செவ்வாய், 29 அக்டோபர், 2013

நினைவழியா வடுக்கள் 21

நினைவழியா வடுக்கள் 21
சந்திரன் இறந்து இரண்டு வாரம் கடந்துவிட்ட நிலையில் அவனை கொலைசெய்த சாதி வெறியர்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லையே என்ற ஆதங்கம் என் மனதை வாட்டிக்கொண்டிருந்தது. ‘நாங்கள் அவனை மறந்து விட்டதாக நினைத்து அவன் ஆவியாக வந்து எங்களை வெருட்டுவானோ?’ என்ற பயம் வேறு அடிமனதில் இருந்துகொண்டிருந்தது.
இது பற்றிய பேச்சை எடுத்தாலே சின்னத்தம்பியும் நடராசனும் ‘ஆளை விட்டால் போதும் சாமி’ என்று விலகி விலகிச் சென்றார்கள்.
தனியாக எதையும் செய்வதற்கும் எனக்கு துணிவிருக்கவில்லை.
ஒரு நாள் தோழர் சிவராசா எங்கள் வீட்டுக்கு வந்த போது, ‘சிறுவர்களான நாங்கள் அவர்களது போராட்டத்துக்கு என்ன செய்யலாம்’ என்று கேட்டேன்.
‘நன்றாகப்படித்து சாதித்து காட்டுவது தான் சிறுவர்களான எங்களுக்குரிய கடமை’ என்று அவர் சொன்னார்.கந்தமுருசேனாரும் இதைத் தான் எனக்கு சொல்லியிருந்தார்;.
நாங்கள் படித்து முன்னேற வேண்டுமானால் அதற்கு இருக்கும் தடைகளை அகற்ற வேண்டும்.
ஆதிலும் பாடசாலைக்கு செல்வதற்கு விருப்பமும் ஈடுபாடும் இருக்கவேண்டும்.
ஆனால் பாடசாலை என்பது எங்களை அவமதிக்கும்-புறக்கணிக்கும் இடமாக இருந்ததால் நாங்கள் ஆர்வத்தோடும் மகிழ்ச்சியோடும் அங்கு செல்வதில்லை.
உண்மையை சொல்வதானால் கந்த முருகேசனார் நடத்திய திண்ணைப் பள்ளிக் கூடத்துக்கு செல்வதில் இருந்த ஆர்வம் எனக்கு அரசாங்க பாடசாலையான மந்திகை பள்ளிக் கூடத்துக்கு செல்வதில் இருக்கவில்லை.
அதற்கு காரணம் சாதி வெறியரான கதிர்காமர் வாத்தியாருடைய செய்பாடுகளாகும்;
அன்று ஒரு வெள்ளிக்கிழமை.
வழமைபோல பாடசாலைக்குச் சென்று எங்களது வகுப்பில் பசுபதி வாத்தியார் புதிதாக எமக்கு ஏற்பாடு செய்து தந்தபடி காட்போட் மட்டைகளை எடுத்துவந்து தரையில் போட்டுவிட்டு அமரமுற்பட்ட போது நாங்கள் அமரும் இடத்துக்கு பக்கத்தில் உள்ள கதிரையில் அமரும் மாணவன் வராதது தெரிந்தது.
ஏற்கவே சந்திரன் சாதிவெறியர்களால் கொலைசெய்யப்பட்டதை நினைத்து கோபத்துடன் இருந்த எனக்கு ‘இந்த கதிரையில் ஏறியிருந்தால் என்ன?’ என்ற எண்ணம் சட்டென்று தோன்றிது.’போராடினால் தான் எதுவும் கிடைக்கும்’ என்று கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள் சொன்னதும் ஞாபகத்துக்கு வந்தது.
‘எல்லாம் வல்ல சாமி இருக்கிற கோயிலுக்குள் போகிறதுக்கு துணிஞ்ச பிறகு வகுப்பில் இருக்கும் கதிரையில் ஏறி இருந்தால் என்ன?’ என்ற நினைப்புடன் பின்விளைவுகள் பற்றிய எந்தப்பயமும் இன்றி அந்த கதிரையில் ஏறி இருந்துவிட்டேன்.
