருந்த கரணவாய் வடக்கு பிரதேசத்தில் இருந்த தரிசு நிலத்தை இந்தக் கல்லூரியை அமைப்பதற்காக அவர் தேர்ந்தெடுத்திருந்தார்.
இதை அறிந்துகொண்ட அதிகார வர்க்கத்தினர் அவசர அவசரமாக அந்த இடத்தில் சீமெந்து கட்டிடம் மொன்றை எழுப்பி அதற்கு பொன்னம்பல வித்தியாலயம் என்று பெயரும் வைத்து அங்கு ஒரு பாடசாலையை தாங்கள் உருவாக்கியிருப்பதாக அறிவித்ததுடன் அப்போதைய தமிழ் காங்கிரஸ் கட்சி தலைவராகவும் சட்ட மேதையாகவும் இருந்த ஜீ.ஜீ.பொன்னம்பலத்தை தொடர்புகொண்டு அதற்கு சட்ட அங்கீகாரமும் பெற்றுவிட்டனர்.
இதனால் ஏமாற்றமடைந்த பொன்; கந்தையா உடுப்பிட்டி இமையாணன் பகுதியில் அந்தக் கல்லூரியை அமைப்பதற்கு திட்டமிட்டதுடன் அதற்குரிய காணியை வழங்கும்படி உடுப்பிட்டி வல்வெட்டி பொலிகண்டி பகுதிகளைச் சேர்ந்த நிலக்கிழார்கள் பலரிடம் கேட்டிருந்தார்.ஆனால் அவர்கள் யாரும் அதை வழங்க மறுத்துவிட்டனர்.
இதிலே முக்கியமாக தமிழ் பிள்ளைகளுக்கு கல்வியறிவை ஊட்டுவதற்கு ஒரு கல்லூரியை கட்டுவதற்கு காணி வழங்க மறுத்த உடுப்பிட்டியைச் சேர்ந்த ஒரு மேட்டுக்குடி கனவான்இ பிள்ளைகளற்ற தனது மலட்டுச் சொத்தை அதாவது காணியை தமிழ்நாட்டிலுள்ள சிதம்பரம் கோவிலுக்கு எழுதிவைத்தது கண்டிப்பாக இங்கே குறிப்பிட வேண்டிய ஒன்றாகும்;.
அதன் பின்னர் பல்வேறு இடங்களில் தேடியும் அந்தப்பாடசாலை அமைப்பதற்குரிய காணி கிடைக்காத நிலையில் கடைசியாக நல்லஉள்ளம் படைத்த சிலரின் ஒத்தாசையுடன் ஒருவழியாக கரவெட்டிப்பகுதியில் தற்போது விக்னேஸ்வரா கல்லூரி இருக்கும் இடத்தில் அந்தக் கல்லூரியை அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்தன.ஏறக்குறைய அங்கே கல்லூரி கட்டப்படுவது உறுதி என்று ஆகிவிட்ட நிலையில் ஒரு போதும் வடமாராட்சிப்பிரதேசத்தில் அப்படி ஒரு கல்லூரியை அமைக்கவிடக் கூடாது என்று கங்கணங்கட்டிக்கொண்டிருந்த அதிகார வர்க்கத்தினர் நேரடியாக கொழும்புக்குச் சென்றுஇ சாதியத்தை கட்டிக்காப்பதும் தங்களது அரசியல் கடமைகளில் ஒன்றென்ற நினைப்புடன் செயற்பட்ட தமிழ் அரசில்வாதிகளின் துணையுடன் சிங்கள ஆட்சியாளர்களை சந்தித்து 'கரவெட்டியில் அந்த மத்திய கல்லூரியை அமைப்பதற்கு தெரிவு செய்ப்பட்டுள்ள இடம் அடிக்கடி சாதிக்கலவரங்களும் வன்முறைகளும் நடக்கும் பகுதிகளுக்கு அண்மையில் உள்ளது என்றும் மாணவர்கள் அங்கு அமைதியான சூழலில் கல்வி கற்க முடியாது என்றும் தெரிவித்தனர்.அத்துடன் அது போக்குவரத்து வசதி இல்லாத ஒரு ஒதுக்குப்புறம் என்றும் ஆயிரம் இரண்டாயிரம் மாணவர்கள் கல்வி கற்கக் கூடிய ஒரு பாடசாலையை ஒதுக்குப்பறத்தில் அமைக்கக் கூடாது என்றும் தெரிவித்தனர்.அது மட்டுமல்லாமல் குடி தண்ணீருக்கு தட்டுப்பாடு உள்ளது என்றும் அங்கு பாடசாலை அமைந்தால் மாணவர்களுக்கு தண்ணீர் கிடைப்பது கஷ்டம் என்றும் கூறிவிட்டனர்.
