வியாழன், 29 ஆகஸ்ட், 2013

நினைவழியா வடுக்கள் 20

சந்திரனின் மரணம் எனது வாழ்க்கையில் நான் சந்தித்த பார்த்த முதல் இழப்பாகும்.அது என்னை பெரிதும் பாதித்துவிட்டது.
சந்திரன் எனது பெரியப்பா சாமிக் கிட்டிணருக்கும் பெரியம்மா அருந்தவத்துக்கும் பிறந்த ஒரே மகன்.அதுவும் அவர்களுக்கு 15 வருடங்கள் பிள்ளையில்லாமல் இருந்து பிறந்த ஒரே மகன்.அவனது இழப்பை தாங்க முடியாமல் அவர்கள் கதறிய கதறல் இன்றும் என்மனதில் ஆளமாக பதிந்திருக்கிறது.
சந்திரன் விளையாடும் போது கால்தவறி கிணற்றுக்குள் விழுந்து விட்டான் என்று தான் ஊரில் எல்லோரும் நம்பிக்கொண்டிருந்தார்கள்.
ஓரு சிலர் நடராசன் தான் அவனை கிணற்றுக்குள் தள்ளி விழுத்திவிட்டான் என்றும் அவன் மீது குற்றம் சாட்டினார்கள்.
அவன் எங்கே உண்மையை சொல்லிவிடுவானோ என்ற பயம் எனக்கும் சின்னத்தம்பிக்கும் ஏற்பட்டிருந்தது.ஆனால் அவன் வாயே திறக்கவில்லை.சந்திரனின் சாவு அவனையும் அதிகம் பாதித்திருந்தது. இரண்டு பேரும் பக்கத்து பக்கத்து வீட்டுக்காரர்கள். என்னையும் சின்னத்தம்பியையும் விட அவனுடன் தான் சந்திரன் அதிகநேரம் இருப்பான்.
நடராசன் எங்களை காட்டிக்கொடுக்காததையிட்டு நாங்கள் நிம்மதியடைந்தாலும் எங்களால் தானே சந்திரன் இறந்தான் என்ற ஒரு குற்ற உணர்வு எனது மனதை வருத்தியது.
நாங்கள் ஐயரின் வண்டிலை கொழுத்த போகாமல் இருந்திருந்தால் அவன் செத்துப் போயிருக்க மாட்டான் என்ற எண்ணமும் அதேநேரம் அவனை கொலை செய்தவர்கள் ஈவிரக்கமற்ற அரக்கர்கள் கொடூரமான பூதங்கள் என்ற எண்ணமும் என்மனதில் ஏற்பட்டிருந்து.
64229_514967288559843_1278545773_nகொடுமைக்காரர்களாக சித்தரிக்கப்படும் அரக்கர்களையும் கொடிய பூதங்களையும் அழிப்பதற்கு கடவுள் அவதாரம் எடுத்துவருவார் என்று அம்மா எனக்கு சொல்லியிருந்தா.ஒரு சிறுவன் என்றும் பார்க்காமல் கொலை செய்த இந்த அரக்கர்களை அழிக்க கடவுள் வரமாட்டாரா என்ற ஏக்கமும் எனக்கு ஏற்பட்டது.
நேற்றுவரை எங்களோடு ஒன்றாய் ஓடி விளையாடியவன் இன்று இல்லை என்ற துக்கம் தொண்டைய அடைக்க நான் மூன்று நாட்கள் காச்சலில் எழும்ப முடியாமல் படுத்திருந்தேன்.
சந்திரனின் சாவால் மறுநாள் நடக்கவிருந்த வல்லிபுரஆழ்வார் கோவில் ஆலயப் பிரவேச போராட்டம் பிறிதொரு திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
சந்திரனின் பெற்றோரையும் நெருங்கிய இரத்த உறவினர்களையும் தவிர எங்கள் ஊரிலிருந்த மற்றவர்கள் அவனது மரணத்தை மறந்துவிட்டு தங்களது நாளாந்த வாழ்க்கை பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.