நான் ஏறி இருந்த கதிரைக்கு பக்கத்து கதிரையில் இருந்த மேட்டுக்குடி மாணவன் ஏதோ அசிங்கமான விரும்பத் தகாத மிருகம் ஒன்று தனக்கு பக்கத்தில் வந்து இருந்துவிட்டதாக நினைத்து கத்திக்கொண்டு எழுந்து அப்பால் சென்றுவிட்டான்;.
அங்கிருந்த மேட்டுக்குடி மாணவ சிகாமணிகள் ஏதோ பெரிய அக்கிரமம் நடந்துவிட்டதைப் போல ‘ஏய் நளவா நீ கதிரையில் இருக்கக் கூடாது எழும்படா’ என்று கத்திக் கூச்சல் போட்டார்கள்.நான் அசைய மறுக்க சிலர் என்னை இழுத்து விழுத்தப்பார்த்தார்கள்.
நான் மேசையை இறுக்கிப்பிடித்தபடி அசையாதிருக்க சிலர் எனக்கு அடித்தார்கள்.அவர்களை தடுக்க சின்னத்தம்பி நடராசன் உட்பட எமது சமூகப் பொடியள் முயல அங்கு ஒரு சிறு கலவரமே மூண்டுவிட்டது.
அதற்குள் சில மேட்டுக்குடி பொடியள் ஓடோடிச் சென்று எங்களது வகுப்பாசிரியாரான கதிர்காமர் வாத்தியாரை அழைத்து வந்தார்கள்.
சாதி வெறியரான அவர் குழுமாடு ஒன்று வெறி கொண்டு வருவதைப் போல கோபாவசத்தோடு வந்து ‘எல்லாம் இருங்கோடா’ என்று கத்தினார்.
அப்போதும் கதிரையை விட்டு எழுந்திராது அமர்ந்திருந்த என்னை வெறிபிடித்த மிருகம் ஒன்று பார்ப்பதைப்போல வெறித்தனமாக பர்த்து
‘நள நாயே உனக்கு கதிரை கேக்குதா’ என்று கத்திய வாறு என்னுடை தலைமயிரில் பிடித்து என்னைத்தூக்கி எனது தலையை அருகில் இருந்த சுவரில் மோதி அடித்தார்.
அந்த வெறிகொண்ட மனித மிருகம் தூக்கி அடித்ததில் எனது இடது பக்க நெற்றி உடைந்து இரத்தம் கொட்டியது.
அவமானம் அழுமை ஆத்திரம் எல்லாம் ஒன்று சேர நான் எழுந்து கண் இமைக்கும் நேரத்தில் என்னுடைய சிலேட்டை எடுத்து வாத்தியார் என்ற பெயரில் இருந்த அந்த மனித மிருகத்துக்கு எறிந்துவிட்டேன்.
அந்த சிலேட் அவர் மீது பட்டு கீழே விழுந்து உடைந்து நெருங்கியது.
‘ஓரு நளப் பொடியன் கதிரையில் ஏறி இருந்ததுமல்லாமல் ஒரு வெள்ளாள வாத்தியாரான தன்னையே அடித்துவிட்டான்’ எவ்வளவு பெரிய குற்றம்.?விடுவாரா கதிர்காமர் வாத்தியார்?அப்புறம் அவரது சைவ வெள்ளாளியப் பெருமை என்னாவது ?
என்னை அடித்து உதைத்து துவைத்து எடுத்துவிட்டார்.
அதற்குள் பசுபதி வாத்தியார் தலைமை ஆசிரியர் உட்பட எல்லோரும் அங்கே வந்துவிட்டனர்.
‘கூப்பிடுங்கள் பொலீசை.உவனை கொண்டுபோய் பொலிஸ் ஸ்டேசனிலை வைத்து நல்ல சாத்து சாத்த வேணும்’ என்று கதிர்காமர் வாத்தியார் கத்திக் கொண்டிருந்தார்.
‘போலீசுக்கெல்லாம் வேண்டாம் நாங்களே பாத்துக்கொள்ளுவம்,பொலிசுக்கு போனால் இவன்ரை படிப்பு கெட்டுபோய்விடும்’ என்று பசுபதி வாத்தியார் அவரை சமாதானம் செய்ய முற்பட்டார்.
