செவ்வாய், 29 அக்டோபர், 2013

நினைவழியா வடுக்கள் 21

நினைவழியா வடுக்கள் 21
சந்திரன் இறந்து இரண்டு வாரம் கடந்துவிட்ட நிலையில் அவனை கொலைசெய்த சாதி வெறியர்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லையே என்ற ஆதங்கம் என் மனதை வாட்டிக்கொண்டிருந்தது. ‘நாங்கள் அவனை மறந்து விட்டதாக நினைத்து அவன் ஆவியாக வந்து எங்களை வெருட்டுவானோ?’ என்ற பயம் வேறு அடிமனதில் இருந்துகொண்டிருந்தது.
இது பற்றிய பேச்சை எடுத்தாலே சின்னத்தம்பியும் நடராசனும் ‘ஆளை விட்டால் போதும் சாமி’ என்று விலகி விலகிச் சென்றார்கள்.
தனியாக எதையும் செய்வதற்கும் எனக்கு துணிவிருக்கவில்லை.
ஒரு நாள் தோழர் சிவராசா எங்கள் வீட்டுக்கு வந்த போது, ‘சிறுவர்களான நாங்கள் அவர்களது போராட்டத்துக்கு என்ன செய்யலாம்’ என்று கேட்டேன்.
‘நன்றாகப்படித்து சாதித்து காட்டுவது தான் சிறுவர்களான எங்களுக்குரிய கடமை’ என்று அவர் சொன்னார்.கந்தமுருசேனாரும் இதைத் தான் எனக்கு சொல்லியிருந்தார்;.
நாங்கள் படித்து முன்னேற வேண்டுமானால் அதற்கு இருக்கும் தடைகளை அகற்ற வேண்டும்.
ஆதிலும் பாடசாலைக்கு செல்வதற்கு விருப்பமும் ஈடுபாடும் இருக்கவேண்டும்.
ஆனால் பாடசாலை என்பது எங்களை அவமதிக்கும்-புறக்கணிக்கும் இடமாக இருந்ததால் நாங்கள் ஆர்வத்தோடும் மகிழ்ச்சியோடும் அங்கு செல்வதில்லை.
உண்மையை சொல்வதானால் கந்த முருகேசனார் நடத்திய திண்ணைப் பள்ளிக் கூடத்துக்கு செல்வதில் இருந்த ஆர்வம் எனக்கு அரசாங்க பாடசாலையான மந்திகை பள்ளிக் கூடத்துக்கு செல்வதில் இருக்கவில்லை.
அதற்கு காரணம் சாதி வெறியரான கதிர்காமர் வாத்தியாருடைய செய்பாடுகளாகும்;
அன்று ஒரு வெள்ளிக்கிழமை.
வழமைபோல பாடசாலைக்குச் சென்று எங்களது வகுப்பில் பசுபதி வாத்தியார் புதிதாக எமக்கு ஏற்பாடு செய்து தந்தபடி காட்போட் மட்டைகளை எடுத்துவந்து தரையில் போட்டுவிட்டு அமரமுற்பட்ட போது நாங்கள் அமரும் இடத்துக்கு பக்கத்தில் உள்ள கதிரையில் அமரும் மாணவன் வராதது தெரிந்தது.
ஏற்கவே சந்திரன் சாதிவெறியர்களால் கொலைசெய்யப்பட்டதை நினைத்து கோபத்துடன் இருந்த எனக்கு ‘இந்த கதிரையில் ஏறியிருந்தால் என்ன?’ என்ற எண்ணம் சட்டென்று தோன்றிது.’போராடினால் தான் எதுவும் கிடைக்கும்’ என்று கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள் சொன்னதும் ஞாபகத்துக்கு வந்தது.
‘எல்லாம் வல்ல சாமி இருக்கிற கோயிலுக்குள் போகிறதுக்கு துணிஞ்ச பிறகு வகுப்பில் இருக்கும் கதிரையில் ஏறி இருந்தால் என்ன?’ என்ற நினைப்புடன் பின்விளைவுகள் பற்றிய எந்தப்பயமும் இன்றி அந்த கதிரையில் ஏறி இருந்துவிட்டேன்.
நான் ஏறி இருந்த கதிரைக்கு பக்கத்து கதிரையில் இருந்த மேட்டுக்குடி மாணவன் ஏதோ அசிங்கமான விரும்பத் தகாத மிருகம் ஒன்று தனக்கு பக்கத்தில் வந்து இருந்துவிட்டதாக நினைத்து கத்திக்கொண்டு எழுந்து அப்பால் சென்றுவிட்டான்;.
அங்கிருந்த மேட்டுக்குடி மாணவ சிகாமணிகள் ஏதோ பெரிய அக்கிரமம் நடந்துவிட்டதைப் போல ‘ஏய் நளவா நீ கதிரையில் இருக்கக் கூடாது எழும்படா’ என்று கத்திக் கூச்சல் போட்டார்கள்.நான் அசைய மறுக்க சிலர் என்னை இழுத்து விழுத்தப்பார்த்தார்கள்.
நான் மேசையை இறுக்கிப்பிடித்தபடி அசையாதிருக்க சிலர் எனக்கு அடித்தார்கள்.அவர்களை தடுக்க சின்னத்தம்பி நடராசன் உட்பட எமது சமூகப் பொடியள் முயல அங்கு ஒரு சிறு கலவரமே மூண்டுவிட்டது.
அதற்குள் சில மேட்டுக்குடி பொடியள் ஓடோடிச் சென்று எங்களது வகுப்பாசிரியாரான கதிர்காமர் வாத்தியாரை அழைத்து வந்தார்கள்.
சாதி வெறியரான அவர் குழுமாடு ஒன்று வெறி கொண்டு வருவதைப் போல கோபாவசத்தோடு வந்து ‘எல்லாம் இருங்கோடா’ என்று கத்தினார்.
அப்போதும் கதிரையை விட்டு எழுந்திராது அமர்ந்திருந்த என்னை வெறிபிடித்த மிருகம் ஒன்று பார்ப்பதைப்போல வெறித்தனமாக பர்த்து
‘நள நாயே உனக்கு கதிரை கேக்குதா’ என்று கத்திய வாறு என்னுடை தலைமயிரில் பிடித்து என்னைத்தூக்கி எனது தலையை அருகில் இருந்த சுவரில் மோதி அடித்தார்.
அந்த வெறிகொண்ட மனித மிருகம் தூக்கி அடித்ததில் எனது இடது பக்க நெற்றி உடைந்து இரத்தம் கொட்டியது.
அவமானம் அழுமை ஆத்திரம் எல்லாம் ஒன்று சேர நான் எழுந்து கண் இமைக்கும் நேரத்தில் என்னுடைய சிலேட்டை எடுத்து வாத்தியார் என்ற பெயரில் இருந்த அந்த மனித மிருகத்துக்கு எறிந்துவிட்டேன்.