அவர்களின் உள்நோக்கம் என்ன என்பதை அறியாமல் அவர்கள் நியாயத்தை எடுத்துக் கூறுவதாக நினைத்த சிங்கள ஆட்சியாளர்கள் அந்த இடத்தில் அந்த பாடசாலையை அமைக்க வேண்டாம் என்று கூறிவிட்டனர்.
அரசாங்கம் இவ்வாறு அறிவித்த மூன்று மாத காலத்துக்குள் புதிய இடத்தை தெரிவு செய்து அறிவிக்காதுவிட்டால் அந்தக் கல்லூரி அமைப்பதற்கான அனுமதி இரத்தாகிவிடும் ஆபத்து ஏற்பட்டிருந்தது.
மூன்றுமாத காலத்துக்குள் புதிய இடம் ஒன்றை தெரிவு செய்வது பொன். கந்தையாவுக்கு நெருக்கடி மிகுந்த விடயமாக இருந்தது.
இதேவேளை நெல்லியடி சந்திக்கு அண்மையில் நெல்லியடி வதிரி வீதியில் அவருக்கு சொந்தமாக ஒரு சிறுதுண்டு நிலமிருந்தது.அதோடு இணைந்ததாக அவரது உறவினர்களின் நிலங்களுமாக அந்தப் பகுதி பெரியதொரு விவசாய நிலத் தொகுதியாக இருந்தது.அங்கே அந்தக் கல்லூரியை அமைப்பது என்ற முடிவுக்கு வந்த அவர் நம்பிக்கையோடு களத்தில் இறங்கி தன்னுடைய உறவினர்களுக்கு அந்தப்பாடசாலை அமைக்கப்பட வேண்டிய அவசியத்தை எடுத்துக் கூறி அதற்காக தங்களுடைய நிலங்களை வழங்குவதற்கு அவர்களை சம்மதிக்கவைத்தார்.
கடைசியாக அனைத்து தடைகளையும்இ எதிர்ப்புக்களையும்இ குழி பறிப்புகளையும் மீறி அந்த இடத்தில் அந்த நெல்லியடி மத்திய மாகா வித்தியாலம் அல்லது நெல்லியடி மத்திய கல்லூரி என்று அழைக்கப்படும் அந்தக்கல்லூரி உருவாக்கப்பட்டது.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் உருவாக்கப்பட்ட முதலாவது மத்திய மகாவித்தியாலயம் என்ற பெயரைப்பெற்ற அந்தக் கல்லூரி தங்கும்விடுதி வசதியையும் கொண்டிருந்தது.அந்தக் கல்லூரியில் குடாநாட்டின் வடமராட்சி கிழக்கு வலிகாமம் தென்மராட்சி தீவகம் உட்பட வன்னி வவுனியா மட்டக்களப்பு திருகோணமலை அம்பாறை மற்றும் மலையகம் முதலான பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த மாணவர்கள் புலமைப்பரிசில்கள் (அரச உதவி)பெற்று வந்து தங்கிப்படித்தனர்.அனைத்து மாணவர்களுக்கும் எந்தவித ஏற்றத்தாழ்வும் இன்றி கல்வியறிவை புகட்டிய நிறுவனமாக அது விளங்கியது.