நானும் சின்னத்தம்பியும் நடராசனும் கூட பாடசாலைக்கு செல்ல ஆரம்பித்திருந்தோம்.
அடுத்த ஞாயி;ற்றுக்கிழமை கரவெட்டி பகுதி தோழர்கள் எனது தந்தையை சந்திக்க வந்திருந்தனர்.
சந்திரனின் இழப்புக்கான துயர் பகிர்தலுடன் ஆரம்பித்த அன்றைய சந்திப்பில் சாதியத்துக்கு எதிரான போராட்டம் அடைந்துவரும் வெற்றி பற்றி அவர்கள் அதிகம் பேசிக்கொண்டிருந்தார்கள்.
வழக்கம் போலவே ஒரு ஓரத்தில் அமர்ந்து அவர்கள் பேசுவதை நான் கேட்டுக்கொண்டிருந்தேன்.
அன்றைய பேச்சின் முக்கிய அம்சம் சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட ‘பஞ்சமர்களுடைய குழந்தைகளை எவ்வாறு உயர் சாதியினர் ஆளுமைக் குறைப்பு செய்கிறார்கள்’ என்பது பற்றியதாகும்.
அப்போது இந்த ‘ஆளுமை’ என்ற சொல் எனக்கு புதிய சொல்லாக இருந்தது.அவர்கள் பேசியதும் எனக்கு புரியவில்லை. ஆனாலும் ‘யார் நல்ல விடயங்களை பேசினாலும் எனக்கு அது புரியாவிட்டாலும் அதை கூர்ந்து கவனித்து கிரகித்துக்கொண்டு பின்னர் அதிலுள்ள தெரியாத விடயங்களை மற்றவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்வது’ என்று சிறுவயதில் இருந்தே என்னிடம் ஒரு பழக்கம் இருந்தது. எனக்கு தமிழ் தாத்தா கந்த முருகேசனார் கற்றுத் தந்த பல நல்ல பழக்கங்களில் இதுவும் ஒன்றாகும்.
அப்படித்தான் இந்த ஆளுமை பற்றிய விடயத்தையும் நான் கிரகித்துக்கொண்டேன்.
அந்த வகையிலே ஒரு தனி மனிதனின் ஆளுமை பற்றியும்,அந்த ஆளுமையை திட்டமிட்டு மழுங்கடிப்பதன் மூலம் ஒரு சமூகத்தின் வளர்ச்சியை தடுக்க முடியும் என்பதையும் நான் முதன் முதலாக தெரிந்து கொண்ட அந்த நாளும் அன்று அவர்கள் கலந்துரையாடிய விடயத்தின் சாராம்சமும் இன்றும் பசுமரத்து ஆணிபோல என் நினைவில் இருக்கிறது.
குழந்தைகள் பொதுவாக தமது 5 வயதிலிருந்து 16 வயதுவரையிலான காலகட்டத்திலேயே இந்த உலகத்தை புரிந்து கொள்வதுடன் தங்களுடைய ஆளுமையை- திறமையை-தலைமைப்பண்பை வளர்த்துக்கொள்கின்றன.
இந்தக் காலகட்டத்தில் அந்தக் குழந்தைகளின் மனதில் பதியும் விடயங்களே அவர்கள் வளர்ந்து பெரியவர்களாகி இறக்கும் வரை தாக்கம் செலுத்துகிறது.
இந்தக் காலகட்டத்தில் சாதி ரீதியாக ஒடுக்கப்பட்டவர்களின் குழந்தைகளுக்கு கருத்தியல் காயடிப்பு செய்வதன் மூலம் அவர்களது ஆளுமையை மழுங்கடித்து அவர்களது வளர்ச்சியை மட்டுப்படுத்தி சந்ததி சந்ததியாக சாதியத்தை கடத்தும் கைங்கரியத்தை சாதிமான்கள் செய்து வந்தனர்.
குறிப்பாக
‘நீங்கள் எல்லாம் படிச்சு என்னடா கிழிக்கப்போறிங்கள்’
‘படிச்சு டொக்டர் எஞ்சினியர் ஆகலாம் என்று கனவுகாணுறியளோ?’