அந்த சிலேட் அவர் மீது பட்டு கீழே விழுந்து உடைந்து நெருங்கியது.
‘ஓரு நளப் பொடியன் கதிரையில் ஏறி இருந்ததுமல்லாமல் ஒரு வெள்ளாள வாத்தியாரான தன்னையே அடித்துவிட்டான்’ எவ்வளவு பெரிய குற்றம்.?விடுவாரா கதிர்காமர் வாத்தியார்?அப்புறம் அவரது சைவ வெள்ளாளியப் பெருமை என்னாவது ?
என்னை அடித்து உதைத்து துவைத்து எடுத்துவிட்டார்.
அதற்குள் பசுபதி வாத்தியார் தலைமை ஆசிரியர் உட்பட எல்லோரும் அங்கே வந்துவிட்டனர்.
‘கூப்பிடுங்கள் பொலீசை.உவனை கொண்டுபோய் பொலிஸ் ஸ்டேசனிலை வைத்து நல்ல சாத்து சாத்த வேணும்’ என்று கதிர்காமர் வாத்தியார் கத்திக் கொண்டிருந்தார்.
‘போலீசுக்கெல்லாம் வேண்டாம் நாங்களே பாத்துக்கொள்ளுவம்,பொலிசுக்கு போனால் இவன்ரை படிப்பு கெட்டுபோய்விடும்’ என்று பசுபதி வாத்தியார் அவரை சமாதானம் செய்ய முற்பட்டார்.
‘என்ன பொலீஸ் வேண்டாம்?நீர் இந்த கீழ் சாதி நாயளுக்கு சப்போட்டோ? உவங்களுக்கு எல்லாம் என்னத்துக்கு படிப்பு.போய் மக்கோனாவில் (மக்கோனா என்பது ஒரு இடம் அங்குதான் சிறுவர் சீர் திருத்தப் பள்ளி இருந்தது) இருந்து கழி தின்னட்டும்’ என்று வார்த்தைகளை அனலாகக் கொட்டினார்.
POINT PEDRO HOSஇவர்கள் இப்படி பேசிக் கொண்டிருந்த போது எனது தலைக் காயத்திலிருந்து இரத்தம் கொட்டிக்கொண்டிருந்தது.
அதை அவதானித்த பசுபதி வாத்தியார் அங்கிருந்த தலைமை ஆசிரியரைப் பார்த்து ‘இதில் என்ன செய்யலாம் என்பதை நீங்கள் தான் முடிவெடுக்க வேணும், நான் போய் இவனுக்கு மருந்து கட்டிக்கொண்டு வாறன்’ என்று கூறிவிட்டு என்னை அருகிலிருந்த மந்திகை மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்று மருந்து கட்டுவித்தார்.
நாங்கள் மருத்துவமனையில் இருந்து பாடசாலைக்கு திரும்பிய போது அங்கே காவல்துறை ஜீப் நின்று கொண்டிருந்தது.
வாத்தியாரை அடித்துவிட்டு நான் ஓடியபோது கால் தடக்கி கல்லில் விழுந்து மண்டை உடைந்து விட்டது. இது தான் காவல்துறைக்கு அவர்கள் கொடுத்த வாக்கு மூலம்.
POLICE
நான் பயத்தில் கதறி அழ பருத்தித்துறை காவல்துறையினர் என்னை ஜீப்பில் ஏற்றிக் கொண்டு போய் காவலில் வைத்துவிட்டார்கள்.
விசயமறிந்து எனது அப்பாவும் அம்மாவும் ஓடிவந்து அவர்களிடம் என்னை விட்டுவிடும்படி கெஞ்;சிப்பார்த்தார்கள்.
வாத்தியாருக்கு அடித்த பொடியளை விட முடியாது என்று அவர்கள் கூறிவிட்டார்கள்.
எனது தந்தை சட்டத்தரணி ஒருவரை ஏற்பாடு செய்து அவர் மூலமாக காவல்துறையினரை அணுகினார்
அப்போதும் ‘வாத்தியாருக்கு அடித்தது பெரிய குற்றம் என்றும் என்னை நீதி மன்றத்தில் நிறத்தி மக்கோனேவில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப் போவதாகவும்’ அவர்கள் சட்டத்தரணியிடம் தெரிவித்துவிட்டனர்.அந்த சட்டத்தரணி அங்கிருந்த காவல்துறை பொறுப்பதிகாரிக்கு நடந்த உண்மை சம்பவத்தை விளக்கி கூற, அவர் முறைப்பாடு செய்தவர்கள் தாங்கள் கொடுத்த முறைப்பாட்டை திரும்பப் பெற்றால் மட்டுமே என்னை விடுதலை செய்ய வழி இருக்கிறதென்றும் அதற்கு மாலை 5 மணி வரை அவகாசம் தருவதாகவும் தெரிவித்தார்.
அப்போது நேரம் பகல் 11 மணியாகியிருந்தது.
அந்த சட்டத்தரணி தனது காரிலே எனது பெற்றோரை பாடசாலைக்கு அழைத்துவந்து பாடசாலை அதிபருடனும் கதிகர்காமர் வாத்தியாருடனும் பேசிய போதும் அவர்கள் தாங்கள் கொடுத்த முறைப்பாட்டை திரும்பப் பெறமறுத்துவிட்டனர்.
அதற்கு மேல் தன்னால் ஒன்றும் செய்ய முடியாதென சட்டத்தரணி கைவிரித்துவிட, பயந்து போன எனது தந்தை மந்திகை சந்தியில் வாடகை கார் வைத்திருந்த இரத்தினம் என்பவரின் காரை வாடகைக்கு அமர்த்திக் கொண்டு அந்த நேரம் எமது பிரதேச தலைவர்கள் என்று சொல்லிக்கொண்டிருந்த ஜெயக்கொடி, துரைரத்தினம், நடராசா என்று எல்லோரையும் சென்று பார்த்து நடந்ததை சொல்லி உதவிசெய்யும் படி கெஞ்சினார்.ஆனால் வாத்தியருக்கு அடித்த பொடியனுக்கு ஒன்றும் செய்ய முடியாது என்று அவர்கள் கையை விரித்துவிட்டனர்.
எனது சிறிய தந்தை செல்லத்தம்பி சிறுபான்மை தமிழர் மகாசபையின் பிரிதிநிதிகள் மூலம் எதாவது செய்விக்கலாம் என்று அவர்களுடன் பேசுவதற்காக யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்தார். அவர்களுக்கும் பருத்தித்துறைக்கு வந்து எங்களுக்கு உதவி செய்ய நேரம் இருக்கவில்லை.
