ஞாயிறு, 19 ஜூன், 2011

படபடக்க வைக்கிறது பட்டுச்சேலை விலை: பின்னணி விவரம்

பட்டுச் சேலை தயாரிப்பிற்கு பயன்படுத்தப்படும் ஜரிகை விலை, வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளதால், பட்டுச் சேலை உற்பத்தியில் கடும் தொய்வு ஏற்பட்டுள்ளது. நெசவாளர்கள், வேலையின்றி தவிக்கின்றனர். தமிழகத்தின் பாரம்பரிய உடைகளில் முக்கியமானது பட்டுச்சேலைகள். திருமணம், கிரகப்பிரவேசம் போன்ற சுபநிகழ்ச்சிகளின் போது, பட்டுச் சேலைகள் உடுத்துவதை பெண்கள் பெருமையாகக் கருதுகின்றனர். பட்டு என்றாலே, அனைவருடைய நினைவிற்கும் வருவது காஞ்சிபுரம். தமிழகத்தில், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தஞ்சாவூர், சேலம், கோவை, திருநெல்வேலி மாவட்டங்களில், பட்டுச் சேலைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. மாநிலம் முழுவதும், 88 பட்டுக் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இவற்றில் 43 ஆயிரத்து 741 பேர், உறுப்பினர்களாக உள்ளனர். இச்சங்கங்களில், 2009 -10ம் ஆண்டு, 176 கோடியே 49 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பட்டுச் சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டன. இது தவிர, லட்சக்கணக்கான தனியார் நெசவாளர்கள் உள்ளனர். இவர்களில் சிலர், தங்கள் வீடுகளில் சொந்தமாக தறி வைத்து, நெசவு செய்கின்றனர். சிலர், பட்டுச் சேலை உற்பத்தியாளர்களிடம் பணிபுரிகின்றனர்.
பட்டுச் சேலை தயாரிப்பிற்கு முக்கியமானது, 'கோறா' என அழைக்கப்படும், பட்டு நூல் மற்றும் தூய ஜரிகை. இவற்றின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. தங்கம், வெள்ளி ஆகியவற்றை பயன்படுத்தி ஜரிகை தயாரிக்கப்படுகிறது. தங்கம், வெள்ளி ஆகியவற்றின் விலை, நாளுக்கு நாள் உயர்வதால், ஜரிகையின் விலையும் உயர்ந்தபடி உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன், ஒரு மார்க் (246 கிராம்) ஜரிகை 3,000 ரூபாய்க்கு விற்கப்பட்டது. கடந்த ஆண்டு 10 ஆயிரம் ரூபாயாக உயர்ந்தது. தற்போது 13 ஆயிரம் ரூபாயிலிருந்து 14 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. காஞ்சிபுரத்தில் தயாரிக்கப்படும் முகூர்த்த பட்டுச் சேலைகளில், குறைந்தது 400 கிராம் ஜரிகை பயன்படுத்துகின்றனர். இதனால், சேலையில் உள்ள ஜரிகை விலையே குறைந்தது 20 ஆயிரம் ரூபாயாகிறது. நெசவாளர் கூலி, பட்டு நூல் விலை ஆகியவற்றை சேர்த்தால், பட்டுச் சேலை விலை 40 ஆயிரம் ரூபாயாகிறது. இதனால், நடுத்தர மக்கள் பட்டுச்சேலைகள் வாங்க தயங்குகின்றனர். விற்பனை குறைகிறது. தனியார் முதலாளிகள், பட்டுச் சேலை தயாரிக்க தயக்கம் காட்டுகின்றனர். நெசவாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்படுகிறது. இதே நிலை, நெசவாளர் கூட்டுறவு சங்கங்களிலும் தொடர்கிறது. நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு, தேவையான ஜரிகை மார்க், 13 ஆயிரத்து 300 ரூபாய்க்கு வாங்கப்படுகிறது. ஜூலை மாதம் 15ம் தேதி வரை இவ்விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்பின், அப்போதைய விலையைப் பொறுத்து ஜரிகை விலை நிர்ணயிக்கப்படும். கூட்டுறவு சங்கங்களிலும், விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதால், நெசவாளர்களுக்கு வேலை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பல மாவட்டங்களில், நெசவாளர்கள் வேலை இல்லாததால், சமையல் வேலை, காவலாளி வேலை, கட்டட வேலை போன்றவற்றுக்கு செல்ல துவங்கி விட்டனர். இளைய தலைமுறையினர், தனியார் கம்பெனிகளில் வேலைக்கு செல்லத் துவங்கியுள்ளனர். இதே நிலை நீடித்தால், தரமான பட்டுச் சேலைகளை காண்பது அரிதாகிவிடும். இது குறித்து காஞ்சிபுரம் கைத்தறி பட்டு ஜரிகை சேலை உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் நாராயணசாமி கூறும்போது, 'ஆன்-லைன் வர்த்தகத்தால், தங்கம், வெள்ளி விலை உயர்கிறது. இதனால், ஜரிகை விலையும் உயர்கிறது. ஆன்-லைன் வர்த்தகத்தை தடை செய்தால் மட்டுமே, ஜரிகை விலை உயர்வை கட்டுப்படுத்த முடியும். தமிழ்நாடு ஜரிகை உற்பத்தி ஆலையில், போதிய ஜரிகை உற்பத்தி செய்யப்படுவதில்லை. ஜரிகை விலை உயர்வால், பட்டுச் சேலை விலை உயர்ந்துள்ளது. இதனால் மக்கள், காஞ்சிபுரம் பட்டுச் சேலைகளை வாங்கத் தயங்குகின்றனர். தரமற்ற ஜரிகை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட சேலைகள், காஞ்சிபுரம் பட்டுச் சேலைகள் என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகின்றன. ஜரிகை விலையை குறைத்தால் மட்டுமே, பட்டு நெசவுத் தொழிலை காப்பாற்ற முடியும்' என்றார்.
கைத்தறி சம்மேளன மாநிலப் பொதுச் செயலர் முத்துக்குமார் கூறும்போது, 'ஜரிகை விலை உயர்வை கட்டுப்படுத்த, ஆன்-லைன் வர்த்தகத்தில் தங்கம், வெள்ளி விற்கப்படுவதை தடுக்க வேண்டும். மாநில அரசு, கூட்டுறவு சங்கங்களுக்கு வாங்கப்படும் ஜரிகைக்கு, 10 சதவீதம் மானியம் வழங்க வேண்டும். கூட்டுறவு சங்கங்களுக்கு, ஜரிகை வாங்குவதில் வெள்ளி அளவை குறைத்து வாங்கப்படுகிறது. இதில் நடக்கும் முறைகேடுகளை, புதிய அரசு தடுக்க வேண்டும். ஜரிகை விலை உயர்வால், சூரத்திலிருந்து ஜரிகை வருவது குறைந்து விட்டது. கூட்டுறவு சங்கங்களில், நெசவாளர்களுக்கு 7 மாதங்கள் வேலை கிடைப்பதே சிரமமாக உள்ளது. நெசவாளர் நலன் கருதி, ஜரிகை விலையை குறைக்க, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

http://www.dinamalar.com

1 கருத்து:

Unknown சொன்னது…

நெசவுத் தொழில் நம் பாரம்பரிய பொக்கிஷம்..
அரசு தக்க நடவடிக்கை எடுத்தால்தான் காப்பாற்ற முடியும்... நெசவுத் தொழில் பற்றி நல்ல புரிதல் பதிவு தந்தமைக்கு நன்றி...