பாடசாலைகள் அரசுடமையாக்கப்படும் முன்பு உயர் கல்வியும் அவற்றை வழங்கும் கல்லூரிகளும் அதிகார வாக்கத்தின் ஏகபோகச் சொத்துக்களாக இருந்தததும் பஞ்சமர்கள் மற்றும் இடைநிலை சாதிகளையும் பிறமாவட்டங்களையும் சேர்ந்த மாணவர்கள் கிறீஸ்தவமிசனறி;கள் மற்றும் அமெரிக்க மிசனறிகளால் நடத்தப்பட்ட கல்லூரிகளிலே உயர்கல்வியை பாரபட்சமின்றி தொடரக் கூடியதாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

அடுத்தபடியாக பருத்தித்துறை தொகுதியில் ஆதார மருத்துவனை ஒன்றை அமைப்பதற்கான அனுமதியையும் பொன். கந்தையா பெற்றிருந்தார். அதையும் அவர் உடுப்பிட்டி பகுதியில் நிறுவுவதற்கு திட்டமிட்டிருந்தார். ஆனால் கல்லூரிக்கு கட்டிடம் கட்டுவதற்கு நிலம் கொடுத்க மறுத்ததைப் போல அதற்கும் அதிகார வாக்க நிலவுடமையாளர்கள் நிலம் கொடுக்க மறத்தனர். இறுதியில் மந்திகையில் அந்த மருத்துவமனை அமைக்கப்பட்டது.அதுவே இன்று பருத்தித்துறை ஆதார மருத்துவமனை என்ற பெயரில் இயங்கும் யாழ்ப்பாணக் குடாநாட்டிலுள்ள இரண்டாவது பெரிய மருத்துவமனையாகும்.
பொன் கந்தையா நாடாமன்ற உறுப்பினர் பதவியை பயன்படுத்தி தமிழ்
சமூகத்தின் அடிப்படை முரண்பாடாக இருந்த சாதிய முரண்பாட்டடின் அடித்தளத்தை தகர்த்தெறிவதற்கான வேலைதிட்டங்களை நடைமுறைப்படுத்திய அதேநேரத்தில் இனப்பிரச்சனை விடயத்திலும் அவர் காத்திரமான பாத்திரத்தை வகித்தார்.
1956ல் பண்டாரநாயக்கா சிங்களத்தை இலங்கைத்தீவின் ஆட்சி மொழியாக்கும் சட்டத்தை கொண்டுவந்த போது அதை எதிர்த்து நெருக்கடியில் இருந்து நெருக்கடிக்கு என்ற தலைப்பில் நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருந்தது.
பொன் கந்தையாவின் காலத்தில் அரசியலில் இருந்த தமிழரசுக்கட்சி மற்றும் தமிழ் காங்கிரஸ் கட்சி அரசியல்வாதிகள் 10 முதல் 15 வருடகாலம் நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவி வகித்தவர்களாகவும் 30 முதல் 40 வருடங்கள் அரசிலில் ஈடுபட்ட அனுபவம் உள்ளவர்களாகவும் இருந்தார்கள்.
ஆனால் அவர்கள் இந்த 15 வருட பதவிக்காலத்திலும் 40 வருட அரசியல் வாழ்விலும் செய்யாத அல்ல செய்யவிரும்பாத சமூக மாற்றத்தை பொன் கந்தையா 1956 ல் இருந்து 1960 வரையிலான 5 வருடகாலத்தில் நிகழ்த்திக்காட்டினார். இதிலே முக்கியமாக குறிப்பிட வேண்டிய வியடம் அவர் எந்தவொரு கட்டத்திலும் சலுகைகளுக்கான அரசாங்கத்திடம் மண்டியிடவோ-ஒட்டிக்கொள்ளவோ இல்லை.அதே போல மேடைகளில் வீர முழக்கங்களை முழங்கிவிட்டு இரகசியமாக பின்கதவால் சென்று பேரம் பேசவுமில்லை.நேர்மையான முறையில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு இருக்கக் கூடிய அதிகாரத்தை பயன்படுத்தி இவற்றை பெற்றுக்கொண்டதாகும்.