மாலை 5 மணி வரை நான் காவல்துறையின் காவலில் அழுது கொண்டிருக்க எனது பெற்றோர் கண்ணீரும் கம்பலையுமாக வீதியாக அலைந்து கொண்டிருந்தனர்.
இதற்கிடையில் இந்த விடயத்தை அறிந்த கரவெட்டி பகுதி கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள் தோழர் சண்முகதாசனுக்கு ரங்கோல் போட்டு நடந்ததைச் சொல்ல அவர் உடனடியாக தோழர் எஸ்.டி.பண்டாரநாயக்காவை(சந்திரிகாவின் தந்தை அல்ல) தொடர்;பு கொண்டு நடந்ததை சொல்லி அவர் மூலமாக கொழும்பிலுள்ள காவல்துறை தலைமையகத்தின் ஊடக பருத்தித்துறை காவல் நிலையத்துக்கும் பருத்தித்துறை நீதிபதிக்கும் தகவல் அனுப்பியிருந்தார்.
மாலை 5 மணிக்கு பருத்தித்துறை காவல்துறையினர் என்னை பருத்தித்துறை நீதிபதியின் முன் அவரது வீட்டில் நிறுத்திய போது என்னை ஒரு குற்றவாளியாக அல்லாமல் அன்புடன் அணுகிய நீதிபதி நடந்த சம்பத்தை மறைக்காமல் சொல்லும்படி கேட்டார்.
நான் அழுதுகொண்டே நடந்ததை சொல்ல அதை பதிவு செய்த அவர் காவல்துறையினரை பார்த்து ‘என்மீது வழக்கு பதிவு செய்ய வேண்டாம் என்றும், பாடசாலைக்குச் சென்று நடந்த சம்பவத்தை விசாரித்து நடவடிக்கை எடுக்கும் படியும்’ உத்தரவிட்டு என்னை விடுதலை செய்தார்.
பின்னர் நடந்த விசாரணையில் கல்வித்துறை உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.கதிர்காமர் வாத்தியார் என்னை தூக்கி சுவரில் மோதி அடித்தது உண்மை என்பது உறுதியாகியது.சாதிரீதியாக அந்தப்பாடசாலையில் நடந்த புறக்கணிப்புகளும் வெளிச்சத்துக்கு வந்தது.இதை அடுத்து கதிர்காமர் வாத்தியார் மீது துறைசார் நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டாகவும் பின்னர் மீண்டும் பணிக்கு சேர்ந்த போது மலையகத்துக்கு இடமாற்றம் பெற்று சென்று விட்டதாகவும் அறிந்தேன்.
இந்தச் சம்பவத்தின் பின்னர் அந்தப்பாடசாலையில் எமது சமூகப் பிள்ளைகளை தரையில் இருத்துவது கிணற்றில் தண்ணீர் அள்ள அனுமதிமறுப்பது, பிளாவில் பால் கொடுப்பது எல்லாம் நிறுத்தப்பட்டாலும் நான் தொடர்ந்து அங்கு கல்வி கற்க அனுமதி மறுக்கப்பட்டது.
ஆசிரியருக்கு அடித்த ஒழுக்கமற்ற மாணவன் என்று எனது பாடசாலை சான்றிதழில் எழுதி என்னை பாடசாலையில் இருந்து நீக்கிவிட்டார்கள்.
இது என்னை அவர்கள் மக்கோனாவுக்கு அனுப்ப முயற்சித்ததைவிட எனக்கு பெரிய பாதிப்பை தந்தது.
எந்தவொரு பாடசாலையிலும் என்னை சேர்த்துக்கொள்ள மறுத்தார்கள்.ஆசிரியருக்கு அடித்த மாணவன் என்ற குற்றச்சாட்டுத்தான் முன்னுக்கு நின்றதே தவிர எனது தரப்பு நியாயம் சாதிய சமூகத்தில் எடுபடவில்லை.
எனது தந்தை எமது பிரதேசத்திலுள்ள எல்லா பாடசாலைகளுக்கும் சென்றுபேசிப் பார்த்தும் எந்தப்பலனும் கிட்டவில்லை.கல்வித் திணைக்களம் வரை சென்று முயன்றும் முடியவில்லை.அவர்கள் தட்டிக்களிப்பதற்காக ஏதாவது ஒரு பாடசாலைக்கு போகச் சொல்வார்கள்.அந்த பாடசாலை அதிபர் எனது பாடசாலை சான்றிதழை பார்த்துவிட்டு இடம் இல்லை என்பார்.எமது சமூக பிள்ளைகளின் முன்னேற்றத்துக்காக ஆரம்பிக்கப்பட்ட வதிரி தேவரையாளி இந்துக்கல்லூரியில் கூட எனக்கு இடம் இடம் கிடைக்கவில்லை என்பதும் அவர்களுக்கு கூட அசிரியரை அடித்த மாணவன் என்பது தான் முக்கியமாக கண்ணில் பட்டது என்பது தான் வருத்தத்துக்குரிய விடயம்
ஏறக்குறைய இரண்டு மாதகாலம் இப்படியே அலைந்து திரிந்து ஒரு கட்டத்தில் எனது தந்தை மிகவும் சோர்ந்து மனமுடைந்துவிட்டார்.
இந்த நேரத்தில் தோழர் சிவராசா இறுதி முயற்சியாக ஒருவரை சந்திப்போம் என்று கரவெட்டியிலுள்ள ஒரு ஆசிரியையின் வீட்டுக்கு அவரை அழைத்துச் சென்றார்.
அந்த ஆசிரியை பருத்தித்துறையிலுள்ள மெதடிஸ்த பெண்கள் பாடசாலையில் கல்வி கற்பித்துக் கொண்டிருந்தார்.அத்துடன் அந்த கல்லூரி அதிபர் அந்த ஆசிரியையின் கற்பித்தல் முறை மற்றும் சமூக அக்கறை என்பவற்றால் அவர் மீது நன்மதிப்பு வைத்திருந்தார்.
அந்தக் காலகட்டத்தில் அந்தப்பாடசாலையில் 5 ம் வகுப்புவரை சிறுவர்கள் படிக்கலாம்.6 ம் வகுப்புக்கு நுளைவுத்தேர்வு எழுதி ஹாட்லிக் கல்லூரிக்கு செல்லலாம். மெதடிஸ்த பெண்கள் பாடசாலையில் கல்விகற்கும் மாணவர்களுக்கு ஹாட்லிக் கல்லூரியில் சேர்வதற்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டும் என்பது விதியாக இருந்தது.
அந்த ஆசிரிiயிடம் தோழர் சிவராசாவும் எனது தந்தையும் நடந்ததை கூற அவர் கொதித்துப் போய்விட்டார்.
ஒரு சிறு பிள்ளையின் எதிர்காலத்தை பழாக்குவதில் இந்த சமூகம் எவ்வளவு அயோக்கியத்தனமாக நடந்து கொள்கிறது என்று வருத்தப்பட்டார்.