‘என்ன பொலீஸ் வேண்டாம்?நீர் இந்த கீழ் சாதி நாயளுக்கு சப்போட்டோ? உவங்களுக்கு எல்லாம் என்னத்துக்கு படிப்பு.போய் மக்கோனாவில் (மக்கோனா என்பது ஒரு இடம் அங்குதான் சிறுவர் சீர் திருத்தப் பள்ளி இருந்தது) இருந்து கழி தின்னட்டும்’ என்று வார்த்தைகளை அனலாகக் கொட்டினார்.
POINT PEDRO HOSஇவர்கள் இப்படி பேசிக் கொண்டிருந்த போது எனது தலைக் காயத்திலிருந்து இரத்தம் கொட்டிக்கொண்டிருந்தது.
அதை அவதானித்த பசுபதி வாத்தியார் அங்கிருந்த தலைமை ஆசிரியரைப் பார்த்து ‘இதில் என்ன செய்யலாம் என்பதை நீங்கள் தான் முடிவெடுக்க வேணும், நான் போய் இவனுக்கு மருந்து கட்டிக்கொண்டு வாறன்’ என்று கூறிவிட்டு என்னை அருகிலிருந்த மந்திகை மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்று மருந்து கட்டுவித்தார்.
நாங்கள் மருத்துவமனையில் இருந்து பாடசாலைக்கு திரும்பிய போது அங்கே காவல்துறை ஜீப் நின்று கொண்டிருந்தது.
வாத்தியாரை அடித்துவிட்டு நான் ஓடியபோது கால் தடக்கி கல்லில் விழுந்து மண்டை உடைந்து விட்டது. இது தான் காவல்துறைக்கு அவர்கள் கொடுத்த வாக்கு மூலம்.
POLICE
நான் பயத்தில் கதறி அழ பருத்தித்துறை காவல்துறையினர் என்னை ஜீப்பில் ஏற்றிக் கொண்டு போய் காவலில் வைத்துவிட்டார்கள்.
விசயமறிந்து எனது அப்பாவும் அம்மாவும் ஓடிவந்து அவர்களிடம் என்னை விட்டுவிடும்படி கெஞ்;சிப்பார்த்தார்கள்.
வாத்தியாருக்கு அடித்த பொடியளை விட முடியாது என்று அவர்கள் கூறிவிட்டார்கள்.
எனது தந்தை சட்டத்தரணி ஒருவரை ஏற்பாடு செய்து அவர் மூலமாக காவல்துறையினரை அணுகினார்
அப்போதும் ‘வாத்தியாருக்கு அடித்தது பெரிய குற்றம் என்றும் என்னை நீதி மன்றத்தில் நிறத்தி மக்கோனேவில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப் போவதாகவும்’ அவர்கள் சட்டத்தரணியிடம் தெரிவித்துவிட்டனர்.அந்த சட்டத்தரணி அங்கிருந்த காவல்துறை பொறுப்பதிகாரிக்கு நடந்த உண்மை சம்பவத்தை விளக்கி கூற, அவர் முறைப்பாடு செய்தவர்கள் தாங்கள் கொடுத்த முறைப்பாட்டை திரும்பப் பெற்றால் மட்டுமே என்னை விடுதலை செய்ய வழி இருக்கிறதென்றும் அதற்கு மாலை 5 மணி வரை அவகாசம் தருவதாகவும் தெரிவித்தார்.
அப்போது நேரம் பகல் 11 மணியாகியிருந்தது.
அந்த சட்டத்தரணி தனது காரிலே எனது பெற்றோரை பாடசாலைக்கு அழைத்துவந்து பாடசாலை அதிபருடனும் கதிகர்காமர் வாத்தியாருடனும் பேசிய போதும் அவர்கள் தாங்கள் கொடுத்த முறைப்பாட்டை திரும்பப் பெறமறுத்துவிட்டனர்.