குறிப்பாகச் சொல்வதானால் பொன் கந்தையா தமிழ் சமூகத்தின் அடிப்படை முரண்பாடாக இருந்த சாதிய முரண்பாட்டையும்; அதை கட்டிக்காத்துவந்த அடிமை குடிமை முறையிலான சுரண்டல் அமைப்பையும் தகர்தெறிவதற்கான துணிச்சலை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஊட்டியதுடன் அதற்கான பேராட்டத்தில் தான் முன்நிலையில் நின்று தோள் கொடுத்து அதற்கான வழிகாட்டியாகவும் இருந்தார். அவர் அரசிலில் இருந்தது ஒரு 15 வருடங்கள் தான் இருக்கும் ஆனால் இந்தக் குறுகிய காலத்தில் தமிழ்
சமூகத்தில் அவர் எற்படுத்திய மாற்றம் என்பது அளப்பரியது.

1960 தேர்தலில் பருதித்துறை தேர்தல் தொகுதி பிரிக்கப்பட்டு புதிதாக உருவாக்கப்பட்ட உடுப்பிட்டி தேர்தல் தொகுதியில் பொன் கந்தையா போட்டியிட்டார்.அவரை எப்படியும் தோற்கடிக்க வேண்டும் என்பதில் அதிகார வாக்கத்தினர் கறியாக இருந்தனர்
ஆவரை எதிர்த்து சமசமாஜக் கட்சி வேட்பாளரான ஆர்.ஆர். தர்மரத்தினம் போட்டியிட்டது அவர்களுக்கு சாதகமாக அமைந்தது. அந்தத் தேர்தலில் இடதுசாரி வாக்குகள் இரண்டாகப் பிரிந்ததாhல பொன் கந்தையா தோல்வியினைச் சந்திக்க நேர்ந்தது. அந்தத் தேர்தலில் கிடைத்த கொம்யூனிஸ்ட் கட்சிக்கு கிடைத்த வாக்குகளையும் லங்காசமசமாஜக் கட்சிக்குக் கிடைத்த வாக்குகளையும் கூட்டினால் அதில் வெற்றிபெற்ற எம்.சிவசிதம்பரத்திற்குக் கிடைத்த வாக்குகளிலும் பார்க்க அதிகமாகும்.
இந்தத் தேர்தலில் பொன் கந்தையாவுக்கு 5427 வாக்குகளும் ஆர்.ஆர்.தர்மரட்ணத்துக்கு 4573 வாக்குகளும் கிடைத்தன. எம்.சிவசிதம்பரத்திற்கு 7365 வாக்குகளே கிடைத்தன.
அந்தத் தேர்தலில் அவர் தோற்றுப் போனாலும் சமூகமாற்றத்துக்கான தனது போராட்டத்தை அவர் கைவிடவில்லை.வழமைபோல தனது களப்பணிகளை அவர் தொடர்ந்தார்.
துர்ரதிஷ்டவசமாக கொடிய புற்றுநோய் தாக்கத்துக்குள்ளான அவர் தனது 46 வது வயதில் 1960 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் காலமானார்.