உடனடியாகவே அவர் மெதடிஸ்த பெண்கள் பாடசாலை அதிபரின் வீட்டுக்கு தோழர் சிவராசாவையும் எனது தந்தைiயும் அழைத்துக்சென்றார்.
தீவிர கிறீஸ்தவரான அந்த பெண் அதிபரிடம் எனது தந்தையும் தோழர் சிவராசாவும் கூறிய அனைத்தையும் அந்த ஆசிரியை எடுத்துச் சொன்னார்.
அவற்றையெல்லாம் பொறுமையாக கேட்ட அவர் ‘கர்த்தரே இந்தப் பாவிகள் அறியாமல் செய்யும் பிழைகளை மன்னித்தருளும்’ என்ற ஒரே ஒரு வசனத்ததை மட்டும் கூறிவிட்டு மறுபேச்சின்றி என்னை அந்தப் பாடசாலையில் உடனடியாக சேர்த்துக் கொள்ள சம்மதம் தெரிவித்தார்.
எனது தந்தை அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை.
மறு நாள் காலையிலேயே நாங்கள் பாடசாலைக்குச் சென்றுவிட்டோம்.
methdistஎந்தவித கேள்விகள் விசாரிப்புகள் காத்திருப்புக்கள் ஏதுமின்றி நான் அந்தப் பாடசாலையில் சேர்த்துக்கொள்ளப்பட்டுவிட்டேன்.
என்னுடைய அதிஷ;டம் நான் அந்த பாடசாலையில் சேர்வதற்கு உதவிய ஆசிரியையே எனது வகுப்பாசிரியராக இருந்தார்.
அவர் முதல் வரிசையில் என்னை அழைத்துச் சென்று அமரவைத்தார்.
என்னுடைய வாழக்கையில் நான் மறக்க முடியாத அளவுக்கு பேருதவி புரிந்து எனது கல்விச் செயற்பாட்டை ஊக்குவித்த அந்த ஆசியையின் பெயர் மேரி(டீச்சர்) ஆகும்.
1980 களில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தளபதிகளில் ஒருவராக இருந்த சுக்ளா அவருடைய மகன் என்பது சிறப்பு தகவலாகும்.
மெதடிஸ்த பெண்கள் பாடசாலை பருத்தித்துறை கடற்கரை ஓரம் மிகவும் ரம்யமான இயற்கை சூழலில் அமைந்திருந்தது.எங்களது வகுப்பில் இருந்து கடலை பார்த்துக்கொண்டே பாடம் படிப்பது எனக்கு மிகவும் பிடித்திருந்து.மேரி டீச்சர் உட்பட எமக்கு பாடம் நடத்திய ஆசிரியைகள் அனைவரும் என்னை அன்பாகவும் கண்ணியத்துடனுமே நடத்தினர்.என்னுடைய பின்னணி தெரிந்து எனக்கு கற்பிப்பதற்கு கூடிய அக்கறை எடுத்துக்கொண்டனர்.
எற்கனவே அந்தப் பாடசாலையில் எனக்கு சித்தி முறையான மகாலட்சுமி அத்தை முறையான இரத்தினமணி ஆகியோர் படித்துக்கொண்டிருந்தனர்;.அவர்களுடன் சேர்ந்து அந்தப்பாடசாலைக்கு போவதும் திரும்பி வருவதும் எனக்கு பிடித்திருந்து.
என்ன மந்திகை பாடசாலை எனது வீட்டில் இருந்து நடந்து செல்லும் தூரத்தில் இருந்தது. இது எங்கள் வீட்டில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பருத்தித்துறை நகரத்தில் இருந்ததால் மந்திகை சந்திக்கு நடந்து சென்று அங்கிருந்து பருத்தித்துறைக்கு பேருந்தில் செல்ல வேண்டி இருந்தது.
000

வியாழன், 29 ஆகஸ்ட், 2013

நினைவழியா வடுக்கள் 20

சந்திரனின் மரணம் எனது வாழ்க்கையில் நான் சந்தித்த பார்த்த முதல் இழப்பாகும்.அது என்னை பெரிதும் பாதித்துவிட்டது.
சந்திரன் எனது பெரியப்பா சாமிக் கிட்டிணருக்கும் பெரியம்மா அருந்தவத்துக்கும் பிறந்த ஒரே மகன்.அதுவும் அவர்களுக்கு 15 வருடங்கள் பிள்ளையில்லாமல் இருந்து பிறந்த ஒரே மகன்.அவனது இழப்பை தாங்க முடியாமல் அவர்கள் கதறிய கதறல் இன்றும் என்மனதில் ஆளமாக பதிந்திருக்கிறது.
சந்திரன் விளையாடும் போது கால்தவறி கிணற்றுக்குள் விழுந்து விட்டான் என்று தான் ஊரில் எல்லோரும் நம்பிக்கொண்டிருந்தார்கள்.
ஓரு சிலர் நடராசன் தான் அவனை கிணற்றுக்குள் தள்ளி விழுத்திவிட்டான் என்றும் அவன் மீது குற்றம் சாட்டினார்கள்.
அவன் எங்கே உண்மையை சொல்லிவிடுவானோ என்ற பயம் எனக்கும் சின்னத்தம்பிக்கும் ஏற்பட்டிருந்தது.ஆனால் அவன் வாயே திறக்கவில்லை.சந்திரனின் சாவு அவனையும் அதிகம் பாதித்திருந்தது. இரண்டு பேரும் பக்கத்து பக்கத்து வீட்டுக்காரர்கள். என்னையும் சின்னத்தம்பியையும் விட அவனுடன் தான் சந்திரன் அதிகநேரம் இருப்பான்.
நடராசன் எங்களை காட்டிக்கொடுக்காததையிட்டு நாங்கள் நிம்மதியடைந்தாலும் எங்களால் தானே சந்திரன் இறந்தான் என்ற ஒரு குற்ற உணர்வு எனது மனதை வருத்தியது.
நாங்கள் ஐயரின் வண்டிலை கொழுத்த போகாமல் இருந்திருந்தால் அவன் செத்துப் போயிருக்க மாட்டான் என்ற எண்ணமும் அதேநேரம் அவனை கொலை செய்தவர்கள் ஈவிரக்கமற்ற அரக்கர்கள் கொடூரமான பூதங்கள் என்ற எண்ணமும் என்மனதில் ஏற்பட்டிருந்து.
64229_514967288559843_1278545773_nகொடுமைக்காரர்களாக சித்தரிக்கப்படும் அரக்கர்களையும் கொடிய பூதங்களையும் அழிப்பதற்கு கடவுள் அவதாரம் எடுத்துவருவார் என்று அம்மா எனக்கு சொல்லியிருந்தா.ஒரு சிறுவன் என்றும் பார்க்காமல் கொலை செய்த இந்த அரக்கர்களை அழிக்க கடவுள் வரமாட்டாரா என்ற ஏக்கமும் எனக்கு ஏற்பட்டது.