அதற்கு மேல் தன்னால் ஒன்றும் செய்ய முடியாதென சட்டத்தரணி கைவிரித்துவிட, பயந்து போன எனது தந்தை மந்திகை சந்தியில் வாடகை கார் வைத்திருந்த இரத்தினம் என்பவரின் காரை வாடகைக்கு அமர்த்திக் கொண்டு அந்த நேரம் எமது பிரதேச தலைவர்கள் என்று சொல்லிக்கொண்டிருந்த ஜெயக்கொடி, துரைரத்தினம், நடராசா என்று எல்லோரையும் சென்று பார்த்து நடந்ததை சொல்லி உதவிசெய்யும் படி கெஞ்சினார்.ஆனால் வாத்தியருக்கு அடித்த பொடியனுக்கு ஒன்றும் செய்ய முடியாது என்று அவர்கள் கையை விரித்துவிட்டனர்.
எனது சிறிய தந்தை செல்லத்தம்பி சிறுபான்மை தமிழர் மகாசபையின் பிரிதிநிதிகள் மூலம் எதாவது செய்விக்கலாம் என்று அவர்களுடன் பேசுவதற்காக யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்தார். அவர்களுக்கும் பருத்தித்துறைக்கு வந்து எங்களுக்கு உதவி செய்ய நேரம் இருக்கவில்லை.
மாலை 5 மணி வரை நான் காவல்துறையின் காவலில் அழுது கொண்டிருக்க எனது பெற்றோர் கண்ணீரும் கம்பலையுமாக வீதியாக அலைந்து கொண்டிருந்தனர்.
இதற்கிடையில் இந்த விடயத்தை அறிந்த கரவெட்டி பகுதி கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள் தோழர் சண்முகதாசனுக்கு ரங்கோல் போட்டு நடந்ததைச் சொல்ல அவர் உடனடியாக தோழர் எஸ்.டி.பண்டாரநாயக்காவை(சந்திரிகாவின் தந்தை அல்ல) தொடர்;பு கொண்டு நடந்ததை சொல்லி அவர் மூலமாக கொழும்பிலுள்ள காவல்துறை தலைமையகத்தின் ஊடக பருத்தித்துறை காவல் நிலையத்துக்கும் பருத்தித்துறை நீதிபதிக்கும் தகவல் அனுப்பியிருந்தார்.
மாலை 5 மணிக்கு பருத்தித்துறை காவல்துறையினர் என்னை பருத்தித்துறை நீதிபதியின் முன் அவரது வீட்டில் நிறுத்திய போது என்னை ஒரு குற்றவாளியாக அல்லாமல் அன்புடன் அணுகிய நீதிபதி நடந்த சம்பத்தை மறைக்காமல் சொல்லும்படி கேட்டார்.
நான் அழுதுகொண்டே நடந்ததை சொல்ல அதை பதிவு செய்த அவர் காவல்துறையினரை பார்த்து ‘என்மீது வழக்கு பதிவு செய்ய வேண்டாம் என்றும், பாடசாலைக்குச் சென்று நடந்த சம்பவத்தை விசாரித்து நடவடிக்கை எடுக்கும் படியும்’ உத்தரவிட்டு என்னை விடுதலை செய்தார்.
பின்னர் நடந்த விசாரணையில் கல்வித்துறை உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.கதிர்காமர் வாத்தியார் என்னை தூக்கி சுவரில் மோதி அடித்தது உண்மை என்பது உறுதியாகியது.சாதிரீதியாக அந்தப்பாடசாலையில் நடந்த புறக்கணிப்புகளும் வெளிச்சத்துக்கு வந்தது.இதை அடுத்து கதிர்காமர் வாத்தியார் மீது துறைசார் நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டாகவும் பின்னர் மீண்டும் பணிக்கு சேர்ந்த போது மலையகத்துக்கு இடமாற்றம் பெற்று சென்று விட்டதாகவும் அறிந்தேன்.
இந்தச் சம்பவத்தின் பின்னர் அந்தப்பாடசாலையில் எமது சமூகப் பிள்ளைகளை தரையில் இருத்துவது கிணற்றில் தண்ணீர் அள்ள அனுமதிமறுப்பது, பிளாவில் பால் கொடுப்பது எல்லாம் நிறுத்தப்பட்டாலும் நான் தொடர்ந்து அங்கு கல்வி கற்க அனுமதி மறுக்கப்பட்டது.