‘மாடு மேய்க்கப் போறதையும் மரம் ஏறப்போறதையும் விட்டுட்டு ஏன்ரா
பள்ளிக் கூடத்துக்கு வந்து கழுத்தறுக்கிறியள்?’
‘கொப்பரும்(அப்பா)கோத்தையும் (அம்மா) படிச்சிருந்தால் தானே
உங்களுக்கு படிப்பு வரும்’
என்று பஞ்சமர்களின் பிள்ளைகளைப் பார்த்து தினமும் பாடசாலைகளிலும் வெளியிலும் கூறப்படும் வசவுகள் கோபத்தின் வெளிப்பாட்டால் சொல்லப்படும் சாதாரண வசவுகளல்ல.
இவை அந்த பிள்ளைகளின் மனோபலத்தை சிறுகச் சிறுகச் சிதைத்து அவர்களை ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு அப்பால் செயற்திறன் மிக்கவர்களாக வளரவிடாமல் தடுக்கும் திட்டமிட்ட சாதிவெறி செயற்பாட்டின் ஓரங்கமாகும்.
Inside Dutch Fort - Jaffna
சிங்கள இனவெறியர்கள் தமிழர்களை ‘பற தெமிழ’ (பறைத்தமிழன்) என்று இழிசொற்குறியீட்டால் அழைப்பதை இனவெறி செயற்;பாடாக சித்தரித்து அதற்கு எதிராக கிளர்ந்தெழுந்து போராடிய யாழ்ப்பாண உயர்குடி சமூகம் தான் பஞ்சமர்களான எங்களை ‘நள நாய், பறை வேசை’ முதலான இழிசொற்களால் அழைத்து இம்சைப்படுத்தியது.
இந்த மேட்டுக் குடியினரின் பிள்ளைகள் எங்களை பாடசாலைகளிலும் ரியூட்டரிகளிலும்,பல்கலைக் கழகங்களிலும் தினம் தினம் சோடியம் யெ (நளவர்) பொஸ்பரஸ் P (பள்ளர்) முதலான இரசாயன குறியீட்டுப் பெயர்களால் அழைத்து தனிமைப்படுத்தி அவமானப்படுத்தும் போது எங்கள் மனதில் ஏற்பட்ட வேதனையும் அது எற்படுத்திய வலியையும் எழுத்தில் வர்ணிக்க முடியாது. அதை சாகும்வரை மறக்கவும் முடியாது.(பௌத்த சிங்கள பேரனவாதம் ஒவ்வொரு தமிழனையும் தனிப்பட்ட முறையில் இலக்கு வைத்து தினசரி உளவியல் சித்திரவதை செய்ததில்லை)
பொதுவாக ஈழத்தமிழ் சமூகம் என்பது ஏனைய இந்திய சமூகங்களைப் போல ஆணாதிக்க சமூகமாக இருந்தாலும் யாழ்ப்பாண சமூகத்தில்; தாய்வழி சமூகத்தின் தொடர்ச்சி என்பது அதிகளவுக்கு இருந்து வந்தது.அதிலும் பஞ்சமர் சமூக குடும்பங்களில் தந்தையரை விட தாய்மாரின் ஆதிக்கமே அதிகம் இருந்தது.
ஆனால் யாழ்ப்பாண மேட்டுக்குடி சமூக அமைப்பு கல்வி மற்றும் பொருளாதார ரீதியில் மேம்;பட்ட அரைப் பார்ப்பணிய ஒழுங்கு விதிகளைக் கொண்ட ஒரு சமூக அமைப்பாக இருந்தது.அந்த அமைப்பில் சமூக ஒழுங்கு என்ற பெயரில் குடும்ப உறுப்பினர்களுடைய அதிகாரம் வரையறுக்கப்பட்டிருந்து.
சராசரி இந்திய தமிழக மேட்டுக்குடி குடும்பங்களிள் தாய்மாருக்கு இருந்த அதிகாரங்களை விட யாழ்ப்பாண மேட்டுக்குடி தாய்மார்கள் அதிக அதிகாரங்களை கொண்டவர்களாக இருந்தார்கள்.