நேற்றுவரை எங்களோடு ஒன்றாய் ஓடி விளையாடியவன் இன்று இல்லை என்ற துக்கம் தொண்டைய அடைக்க நான் மூன்று நாட்கள் காச்சலில் எழும்ப முடியாமல் படுத்திருந்தேன்.
சந்திரனின் சாவால் மறுநாள் நடக்கவிருந்த வல்லிபுரஆழ்வார் கோவில் ஆலயப் பிரவேச போராட்டம் பிறிதொரு திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
சந்திரனின் பெற்றோரையும் நெருங்கிய இரத்த உறவினர்களையும் தவிர எங்கள் ஊரிலிருந்த மற்றவர்கள் அவனது மரணத்தை மறந்துவிட்டு தங்களது நாளாந்த வாழ்க்கை பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.
நானும் சின்னத்தம்பியும் நடராசனும் கூட பாடசாலைக்கு செல்ல ஆரம்பித்திருந்தோம்.
அடுத்த ஞாயி;ற்றுக்கிழமை கரவெட்டி பகுதி தோழர்கள் எனது தந்தையை சந்திக்க வந்திருந்தனர்.
சந்திரனின் இழப்புக்கான துயர் பகிர்தலுடன் ஆரம்பித்த அன்றைய சந்திப்பில் சாதியத்துக்கு எதிரான போராட்டம் அடைந்துவரும் வெற்றி பற்றி அவர்கள் அதிகம் பேசிக்கொண்டிருந்தார்கள்.
வழக்கம் போலவே ஒரு ஓரத்தில் அமர்ந்து அவர்கள் பேசுவதை நான் கேட்டுக்கொண்டிருந்தேன்.
அன்றைய பேச்சின் முக்கிய அம்சம் சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட ‘பஞ்சமர்களுடைய குழந்தைகளை எவ்வாறு உயர் சாதியினர் ஆளுமைக் குறைப்பு செய்கிறார்கள்’ என்பது பற்றியதாகும்.
அப்போது இந்த ‘ஆளுமை’ என்ற சொல் எனக்கு புதிய சொல்லாக இருந்தது.அவர்கள் பேசியதும் எனக்கு புரியவில்லை. ஆனாலும் ‘யார் நல்ல விடயங்களை பேசினாலும் எனக்கு அது புரியாவிட்டாலும் அதை கூர்ந்து கவனித்து கிரகித்துக்கொண்டு பின்னர் அதிலுள்ள தெரியாத விடயங்களை மற்றவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்வது’ என்று சிறுவயதில் இருந்தே என்னிடம் ஒரு பழக்கம் இருந்தது. எனக்கு தமிழ் தாத்தா கந்த முருகேசனார் கற்றுத் தந்த பல நல்ல பழக்கங்களில் இதுவும் ஒன்றாகும்.
அப்படித்தான் இந்த ஆளுமை பற்றிய விடயத்தையும் நான் கிரகித்துக்கொண்டேன்.
அந்த வகையிலே ஒரு தனி மனிதனின் ஆளுமை பற்றியும்,அந்த ஆளுமையை திட்டமிட்டு மழுங்கடிப்பதன் மூலம் ஒரு சமூகத்தின் வளர்ச்சியை தடுக்க முடியும் என்பதையும் நான் முதன் முதலாக தெரிந்து கொண்ட அந்த நாளும் அன்று அவர்கள் கலந்துரையாடிய விடயத்தின் சாராம்சமும் இன்றும் பசுமரத்து ஆணிபோல என் நினைவில் இருக்கிறது.
குழந்தைகள் பொதுவாக தமது 5 வயதிலிருந்து 16 வயதுவரையிலான காலகட்டத்திலேயே இந்த உலகத்தை புரிந்து கொள்வதுடன் தங்களுடைய ஆளுமையை- திறமையை-தலைமைப்பண்பை வளர்த்துக்கொள்கின்றன.
இந்தக் காலகட்டத்தில் அந்தக் குழந்தைகளின் மனதில் பதியும் விடயங்களே அவர்கள் வளர்ந்து பெரியவர்களாகி இறக்கும் வரை தாக்கம் செலுத்துகிறது.
இந்தக் காலகட்டத்தில் சாதி ரீதியாக ஒடுக்கப்பட்டவர்களின் குழந்தைகளுக்கு கருத்தியல் காயடிப்பு செய்வதன் மூலம் அவர்களது ஆளுமையை மழுங்கடித்து அவர்களது வளர்ச்சியை மட்டுப்படுத்தி சந்ததி சந்ததியாக சாதியத்தை கடத்தும் கைங்கரியத்தை சாதிமான்கள் செய்து வந்தனர்.
குறிப்பாக
‘நீங்கள் எல்லாம் படிச்சு என்னடா கிழிக்கப்போறிங்கள்’
‘படிச்சு டொக்டர் எஞ்சினியர் ஆகலாம் என்று கனவுகாணுறியளோ?’
‘மாடு மேய்க்கப் போறதையும் மரம் ஏறப்போறதையும் விட்டுட்டு ஏன்ரா
பள்ளிக் கூடத்துக்கு வந்து கழுத்தறுக்கிறியள்?’
‘கொப்பரும்(அப்பா)கோத்தையும் (அம்மா) படிச்சிருந்தால் தானே
உங்களுக்கு படிப்பு வரும்’
என்று பஞ்சமர்களின் பிள்ளைகளைப் பார்த்து தினமும் பாடசாலைகளிலும் வெளியிலும் கூறப்படும் வசவுகள் கோபத்தின் வெளிப்பாட்டால் சொல்லப்படும் சாதாரண வசவுகளல்ல.
இவை அந்த பிள்ளைகளின் மனோபலத்தை சிறுகச் சிறுகச் சிதைத்து அவர்களை ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு அப்பால் செயற்திறன் மிக்கவர்களாக வளரவிடாமல் தடுக்கும் திட்டமிட்ட சாதிவெறி செயற்பாட்டின் ஓரங்கமாகும்.
Inside Dutch Fort - Jaffna
சிங்கள இனவெறியர்கள் தமிழர்களை ‘பற தெமிழ’ (பறைத்தமிழன்) என்று இழிசொற்குறியீட்டால் அழைப்பதை இனவெறி செயற்;பாடாக சித்தரித்து அதற்கு எதிராக கிளர்ந்தெழுந்து போராடிய யாழ்ப்பாண உயர்குடி சமூகம் தான் பஞ்சமர்களான எங்களை ‘நள நாய், பறை வேசை’ முதலான இழிசொற்களால் அழைத்து இம்சைப்படுத்தியது.