ஆசிரியருக்கு அடித்த ஒழுக்கமற்ற மாணவன் என்று எனது பாடசாலை சான்றிதழில் எழுதி என்னை பாடசாலையில் இருந்து நீக்கிவிட்டார்கள்.
இது என்னை அவர்கள் மக்கோனாவுக்கு அனுப்ப முயற்சித்ததைவிட எனக்கு பெரிய பாதிப்பை தந்தது.
எந்தவொரு பாடசாலையிலும் என்னை சேர்த்துக்கொள்ள மறுத்தார்கள்.ஆசிரியருக்கு அடித்த மாணவன் என்ற குற்றச்சாட்டுத்தான் முன்னுக்கு நின்றதே தவிர எனது தரப்பு நியாயம் சாதிய சமூகத்தில் எடுபடவில்லை.
எனது தந்தை எமது பிரதேசத்திலுள்ள எல்லா பாடசாலைகளுக்கும் சென்றுபேசிப் பார்த்தும் எந்தப்பலனும் கிட்டவில்லை.கல்வித் திணைக்களம் வரை சென்று முயன்றும் முடியவில்லை.அவர்கள் தட்டிக்களிப்பதற்காக ஏதாவது ஒரு பாடசாலைக்கு போகச் சொல்வார்கள்.அந்த பாடசாலை அதிபர் எனது பாடசாலை சான்றிதழை பார்த்துவிட்டு இடம் இல்லை என்பார்.எமது சமூக பிள்ளைகளின் முன்னேற்றத்துக்காக ஆரம்பிக்கப்பட்ட வதிரி தேவரையாளி இந்துக்கல்லூரியில் கூட எனக்கு இடம் இடம் கிடைக்கவில்லை என்பதும் அவர்களுக்கு கூட அசிரியரை அடித்த மாணவன் என்பது தான் முக்கியமாக கண்ணில் பட்டது என்பது தான் வருத்தத்துக்குரிய விடயம்
ஏறக்குறைய இரண்டு மாதகாலம் இப்படியே அலைந்து திரிந்து ஒரு கட்டத்தில் எனது தந்தை மிகவும் சோர்ந்து மனமுடைந்துவிட்டார்.
இந்த நேரத்தில் தோழர் சிவராசா இறுதி முயற்சியாக ஒருவரை சந்திப்போம் என்று கரவெட்டியிலுள்ள ஒரு ஆசிரியையின் வீட்டுக்கு அவரை அழைத்துச் சென்றார்.
அந்த ஆசிரியை பருத்தித்துறையிலுள்ள மெதடிஸ்த பெண்கள் பாடசாலையில் கல்வி கற்பித்துக் கொண்டிருந்தார்.அத்துடன் அந்த கல்லூரி அதிபர் அந்த ஆசிரியையின் கற்பித்தல் முறை மற்றும் சமூக அக்கறை என்பவற்றால் அவர் மீது நன்மதிப்பு வைத்திருந்தார்.
அந்தக் காலகட்டத்தில் அந்தப்பாடசாலையில் 5 ம் வகுப்புவரை சிறுவர்கள் படிக்கலாம்.6 ம் வகுப்புக்கு நுளைவுத்தேர்வு எழுதி ஹாட்லிக் கல்லூரிக்கு செல்லலாம். மெதடிஸ்த பெண்கள் பாடசாலையில் கல்விகற்கும் மாணவர்களுக்கு ஹாட்லிக் கல்லூரியில் சேர்வதற்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டும் என்பது விதியாக இருந்தது.
அந்த ஆசிரிiயிடம் தோழர் சிவராசாவும் எனது தந்தையும் நடந்ததை கூற அவர் கொதித்துப் போய்விட்டார்.
ஒரு சிறு பிள்ளையின் எதிர்காலத்தை பழாக்குவதில் இந்த சமூகம் எவ்வளவு அயோக்கியத்தனமாக நடந்து கொள்கிறது என்று வருத்தப்பட்டார்.