அதே போல இந்திய மேட்டுக்குடி தந்தைமாருக்கு குடும்பத்தலைவர் என்ற அடிப்படையில் இருந்த எல்லையற்ற அதிகாரம் யாழ்ப்பாண மேட்டுக்குடி தந்தைமாருக்கு இருக்கவில்லை.அவர்களுடைய அதிகாரம் மனைவிமாருக்கு இருந்த அதிகாரத்தைவிட சற்று அதிகமாக இருந்தாலும் அது வரையறைக்குட்பட்டதாகவே இருந்தது.
இது குடும்ப வன்முறையை ஓரளவுக்கு மட்டுப்படுத்தி அவர்களது பிள்ளைகள் ஆளுமையுள்ளவர்களாக வளர்வதற்கான அகச் சூழலை ஏற்படுத்திக் கொடுத்தது.
ஆனால் பஞ்சமர் சாதி குடும்பங்களில் இத்தகைய ஒரு சமூகம் சார்ந்த அதிகார ஒழுங்கு இல்லாதால் குடும்ப வன்முறை என்பது சர்வசாதாரணமாக இருந்தது.
நான் முதலிலே குறிப்பிட்டபடி இந்தக் குடும்பங்களில் மனைவிமாருடைய ஆதிகம் அதிகம் இருந்ததால் கணவன்மார் தங்களுடைய இருப்பை தக்க வைப்பதற்காக குடித்துவிட்டு வந்து அடித்து உதைத்து கலாட்டா பண்ணுவதும் போதை தெளிந்ததும் மனைவிமாரிடம் சரணாகதியடைவதும் தொடர்கதையாக இருந்து வந்தது.
கணவர்மார் மீது உள்ள கோபத்தை தாய்மார்கள் பிள்ளைகள் மீது காட்டி அவர்களை அடித்து உதைக்கும் போக்கும் பஞ்சமர் சமூகத்தில் மேட்டுக்குடி சமூகத்தைவிட ஒப்பீட்டளவில் அதிகமாக இருந்தது.
lwbbdd_இது பஞ்சமர் சமூகத்தில் பிள்ளைகள் அமைதியான சூழலில் இருந்து படிப்பதற்கும் ஆளுமையுள்ளவர்களாக வளர்வதற்கும் பெரும் தடையாக இருந்தது.மேலும் தாய் தந்தை இருவருமே கல்வியறிவு இல்லதவர்களாகவோ அல்லது ஒரளவுக்கே கல்வி அறிவுள்ளவர்களாகவோ இருந்ததும் பிள்ளைகள் தங்களது பாடங்கள் பற்றிய சந்தேகங்களை கேட்டுத் தெளிவு பெறுவதற்கும் தங்களது எதிர்கால கல்வி பற்றிய வழிகாட்டலை பெறுவதற்கும் முடியாத ஒரு நிலையை ஏற்படுத்தியிருந்து.
இது பஞ்சமர் சமூக பிள்ளைகள் ஒரு குறிப்பிட்ட தரத்துக்கு மேல் கல்வி கற்க முடியாத சூழ்;நிலையும் அவர்கள் தங்களுக்குள்ளேயே ‘இதெல்லாம் எங்களுக்கு ஒத்துவராத விடயங்கள்.நாங்கள் தொண்டூழியம் செய்யப்பிறந்தவர்கள்’ என்ற தாழ்வு மனப்பான்மையையும் ஏற்படுத்தியது.
குறிப்பாக சொல்வதானால் பஞ்சமர்களுடைய சமூகச் சூழல் என்பது அறியாமையும் அமைதியின்மையும் அடிப்படை வசதிகள் இல்லாததுமான ஒரு நிலையில் இருக்கும் வகையில் கட்டிக்காக்கப்பட்டு வந்தது.இந்தக் கட்டிக்காத்தல் என்பது தற்செயலானதோ அல்லது அர்த்தமற்ற அதிகாரச் செயற்பாடோ அல்ல.