இந்த மேட்டுக் குடியினரின் பிள்ளைகள் எங்களை பாடசாலைகளிலும் ரியூட்டரிகளிலும்,பல்கலைக் கழகங்களிலும் தினம் தினம் சோடியம் யெ (நளவர்) பொஸ்பரஸ் P (பள்ளர்) முதலான இரசாயன குறியீட்டுப் பெயர்களால் அழைத்து தனிமைப்படுத்தி அவமானப்படுத்தும் போது எங்கள் மனதில் ஏற்பட்ட வேதனையும் அது எற்படுத்திய வலியையும் எழுத்தில் வர்ணிக்க முடியாது. அதை சாகும்வரை மறக்கவும் முடியாது.(பௌத்த சிங்கள பேரனவாதம் ஒவ்வொரு தமிழனையும் தனிப்பட்ட முறையில் இலக்கு வைத்து தினசரி உளவியல் சித்திரவதை செய்ததில்லை)
பொதுவாக ஈழத்தமிழ் சமூகம் என்பது ஏனைய இந்திய சமூகங்களைப் போல ஆணாதிக்க சமூகமாக இருந்தாலும் யாழ்ப்பாண சமூகத்தில்; தாய்வழி சமூகத்தின் தொடர்ச்சி என்பது அதிகளவுக்கு இருந்து வந்தது.அதிலும் பஞ்சமர் சமூக குடும்பங்களில் தந்தையரை விட தாய்மாரின் ஆதிக்கமே அதிகம் இருந்தது.
ஆனால் யாழ்ப்பாண மேட்டுக்குடி சமூக அமைப்பு கல்வி மற்றும் பொருளாதார ரீதியில் மேம்;பட்ட அரைப் பார்ப்பணிய ஒழுங்கு விதிகளைக் கொண்ட ஒரு சமூக அமைப்பாக இருந்தது.அந்த அமைப்பில் சமூக ஒழுங்கு என்ற பெயரில் குடும்ப உறுப்பினர்களுடைய அதிகாரம் வரையறுக்கப்பட்டிருந்து.
சராசரி இந்திய தமிழக மேட்டுக்குடி குடும்பங்களிள் தாய்மாருக்கு இருந்த அதிகாரங்களை விட யாழ்ப்பாண மேட்டுக்குடி தாய்மார்கள் அதிக அதிகாரங்களை கொண்டவர்களாக இருந்தார்கள்.
அதே போல இந்திய மேட்டுக்குடி தந்தைமாருக்கு குடும்பத்தலைவர் என்ற அடிப்படையில் இருந்த எல்லையற்ற அதிகாரம் யாழ்ப்பாண மேட்டுக்குடி தந்தைமாருக்கு இருக்கவில்லை.அவர்களுடைய அதிகாரம் மனைவிமாருக்கு இருந்த அதிகாரத்தைவிட சற்று அதிகமாக இருந்தாலும் அது வரையறைக்குட்பட்டதாகவே இருந்தது.
இது குடும்ப வன்முறையை ஓரளவுக்கு மட்டுப்படுத்தி அவர்களது பிள்ளைகள் ஆளுமையுள்ளவர்களாக வளர்வதற்கான அகச் சூழலை ஏற்படுத்திக் கொடுத்தது.
ஆனால் பஞ்சமர் சாதி குடும்பங்களில் இத்தகைய ஒரு சமூகம் சார்ந்த அதிகார ஒழுங்கு இல்லாதால் குடும்ப வன்முறை என்பது சர்வசாதாரணமாக இருந்தது.
நான் முதலிலே குறிப்பிட்டபடி இந்தக் குடும்பங்களில் மனைவிமாருடைய ஆதிகம் அதிகம் இருந்ததால் கணவன்மார் தங்களுடைய இருப்பை தக்க வைப்பதற்காக குடித்துவிட்டு வந்து அடித்து உதைத்து கலாட்டா பண்ணுவதும் போதை தெளிந்ததும் மனைவிமாரிடம் சரணாகதியடைவதும் தொடர்கதையாக இருந்து வந்தது.
கணவர்மார் மீது உள்ள கோபத்தை தாய்மார்கள் பிள்ளைகள் மீது காட்டி அவர்களை அடித்து உதைக்கும் போக்கும் பஞ்சமர் சமூகத்தில் மேட்டுக்குடி சமூகத்தைவிட ஒப்பீட்டளவில் அதிகமாக இருந்தது.
lwbbdd_இது பஞ்சமர் சமூகத்தில் பிள்ளைகள் அமைதியான சூழலில் இருந்து படிப்பதற்கும் ஆளுமையுள்ளவர்களாக வளர்வதற்கும் பெரும் தடையாக இருந்தது.மேலும் தாய் தந்தை இருவருமே கல்வியறிவு இல்லதவர்களாகவோ அல்லது ஒரளவுக்கே கல்வி அறிவுள்ளவர்களாகவோ இருந்ததும் பிள்ளைகள் தங்களது பாடங்கள் பற்றிய சந்தேகங்களை கேட்டுத் தெளிவு பெறுவதற்கும் தங்களது எதிர்கால கல்வி பற்றிய வழிகாட்டலை பெறுவதற்கும் முடியாத ஒரு நிலையை ஏற்படுத்தியிருந்து.
இது பஞ்சமர் சமூக பிள்ளைகள் ஒரு குறிப்பிட்ட தரத்துக்கு மேல் கல்வி கற்க முடியாத சூழ்;நிலையும் அவர்கள் தங்களுக்குள்ளேயே ‘இதெல்லாம் எங்களுக்கு ஒத்துவராத விடயங்கள்.நாங்கள் தொண்டூழியம் செய்யப்பிறந்தவர்கள்’ என்ற தாழ்வு மனப்பான்மையையும் ஏற்படுத்தியது.
குறிப்பாக சொல்வதானால் பஞ்சமர்களுடைய சமூகச் சூழல் என்பது அறியாமையும் அமைதியின்மையும் அடிப்படை வசதிகள் இல்லாததுமான ஒரு நிலையில் இருக்கும் வகையில் கட்டிக்காக்கப்பட்டு வந்தது.இந்தக் கட்டிக்காத்தல் என்பது தற்செயலானதோ அல்லது அர்த்தமற்ற அதிகாரச் செயற்பாடோ அல்ல.
பொதுவாக குழந்தைகளுக்கு அவர்கள் வாழுகின்ற சமூகச் சூழல் சரியில்லாதுவிட்டால் அவர்களால் ஆளுமையுள்ளவர்களாக வளரமுடியாது.