அவருடைய மறைவு மாற்றத்தை வேண்டி நின்ற மக்களுக்கு பேரிழப்பாக இருந்தது
(தொடரும்)

பின் இணைப்பு-
நான் இந்தப்பதிவிலே நெல்லியடி மத்திய மகா வித்தியாலம் பற்றி எழுதிய போது பல நண்பர்கள் கால வேறுபாடு இருப்பதாகவும் அந்தப் பாடசாலை 1921ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதென்றும் 1946ம் ஆண்டு அது அப்போது கல்வி அமைச்சராக இருந்த சி.டபிள்யூ.கன்னங்கராவால் மத்திய மகாவித்தியாலயமாக தரமுயர்த்தப்பட்ட தென்றும் சில நண்பர்கள் சுட்டிக்காட்டினார்கள்.எனக்கும் அந்தக் குழப்பம் இருந்தது.வரலாறு அப்படித்தான் எழுதி வைக்கப்பட்டிருக்கிறது.
இலங்கைக்கு பிரித்தானியர்களிடந்து சுதந்திரம் கிடைக்காத காலகட்டத்தில் அதுவும் வடமராட்சிப் பிரதேசத்தில் தேவரையாளி இந்துக்கல்லூரியை நிறுவதற்கு பெரும் பாடுபட்டகாலத்தில் இப்படி ஒரு அரசினர் கல்லாரி அமைக்கப்பட்டதா? என்ற சந்தேகம் எனக்கு இருந்தது.
இது தொடர்பாக எமது பிரதேசத்தை சேர்ந்த என்னைவிட வயதில் மூத்த சில கல்விமான்கள் மற்றும் பொன் கந்தையா வாழந்த காலத்தில் வாழ்ந்த அவரது கட்சித் தோழர்கள் பலரிடமும் இதுபற்றி விசாரித்தேன்.
உண்மையில் ஆரம்பத்தில் நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தின் பெண்கள் பிரிவு பாடசாலையாக இயங்கிய உடுப்பிட்டி மாலிசந்தி வீதியல் வதிரிச் சந்திக்கு அண்மையிலுள்ள செல்லையா பாடசாலை என்பதே 1921ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதென்றும் பின்னர் அது 1946 ம் ஆண்டு சி.டபிள்யூ.கன்னங்கராவால் அரசினர் பாடசாலையாக அங்கீகரிக்கப்பட்டதென்றும் டபிள்யூ.தகாநாயக்கா கல்வியமைச்சராக இருந்த  பொன்;கந்தையாவின் காலகட்டத்தில் தான் அந்தப்பாடசாலையையும்  இணைத்து நெல்லியடி மத்திய மகா வித்தியாலம்  உருவாக்கப்பட்டதாக அறிய முடிந்தது.
நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தை உருவாக்கியதில் பொன். கந்தையாவின் பங்கை திட்டமிட்டு முடிமறைக்கும் செயலே இந்த வரலாற்று திரிபு என்றும் பலரும் கூறினார்கள்.இந்தக் கல்லூரியன் வரலாற்றைக் கூறும் எந்த அதிகார பூர்வ பதிவுகளிலும் ஒப்புக்குக் கூட பொன் கந்தையாவின் பெயர் இடம்பெறவில்லை என்பது கவனக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.இதுபற்றி மேலதிக விபரங்கள் தெரிந்த நண்பர்கள் எனக்கு எழுதினால் அதை நான் இந்தத் தொடரில் இணைத்துக்கொள்வேன்.