உடனடியாகவே அவர் மெதடிஸ்த பெண்கள் பாடசாலை அதிபரின் வீட்டுக்கு தோழர் சிவராசாவையும் எனது தந்தைiயும் அழைத்துக்சென்றார்.
தீவிர கிறீஸ்தவரான அந்த பெண் அதிபரிடம் எனது தந்தையும் தோழர் சிவராசாவும் கூறிய அனைத்தையும் அந்த ஆசிரியை எடுத்துச் சொன்னார்.
அவற்றையெல்லாம் பொறுமையாக கேட்ட அவர் ‘கர்த்தரே இந்தப் பாவிகள் அறியாமல் செய்யும் பிழைகளை மன்னித்தருளும்’ என்ற ஒரே ஒரு வசனத்ததை மட்டும் கூறிவிட்டு மறுபேச்சின்றி என்னை அந்தப் பாடசாலையில் உடனடியாக சேர்த்துக் கொள்ள சம்மதம் தெரிவித்தார்.
எனது தந்தை அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை.
மறு நாள் காலையிலேயே நாங்கள் பாடசாலைக்குச் சென்றுவிட்டோம்.
methdistஎந்தவித கேள்விகள் விசாரிப்புகள் காத்திருப்புக்கள் ஏதுமின்றி நான் அந்தப் பாடசாலையில் சேர்த்துக்கொள்ளப்பட்டுவிட்டேன்.
என்னுடைய அதிஷ;டம் நான் அந்த பாடசாலையில் சேர்வதற்கு உதவிய ஆசிரியையே எனது வகுப்பாசிரியராக இருந்தார்.
அவர் முதல் வரிசையில் என்னை அழைத்துச் சென்று அமரவைத்தார்.
என்னுடைய வாழக்கையில் நான் மறக்க முடியாத அளவுக்கு பேருதவி புரிந்து எனது கல்விச் செயற்பாட்டை ஊக்குவித்த அந்த ஆசியையின் பெயர் மேரி(டீச்சர்) ஆகும்.
1980 களில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தளபதிகளில் ஒருவராக இருந்த சுக்ளா அவருடைய மகன் என்பது சிறப்பு தகவலாகும்.
மெதடிஸ்த பெண்கள் பாடசாலை பருத்தித்துறை கடற்கரை ஓரம் மிகவும் ரம்யமான இயற்கை சூழலில் அமைந்திருந்தது.எங்களது வகுப்பில் இருந்து கடலை பார்த்துக்கொண்டே பாடம் படிப்பது எனக்கு மிகவும் பிடித்திருந்து.மேரி டீச்சர் உட்பட எமக்கு பாடம் நடத்திய ஆசிரியைகள் அனைவரும் என்னை அன்பாகவும் கண்ணியத்துடனுமே நடத்தினர்.என்னுடைய பின்னணி தெரிந்து எனக்கு கற்பிப்பதற்கு கூடிய அக்கறை எடுத்துக்கொண்டனர்.
எற்கனவே அந்தப் பாடசாலையில் எனக்கு சித்தி முறையான மகாலட்சுமி அத்தை முறையான இரத்தினமணி ஆகியோர் படித்துக்கொண்டிருந்தனர்;.அவர்களுடன் சேர்ந்து அந்தப்பாடசாலைக்கு போவதும் திரும்பி வருவதும் எனக்கு பிடித்திருந்து.
என்ன மந்திகை பாடசாலை எனது வீட்டில் இருந்து நடந்து செல்லும் தூரத்தில் இருந்தது. இது எங்கள் வீட்டில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பருத்தித்துறை நகரத்தில் இருந்ததால் மந்திகை சந்திக்கு நடந்து சென்று அங்கிருந்து பருத்தித்துறைக்கு பேருந்தில் செல்ல வேண்டி இருந்தது.
000

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

Hi,
Very nice post, impressive. its quite different from other posts. Thanks for sharing. plz visit our sites.
New Tamil Sex Stories
Tamil porn stories
Tamil Sex Stories
Tamil Sex Stories
tamil kamakathaikal
Tamil hot sex story

Ramesh Ramar சொன்னது…

அருமையான பதிவு.
மிகவும் நன்று ...
Tamil News | Latest Tamil News | Tamil Newspaper