ஓரு சமூகத்தின் வளர்ச்சியை தடுக்க வேண்டுமானால் அந்த சமூகம் வாழக்கூடிய வாழ்வியல் சூழலை மூடுண்ட சூழலாக அல்லது சமச்சிரற்ற வளர்ச்சியுடைய சூழுலாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற ஆண்டான் அடிமை சிந்தைனைக்கான செயற்பாட்டு வடிவமாகவே இந்தக் கட்டிக்காத்தல் இருந்து வந்தது.
இந்த வகையில் நான் அதிஷ;டசாலி என்று சொல்லவேண்டும் எனது பெற்றோர் அதிகம் படிக்காவிட்டாலும் அனுபவக் கல்வியை நிறையப் பெற்றிருந்தனர்.குறிப்பாக இந்த ஒடுக்குமுறையிலிருந்த வெளியே வருவதற்கு எந்தக் கொள்கை சிறந்த கொள்கை என்பதை எனது தந்தை இனங்கண்டுகொண்டிருந்தார்.சமூக அக்கறையுள்ள பல நல்ல தோழர்களின் நட்பை அவர் பெற்றிருந்தார்.
1960 கள் வரை நான் வாழ்ந்த சமூகச் சூழலும் அடி தடி வெட்டு குத்து துப்பாக்கி சூடு என்று குழுச் சண்டை தெருச்சண்டைகள் நிறைந்த வன்முறைக்களமாகவே இருந்து வந்தது.
வாரத்தில் குறைந்து இரண்டு தடவையாவது வசைமாரிகளும் கூச்சல்களும் காட்டுக்கத்தல்களும் தெருநாய்களில் குரைப்புகளும் இணைந்து பேரொலியாக இரவின் நிசப்தத்தை குலைக்கும்.
மறுநாள் காலையில் அவருக்கு மண்டை உடைந்தது,இவருக்கு கை முறிந்தது,மற்றொவருக்கு காலில் வெட்டு விழுந்தது என்று தகவல்வரும்.
எனது பெற்றோர் இந்த குழுமோதல்களுக்குள்- கதியால் வெட்டிய- ஓலைவெட்டிய- பனங்காய் பொறுக்கிய அர்த்தமற்ற சண்டைகளுக்குள் சிக்கிக் கொள்ளாமல் ஒதுங்கியே இருந்தனர்.
எனது தந்தை எதிரிகள் யார்? நண்பர்கள் யார்? என்பதை தெளிவாக உணர்ந்திருந்தார்.எங்களுக்குள் நாங்கள் மோதிக்கொள்வதும் நாங்கள் ஒருவரை ஒருவர் வெட்டிக்கொண்டு காவல் நிலையத்துக்கும் நீதிமன்றத்துக்கும் நடையாய் நடப்பதும் எங்களை புதைப்பதற்கு நாங்களே வெட்டிக்கொள்ளும் புதை குழி என்பதை அவர் அறிந்திருந்தார்.
சாதியின் பெயரால் எங்களை அடக்கி ஒடுக்கும் எங்களை மனிதர்களாக மதிக்க மறுக்கும் சாதி வெறியர்களுக்கு எதிராகவே எங்களது கோபம் திருப்ப வேண்டும் எங்களது போராட்டம் இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.அதற்காகப் போராடினார்.
அதற்கான தெளிவை அவருக்கு கொடுத்தது யாழ்ப்பாண அதிகர வர்க்கத்துக்கு எட்டிக்காயைவிட கசப்பாக இருந்த பொதுவுடமை சித்தாந்தமாகும்.
இது இந்த சாதிய தளைகளை அறுப்பதற்கு எனக்கு உந்து சந்தியாக அமைந்தது.
(தொடரும்)

ஞாயிறு, 5 மே, 2013

பிரான்சில் மாபெரும் கூட்டுக்குடும்ப அமைப்பு


நாங்கள் இந்திய சமூக அமைப்பிலும் ஈழத்தின் ஆரம்பகால சமுக அமைப்பிலும் கூட்டுக்குடும்ப அமைப்பு முறை இருந்ததை அறிந்திருக்கிறோம்.ஈழத்தில் அது தற்போது வழக்கிழந்து போய்விட்டாலும் இந்தியாவில் நடுத்தர மேல்தட்டு வர்க்கத்தினரிடம் அது தொடர்வதை பார்த்தி;ருக்கிறோம்.இந்த கூட்டுக் குடும்ப அமைப்பு முறை ஆணாதிக்கத்தின் வடிவமாகவும் குடம்ப வன்முறையினதும் மாமியார் மருமகள் கொடுமையின் இருப்பிடமாகவும் இருப்பதாக சினிமாக்களிலும் சின்னத்திரைகளிலும் நிறையவே சித்தரிக்கப்பட்டிருக்கின்றன.இதிலே மிகைப்படுத்தப்பட்ட தகவல்கள் இருந்தாலும் மூத்த தலைமுறையின் ஆதிக்கமும் இளைய தலைமுறையினரின் சுதந்திரத்துக்கான கட்டுப்பாடுகளும் இந்த கூட்டுக்குடும்ப முறையில் அதிகம் என்பது மறுக்க முடியாது.
ஐரோப்பாவிலேஇதைப் போன்ற கூட்டுக்குடும்ப முறையொன்று இருந்தது என்றால் உங்களுக்கு சிலவேளை ஆச்சரியமாக இருக்கலாம்.1748 பேர் ஒன்றாக சேர்ந்து கூட்டுக் குடும்பமாக வாழ்ந்திருக்கிறார்கள் என்றால் உங்களால் நம்பமுடியாமல் இருக்கலாம்.; இவர்கள் இந்திய கூட்டுக் குடும்பங்களைப் போல நிர்ப்பந்தத்;தின் அடிப்படையில் வாழாமல் எல்லாரும் சமத்துவமான உரிமைகளோடு மனமொத்து கூட்டாக வாழந்தார்கள்.
பிரான்ஸ் தலைநகர் பாரிசிலிருந்து 170 கிலோமீட்டர் தொலைவில் பிரான்சின் இரண்டாவது நிர்வாகப்பிரிவான லென்(L’Asine) மாவட்டத்திலுள்ள பிரதான நகரங்களான லோன் மற்றும் சென்ட் குயின்டன் ஆகிய நகரங்களுக்கிடையில் இருக்கும் கீஸ்(Guise) என்ற சிறு நகரத்திலேயே வரலாற்று சிறப்பு மிக்க இந்த கூட்டுக்குடும்பம் இருந்தது.
fondation_godinஓரு சிறிய கோட்டையுடன் கூடிய இந்த நகரத்தில் இருந்த தொழில் அதிபரான Jean-Baptiste André Godin ஜோன் பப்ரிஸ்ட் ஆந்திரே கோடன் என்பவரின் சிந்தனையில் உதித்ததே இந்த பிரெஞ்சு கூட்டுக்குடும்ப அமைபபு முறையாகும்.