0000

பின்னிணைப்பு-2
(1956 ல்; சிங்களம் மட்டும் சட்டத்தை எதிர்த்து நாடாளுமன்றத்தில் பொன்;கந்தையா ஆற்றிய உரையின் ஒரு பகுதி) 
கௌரவ சபாநாயகர் அவர்களே! இந்த மசோதாவுக்கு நான் 
எதிர்ப்புத்தெரிவிக்கின்றேன். இந்த மசோதாவை எதிர்ப்பதற்கான 
எனது நோக்கு, நான் ஒரு தமிழனாக இருக்கின்றேன்  என்ற உண்மையை மட்டுமே  அடிப்படையாகக் கொண்டதல்ல. ஒரு தமிழன் என்ற வகையில், எனக்கு அருமையாக இருக்கின்ற அனைத்தையுமே இந்த மசோதா திருடுகின்றது என்றே நான் நம்புகின்றேன். எனது கடந்த 
காலத்தையும் நிகழ்காலத்தையும் இது மறுக்கின்றது என்பதோடு, கேடு சூழும் இந்தச் சட்டம், சட்டப் புத்தகத்திலிருந்து நீக்கப்படாதிருப்பின், எமது குழந்தைகளினதும் அவர்தம் தலைமுறைகளினதும் எதிர்காலத்தையும் மறுத்துக் கொண்டிருக்கும். இந்த மசோதாவின் மூலம் 
அரசாங்கம் இந்த நாட்டில் வாழும் தமிழ் பேசும் மக்கள் சுதந்திரமாகவும் கௌரவமாகவும், நாட்டின் குடிமக்களாகவும் இருந்து கொண்டு வாழும் பயனுள்ள வாழ்க்கையையும் அதற்கான  உரிமையையும் மறுக்கின்றது. நாங்கள் கொண்டிருந்த, கொண்டுள்ள, கொண்டிருக்க வேண்டும் 
என்று அவாவுகின்ற எல்லாவற்றையுமே இது எங்களுக்கு மறுக்கின்றது.
எனது தாய் எனக்கு உணவூட்டியபோது பாடிய அந்த மொழியை, எனது மனைவி எனது குழந்தைக்கு அதனது முதல் மகிழ்ச்சியையும் வருத்தத்தையும் வெளிப்படுத்த பயிற்சியளித்த 
அந்த மொழியை, எனது தாயோடும் மனைவியோடும் குழந்தைகளோடும் பேசுவதற்கு இந்த  அரசோ அல்லது வேறு எந்த அரசுதானுமோ அல்லது உலகின் கொடுங்கோலன் எவனுமோ தடைபோட முடியாது.
 எனது சொந்த மொழியைப் பேசுவதற்கு எவரும் தடைபோட முடியாது. 
சட்டங்களும் தடுக்க முடியாது. அந்த உரிமை பிரச்சினையாக இல்லை. புpரச்சினையாக  இருப்பதெல்லாம், நான் இந்த நாட்டின் குடிமகனாக இருந்து கொண்டு, நாளாந்த வாழ்விலும் அரசிலும் எனது மொழியை பிரயோகிக்கக் கூடிய உரிமைதான். எனது மொழி உரிமையை 
நீங்கள் மறுக்கின்ற பொழுது, இந்த நாட்டின் தமிழ் மகனாக நான் கொண்டிருக்கின்ற, கொண்டிருக்கக் கூடிய உரிமைகள் ஒவ்வொன்றையுமே நீங்கள் மறுக்கின்றீர்கள். 
நானும் எனது மக்களும் இல்லாது போய்விட வேண்டும், முடிந்துவிட வேண்டும் என்று உங்கள் போக்கில் நீங்கள் எடுத்த முடிவை எங்களுக்குப் பரிசாக வழங்குகிறீர்கள்.  
ஆகவே நீங்கள், உங்களது தர்க்கரீதியல்லாத, நியாயத் தன்மையற்ற ஆனால் அதிகார பலமும் ஆயுத பலமும் கொண்ட மேலாதிக்க பலத்துடன் என்னையும் எனது மக்களையும் இந்த அழகிய நாட்டின் மண்ணிலிருந்து  அழித்து விடுவதற்கு முயல்கிறீர்கள்........