பொதுவாக குழந்தைகளுக்கு அவர்கள் வாழுகின்ற சமூகச் சூழல் சரியில்லாதுவிட்டால் அவர்களால் ஆளுமையுள்ளவர்களாக வளரமுடியாது.
ஓரு சமூகத்தின் வளர்ச்சியை தடுக்க வேண்டுமானால் அந்த சமூகம் வாழக்கூடிய வாழ்வியல் சூழலை மூடுண்ட சூழலாக அல்லது சமச்சிரற்ற வளர்ச்சியுடைய சூழுலாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற ஆண்டான் அடிமை சிந்தைனைக்கான செயற்பாட்டு வடிவமாகவே இந்தக் கட்டிக்காத்தல் இருந்து வந்தது.
இந்த வகையில் நான் அதிஷ;டசாலி என்று சொல்லவேண்டும் எனது பெற்றோர் அதிகம் படிக்காவிட்டாலும் அனுபவக் கல்வியை நிறையப் பெற்றிருந்தனர்.குறிப்பாக இந்த ஒடுக்குமுறையிலிருந்த வெளியே வருவதற்கு எந்தக் கொள்கை சிறந்த கொள்கை என்பதை எனது தந்தை இனங்கண்டுகொண்டிருந்தார்.சமூக அக்கறையுள்ள பல நல்ல தோழர்களின் நட்பை அவர் பெற்றிருந்தார்.
1960 கள் வரை நான் வாழ்ந்த சமூகச் சூழலும் அடி தடி வெட்டு குத்து துப்பாக்கி சூடு என்று குழுச் சண்டை தெருச்சண்டைகள் நிறைந்த வன்முறைக்களமாகவே இருந்து வந்தது.
வாரத்தில் குறைந்து இரண்டு தடவையாவது வசைமாரிகளும் கூச்சல்களும் காட்டுக்கத்தல்களும் தெருநாய்களில் குரைப்புகளும் இணைந்து பேரொலியாக இரவின் நிசப்தத்தை குலைக்கும்.
மறுநாள் காலையில் அவருக்கு மண்டை உடைந்தது,இவருக்கு கை முறிந்தது,மற்றொவருக்கு காலில் வெட்டு விழுந்தது என்று தகவல்வரும்.
எனது பெற்றோர் இந்த குழுமோதல்களுக்குள்- கதியால் வெட்டிய- ஓலைவெட்டிய- பனங்காய் பொறுக்கிய அர்த்தமற்ற சண்டைகளுக்குள் சிக்கிக் கொள்ளாமல் ஒதுங்கியே இருந்தனர்.
எனது தந்தை எதிரிகள் யார்? நண்பர்கள் யார்? என்பதை தெளிவாக உணர்ந்திருந்தார்.எங்களுக்குள் நாங்கள் மோதிக்கொள்வதும் நாங்கள் ஒருவரை ஒருவர் வெட்டிக்கொண்டு காவல் நிலையத்துக்கும் நீதிமன்றத்துக்கும் நடையாய் நடப்பதும் எங்களை புதைப்பதற்கு நாங்களே வெட்டிக்கொள்ளும் புதை குழி என்பதை அவர் அறிந்திருந்தார்.
சாதியின் பெயரால் எங்களை அடக்கி ஒடுக்கும் எங்களை மனிதர்களாக மதிக்க மறுக்கும் சாதி வெறியர்களுக்கு எதிராகவே எங்களது கோபம் திருப்ப வேண்டும் எங்களது போராட்டம் இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.அதற்காகப் போராடினார்.
அதற்கான தெளிவை அவருக்கு கொடுத்தது யாழ்ப்பாண அதிகர வர்க்கத்துக்கு எட்டிக்காயைவிட கசப்பாக இருந்த பொதுவுடமை சித்தாந்தமாகும்.
இது இந்த சாதிய தளைகளை அறுப்பதற்கு எனக்கு உந்து சந்தியாக அமைந்தது.
(தொடரும்)