வீடுகளுக்கான கணப்படுப்புகள் மற்றும் சமையல் அடுப்புகளை தயாரிக்கும் தொழிற்சாலையை நடத்திவந்த கோடன் அவரது சமகால தத்துவவாதிகளான ஹெகல் மார்க்ஸ் ஏங்கல்ஸ் ஆகியோரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு 1846 ம் ஆண்டு தனது தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அனைத்து உரிமைகளும் வழங்கி அவர்களை கூட்டுக்குடும்பமாக வாழ வைக்க வேண்டும் என்ற எண்ணினார்.ஒரே கூரையின் கீழ் தொழிலாளர்களுக்கான வீடுகளை அமைப்பது.விளையாட்டு மைதானம் நீச்சல் தடாகம் நூலகம் சிறுவர்களுக்கான பாடசாலை வயது வந்த பிள்ளைகளுக்கான கல்லூரி வணிக வளாகம் வெதுப்பகம் ஆரம்ப சகாதார நிலையம் என்று அனைத்தையும் ஒரே இடத்தில் அமைத்து தொழிலாளர்களே கூட்டாகச் சேர்ந்து அவற்றை நிர்வகிக்க வேண்டும் என்று விரும்பினார்.
Le familist_re de Guise _ _22_1859 ம் ஆண்டு தன்னுடைய எண்னத்திற்கு செயல்வடிவம் கொடுத்த அவர் 30 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் மூன்று பெரும் தொடர்மாடிக் குடியிருப்புக்களை கட்டுவித்தார்.இந்த தொடர்மாடி குடியிருப்புகளின் சிறப்பம்சம் இது தமிழர்களுடைய நாற்சார் வீட்டு அமைப்பு முறையை ஒத்ததாக கட்டப்பட்டதாகும். நடுவில் பெரிய முற்றம்.அதை சூழ நான்கு பக்கமும் கட்டிடங்கள்.நான்கு மாடிகளை கொண்ட அந்தக் கட்டித்தில் உள்ள அனைத்து வீடுகளின் வாசல்களும் முற்றத்தை பார்ப்பது போலவே அமைக்கப்பட்டன.ஒரே நேரத்தில் எல்லோரும் தங்கள் தங்கள் வாசலுக்கு வந்து அனைவரையும் பார்க்கக் கூடிய விதத்தில் இந்த கட்டிட அமைப்பு அமைக்கப்பட்டது.இவ்வாறு அமைக்கப்பட்ட எல்லா வீடுகளுக்கும் ஒரே மாதியான சமையல் அடுப்புக்கள் விட்டு தளபாடங்கள் கணப்படுப்புகள் எல்லாம் வழங்கப்பட்டன.
பிள்கைளை பராமரிப்பதற்கான குழந்தைகள் காப்பகம் ஆரம்ப மருத்துவ நிலையம் ஆரம்ப பாடசாலை உயர் கல்லூரி உட்பட அனைத்தும் 1864 ம் அண்டளவில் நிறுவி முடிக்கப்பட்டன.1868 ம் ஆண்டு கணக்கின் படி 1748 வயது வந்தவர்களும் அவர்களது குழந்தைகளும் இந்த கூட்டுக் குடும்ப அமைப்பில் அங்கத்தவர்களாக இருந்தனர். அதே வருடம் கோடன் தனது தொழிற்சாலையை தொழிலாளர்களுக்கும் உரிமையுள்ள ஒரு பொது நிறுவனமாக மாற்றினார்;.
தொழிற்சாலை வணிக நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புக்கள் அனைத்தையும் ஒரு பொது அமைப்புக் கூடாக தொழிலாளர்களே நிர்வகித்ததுடன் அனைவருக்கும் சமமான வருமானத்தை சம்பளமாக எடுத்துக்கொண்டு மீதியுள்ள இலாபத்தை மீண்டும் அந்த பொது நிறுவனத்தின் கணக்கில் சேர்த்து அதை விரிவு படுத்தினர்.
GUISEபாரிசில் நடந்த பிரெஞ்சு புரட்சிக்கு நிகரான சமூகப்புரட்சியாக கோடனுடைய இந்த கூட்டுக் குடும்பத்திட்டம் கருதப்பட்டது.பல ஐரோப்பிய நாடுகளில் அடிமை முறையும் சமூக ஏற்றத்தாழ்வும் ஒழிக்கப்படாத-அந்தக் காலகட்டத்தில் பெண்களுக்கு சமஉரிமையும் ஆண்களுக்கு நிகராக தொழில் செய்யும் உரிமையும் வழங்கப்படாத அந்தக் காலகட்டத்தில் தன்னுடைய தொழிற்சாலையில் பணி புரிந்த தொழிலாளர்களை ஒரே குடும்பமாகவும் சமத்துவ மனிதர்களாகவும் மாற்றிய அவரது செயற்பாடு பிரெஞ்சு புரட்சியின் உன்னதமான கோட்பாடுகளான விடுதலை சமத்துவம் சகோதரத்துவம் என்பவற்றுக்கு அhத்தமும் வடிவமும் கொடுக்கப்பட்ட ஒன்றாக பார்க்கப்பட்டது.
1888 ம் ஆண்டு கோடான் மறைந்த பின்பு பிரான்சில் நடந்த உள்சாட்டு குழப்பங்களின் தாக்கமும் 20 ம்; நூற்றாண்டின் தொடக்கத்தில் ஐரோப்பாவில் ஏற்பட்ட தொழில் துறை போட்டி மற்றும் சந்தைக்கான போட்டி அதை தொடாந்து ஏற்பட்ட மதலாம் உலக யுத்தம் என்பவற்றால் இந்த கூட்டுக் குடும்ப அமைப்பு வலுவிழக்க ஆரம்பித்து.அடுத்த தலைமுறையில் வந்த பிள்ளைகள் உயர் கல்விகற்று வெளி வேலைகளுக்கு சென்றது, வெளியாரை திருமணம் செய்தது என்பவற்றால் பெருமளவுக்கு அந்த குடியிருப்பில் இருந்து வெளியேறிவிட்டார்கள்.
கோடன் ஆரம்பித்து நடத்திய அந்த தொழிற்சாலை கூட இன்று அதே பெயரில் தனியார் நிறுவனமாகி கூட்டுக்குடும்ப பாரிம்பரியத்தை கொண்ட தயாரிப்பு என்ற அடையாளத்துடன் இன்றைய உலகமயமாதல் சந்தையில் தனது பொருட்களை
சந்தைப்படுத்தகிறது.
ஆயினும் இன்னும் பல குடும்பங்கள் தாங்கள் இந்த கூட்டுக் குடும்ப பாரம்பரித்தை சோந்தவர்கள் என்று பெருமையுடன் கூறிக்கொண்டு அங்கு வாழ்ந்து வருகிறார்கள்