.......நான் ஒரு கம்யூனிஸ்ட். கம்யூனிஸ்ட்டாக இருப்பதில்; பெருமையடைபவன். இப்போதைய சமூக பொருளாதார கட்டமைப்பாலும், இதனைப் பாதுகாக்கின்ற அரசியல் நிறுவனங்களாலும் நசிபட்ட, காயப்பட்ட மக்களைக் கொண்ட அமைப்புதான் எமது கட்சி. சுரண்டலிலும் கொடுங்கோன்மையிலும் நிலைகொண்ட அநீதியான சமூகங்கள் அறியாமையிலும், விரக்தியிலும், அவலங்களிலும் வாழ்கின்ற ஆயிரமாயிரம் மக்களைக் குப்பைக் குவியல்;களில் வீசியெறிந்து கொண்டிருக்கின்றன. குருட்டாட்ட சக்திகளின் நிரந்தர துன்புறுத்தலுக்கு இலக்காகும் அவர்கள் அவற்றைப் புரிந்து கொண்டு துடைத்தெறிய முடியாதவர்களாக இருக்கின்றார்கள்.  
இவ்வாறு உரிமை மறுக்கப்பட்டவர்களின் கட்சிதான ; கம்யூனிஸ்ட் கட்சி. அரசியல், பொருளாதார, 
சமூக ரீதியான எல்லா நடவடிக்கை மட்டங்களிலும் அவர்களது உரிமைக்காக அது 
போராடுகின்றது. ஒடுக்குமுறை என்ன வடிவத்தில் தோன்றினாலும் அதற்கெதிராக அது 
போராடுகின்றது. எமது அரசியல் தத்துவத்தின் இந்த அடிப்படை காரணமாகத்தான் கம்யூனிஸ்ட் கட்சியினராகிய நாங்கள் முழுப்பலத்துடன் இந்த மசோதாவை எதிர்க்கின்றோம். இந்த நாட்டில் 
வாழ்கின்ற எல்லா தேசிய இனத்தவர்களும் தமது மொழியைப் பிரயோகிக்கவும், தங்களைத் தாங்களே தமது மொழியில் ஆளவும், தமது மொழியையும் பண்பாட்டையும் வளர்க்கவும் விருத்தி 
செய்யவும், இயல்பானதும் தலையிடப்படாததுமான உரிமையைக் கொண்டுள்ளார்கள் என நம்புகிறோம். 
மற்றெந்த மொழிக் குழுக்களையும்விட, எந்தவொரு மொழிக் குழுவும் கூடுதலாகவோ குறைந்ததாகவோ கொண்டிருக்க முடியாத ஒரு உரிமைதான் இது. 
குடியுரிமையின் உரிமைகளையும் கட்டுப்பாடுகளையும் பிரயோகிப்பதிலும், அனுமதிப்பதிலும், ஒரு நபரோ அல்லது மொழிக்குழுவோ, அவரது அந்தக் குழுவினது மொழி காரணமாக, அடுத்த 
நபருக்கோ அல்லது குழுவுக்கோ கூடிய நிலையிலோ குறைந்த நிலையிலோ வைக்கப்பட முடியாது. 
இந்த மசோதாவை நாங்கள் நோக்குகையில், இந்த நாட்டில் வாழ்கின்ற அனைத்து தமிழ் பேசும் மக்கட் தொகுதியினதும் உரிமையை இது மறுத்துரைக்கிறது. இந்த உரிமை மறுப்பின் மீது நாங்கள் பாராமுகமாக இருக்க முடியாது என்பதோடு, கம்யூனிஸ்ட் கட்சியினராகிய நாங்கள் இந்த மசோதாவுக்கெதிராக வாக்களிப்போம். இதனது கொள்கைகளுக்கும் செயல்களுக்கும் எதிராக இயங்குவோம். 


1 கருத்து:

பாரதிநேசன் சொன்னது…

பொன்.கந்தையாவை பற்றி நீங்கள் எழுதிய விடயங்கள் பல எனக்கு தெரியாதவை. இவற்றை பதிவில் இட்டமைக்கு மிகுந்த நன்றியை தெரிவிக்கிறேன்.

பாலச்சந்திரன்